மன்னாதி மன்னனுக்கு மற்றுமொரு மகுடம்
========================================
பத்மஸ்ரீ முனைவர் ஔவை நடராசன்
அவர்களின் சிறப்புரை
==================================
பகுதி-125
—————-
==========================
கவியரசர் கண்ணதாசன்
==========================
வலம்புரிஜான் அவர்களின் இரங்கலுரை
—————————————————————–
இதோ வருகிறார் – அதோ வருகிறார் என்றெல்லாம் நம்பிக்கை நாற்றுகள் துளிர்விட்டபோதும், அந்த நாற்று முடிச்சுகள் நாசமாகி விடுமோ என்கிற நடுக்கம் இருந்து கொண்டே இருந்தது. உள்ளத்தில் எங்கோ ஒளிந்து கிடந்த அச்சம் இன்று உண்மையாகவே ஆகிவிட்டது. நீ பாட்டு வானப் பறவை! கூட்டுக் குயிலாக இருக்க உனக்குப் பிடிக்காது. சிறகு வளரும் போதெல்லாம் நீ பறந்து திரிந்தாய்!
இதைப் பார்த்த சாதாரணர்கள், நீ கட்சி மாறுகிறவன் என்றார்கள். பாவம் பிள்ளைகள்! அவர்கள் இனி ஒன்றாம் வகுப்பில் சேர்ந்து அகரத்திலிருந்து ஆரம்பிக்க வேண்டியவர்கள்!
நீ பாதையை மாற்றியவனும் அல்ல; பயணத்தை மாற்றியவனும் அல்ல; வாகனத்தை மாற்றியவன். முருகன் வாகனத்தை மாற்றியவன் என்பது உனக்குத் தெரியுமல்லவா! முதலில் அவனுக்கு வேட்டை நாய் – பிறகு தானே மயில்! வாகனத்தை மாற்றித் தான்-வணங்கப்படுகிறான்.
கண்ணா! நீ ஊதிய குழலில் எப்போதும் பூபாளம்தான்! உனக்கு எப்போதும் விடியல் நேரம்தான்! உன் பூபாள இசை வெள்ளத்தை உச்சிப் பொழுதில் கேட்டவர்களும், அஸ்தமன வேளைகளில் கேட்டவர்களுமே ஆத்திரப்பட்டார்கள். அது உன் குறையல்ல.
முட்டையாக இருந்து – கூட்டுப் புழுவாக வளர்ந்து பட்டுப் பூச்சியாகப் பறந்து திரிவதை வளர்ச்சி என்பது விஞ்ஞானம் – மாறுதல் என்பது அஞ்ஞானம்!

Add a Comment