POST: 2017-09-23T11:38:28+05:30

நாள் என்னும் நாணால் வளைக்கப்படுகின்ற வரிசிலையாக உடல் மாறத்தொடங்கும்போது தளர்ச்சி முதுமையின் மீது படர்கிறது. இந்நிலையில், காத்திருந்த நோய்கள், தமக்குச் சரியான களம் வாய்த்திருக்கிறது என்று படையெடுக்கின்றன.

இந்நிலையில், ஏக்கத்திலேயே தூக்கமில்லாமல் தவித்துக்கொண்டிருக்கும் முதியோர்கள் பல்லாயிரக்கணக்கில் இருப்பார்கள். ஆஸ்திலேயா நாட்டில் முதியோர்களை, அந்நாட்டின் செல்வங்கள் என்று நினைக்கிறார்கள். முதியோர்கள் எங்கே சென்றாலும், எந்த வகையில் சென்றாலும், எந்த உணவகத்திற்குச் சென்றாலும், எந்த மருந்தகத்திற்குச் சென்றாலும் மற்றவர்களைவிட ஐம்பது விழுக்காடு குறைவு.

துணை வேண்டும் எனக்கு என்றால், வீடு தேடி வந்து நாங்கள் துணையாக இருக்கிறோம் என்று ஆர்வம் ததும்ப அரசால் அனுப்பப்படுவர்கள் உண்டு. எனவேதான், 80 வயதுக்கு மேல் 100 வயதைத் தொடும் முதியோர்கள் வாழ்வதை நான் கண்ணாரப் பார்த்துக் களிப்பெய்தினேன்.

கடந்த ஓராண்டுகளாக நீரிழிவு நோயால் அவதியுற்று, திங்களுக்கு ஒருமுறை மருத்துவப் பரிசோதனை செய்துவரும் இந்நிலையில், எனக்கு என் அருமை நண்பரும் உயிர்த்தோழருமாக நிகரில்லாக் கவிஞர் திலகம் நீலமணியின் வரிகள்தான் என் நினைவுக்கு வந்தன.

முதுமையில், நோயில் நலிவுறும் நிலைகளை மனக்கண்ணால் கண்டு, தவிப்பையும் துடிப்பையும் சொற்களில் தங்க வைத்து, எழுதிய ஒரு கவிதை…..

——- ஔவை நடராசன்

1. முள் படுக்கை
===============

உடலுக்குள் உருவாகும் ஒட்ட டைக்கு
ஒன்றல்ல – பலநூறு பெயர்கள். நீலக்
கடலுக்குள் எத்தனையோ உயிர்கள். மேனிக்
கட்டிடத்தில் எத்தனையோ கோடி நோய்கள்.
கொடிஎதற்கு? மலர்மலர, முள்ளுக் கல்ல.
கொடியுடலும் நோய்க்கல்ல. சுகத்துக் குத்தான்!
முடிவுக்கு முகவுரையும், மடக்குகின்ற
மூப்புக்கு மறுஉருவும் இந்த நோய்தான்.

தேனில்வந்து படிகின்ற தூசி, பூக்கும்
சிரிப்புக்கும் பாட்டுக்கும் எதிரி. வெய்யில்
வேனிலிது. கானலிது. கிருமி என்னும்
விரோதிகளின் படையெடுப்பு. உடலின் தேய்வு.
வானவில்லைப் போலிருக்கும் வாழ்வின் இன்ப
வண்ணங்க ளைமறைக்கும் கறுப்பி ருட்டு
தானென்றும் தனதென்றும் சொல்லிக் கொள்ளும்.
தன்முனைப்பு நசிகின்ற நிலைஇ தேதான்.

ஆறுசுவைச் சாப்பாட்டுச் செல்வ ரெல்லாம்
அதைவிட்டு வெறுங்கஞ்சிக் குடிய ராக
மாறுவது நோயாலே! இதுவோ, துள்ளும்
மனிதர்களின் சிறகுகளைக் கத்த ரிக்கும்.
சாறுள்ள கனியைசரு காக்கும்.
தங்கச் சதைக்குள்ளே நெருப்புவைக்கும் வியாதி, யாரும்
ஏறுதற்கு எளிதான குதிரை. ஆனால்
இறங்குவது தான்மிகவும் – அரிய தாகும்.

பாய்நிலைமை, நோய்நிலைமை. பயனில் லாத
பதர்நிலைமை. உதிர்நிலைமை. தரையின் மீது
சாய்நிலைமை சாக்காட்டு நிலைமை, வண்டல்
சாம்பலா கும்நிலைமை. பூக்க ளெல்லாம்
காய்ந்துவிட்ட நாராக உடம்பு மாறும்
கவலைநிலை. அவலநிலை. எலும்புக் கூட்டின்
ஒய்வுநிலை. தேய்வுநிலை, துடுக்கில் லாத
ஒடுக்கநிலை நடுக்கநிலை நேரும் – நோயால்.

சுரமென்பர் நோயை.இது சுரமா? அல்ல!
சொல்லுங்கள் அபகரமென் றிதனை பிள்ளை
உருவாக்கம் – அதுஇன்ப மான துன்பம்.
உழைப்பாரை உலகுக்கு நல்கும் நன்மை.
சரியென்றால் நலமாகும். வியாதி என்றால்
தவறென்று தான்அர்த்தம். எங்கும் தைக்கும்
சரமாக அவசரமும் ஆக உள்ள
தால்இதனை உடனேயே தீர்க்க வேண்டும்.

மாலையிலே சோலையிலே வாலை யோடு
மதனசுக லீலையிலே இருந்தார், இன்று
சாலையிலே ஒலையிலே படுத்தார் என்றால்
சரியாகத் தெரிகிறதே நோயின் சக்தி
பாலைவனம் நோய்நன்செய் நல்ல வாழ்க்கை.
பகல்நிலவாய், தேய்பிறையாய் மெலியும் போது
தோலிருக்கும் எலும்பிருக்கும். இருந்தும் கூடச்
சுகம்மட்டும் இருக்காது இவற்றின் ஊடே

உருக்குடலை உருக்குவது. ஈரக் கொள்ளி.
உயிர்நமைச்சல், உடலணுக்க ளின்இ ளைப்பு.
இருக்கவேண் டியதில்லா நிலைமை. நல்ல
இரத்தத்தைப் புரைகுத்தும் வியாதி வந்தால்
குரங்குகையில் அகப்பட்ட மாலை ஆகும்
கோட்டையைப்போல் வலுவான உடலும், நைந்த
புரிகயிறாய், கட்டெல்லாம் பிரிந்து விட்ட
பொட்டலமாய், கிழிந்துவிட்ட உடையாய் ஆகும்.

சாக்காட்டின் முன்வாயில் நோய்,அச் சாவு
தன்முன்னே வீழ்த்துகின்ற நிழலாம். வாழ்வு
சாக்காட்டி னிடம்வாங்கும் கடனாம். முந்தும்
சாவின்வலை. அலட்சியத்தின் விலையா ராலும்
தீர்க்கமுடி யாதஒரு உடற்கு ழப்பம்.
தென்றலுக்கும் புகைக்குமுள்ள வித்தி யாசம்
வாழ்க்கைக்கும் நோய்க்குமுண்டு. திட்டம் போடும்
வாழ்க்கைக்கு நேருகின்ற விபத்து தான்நோய்

சித்தார்த்த னைப்புத்த னாக்கு கின்ற
திறமைபெற்றி ருந்ததிந்த நோய்தான், கல்விப்
புத்தகமோ சித்திரமோ எதுவா னாலும்
புற்றுவைத்து அரித்துவிடும் கரையான் போல
வித்தகனோ பாவலனோ – எவரா னாலும்
விடுவதில்லை நோய்!அருண கிரியார், வெள்ளை
முத்துமணி வாகீசர், ரமணர் எல்லாம்
முடங்கியவர் தாம்இந்த நோயி னாலே.

திடப்பொருளைத் திரவமாக்கும். அதனை மேலும்
சென்றுசென்று தேய்கின்ற ஆவி ஆக்கும்.
உட்லைஇது உப்புவைத்த பாண்ட மாக்கும்.
உடைந்திட்ட வில்ஆக்கும். முறுக்கு உள்ள
உடல்வீணை யின்நரம்பைக் கழற்றும். வண்ண
ஒளிநடன விளையாட்டு நிலைஇ யக்கம்.
படுக்கைநிலை யோதேக்கம். நமக்குத் தீனி
பழங்காய்பால் தேன்நோய்க்கோ நாமே தீனி

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *