திருப்பாவை பேருரை
••••••••••••••••••••••••••••••••
பத்மஸ்ரீ முனைவர் ஔவை நடராசன்
===================================
பாடல் – 3
========
“உலகு அளந்த உத்தமன் திருமால். அவன் பேர்பாடி நாம் நோன்பு இயற்றுவோம். அதனால், மாதம் மும்மாரி பெய்யும். நாடும் செழிக்கும். நமக்கும் கண்ணன் கிட்டுவன். நாட்டிலும் நீங்காத செல்வம் நிறையும்“ – இடைக்குலத்துச் சிறுமியர் பேசிய பேச்சிது. இதனை ஆண்டாள், ஓங்கி உலகு அளந்த உத்தமன் பேர்பாடி. நாங்கள் நம் பாவைக்கு சாற்றி நீராடினால், தீங்கு இன்றி நாடு எல்லாம் திங்கள் மும்மாரி பெய்து, நீங்காத செல்வம் நிறையும்“ என்று பாசுரம் இட்டிருக்கிறாள். பாவை நோன்பு நோற்கும் நமக்கு மட்டும் இல்லை. இசைவு தந்த நாட்டவருக்கும் நலம் விளையும் என்று கருத்து.
நீராட்டம் என்பதே ஆண்டாளுக்கு கிருஷ்ணாநுபவம் தான், “நந்தகோபன் குமரன். அசோதை இளஞ்சிங்கமே வேளுக்குக் குறிக்கோள். “பெற்றம் மேய்த்து உண்ணும் குலத்தில் பிறந்தவள். நீ உன் தன்னோடு இங்கு உறவு ஒழிக்க ஒழியாது. உனக்கே நாம் ஆட் செய்வோம்“ என்று, அவனையே வேண்டவும் செய்கிறாள். அதற்கு மாறாக இங்கு, ‘உத்தமன் பேர்பாடி“ என்று உலகளந்தவனைச் சொல்லுகிறாளே. எதற்காக? என்று தோன்றும் “கண்ணன், வாமனன்‘ எல்லாம் திருமாலது அவதாரம் தானே என்பது ஒரு பதில். செய்யும் ஆனைத் தொழில்களும். அடியவரிடத்தில் பக்ஷபாதமும், வடிவழகும். வாத்ஸல்யமும் கிருஷ்ணாவதாரத்தோடு ஒத்திருக்கையாலே வாமனாவதாரத்தை அநுபவிக்கிறாள் என்றும் சொல்லலாம். இதனினும், மேலான காரணம் பிறிதொன்றும் உண்டு.
முதலிலே ‘நாராயணனே பறை தருவான்“ என்றாள். “வாத்ஸவ்ய குணப் பிரகாசமான திருநாமம்“. அது பின்னர் “பாற்கடலுள் பையத்துயின்ற“ என்று “க்ஷீராப்திநாதனைப்“ பேசினாள். அடியவர் அபயக்குரல் கேட்டு விரைந்து உதவிசெய்யப் புகுந்த இடம் அது. அவளைப் “பரமன்“ என்று சுட்டி குணமேம்பாட்டை நினைத்தாள். பரமன் என்பது “குணங்களால் உயர்ந்தோன்“ என்று பொருள். அப்படியானால் உயர்வான குணம் எது? எந்த ஒரு குணம் இருந்து, மற்றையவை இல்லாது போனாலும் குறைவு வராதோ. எந்த ஒரு குணம் இல்லாமல் மற்றையவை யாவும் இருந்தும் பயனில்லையோ ? அத்தகைய பெருங்குணமே உத்தம குணம் எனப்படும். தன்னை அழிய மாறியாகிலும் பிறருக்கு நலம் புரிந்து மகிழும் பண்பு மேம்பாடு அதுவாகும். அத்தகையோரை தனக்கு என வாழாப் பிறர்க்கு உரியாளர்“ என்று கூறலாம். இவ்வுலகம், நிலைகுலைந்து அழியாமல் இருப்பதற்கே இவர்களைக் காரணம் ஆக்குவர் மேலோர். “உண்டால் அம்ம இவ்வுலகம்“. தனக்கு என முயலா நோன்றாள். பிறர்க்குஎன முயலுநர் உண்மையானே? என்பது புறநானூறு. இங்ஙனம், தன்னை அழிய மாறியும் பிறருக்கு நன்மை புரிந்து மகிழும் குணவிசேஷம் வாமனாவதார வைபவத்தில் உண்டு.
மகாபலி ஒரு அசுரச் சக்கரவர்த்தி, எவருக்கும் இல்லை என்னாது கொடுத்த கொடையாளி. அப்புண்ணிய பலத்தால் உலகனைத்தையும் வென்று அடிமைப்படுத்தினான். இந்திரலோகத்தையும் போரிட்டு வெல்லக் கருதினாள். அவள் ! இந்திரன் திருமாலைச் சரணடைந்து காக்க வேண்டினான். அதற்கு இசைந்து திருமாலும் வாமனனாகி, வந்து – பலியிடம் மூவடி மண்கேட்டுப் பெற்றார். திரு விக்ரமனாகி அளந்த போது, வானும் வையகமும் இரண்டடிக்கு உள்ளாயிற்று. மூன்றாவதற்கு இடமின்றிப் போகவே, மாவலியின் தலைமேல் காலையிட்டு அவனை நரகில் அழுத்தினார். மாவலியால் வந்த தொல்லையும் துயரமும் இந்திரனுக்கு நீங்கிற்று – என்பது கதை.
“வேண்டிற்று எல்லாம் தரும் எம் கோதில் வண்ணன்“ என்கிறபடி எல்லோருக்கும் விரும்பியதை விரும்பியபடி அளிக்கும் பெருவள்ளல் அவன். அத்தகையோன் இரப்பாளனாக மாறினான். திவ்ய மங்கள விக்ரக ஸ்வரூபனான அவன் “பொல்லாக் குறளுருவாய்“ என்னும்படி வாமன வடிவமானான். மூவேழுலகுக்கும் உடையானான அவன் மூவடி மண்ணுக்கு இரந்தான். மூவடி மண் கேட்டது குறளுருவில் அளக்கும்போது திருவிக்ரமனாய் நெடிது வளர்ந்து அளந்தான். “என் அப்பன் அறிந்திலன் என் இது மாயம்“ என்று மகனே, சொல்லும்படி ஆயிற்று. தயவுடன் தானம் தந்த ஒருவனை தலைகாக்காதபடி நரகில் வீழ்த்தினான். இங்ஙனம் எல்லாம் நேர்ந்தது. “பகவத்ஸ்வரூப ரூப குண விசேஷங்கட்கு மாறானது தானே ! இறைவனது பேருக்கும் புகழுக்கும் அழிவும் இழுக்கும் தருவது அல்லவா? இவற்றை எல்லாம் அறியாதவனோ, தெரியாதவனோ இல்லை அவன் ! தன்னை அழயமாறியும் தேவர்கள் துயரினைத் தொடைத்தான். இந்திரன் கண்ணீரை மாற்றி இன்புற்றான். “தன் ஸ்வரூபஹானியையும் பாராது பிறருக்குதவும் பொது நல்நோக்குத்தான் பெரியது இல்லையா?
எம்பெருமானே ! இவ்வுலகம் யாவையும் உன்னுடைமை, அதனை தன் உடமையாக்கிக்கொண்டு தருக்கினான் மாவலி. நீ அவனை அழித்து உன் உடைமையை முட்டுக் கொண்டாய். இது தானே உண்மை. பிறன் சொத்தை ஒருவன் கவர்ந்து சென்று ஒளித்தபோது உடையவன் சென்று அதனை மீட்ப்பது களவு ஆகுமா? ஒருக்காலும் ஆகாது. ஆனால், அவன்பாலும் கிருபைகூர்ந்து இரந்து சென்று வேண்டிப் பெற்றாய் என்றால், இரப்பவனே ஆயினும் அவனைப் பழியாது இவ்வுலகியல் பற்றி உனக்குப் “பழிப்பும் இழிப்பும்“ அல்லவா ஏற்பட்டுள்ளது, என்ன பரிதாபம், என்று ஆழ்வாருள் ஒருவர் ஈடுபட்டுப் பேசுகிறார். “கொண்டானை அல்லால் கொடுப்பாரை யார் பழிப்பர் என்றது அவரிட்ட பாசுரம். இப்படி, “தன்னை அழிய மாறிப் பிறருக்கு உதவிய பெருந்தன்மை வாமனனது.
ஆண்டாள் மேலே வானாவதார வைபவத்தை நினைக்கிறாள். “ஓங்கி உலகு அளந்த உத்தமன்“ என்று தொடங்கி ஓங்கி என்ற சொல்லாற்றலால் முன்னர்க் குறுகியிருந்த வாமனவடிவம் தோற்றுகிறது. குறுகி வாமனனாக இருந்தவன் ஓங்கி திருவிக்ரமனாக வளர்ந்து நிமிர்ந்து என்று பொருள். வளர்ந்து நீண்டதற்கு இரு காரணங்கள். ஒன்று, பிறருக்கு உதவ நினைத்த நினைவு பலித்ததால் உண்டான மகிழ்ச்சி உவந்த உள்ளத்தனாய் உலகம் அளந்து அண்டமுற நிமிர்ந்த நீளமுடியன்“ – என்று பாசுரம். இரண்டாவது உதவுவதற்கு விரைந்த விரைவு பற்றியது வாமனன் கையில் தாரை ஏற்ற நீரும், விக்கிரமன் திருவடியைப் பிரமன் விளக்கிய நீரும் ஒரு சேர விழுந்தன என்பர். வளர்ந்த வேகத்தின் கடுமை“ அத்தகையது என்று கருத்து.
திருமால், உலகளந்தது வெறும் எண்ணிக்கைக்கு ஆக மட்டுமில்லை. உலகிலுள்ள நிலையியற்பொருள் இயங்கியற்பொருள் யாவும் தன் உடமையே என்பதை நிரூபிப்பதற்காக ! பருப்பதத்துக் பயல்பொறித்த பாண்டியர்தம் குலபதிபோல் – திருப்பொலிந்த சேவடி என் செண்ணியன் மேற்பொறித்தாய்“ என்று பெரியாழ்வார் பாசுரம். வசிஷ்டர் சண்டாளர் என்கிற வேறுபாடின்றி அனைவரும் தம் உடைமை என்று காட்டி திருவடிதானம் செய்தபடி ஆயிற்று. ஆனால், இப்படிக் கேட்டார் எவரும் உண்டோ எனில் ஒருத்தரும் கிடையாது. அவள் ஆட்கொள்ளும்போது “அல்லோம்“ என்னாதார் அனைவரும் தமதடியார்களே“ என்பது அவள் நினைப்பு. பிறர் வேண்டாவிடினும் மற்றவரைத் திருத்திப் பணிகொள்ளுவதை “தன் பேறாக“ நினைத்திருப்பவன் ஈஸ்வரன். உறங்குகிற குழந்தை தன் தாயை அணைத்துக் கொள்ளுமாறு கேட்டு வேண்டுவதில்லை. இருப்பினும் தாய் தன் சுகம் கருதி தானே வலிய அணைத்து மகிழுகிறாள் அல்லவா? அது போலவே ஈஸ்வரன் செய்கையும் என்பர். “மூவேழுலகுக்கும் தாயோன் “இல்லையா? அவன். மாவலி அழியும்படி உலகளந்ததை தன் பேறாக நினைத்திருப்பவன். ஆகையால் அவனை உத்தமன் என்றாள். பிறரை நலிந்து தான் வாழவிரும்புமவன் சுதமன் ‘வாழு, வாழவிடு“ என்கிற கோட்பாட்டோடு நாமும் பிறரும் வாழவேணும் என்பவன் மதயமன். தான் நலிந்தும் பிறர் வாழ நினைப்பவன் உத்தமன். இது கருதியே “உலகு அளந்த உத்தமன்“ என்றாள்.
அனைத்து உலகினையும் காப்பவன் இறைவன். பிறிது ஒருவரால் அங்ஙனம் காக்க இயலாது. பிறர் காத்து தக்ஷ்த்தால் கூட அதனை இறைவன் செயலே என்பர் ஆன்றோர். ஆக, இறைவனைப் பாடுவதும் வேண்டுவதுமே ஏற்புடையது. “நாராயணா என்பதை நா என்ன நாவே“ என்பர் இளங்கோவடிகள். “வாயினால் பாடி“ என வாய்ப்படைத்த பயனும் அதுவே. உலகில் மக்களை நாம் புகழுகிறோம் என்றால் அதில் பெரும்பாலும் பொய்யும் புனைந்துரையும். ஆகவே முடியும் மொழியைக் கடந்த பெரும் புகழாளன் எல்லாம் வல்ல இறைவன் ஒருவனே. இறைவனைப் புகழுவதையே வள்ளுவர் “பொருள் சேர் புகழ்“ என்பர். “இருள்சேர் இருவினையும் சேரா“ இறைவன் பொருள்சேர் புகழ் புரிந்தார் மாட்டு“ என்று திருக்குறள், இவற்றிற்கு ஏற்ப ஆண்டாள் – “உத்தமனைப்பாடி“ என்று இருக்கலாம். “உத்தமன் பேர்பாடி“ என்கிறாளே. அது பொருந்துமா? எனக் கேள்வி எழும்.
ஒருவரைப் புகழவோ அன்றித் திட்டவோ வேண்டும். அப்போது அவர்பேர் தெரியாமல் முடியுமா? முடியாது இல்லையா? அது போல இறைவனையும் புகழவோ பாடவோ பேர் சொல்லாமல் இயலாது. ஆக உத்தமனைப் பாடுவதும் அவன் பேர்பாடுவதும் ஒன்றேதான். மேலும், ஒரு கருத்தினைக் காண்போம் ! தங்கம் என்ற சொல்லைக் கேட்கிறோம். கேட்டதும், மனதில் கவர்ச்சி களிப்பு எல்லாம் வருகிறது. காரணம், சொல் சுட்டும் பொருளால் வரும் அருமை பெருமைகள் தாம் ! இது போலவே பகவானுக்குள்ள பெருமைகளாலேயே பகவந் நாமத்துக்கும் பெருமை வருகிறது. பேரில்லை என்றால் பகவானை அறியவும் அநுபவிக்கவும் இயலாது. பகவானால் திருநாமத்துக்கும் – திருநாமத்தால் பகவானுக்கும், பெருமை. இதனை “அந்நிரீயாந்யாஸ்நயம்“ என்பர். கட்டிப் பொன்னுக்கும் அருமை பெருமை உண்டு. ஆனால் அதனை அப்படியே நாம் பூண்டு மகிழமுடியும். இந்த அளவு வேற்றுமைதான் உண்டு. இறைவனுக்கும் அவன் பேர்களுக்கும், “இறைவன் கட்டிப்பொன்போலே. அவன் திருநாமங்கள் பணிப்பொன் போலே“ என்பர் வைணவ பூர்வாசிரியர்கள். இங்ஙனம் “இரண்டிற்கும் நீங்காத தொடர்பு உண்டே தவிர, இரண்டும் ஒன்றில்லை. உத்தமன் வேறு. அவள் பெயர் வேறு என்று கொண்டு. ஆராய்வதும் உண்டு. அதன் அடிப்படையில் பல சமயவுண்மைகளும் சாஸ்திர நுணுக்கங்களும் தெரியவரும்.
வாலி அவன்தம்பி சுக்ரீவன் இருவருக்கும் இடையே போர் மூண்டது. சுக்ரீவனால் எதிர்த்து நிற்க முடியவில்லை. முன் சாபத்தால் வாலி புகமுடியாதமலை ஒன்று. அங்கு சென்று ஒளிந்தான் சுக்ரீவன். அங்கும் வாலி நினைவு வந்தாலே அவனுக்குப் பயம் வரும். யார் வந்தாலும் வாலி ஏவலால் வந்ததாகவே அவரைக் கருதுவான். இந்நிலையில் தான் இராமன் வந்து சுக்ரீவனோடு நட்புக் கொண்டான். இராமனை அண்டைக் கொண்ட பலம் வந்தது. பின்னர் நெஞ்சுரம் கொண்டு அச்சம் தவிர்த்தான். வாலியால் தானே வலியச் சென்று போருக்கு அழைத்தான். சுக்கிரீவனுக்கு இவ்வளவு மாற்றமும் ஏற்றமும் வந்ததெப்படி? இராமனை அண்டைக் கொண்டபலம் தானே காரணம். இதுவே, “நாம் அதாவது பேரையுடையனது பிரபாவம்.
இதே போல மற்றொரு செய்தியும் உண்டு. பன்னிரண்டு ஆழ்வார்களுள் ஒருவர் “தொண்டரடிப்பொடி“ ஒருவர். நம் அனைவருக்கும் போலவே “யமபயம்“ முன்பு எல்லாம் இருந்தது. ஆனால், திடீர் என ஒரு நாளிலே பெருமாற்றம் அச்சம் தவிர்த்து யமபுரியின் தலைவாயிலுக்குப் போனார். யமபடர்களாகிய நமன் தமர் தலைகளிலே காலிடு உதைத்தார். அவர்கள் அஞ்சியோட ஆழ்வார் வெற்றிகொண்டு முழக்கம் இட்டுத் திரும்பினார். இப்படி, வலுப்பெற்று வெற்றியுற்ற காரணத்தை அவரே கூறுகிறார். “அரங்கமா நகருளானே ! உன் நாமம் கற்ற ஆவலிப்பு“ என்று ! உன்னைப் பெற்றதனால் கூட இல்லை. உன் திருநாமத்தைக் கற்றதனால் வந்த பெரும் பயன் இது என்பது கருத்து. சுக்ரீவனுக்குப் பலம் “நாமி“யை அண்டைக் கொண்ட பலம். ஆழ்வாருக்குப் பலம் நாமத்தை அண்டைக் கொண்ட பலம். ஆக பகவானைப் போலவே பகவந்நாமத்துக்கும் ஒத்த பெருமை உண்டு என்பது தேற்றம்.
இரண்டினுக்கும் ஒத்த பலன் என்று மட்டுமில்லை. இறைவன் திருநாமத்துக்கு, பலன் மேலும் அதிகம் உண்டு. இறைவன் தராததை அவன் பேராகிய திருநாமமே தரும். திரௌபதி சபைநடுவே துகிலுரியப் பெற்று நின்றாள். அப்போது தன்னால் முடிந்தவரை தடுத்து நின்றாள். முடியாதபோது இருகையையும் விட்டு “கோவிந்த, புண்டரிகாக்ஷ், ரஹ்மாம் சரணாகதம்“ – என பகவானை வேண்டினாள். அவள் அழைத்த நேரத்தில் கோவிந்தராகிய கண்ணன் துவாரகையில் இல்லை. நரகாசுரவதத்தின் பொருட்டு தொலைதூரம் சென்றிருந்தான். “வெகுதூரத்தில் இருந்த என்னை கோவிந்தா என திரௌவுபதி கூப்பிட்டாளே ! என்னால் போக முடியவில்லையே. அது தானும் விருத்தியடைந்த கடனைப்போல என் நெஞ்சை வட்டு அகலாது நிற்கிறது“ – என்று, அவனே கூறுகிறான். “கிருஷ்ணாமாம் தூரவாயிநம். ருணம் ப்ரவ்ருத்தமிவ, என்பது கண்ணன் பேச்சு. இதனால் அவளுக்குப் புடவை சுரந்தது. அவனில்லை. அவனது திருநாமமே என்பது புரிகிறதில்லையா? “அவன் தூரஸ்தன் ஆனாலும் இது கிட்ட நின்று உதவும். திரௌவுபதிக்கு ஆபத்திலே புடவை சுரந்தது திருநாமமிநே“ இப்படி, வைணவ பூருவா சாரியர்கள் மருமம் உணர்ந்து பேசுவர்.
“என்னைக் கொண்டு என்னுள் வைத்தேன். என்னையும் உன்னில் இட்டேன்“ – என்று பெரியாழ்வார் பாசுரம் இங்ஙனம், மாறி இறைவனாடு கலப்பதே பகவதநுபவம் ஆகும். இப்பாவனை முதிர்ச்சியால் பேரின்பம் பெருகும். ஆனால், இது எல்லோருக்கும் கூடி வருவதில்லை. உள்ளம் உரை செயல்கட்கு எட்டாத தத்துவ வடிவினன் இறைவன்“. உணர்ந்து உணர்ந்து உணரினும் உணர்வரிது“ என்பர். இது, எளியமக்கள் அனைவராலும் பெறமுடியாது. இதன் காரணமாக மற்றவர்கள் இப்பேரின்பத்தை இழந்தே தீரவேண்டுமா? என்றால், அப்படியும் இல்லை. இறைவன் பெயராகிய “திருநாமம்“ ஒன்றே இதனைத் தந்துதவும் என்பது மேலோர் கொள்கை. “தேனும் பாலும் அமுதுமாகித் தித்திப்ப நானும் சொன்னேன். நமரும் உரை மின், நமோ நாரணமே“ – நாவினால் நவிற்றி இன்பம் எய்தினேன் என்று எல்லாம் ஆன்றோர் உரைகள் இதை ஒப்பவே சைவத்திலும் திருநாம மகிமை மேலாகவே பேசப்பெறும், “நானே ஓ தவம் செய்தேன். சிவாயநம எனப்பெற்றேன்“ – வேதம் நான்கிலும் உட்பொருளாவது, நாதன் நாமம் நமசிவாய வே“ – அரன் நாமமே சூழ் என்பன சைவத்திருமறைகள். இவ்வடிப்படையிலே, ஆண்டாளும் “உத்தமன் பேர் பாடி“ என்றாள்.
“பேர்பாடி“ என்பது இறைவன்பால் அளவிறந்த ஆசைகொண்டு அப்பிரீதிக்குப் போக்கு விடாகப் பாடவேணும் என்று கருத்து. “பாடி நெய்யுண்ணோம். பாலுண்ணோம் என்கிறவர்கள் இவர்கள். ஆகையால், வேறுபயன் கருதிப் பாடி கைக்கூலிபெற மடிகோலாதே. பாடுவதையே சுயம் பிரயோசனமாகக் கொண்டு பாடவேணும் என்பதும் கருத்தாகலாம். உண்ணும் சோறும், பருகு நீரும். தின்னும் வெற்றிலையும் எல்லாம் கண்ணன் என்கிறபடியே, உத்தமன் பேர் பாடுவதையே தாரக போஷ்க போக்கியமாகக் கொள்ள வேனும் என்பதும் குறிப்பு. “உத்தின் பொருள் முடிவும் இதனையே “உத்தமன் பேர் எத்தும் திறம் அறிமின்“ என்றார் மற்றொரு பெரியவர். வேதமும், அதன் பொருளும், பொருள் முடிவும் எல்லாமும் அடங்கிய “சகலவேதசாரமும்“ இதுவே என்பது “உத்தமன் பேர்பாடி“ என ஆண்டாள் சுட்டிய உள்ளுறை எனலாம்.

Add a Comment