தன்னந்தனியாகத் தளர்ந்து உதிரும் காலத்திலும்கூட, மனவுறுதியோடு மற்றவர்கள் சார்பு என்பது, எனக்கு ஊனம் என்று ஒரு மூதாட்டியார் கூறுவதைக் கேட்டேன். இப்படியெல்லாம், நினைவுகள் வந்த நேரத்தில், முதுமையும் நோயும் முற்றுகையிட்ட நேரத்தில், நீலமணியின் மற்றொரு கவிதை என் நினைவில் நிழலாடியது.
…… ஔவை நடராசன்
வரங்களுக்குப் பிந்திய தவங்கள்
=================================
முட்களே மிஞ்சும்
மலருதிர் காலம்.
நிஜங்களைவிட
நிழல்கள் நீளும்
பிற்பகல்.
இது
சாயுங்காலம்
என்பது சரிதான்.
ஊட்டி வளர்த்த
உடலே எதிர்க்கும்.
எந்த உறுப்பு
எந்த வேளையில்
கட்சி மாறுமோ!
துள்ளுங்காலங்களைப் போலன்றி
இப்போது
நம் சுவடுகளில்
பள்ளம் அதிகம்
வாழ்க்கையின் கனத்தினால்.
இரவுகளில்
விழிப்பை யாசித்தோம்;
இப்போது
துயிலை யாசிக்கிறோம்.
வரங்களை முன்னரே
வாங்கி விட்டதால்
தவங்களை இப்போது
இயற்றிக் கொண்டிருக்கிறோம்.
மன்னிப்புகளே எங்களை
அனுமதித்துள்ளன.
பல்லவிகளைத் தொலைத்த
சரணங்கள் இவை.
புருவக் காம்புகளில்
பூத்த விழிகள்
மொழி பெயர்க்காமலே
ஒதுக்கும் வரிகள்.
சந்தனச் சரித்திரங்களின்
சாம்பல்.
இந்த ஊன்றுகோல்
அன்றைய நடைவண்டியின்
புதிய அவதாரம்.
சிறகுகள் ஓய்வு கேட்கும்போது
பூமியே சிநேகிதமாகிறது.
துருச் சேகரித்த ஆயுதங்கள்
சமரசத்திற்குத்
தயாராகின்றன.
இக்கரை சொர்க்கம்
அக்கரை சொர்க்கம்(?)
இடையில் நிற்கும் இப்
பாலமே நரகம்.

Add a Comment