மன்னாதி மன்னனுக்கு மற்றுமொரு மகுடம்
========================================
பத்மஸ்ரீ முனைவர் ஔவை நடராசன்
அவர்களின் சிறப்புரை
==================================
பகுதி-89
————-
=====================
காவியக் கவிஞர் வாலி
=====================
சில ஆண்டுகளுக்கு முன்னர் அல்லயன்ஸ் பதிப்பகம் காவியக்கவிஞர் வாலியின் “வாலி வைர வரிகள்” என்னும் நூலை வெளியிட்டது. அந்நூலில் வாலியைப் பற்றி நான் எழுதிய பாராட்டுரை உங்கள் பார்வைக்கு……
திருவரங்கத்துத் திலகம்
—————————————
“அருமையில் எளிய அழகே போற்றி ” போன்ற திருவாசகத் தொடர்தான் கவியரசர் வாலி யின் கவிதை வரிகளுக்கு நான் வரைகின்ற புனை கோலமாகும்.
மொழியை உளியாக்கி கற்பனை விரல்களால் செதுக்கிய கலைத் தேரை திரை வீதி களில் ஒட வைத்துத் தேரோட்டம் நடத்தியவர் கவிஞர் வாலி.
ஏட்டில் இருந்த ஏராளக் கருத்துக்களை பாட்டில் கொண்டு வந்த பாவலர், வாலி, நாட்டில் இருந்த கவிஞர்களில் எதுகை மோனை யோடு திரைக் கூட்டில் இருந்த கவிஞர்களில் குறிப்பிடத் தக்கவர். இலக்கியம் ஒரு சிறகாகவும், இசைப் பாடல்கள் மறு சிறகாகவும் கலை வானில் பறந்த கவிக் குயில் வாலி. வீட்டில் தங்கிய பொழுதுகளை விடவும் பாட்டில் தங்கிய பொழுதுகளே அதிகம்.
முறைப்போரிடம் துணிவும், பழகுவோரிடம் பணிவும் காட்டுவதே பழக்கம் கவிஞருக்கு. கவிச் சக்கரவர்த்தியே நீ மரபில் பாடி யதை நான் புதிதில் பாடுகின்றேன். என்னுள் புகுந்து எழுது, இறைஞ்சுகின்றேன். தொழுது விதைப்பது என் வேலை; விளைவிப்பது உன் மூளை என்ற அவையடக்கம் அன்பு நெறியைப் பிழிந்து பொழிகிறது. வாலியின் வைர வரிகள் இழையோடாத இதழ்களே கிடையாது. குதித்தோடும் குழந்தை கள் முதல் தள்ளாடும் முதியவர்கள் வரை வாலி யின் பாடல் வாய்க்காத வாயே இல்லை. அவ்வளவு ஏன், ‘அம்மா என்று அழைக்காத உயிரில்லையே’ என்ற பாடல் வெல்வெட்டில் பொறிக்கப்பட்டது போல் திருச்சி ஐயப்பன் கோயில் கல்வெட்டில் பொறிக்கப்பட்டிருக்கிறது.
இது காவியக் கவிஞரின் வைர வரிகளுக்கு கோயிலே நடத்தியிருக்கிற குடமுழுக்கு. வீட்டுப் புத்தகத்தில் எழுதப்பட வேண்டிய எத்தனையோ வரிகளைத் தன் பாட்டுப் புத்தகத்தில் தந்திருப்பவர் அவர் தாயிருக்கும் காரணத்தால் கோயிலுக்குப் போனதில்லை எந்த வேர்வைக்கும் வெற்றிகள் வேர் வைக்குமே இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்
இவர்போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்.நட்பைக் கூட கற்பைப் போல எண்ணுவேன் இப்படித் திரைக் குரலிலேயே திருக்குறள் எழுதிப் பார்த்தவர் வாலி.
பாட்டில் மட்டுமல்ல; ஏட்டில் எழுதிய விதைகளிலும் வார்த்தைகளால் வலை விரிக்க வல்லமை உண்டு வாலியிடம். பாண்டவர் பூமியும், அவதார புருஷனும், கிருஷ்ண காவியமும், தமிழ்க் கடவுளும், இராமானுஜ காவியமும் , ஆறுமுக அந்தாதியும் நூல்களால்ஆன வலை மாதிரி தாள்களால் ஆன வலை தான் என்பது அவற்றை வரிக்கு வரி விடாமல் படித்தவர்களின் வாக்குமூலம்.
பதிப்பகத்து வரலாற்றில் நூறாண்டுகள் நெடிய வரலாறாகும். நாட்டுப் பற்றும், கலைப் பற்றும் நரம்புகளில் முறுக்கேற்றும் நிலையில் பெரிய சிந்தனையாளர்களைக் கொண்டு, அரிய நூல்களைத் தருகின்ற அல்லயன்ஸ் பதிப்பகத்தாரின் பயணம் நூறாண்டுகளைத் தாண்டுகிறது.
இப்படிப் பாட்டுப் பயணத்தில் வாகை குடியவரும் ஏட்டுப் பயணத்தில் எதிரெ எவரும் மில்லாத நிலையில் என்றும் புகழ் வளர்ப்ப வரும் சந்திக்கும் இடம்தான், ‘வாலியின் வைரவரிகள்
எழுதுவது ஒரு வகை; எண்ணுவது ஒரு திறம் பழகுவது ஒரு பண்பு; பரிவை வளர்ப்பது ஒரு தனிக் கலை; இவ்வளவும் இணைந்து நின்றால் இவர்தான் கவியரசர் வாலி.
நூற்கடலுக்குள் நீந்தும் நண்பர் திரு. ஸ்ரீநிவாசன் அவர்கள் மதித்தும் தொகுத்தும் மலரச் செய்திருப்பதுதான் வாலியின் வைர வரிகள்.
பதிப்பகத்தைப் புகழ்வதா? பாடியவரைப் புகழ்வதா? மதித்துத் தொகுத்தவரைப் போற்றுவதா?’ என்று எண்ணி எண்ணி என் அணிந்துரையை வாலிக்கு நான் அணிவிக்கும் வைர மாலையாகப் படைக்கின்றேன்.
வாழ்க அல்லயன்ஸ் பதிப்பகம்! வளர்க கவியரசர் வாலியின் வான்புகழ்!
—– ஒளவை நடராசன்

Add a Comment