POST: 2017-09-30T10:25:57+05:30

மன்னாதி மன்னனுக்கு மற்றுமொரு மகுடம்
========================================
பத்மஸ்ரீ முனைவர் ஔவை நடராசன்
அவர்களின் சிறப்புரை
==================================
பகுதி-95
————-
=============================
வித்வான் வே.இலட்சுமணன்
=============================

பல்கலை வித்வான் வே.இலட்சுமணன் அவர்கள் வெற்றிலைபாக்கு
குழைந்த வாயோடு புரட்சித்தலைவருக்கு நெருங்கிய நண்பராக இருந்தார்.
ஆரூடம், சோதிடம், மந்திரம், தந்திரம் இலக்கியப் புலமை ஆகிய இயல்புகளெல்லாம் அவரிடத்தில் ததும்பி வழிந்தன.

நான் தலைமைச் செயலகத்தில் இருந்தபோது, ஓய்வு வேளைகளில் திரு.மணியன் அவர்களோடு வே.இலட்சுமணன் அவர்களின் இல்லத்திற்குச் சென்றிருக்கிறேன். ஒருநாள் என் கையைக் காட்டு என்றார். எல்லோரும் போலக் கை நீட்டியவர்களுக்கு ஊக்கம் தருகின்ற வகையில் இது இராஜாவின் கை என்றார்.

சிரித்துக்கொண்டே சொன்னேன். இது நடராஜாவின் கை. இராஜாக்கள் படுகிற பாடு தெரியாதா? தஞ்சை சரபோஜி மன்னரின் குடும்பத்தார் பலர், எப்படியெல்லாம் அல்லல் படுகிறார்கள்? என்று நான் சொன்னேன்.

வித்வான் அவர்கள் பரிகாரம் சொல்வதில், பெரும் வல்லவர். திண்டுக்கல் அருகில் நாற்பது கல் தொலைவில் ஒரு சிற்றூரில், அங்காளியம்மன் இருக்கிறாள். அவளுக்கு மிளகாய் பூசை செய்ய வேண்டும் இதுபோலப் பல நிகழ்வுகளைச் சொல்வார். நம்பியவர்கள் நிலை எனக்குத் தெரியாது. நம்பாதவர்களுக்கு நல்வாழ்வு விளைந்தது.

தமிழ் இலக்கியங்களில், சிற்றிலக்கியப் புலமை அவர்பால் தலைசிறந்து விளங்கியது. புரட்சித்தலைவரின் படப்பிடிப்பில், பல நிலைகளில், படப்பிடிப்பின்போதே, கதை, உரையாடல்களை மாற்றித் தந்ததை நான் கண்டிருக்கிறேன்.

வித்துவான் வே.இலட்சுமணன், சொன்னால் பலிக்கும் என்ற ஆர்வத்தோடு புரட்சித்தலைவரின் நெருங்கிய நண்பராக நின்ற வித்வான் அவர்களை நினைவு கூற வேண்டும்.

வித்வான் அவர்களுக்கு அருளாளர் ஆர்.எம்.வீ. பெரிய தூணாக இருந்தார்.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *