அரிமா பிடிமா ஆகலாமா?
============================
அரிமா மு.முரளீதரன்
15.02.1943 – 13.11.2017 (74 வயது)
=============================
அரிய நண்பராகவும் அறிவாற்றல் நிரம்பிய இனிய நண்பராகவும் விளங்கியவர் அரிமா முரளீதரன்.
நல்லதையே எண்ணி நல்லதையே செய்ய வேண்டும் என்ற நலம் நிரம்பியவர்.
நல்லாசிரியர் விருது தானாக அவரைத் தேடி வந்தது. தலைமையாசிரியர் என்கிற நிலைமைக்கு ஏற்ப நாள் தவறாமல் மாணவர்களைத் திருத்தியதுபோல மாநில மக்களையும் திருத்த வேண்டும் என்று படித்ததை எண்ணி எண்ணி உணர்ந்து களித்த பெருமை அவரையே சாரும்.
முரளீதரன் எழுத்தும் அழகு; எண்ணமும் அழகு; கை நோக எழுதுவதோடு கடிதத்துக்குப் பதில் எழுத மறந்துவிடாதீர்கள் என்று தன் முகவரி இட்ட அஞ்சல் உரைகளை எனக்கு அனுப்புவார்.
நிலையாமையைப் பற்றி நான் நினைத்ததுண்டு. ஆனால், நிலையாமையைக் காலத்தால் சில பொருள்களை நிலைக்க வைக்கலாமா ? மீள வைக்கலாமா ? என்ற அறிவியல் முயற்சிகள் நடந்துக்கொண்டுதான் இருக்கின்றன. அதற்குதான் நம்பிக்கை என்று பெயர்.
அரிமா காலை எட்டு மணிக்குப் பேசினார்; ஒன்பது மணிக்கு உண்டார்; இரண்டொரு பக்கங்கள் எழுதினார். நண்பகல் படித்தது போதும் என்று ஒரு புத்தகத்தை மடித்து வைத்தார். மார்பு தாறுமாறாகத் துடித்தது. அவர் வாழ்வை முடித்தது.
வாழும் இல்லத்தை காத்து வந்து, அது பாழாகி இடியும் நிலையை எய்தும்போது வேறு வீடு தேடுவது இயல்புதான்.
இது நூறாண்டு கட்டிடங்களுக்கு பொதுவானது. எழுபத்து மூன்று பெரிய வயதில்லையே! உணவு, உறக்கம், உடற்பயிற்சி, உழைப்பு என்ற நான்கும் நன்றாக இருந்தனவே! திடுமென்ற மழையில் இந்த வீடு எப்படி இடிந்தது என்று நான் எண்ணிப் பார்க்கிறேன்.
இப்படித் திடுமென்று முடிந்த அரிமாவின் வாழ்க்கையை எண்ணிப் எண்ணி போற்றுகிறேன். நேற்று அவர் எழுதிய கடிதம்கூடப் பாரதியில் திளைத்திருந்தது. பாரதி விருதை நினைத்திருந்தது.
“ஆன்ற புலமையும்
அறிவுப் பெருமிதமும்
அடக்கமும், அழகு செய்யும்
கீர்த்தியும், “அரிமா”வுக்கு
அணி சேர்ப்பன்”
அரிமாவின் பிள்ளைகள் இந்த இழப்பை எதிர்கொண்டு அவர் புகழை நிலைநிறுத்துவார்கள் என்று நம்புகிறேன்.
—– பத்மஸ்ரீ முனைவர் ஔவை நடராசன்

Add a Comment