POST: 2017-11-07T13:30:59+05:30

மன்னாதி மன்னனுக்கு மற்றுமொரு மகுடம்
========================================
பத்மஸ்ரீ முனைவர் ஔவை நடராசன்
அவர்களின் சிறப்புரை
==================================

பகுதி-123
—————-

==========================
கவியரசர் கண்ணதாசன்
==========================

வார்த்தை சித்தரான தோழர் வலம்புரிஜான், கவியரசர் கண்ணதாசன் வரிகளை வாய் திறந்தால் கடல் மடை போல் சொல்வார்.

பல கவிதைகளை வசன வரிகளாக மாற்றிய திறமையும் அவரைச் சாரும்.

வாழ்ந்தால் கவியரசரைப்போல் வாழ வேண்டும், ஜனாதிபதியைப் போலச் சம்பளம் வாங்குகிறார். இந்தியாவைப் போல் கடனும் வாங்கியவர் என்று சொன்னவரும் வலம்புரிஜான் தான்.

கவியரசர் கண்ணதாசன் இறந்தபோது, வலம்புரி, உள்ளம் திறந்து வெள்ளம்போல் பொங்கி வந்த வரிகள்தான் இங்கு வார்த்தைகளாக உள்ளன.

பூக்க மறந்துள்ள மரங்கள் உண்டு. கொடி மரம்- கழுமரம் இவை போல – கவிஞர் வேர் வரைக்கும் கனிந்துவிட்ட தாய் மரம். இன்றே கால நதி வெள்ளத்தில் பரப்பி நின்ற அந்தக் கவிதை மரம் வேரறுந்து. விழுந்து விட்டது!

காலங்களை வென்று கவிதைத் தலைவன் இன்று செப்புக்குடத்திற்குள் ஒரு பிடிச் சாம்பலாகச் சேர்ந்து விட்டான்.

அவனது கற்பனைச் சிறகுகள் உரசிப் பறக்காத நாளில்லை; பொழுதில்லை. இன்று நிம்மதி தேடி நெடும் பயணம் சென்று விட்டான்.

காலமெல்லாம் அழுதாலும் “உப்பு நீர்ப் பூக்கள் உலரும் வரை” அழுதாலும் அவன் திரும்பமாட்டான்.
எங்கள் நாட்டு நதிகளில் – நிலாக் காலங்களில் கீதமிசைத்த இனிய ஓடக்காரனே! உன் குரலும் ஓய்ந்து விட்டது! உன் படகும் இன்று கரை சேர்ந்து விட்டது!

கோடை மழை போல – முட்டி மோதுகின்ற கண்ணீர் வெள்ளம் – என் கண் மதகுகளை இதோ நனைத்துக் கொண்டிருக்கிறது!

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *