POST: 2017-09-19T10:10:32+05:30

மன்னாதி மன்னனுக்கு மற்றுமொரு மகுடம்
========================================
பத்மஸ்ரீ முனைவர் ஔவை நடராசன்
அவர்களின் சிறப்புரை
==================================
பகுதி-87
————-
=====================
காவியக் கவிஞர் வாலி
=====================

அதற்கு நான், “இல்லை அண்ணா, நான் அவரிடத்திலும் கேட்டுக்கொண்டேன்” என்று சொன்னேன். உலகத் தமிழ் மாநாட்டில் கவியரங்கம் தொடங்கியது. புரட்சித்தலைவர், முதல் வரிசையில் கை கட்டியபடி ஒரு மாமன்னன் போல அமர்ந்திருந்தார்.

கவியரங்கத்தின் தலைமையுரையைத் தொடங்கினார் கவிஞர் வாலி. புரட்சித் தலைவரைப் பற்றி தொடங்கிய வரிகள், அவர் நடித்த படங்கள், அவர் புனைந்த கோலங்கள், அவர் பேசிய தொடர்கள் இவைகளையெல்லாம் பின்னிப் பிணைந்து மின்னல்போல அவருடைய கவிதை துள்ளல் அரங்கத்தில் பாய்ந்தது.

அரங்கமே ஒவ்வொரு தொடருக்கும் எழுந்து ஆர்ப்பரித்தது. புரட்சித்தலைவர், இரண்டொருமுறை தன் கண்ணாடியைக் கழற்றிக் கை குட்டையால் துடைத்துக் கொண்டார். கவியரங்கத்தில், பெரிய கவிஞர்கள் பாடி முடித்தார்கள்.

எந்தப் பாடலும் கவிஞர் வாலி பெற்ற கை தட்டலைப் பெறவில்லை. கவியரங்கம் முடிந்ததும், நான்தான் “புரட்சித்தலைவர் இப்போது பொன்னாடை அணிவிப்பார்” என்று அறிவித்தேன்.

புரட்சித்தலைவர், அனைத்துக் கவிஞர்களுக்கும் பொன்னாடை போர்த்திவிட்டு, நிறைவாகக் கவிஞர் வாலியின் முன் நின்று பொன்னாடையைக் காண்பித்து, “இது உங்களுக்குப் போதுமா? இது பொனால் செய்தது இல்லையே?” என்று சிரித்துக் கொண்டு அவ்வளவு நெருக்கமான தழுவலைச் செய்தார்.

வாலியும் வாழ்வு தந்த வள்ளல் என்று கூறி மீண்டும் ஒருமுறை தழுவினார். என்னைப் பார்த்துச் சொன்னார். “இந்தக் கவியரங்கத்தில் காவியக் கவிஞர் வாலி தலைமை தாங்கியது, யாருக்குப் பெருமை? ஒளவைக்கா? அரங்கத்திற்கா? எனக்கா?” என்ற கேட்டு, என் முதுகில் தட்டிக் கொடுத்தார்.

அன்று முதல், எந்தச் மாநாட்டு அரங்கிலும் எந்த சிறப்பு நிகழ்ச்சியிலும் கவியரசர் வாலிதான் தலைமை தாங்கலானார்.
எனக்கு இப்போது நினைத்தாலும் மனம் நெகிழ்கிறது. தன் வாழ்நாளில் இறுதி மூச்சுவரையில் எந்த அரங்கத்தில் பாடினாலும் என்னைக் கவியரங்கத்திற்குத் தலைமை தாங்கச் செய்த பெருமை ஔவை அண்ணாவைத்தான் சாரும் என்று சொல்வார்.
நன்றி உணர்ச்சிக்கு வாலியின் வாழ்வு ஒரு பெரிய சான்றாகும்.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *