மன்னாதி மன்னனுக்கு மற்றுமொரு மகுடம்
========================================
பத்மஸ்ரீ முனைவர் ஔவை நடராசன்
அவர்களின் சிறப்புரை
==================================
பகுதி-86
————-
=====================
காவியக் கவிஞர் வாலி
=====================
காவியக் கவிஞர் வாலி அவர்கள் என் நெருங்கிய நண்பர். பொழுது போகாத வேளையில், நறுக்கு செய்திகளையும் துணுக்கு நகைச்சுவைகளையும் நாங்கள் பரிமாறிக்கொண்டு மகிழ்ந்ததுண்டு.
5ம் உலகத் தமிழ் மாநாடு மதுரையில் நடத்துவதற்கு எல்லா ஏற்பாடுகளும் நடந்துகொண்டிருந்தன.
நான் கவிஞர் வாலி அவர்களை அண்ணா என்று அழைப்பேன். அவரும் திரும்பி அண்ணா என்று அழைப்பார். அப்போது சொன்னேன்,
“கவியரங்கத்திற்கு நீங்கள்தான் தலைமை தாங்க வேண்டும். அது உலகத்தமிழ் மாநாடு, உங்களை உலகத்தமிழர்கள் எல்லாம் ஆர்வத்தோடு எதிர்நோக்குகிறார்கள்” என்றேன்.
அவர் சிரித்துக்கொண்டே சொன்னார், “நான் என்ன இந்தப் புலவர்களுக்கும் கவிஞர்களுக்கும் நடுவில் தலைமை தாங்குவது? எதற்கும் ஒரு சொல் புரட்சித்தலைவரைக் கேட்டுக்கொண்டு நீங்கள் முடிவு செய்யலாம்” என்றார்.
அன்று மாலையே, புரட்சித்தலைவரிடம் மாநாட்டு நிகழ்ச்சி நிரலை நான் சொல்லிக்கொண்டு வந்தபோது, கவியரங்கத்தின் பெயரைப் படித்துத் தலைவர் கவிஞர் வாலி என்று படித்தேன்.
அவர் என்னைப் பார்த்து, “என் நண்பர் வாலி உங்களுக்கும் நண்பர் என்று எனக்குத் தெரியும். யாரைக்கேட்டு அவர் பெயரைப் போட்டீர்கள்?” என்று கேட்டார்.
“எனக்குப் பழகிய பொன்மனத்தைக் கேட்டுப் போட்டேன்” என்றேன். உடனே, என்னை முதுகில் தட்டி, “வாலி வாய் திறந்தால் திரைப்படப் பாடல்களை வெள்ளம்போல் கொட்டுகிறவர். இசைப்பாடல்களை எழுதுவது அவருக்குக் கை வந்த கலை. இலக்கிய அரங்கத்திற்கு அவர் எப்படிப் பொருத்தமாவார்“ என்று கேட்டார்.

Add a Comment