POST: 2017-12-18T11:53:28+05:30

தருமபுர ஆதீன சமயப் பிரசார நிலையம்
வேளூர் தேவஸ்தான இறைபணி மண்டபம்
***********************************************************

தனுர் மாத சைவ சமய தொடர் பொழிவுகள்
———————————————————————-

நாள் : 16.12.2017 நேரம் : மாலை 06.00 மணி

தலைமையுரை :
===============

முனைவர் ந.அருள்,
இயக்குநர், மொழிபெயர்ப்புத்துறை,
தலைமைச் செயலகம்,
சென்னை – 600 009.

அருள்திரு தரும ஆதீனத்தின் சார்பில் நடைபெறுகின்ற திருவெம்பாவை நிகழ்ச்சியில் பங்கு பெறுவதில் நான் பெரிதும் மகிழ்ச்சியடைகிறேன்.

வேலூர் (வைதீஸ்வரன் கோயில்) திருக்கோயிலின் சார்பில் தருமபுர ஆதினப் பிரச்சார நிலையம் இங்கு அரும்பணிகள் ஆற்றி வருவதை நான் மழலைப்பருவத்தில் இருந்தே அறிவேன்.

இங்குத் தலைமை தாங்குகிற சுவாமிகள் அவர்களுக்கு நான் பணிவோடு தெரிவித்துக்கொள்வது இப்போது தலைமை தாங்கி ஞான அரசு நடத்தும் குருமகா சந்நிதானம் அவர்கள் சென்னை மாநகரத்தில் இதே இடத்தில் தம்பிரான் சுவாமிகளாகத் திகழ்ந்தார்கள். ஏறத்தாழ அவர் மடியில் விழுந்து புரண்ட மழலைச் செல்வங்களுள் நானும் ஒருவன்.

தரும ஆதீனம் ஆற்றி வருகின்ற அருமையான பணிகள் தமிழுக்கு வாய்த்த நற்பணிகளாகும். உலகத் தமிழ் மாநாடு நடந்தபோது தரும ஆதீனத் தமிழ்ப்பணிகள் என்றே ஒரு நூலை வெளியிட்டார்கள். நூற்றுக்கணக்கான நூல்களை வெளியிட்டதோடு அந்த நாளில் இராஜாஜி அவர்கள் தலைமையில் திருக்குறள் முழுவதற்கும் வெளிவந்த உரைகளையெல்லாம் தொகுத்து மகாவித்வான் தண்டபாணி தேசிகர் வெளியிட்ட திருக்குறள் நூல் உலகறிந்த புகழைத் தரும ஆதினத்திற்குச் சேர்த்திருக்கிறது.

“வழி வழி அடிமையாய் வந்தோம் காண் பழ அடியார்” என்றெல்லாம் குறிப்பிடும் தொடர்களுக்கு ஏற்ப என்னுடைய தந்தையார் அவர்களும் என்னுடைய பாட்டனார் சித்தாந்தக் கலாநிதி ஔவை அவர்களும் தரும ஆதீனத்தின் தமிழ்த்துறையில் இருந்தவர்கள்தான். என்னுடைய தாத்தாவுக்குத் தருமபுர ஆதீன வித்வான் என்றே ஒரு பொறுப்பு இருந்தது. நூற்றுக்கணக்கான நூல்களையும் ஞானப்பணிகளையும் ஆற்றி வருகின்ற தரும ஆதீனத்தின் பணிகள் தமிழ் நாட்டுக்கு மிகப் பெரிய நன்மைகளை விளைவித்திருக்கின்றன.

பன்னிரு திருமுறைகள், பதினான்கு சாத்திரங்கள், சைவச் சமய இதிகாசப் புராண நூல்கள் முதலிய சைவ நூல்களை வெளியிட்ட ஒரு பெரிய களஞ்சியமாகத் தரும ஆதீனம் திகழ்கிறது. இதே பிரச்சார நிலையத்தில் என் தந்தையார் திருக்குறள் வகுப்பு நடத்தியதை நான் இப்போது நினைத்துப் பார்க்கிறேன்.

மார்கழித் திங்கள் தொடங்குகிற இந் நன்னாளில் திருவெம்பாவை சொற்பொழிவும் தொடங்க இருக்கிறது. மார்கழித் திங்களில் விடியற்காலையில் எழுந்து பாராயணம் செய்துகொண்டு திருவீதி உலா நடத்துவது பழங்கால வழக்கமாகும்.

திருவெம்பாவைக்கு இன்னொரு பெயர் “மார்கழிப் பனுவல்” என்பதாகும். தமிழகத்தின் அறிவுத் திறமைக்குத் திருக்குறளைப் போலவும், அருள் உருக்கத்திற்குத் திருவாசகத்தைப் போலவும் நூல்கள் இல்லை. மாணிக்க வாசகர் அருளிய திருவாசகத்தை ஓதும்போதும், எடுத்துப் பேசும்போதும் மனமெல்லாம் உருகும்.

Bone melting song என்று டாக்டர். ஜி.யு.போப் தன்னுடைய உருக்கத்தை எடுத்து எழுதியிருக்கிறார். திருவாசகத்தில் உருகியதால் அவர் தன்னுடைய மொழிபெயர்ப்பை முடித்துத் தம்முடைய எண்பதாம் ஆண்டுப் பருவத்தில்தான் திருவாசக ஆங்கில மொழிபெயர்ப்பை வெளியிட்டார். இடையில் தடங்கல்கள் வந்தபோதும் தன்னால் இந்தப் பணியை முடிக்க முடிந்தமைக்குக் காரணம் திருவாசகத்தின் உருக்கம்தான் என்று உருகி எழுதியிருக்கிறார். திருவாசகம், ஒரு உருக்கத்தின் ஊற்று என்று சொன்னால், திருவாசகத்தின் பகுதிகளில் திருவெம்பாவை உன்னதமான பதிகமாகும்.

மகளிர் எல்லாம் விடியற்காலை எழுந்து குளத்துக் கரை அருகே நின்று குளித்து மகிழ்ந்து திருக்கோயில்களுக்குச் செல்வதுதான் திருவெம்பாவை காட்டுகிற வழக்கம். மகளிர் தமக்குள்ளே பேசி மகிழ்கிற வகையில் இந்தப் பாடல்கள் அமைந்துள்ளன.

திருவெம்பாவையை இறைவனே விரும்பிக் கேட்டதாக ஒரு குறிப்பு உண்டு. திருக்கோவையாரைப் பாடிய வாயால் திருவெம்பாவை பாடுக என்று இறைவன் கேட்டதாகவும் கோவை பாடிய வாயால் பாவை பாடுக! என்று

வேண்டியதாகவும் குறிப்புகள் இருந்து திருவாசகத்தில் மிகச் சிறப்பான பகுதி திருவெம்பாவை என்று நாம் உணரலாம்.

விடியற்காலையில் எழுந்திருக்க முடியாத மாதம் மார்கழி மாதம். அந்த மாதத்தில் எழுந்து வழிபாடு செய்ய வேண்டும் என்பது வழக்கமாகும். செய்ய முடியாதவற்றைச் செய்வதுதானே திறமை? எழுந்திருக்க முடியாத மாதத்தில் விடியலில் எழுந்திருக்கச் செய்யும் திறம், திருவெம்பாவையின் நோக்கமாகும். வீடு நன்றாக இருக்க வேண்டும் எங்களுக்கு நல்ல கணவன் வாய்க்க வேண்டும், இறைவன் அருளையே நாங்கள் விரும்பி வேண்டிக் கொண்டிருக்க வேண்டும், அதுபோல நாடும் நாளும் நல்ல வளங்களைப் பெற்ற திகழ்வதற்கு ஏற்ற வகையில் மழையால் செழிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் வீடும் நாடும் நன்றாக இருக்க வேண்டும் என்பதுதான் திருவெம்பாவையின் உயிரோட்டமாகும்.

“கண்ணைத் துயின்று அவமே காலத்தைப் போக்காதே
விண்ணுக்கு ஒரு மருந்தை
விரும்பி வாழ்த்துவாயாக!”

என்ற தொடர்களெல்லாம் மகளிர் உரையாடலில் பதிந்திருக்கின்றன. மகளிர் பெருமை வழிபாட்டின் அருமை நோன்பு செய்யும் திறம் என்ற வகையில் திருவெம்பாவை நம்மை ஊக்கப்படுத்துகிற பகுதியாக அமைந்திருக்கிறது.

திருவெம்பாவையில் திளைத்த பெருமக்களெல்லாம் தொடர்ந்து உரையாற்ற இருக்கிறார்கள்.

திருவெம்பாவை, திருப்பாவை இரண்டு பாவைகளையும் ஒன்றாக இணைத்து விழா கொண்டாட வேண்டும் என்று சமய நல்லிணக்கத்துக்கு அறிவுரையாகக் காஞ்சி சுவாமிகள் இந்தப் பணியை முப்பதாண்டுகளுக்கு முன்னர் மக்களிடத்திலே நிறைவேற்றினார்கள்.

திருவெம்பாவை காட்டும் உருக்கமும் அறிவுப் பெருமிதமும் வீட்டையும் நாட்டையும் வெற்றி பெற வைக்கும் ஞான நோன்பாகும். விழா எல்லாச் சிறப்புடனும் நிறைவேற வேண்டுகிறேன்.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *