POST: 2017-10-28T14:35:03+05:30

350 ஆண்டு பழமையான ஆர்வர்டு பல்கலைக்கழகத்தில் அன்னைத் தமிழுக்கு ஓர் இருக்கை அமைக்க ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு செய்ததற்காக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சருக்கும், தமிழ் வளர்ச்சி மற்றும் பண்பாட்டுத்துறை அமைச்சருக்கும்
பத்மஸ்ரீ ஔவையின் புகழாரம்

அரசியல் அலைவுகளுக்கு இடையில் தமிழ் உணர்வும் மனமும் தளராமல் ஹார்வார்ட் பல்கலைக்கழக தமிழ் இருக்கைக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் சார்பாக நிதி வழங்கும் சால்புடைய செயற்பாட்டை தமிழுலகம் நன்றியோடு பாராட்டும் .

அறிவியல் திறனும் – ஆற்றலோடு செயற்படும் தகுதி மேம்பாடும் வாய்ந்த தங்கள் தலைமையில் தமிழ் வளர்ச்சியும் பண்பாடும் தழைத்தோங்கும் இவ்வேளையில் பாண்டிய ராசனே வழங்குவது போல் இத்தொகை அமெரிக்கர்கள் கைகளுக்கு வாய்க்கின்றது

– – பத்மஸ்ரீ முனைவர் ஒளவை நடராசன்

————————————–

——————————————————————————————
ஆர்வர்டு தமிழ் இருக்கை பற்றிய நவம்பர் 2016-ன்
மீள் பதிவு.
——————————————————————————————

அமெரிக்க நாட்டில் உயர்வற உயர்ந்த பல்கலைக்கழகம் என்று உலகு பாராட்டுகின்ற ஆர்வர்டு பல்கலைக்கழகத்தில் செந்தமிழ் இருக்கை நிறுவ இருக்கிறார்கள் என்பது நமக்கு மகிழ்ச்சியைத் தருகிறது.

செந்தமிழ் இருக்கை என்னும் போதினிலே இன்பத்தேன் வந்து பாயுது காதினிலே என்று பாடத் தோன்றுகிறது. ஆர்வர்டு பல்கலைக் கழகம் ஒருமாமணியாய் உலகுக்குத் தோன்றிய திருமாமணி என்று நாம் புகழ்ந்தால் மிகையில்லை.

கடந்த அறுபது ஆண்டுகளாகத் தமிழக அரசினுடைய தமிழ் வளர்ச்சி மற்றும் பண்பாட்டுத் துறையின் முதல் செயலாளராகவும், தமிழ்ப்பல்கலைக் கழகத்தின் துணை வேந்தராகவும், செம்மொழி நிறுவனத்தின் துணைத்தலைவராகவும், பாரத் பல்கலைக்கழகத்தின் வேந்தராகவும் இருந்தபோதெல்லாம் நான் தமிழ்ப்பணி ஆற்றி தளர்ந்திருக்கிறேன் என்றாலும்கூட இந்தச் செய்தியை அருமை நண்பர் அப்பாத்துரை முத்துலிங்கம் எழுதியபோது எனக்கு எல்லையில்லாத மகிழ்ச்சி ஏற்பட்டது.

தரங்கம்பாடியில் சீகன் பால்கு என்கிற டேனிஷ் நாட்டு அறிஞர் தங்கியிருந்தார். தன்னந்தனியராக இருந்து தமிழ் அகரமுதலியைத் தொகுத்தது மட்டுமல்லாமல் தமிழ் அச்சுப் பணிகளையும் ஆற்ற வேண்டும் என்று முனைந்தார். ஒருமுறை அவருக்கு இங்கிலாந்து நாட்டில் ஒரு மிகப்பெரிய விருதினை வழங்கினார்கள். அந்த விருதைப் பெறுவதற்காக சீகன் பால்கு இலண்டன் மாநகரம் சென்றபோது அவருக்கு தலைவராக இருந்த ஆயர் பெருந்தகை ஒரு தகுதியுரையை இலத்தீன் மொழியில் படித்துக் காட்டினார். அதற்கு சீகன் பால்கு, உயர்ந்த மொழியாக இலத்தீன் மொழியில் எனக்குத் தகுதியுரை தந்தது பெருமையாக இருக்கிறது. நான் அறிந்தவரையில் அதனினும் மிகுந்த ஆற்றல் வாய்ந்த அருத்திறம் வாய்ந்த தமிழ் மொழியில் நான் விடை சொல்கிறேன் என்று தமிழில் விடை சொன்னதாக ஒரு குறிப்பைக் கண்டு நான் மகிழ்ந்தேன்.

அந்த வகையிலேதான் தமிழ் மொழிக்குப் பெருமைகள் பல உண்டு. பதிற்றுப்பத்தில், ஆறுகோட்பாட்டு
சேரலாதன், காக்கைப் பாடினியார், நச்சொள்ளையார் என்ற புலவர் பெருமாட்டியாருக்கு கலன் அணிக என்று ஒரு காப்பொன்னும், நூராயிரம் கானமும் பரிசளித்தான் என்ற குறிப்பு வருகிறது. எனவே, பல்லாயிரக்கணக்கான தொகையை தமிழர்கள் நினைத்தால் வழங்க முடியும். புகழ் வாய்ந்த மருத்துவ மாமணிகளாகிய இருவர் இப்போது ஏறத்தாழ ஒரு மில்லியன் டாலர்களை வழங்கியிருக்கிறார்கள் என்பது நமக்கு மகிழ்ச்சியைத் தருகிறது.

தமிழ் மொழியினுடைய இருக்கையை ஆர்வர்டு பல்கலைக்கழகத்தில் தொடங்குவது மிகவும் சிறப்புக்குரியதாகும். ஆக்ஸ்போர்டில், ஏன் பெர்க்கிலியில், பென்சில்வேனியாவில் இப்படி பல்வேறு இடங்களில் தமிழ் மொழி ஒன்றாகக் கருதப்பட்டு தென்னிந்திய மொழிகளின் துறை என்றுதான் அழைக்கப்பட்டது. இந்தமுறைதான் தமிழ் மொழிக்கெனவே ஒரு தனி இருக்கை உருவாகிறது என்பது நமக்குப் பெரிய உயர்வைத் தருவதற்குரிய ஒரு சிறந்த நிகழ்ச்சியாகும்.

தமிழ் மொழிக்கு வளம் சேர்க்கிறோம் என்பதில்லை. எண்ணினால், ஒன்னரைக்கோடி மக்கள்கூட பேச்சு வழக்கில் இல்லாத செல்டிக் மொழிக்கு ஓர் இருக்கையை உருவாக்கியிருக்கிறார்கள். அந்த வகையில் ஐம்பதுக்கு மேற்பட்ட நோபல் பரிசுகளும் நாற்பதுக்கு மேற்பட்ட உலகத் தலைவர்களை உருவாக்கியிருக்கிற பல்கலைக்கழகம் என்ற பெருமையும் அறுபதுக்கு மேற்பட்ட இலக்கியவாணர்களுக்கு புலிட்சர் பரிசினை வழங்கிய ஆர்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழி ஓர் இருக்கையைக் காண்கிறது என்பது ஈடில்லாத மகிழ்ச்சியைத் தருவதாகும்.

எட்டு கோடி தமிழ் மக்கள் உலகெங்கும் இருக்கிறார்கள் என்று நாம் மகிழ்ச்சியோடு சொல்கிறோம். என்பது நாடுகளில் இங்கும் அங்குமாக இருக்கிறோம். எப்படியேனும் இந்த முயற்சிக்கு இந்த உயர்வுக்கு இந்த தகுதிக்கு இந்த மேம்பாட்டுக்கு நிதி வழங்கி சிறப்பிக்க வேண்டும் என்றுதான் எல்லோரும் வேண்டுகிறார்கள். அந்த வகையிலேதான் தமிழ் உண்டு, தமிழ் மக்கள் உண்டு தமிழுக்கு நாளும் செய்வோம் நல்ல தொண்டு என்கிற வகையில் ஆர்வர்டு பல்கலைக் கழகத்திற்கு அணியாகவும் தமிழுக்கு சிறப்பாகவும் இந்த இருக்கையை உருவாக்குகிற எண்ணம் போற்றத்தக்கது. இதற்கு தமிழ் மக்கள் வாரி வழங்கலாம்.

முன்னூறு ஊர்களைக் கொண்ட பாரி தன்னுடைய பரம்பு நாட்டையே தமிழில் பாடிய புலவர்களுக்கு வரம்பில்லாமல் வாரி வழங்கினான் என்ற நிகழ்ச்சிகளையெல்லாம் நாம் படித்திருக்கிறோம். அப்படிப்பட்ட நிகழ்ச்சிகள் நிகழ வேண்டும் தமிழ் நிலைபெற வேண்டும் ஆர்வர்டு பல்கலைக்கழகத்திற்கு இந்த அணிகலனைச் சேர்க்க வேண்டிய கடமை நமக்கு என்றும் உண்டு என்று சொல்லி இந்த முயற்சியில் பங்கு பெறுகின்ற பெருமக்களை நான் வாழ்த்துகிறேன். நண்பர் அப்பாத்துரை முத்துவேலின் வேண்டுகோள் வெற்றிபெற வேண்டும் என்பதுதான் என்னுடைய விழைவு.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *