மன்னாதி மன்னனுக்கு மற்றுமொரு மகுடம்
========================================
பத்மஸ்ரீ முனைவர் ஔவை நடராசன்
அவர்களின் சிறப்புரை
==================================
பகுதி-101
————-
==========================
கவியரசர் கண்ணதாசன்
==========================
கவியரசர் கண்ணதாசன் ஒப்பில்லாத கவியரசர். நான் பல்லாண்டுகள் அவரோடு பழகியிருக்கிறேன்.
எங்கள் அழைப்பை ஏற்றுப் பச்சையப்பர் கல்லூரி விழாவில் மூன்று நான்கு முறை பேச வந்திருக்கிறார்.
தனிப்பாடல்களை எடுத்துச் சொல்லி, அதன் நலங்களை நகைச்சுவையோடு பேசி, நம்மை மகிழ வைப்பார்.
எந்தவிதமான ஆரவாரமில்லாமல் கொஞ்சம் ஓசை நயம் தெரிந்தால் போதும், நீங்கள் எல்லாம் திரைப்படத்திற்குப் பாடல் எழுதலாம் என்று மாணவர்களின் ஆரவாரத்திற்கு ஊக்கம் ஊட்டினார்.
அரே தீரே ஜில் 4ல் என்று இசையமைப்பாளர் சொல்வார், அவருக்கு மொழியறிவோ கலையறிவோ காட்சியறிவோ வேண்டியதில்லை. உடனே நான், வா மயிலே நில் நில் என்று சொன்னேன். இதுதான் பாட்டு என்று இசையமைப்பாளர் என்னைத் தழுவிக் கொண்டார். அவர் இறுகத் தழுவத் தழுவ நான் தலையில் அடித்துக்கொண்டேன் என்றார்.
சில நேரங்களில், தனித்தமிழை வேண்டாம் என்று பேசுவார். நானும் பெருங்கவிக்கோ சேதுராமனும் சான்பிரான்சிஸ்கோவில் நடைபெற்ற உலகக் கவிஞர்கள் மாநாட்டுக்காக நியூயார்க் சென்று பிறகு டெட்ராய்ட்டில் இரண்டு நாள் தங்கி, பிறகுதான் சான்பிரான்சிஸ்கோ புறப்பட்டோம்.
டெட்ராய்ட்டில், நாங்கள் தங்கியிருந்தபோது, நான் இப்போது பெயர் மறந்துவிட்டேன், அவ்வளவு இனிமையான நண்பர் இல்லத்தில் தங்கியிருந்தோம்.
அங்கே இருந்த ஒரு பையனுக்குப் பெயர், சட்டக் என்றார்கள். பிறகுதான் சடகோபன் என்பதை அப்படிச் சுருக்கியிருக்கிறார்கள் என்பதைக் கண்டுகொண்டேன். அந்தப் பெரிய மாளிகையில் நாங்கள் தங்கியிருந்தபோது, ஒரு மாலை வேளையில், திடுமெனக் கவியரசர் கண்ணதாசன் லண்டனில் இருந்து அமெரிக்காவிற்கு வந்து சேர்ந்தார்.

Add a Comment