POST: 2017-12-19T10:26:47+05:30

திருப்பாவை பேருரை
••••••••••••••••••••••••••••••••
பத்மஸ்ரீ முனைவர் ஔவை நடராசன்
===================================
பாடல் – 4
========

———————————————————————————————–
ஐம்பதாண்டுகளுக்கு முன்னர் நான், தஞ்சை பேராசிரியர் திரு.கோபால ஐயங்கார், சிவகங்கை பேராசிரியர் திரு.டி.வே.இராமானுசன் அவர்களின் அடிவாரத்தில் இருந்து பயின்றபோது எடுத்த குறிப்புகள் சிதைவுற்று கிடந்தன. அதனை ஒழுங்குபடுத்தி வெளியிடுகிறோம்.
———————————————————————————————–

நாடு செழித்து வளமுற வேண்டும் என்றால், அதற்கு மழை இன்றியமையாதது. அதன் பொருட்டு நாம் என்ன செய்வோம் ‘மழையே தவறாது பெய்வாயாக“ என அதனையே வேண்டுவோம். வருணஜெபம் செய்யச் சொல்லுவோம். இறைவனை நோக்கி – “மழையைப் பொழியச் செய்து அருள்புரி“ என வணங்குவோம். நோன்பு நோற்ற கன்னியரும் தீங்கின்றி நாடு செழிக்கவே விரும்பினார்கள். திங்கள் மும்மாரி பொழிய வேண்டும். வயல்களில் செந்நெல் பயிர் ஓங்கி வளர வேண்டும். குவளைப் போதில் வண்டு தேனுண்டு உறங்க வேண்டும். கழனிகளில் கயல்கள் உலவித் திரிய வேண்டும்“ – என்றெல்லாம் ஆசைப்பட்டார்கள். இவை யாவும் மழையின்றி முடியுமா? மழைக்கடவுள் வருண பகவான். அவனுக்கு “பர்ஜன்யன்“ என்று ஒரு பெயருமுண்டு. அவனைப்பார்த்து – “திருமாலின் சாரங்க வில்லிவிருந்து அம்புகள் வரிசையாகவும் விரைவாகவும் தொடர்ந்து வருமல்லவா? அதுபோல நீயும் உலகம் முழுதும் வாழுமாறு மழையைப் பொழிந்திடு“ என்றார்கள். இப்படி அவர்கள் மழைக்கடவுளுக்கு இட்ட கட்டளையைத்தான் – ஆண்டாள், “சாரங்கம் உதைத்த சரமழை போல் வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும் மார்கழி நீராட மகிழ்ந்து“ – எனப் பாசுரமாக இட்டருளினாள்.

“கொடு“ எனும் சொல் தாழ்ந்தோர்களிடம் உயர்ந்தவர் கேட்டும் இரப்புரை. “கொ“ என்றால் இல்லாதபோது “இல்லை“ என்றும் சொல்லமுடியும். தாழ்ந்தவனை நோக்கி உயர்ந்தவன் – “கொடுத்திடு“ என்றால், அது கட்டளைச் சொல். இல்லை எனச் சொல்ல முடியாது. இதேபோல, “பெய், பெய்க, பெய்வாயாக“ என்பதெல்லாம் வேண்டுதலைக் குறிப்பிடும் ‘பெய்திடு‘ என்பதோ கட்டளைச் சொல். பெய்தே தீரவேண்டும் என்றும் பொருளது மழைக்கடவுள் என்ன நோற்கும் பெண்டிரிலும் இழிந்தவனா? பணிவடக்கத்தோடு சொன்னது கேட்கும் தாழ்நிலை உடையவரை அல்லவா கட்டளை இடலாம். வருணபகவான் அப்படி அல்லவே ! அப்படி இருக்க, மழைக்கடவுளைப் பார்த்து பெய்வாயாக என வேண்டுதலைத் தவிர்த்து ‘பெய்திடு‘ என்கிறார்களே இவர்கள் – என்று நமக்குத் தோன்றலாம். உண்மை என்னவென்றால் இது நோற்கவிருக்கும் கன்னிப் பெண்களின் உயர்வினைச் சுட்டும். “இவர்கள் கட்டளை இடுவாரானால் மழைக்கடவுளும் பணிந்து சொன்னபடி செய்யும் அளவிற்கு இவர்களது தலைமை சிறந்து காட்டுகிறது“ எனலாம்.

“கொண்ட கணவனையே தெய்வமாகப் பேணிப் பணிவிடை செய்கிறவள் எவளோ அவளே கற்பரசி, அவள் வேறு தெய்வத்தைக் கூட வணங்க வேண்டியதில்லை. அவளுக்கு மழைக்கடவுளும் பணிந்து நின்று பெய் என்றால் மழையைப் பெய்யும்“ – என்று வள்ளுவர் சொன்னார். கண்கண்ட கணவனை காணாத கடவுளாகக் கருதுவது என்றால் அது பாவனையாலே தானே முடியும்? அதே பாவனையைக் கொண்டு காணாத கடவுளைக் கண்கண்ட கணவனாகக் கருதுதல் ஏன் முடியாது? முடியும், என்ற ஆண்டாள் கோஷ்டியைச் சேர்ந்தவர்கள் அல்லவா? இவர்கள் மானிடவர்க்கு என்ற பேச்சுப்பட்டாலே உயிர் வாழ இயலாதவர்கள். கண்ணனையே கணவனாக மனதில் கொண்டிருப்பவர்கள். என்றால், இவர்கள் கற்பினை ‘தெய்வீகக் கற்பு“ என்று சொல்லலாம். இவர்கட்கு மழைக்கடவுள் விரும்பி வந்து ஏவல் செய்யக் கேட்பானேன்? நோன்பு நோற்கும் செய்தி அறிந்த அவன் தானே வலியவந்து, “உங்களுக்கு இயன்ற உபகாரம் செய்து புனிதம் பெற நினைக்கிறேன். செய்ய வேண்டியது சொல்லுக“ என கேட்டு நின்றான். அப்போது அவர்கட்கு “நீ எவ்வாறு எல்லாம் செய்ய வேண்டும் என்று பணிக்கிறார்கள். “வாழ உலகினில் பெய்திடு“ என்று !.

நோன்பு நோற்கும் பெண்கள் பெருமைக்காக மழைக்கடவுள் பணிந்துவந்து இட்டது செய்கிறான் என்றது இருக்கட்டும். அவனது சொந்த விருப்பமும் அதுவே என்று தெரிகிறது. சர்வேஸ்வரனே, கண்ணனாக அவதரித்து தன்னைத் தாழவிட்டு அவர்களோடு பரிமாறுதல் செய்து நோன்புக்கு உரியன எல்லாம் செய்கிறான் இல்லையா? “அச்சேர்த்தி கண்டு மகிழ வேணும். அவர்கட்கு தானும் இயன்றது செய்து உபகரிக்க வேணும். அது கொண்டு தானும் புனிதம் அடையவேணும்“ என்று விரும்பி தானே வலிய வந்து பணி கேட்கிறான் என்னுமார். அப்போது நோற்பவர்கள் கட்டளை இட்டுத்தானே ஆக வேண்டும். இந்த, சந்தர்ப்பச் சூழ்நிலையிலே “பெய்திடு“ என்று சொல்லுகிறார்களே தவிர வேறில்லை. இக்கட்டளையில், அகங்கார கர்வமோ அன்றி அதிகார தோரணையோ இல்லை. கட்டளையும் “பிரார்த்தனா ரூபமாகவே“ அமையும் எனலாம். ‘பெய்திடு“ என்று மட்டும் இல்லாமல் ‘பெய்திடாய்“ என்று கூறிய சொல்லாட்சியின் நயம் இதுவாகும்.

இனி, “எப்படிப் பெய்யவேண்டும்“ என்று சொல்லுகிறார்கள். சில சமயம், வானம் மேகமூடி இருக்கும். மப்பும் மந்தாரமும் ஆகத் தோன்றும். மின்னலோ மின்னி வெட்டும். இடியோசையும் காதைச் செவிடுபடுத்தும். இவ்வறிகுறிகளை எல்லாம் பார்த்து மழைபொழியும் என்றே நாம் சொல்லுவோம். ஆளுலோ நடப்பது வேறு. வானம் பொய்த்துவிடும். மழை பெய்யாது. நீருண்ட மேகங்கள் நகர்ந்து போய் வேறிடங்களில் பெய்யும். இவர்கள் சொல்லுகிறார்கள். இதுபோல, வானத்தளவில் நின்று பொய்த்து ஏமாற்றம் தரக்கூடாது. கீழே, தரையளவும் இறங்கிவந்து நீர் பரவுமாறு பொழிய வேணும் என்று ! “உலகினில் பெய்திடாய்“ – என்றதன் கருத்து, வானத்தளவும் நின்று பொய்த்துவிடாமல் உலகத்தளவும் இறங்கிவந்து நன்கு பொழியவேணும் என்பதாகும்.

மழை பெய்யாமல் இராது. பெய்யும். ஆனால் சிறுதூறல் அளவிலே பெய்து பூமியை நனைக்கும். இதனால் வெப்பம் மேலோங்கி பயிர் பச்சைகள் கெட்டழியும். இதற்கு ‘வறட்கேடு‘ என்று பேர். சில இடங்களில் ஒரேயடியாகக் கனமழை பொழிந்து பெரும் வெள்ளக்காடு ஆக்கிப் பயிரை அழிக்கும். இதற்கு “வெள்ளக்கேடு“ என்று பெயர். இருவகைக் கேடுமின்றி சம்மழை பெய்தால் மட்டுமே பயிர்பச்சைகள் வாழும். மக்களும் வாழ்ச்சி பெறுவர். மழை பெய்து மக்கள் வாழ்வு பெற வேணுமானால் – ஒன்பது நாள் வெயிலும் ஒரு நாள் மழையுமாக விட்டுவிட்டுப் பெய்தல் தகும். மக்களை மும்மாரி பெய்து வாழ வைக்கும் வகையில் அமையவேணும் என்பார் – “வாழ உலகினில் பெய்திடாய்“ என்று கூறினர்.

“நல்ல புண்ணியவான்கள் உள்ள இடங்களில் மழையைப் பொழிதலும். பாபிகள் உள்ள இடங்களில் பொழியாமையும் எங்கட்கு நிபந்தனை. அதை நீங்க உலகு எங்கும் வேற்றுமையின்றிப் பொழிதல் ஆகாதே“ – என்று தயங்கினான் மழைக்கடவுள். அதற்கு நோற்கும் பெண்கள் சொல்லுகிறார்கள். “ஈஸ்வரன் நிபந்தனை அதுவாகுமானால் அவன் அதிகரித்த காரியங்களிலே அங்ஙனம் செய்யுங்கள். நல்லாரைக் கைக் கொண்டும். அல்லாரைக் கழித்தும் இருப்பது ராமகோஷ்டி. ஆனால் சீதையோ பாபநாம்வா, சுபாநாம்வா“ என்று, நரையற்ற ராக்ஷ்ஸிகட்கும் இதம் செய்ய முற்பட்டவள். தோஷமே போக்யமாக்க் கொள்ளும் சீதா கோஷ்யினர் நாங்கள். ஆக, எங்கள் படியைப் பார்த்து நல்லவர் தீயவர் என்ற பாகுபாடின்றி எங்கும் ஒக்கப் பெய்தல் வேண்டும்“ என்று! நோன்புக்கு உதவியவர் உதவாதவர் என்ற வேறுபாடு போக்கி, எங்கும் ஒக்கப் பெய்திடல் வேண்டும் என்கிற கருத்திலேயே“ வாழ உலகினில் பெய்திடாய்“ என்கிறார்கள்.

திருமாலவன் கைவில்லுக்குச் சார்ங்கம் என்று பெயர். சக்ரபாணிபோல அவன் சாரங்காபணியும் அவன். அல்லல் இலக்குப் பெருத அளவும் இரை பெறாத பாம்புவோலே தன் அளவில் அடங்க் கிடக்கும். இராமபிரான் கடாக்ஷம் பெற்றவுடனே அது வீறுகொண்டு எழு. ஒன்றுபத்து நூறு ஆயிரம் ஆன அம்புகளை மழைபோல் எதிரிகள் மேலே பொழியும். உடையவன் கடைக்கணித்து விட்டால் பின்னர் அவளுலும் நிறுத்தவோ மீட்கவோ பேகாது. “சார்ங்கம் என்றும் வில் ஆண்டாள் தன்னை“ என அதனை அடக்கி ஆளுதல் மிக மிக அரிது. அப்படி, விரைந்து ஒன்றன்பின் ஒன்றாகத் தொடர்ந்து எழும் சரமழை, அந்த அம்பு மழைபோல விரைந்தும் தொடர்ந்தும் நீ பொழிதல் வேண்டும் என்பார். “சார்ங்கம் உதைத்த சரமழைபோல்“ பெய்திடாய் – என்கிறார்கள். ஆனாலும் இந்த உவமையில் ஒரு எதிர்நிலையான கருத்துண்டு. இராமசரம் எதிரிகளாய் உள்ள அரக்கர்குலம் முழுதும் அடங்க அழித்து முடிந்தது. நல்லாரைக் காக்க அல்லாதவரை அழித்து முடிக்கத்தான் வேண்டும். சிஷ்ட பரிபாலத்தின் பொருட்டுச் செய்யும் செயல் அது. பயிருக்குக் கேடான களைகளை உழவன் கிள்ளிக் களைவது போலே அது குற்றமுமன்று. நல்ல வாழ்ச்சிக்குக் காரணமாக செயல் ஆகையாலே ! இந்த வகையில் அது நல்லோர் வாழச் செய்ததும் ஆயிற்று. மேலும், தீயோர் நெடுகிலும் இருந்து பாவ காரியங்களைச் செய்யாமல் தடுத்து நிறுத்துதலால் அவர்களது நலவாழ்வுக்கும் காரணம் என்பர். இருந்தாலும் இவர்கள் சொல்லுகிறார்கள். சரமழை தீயோரை அழிப்பது போல நீ அழித்தொழிப்பது தகாது. உவமை கூறியதால் அதனை எங்கள் கருத்து என்று கொள்ளாதே. நாடு எங்கும் வாழக் கேடு ஒன்றுமில்லை அல்லவா? எல்லோரையும் வாழ வைப்பதற்காக நீ பெய்“ என்று ! வாழ நீ பெய்திடாய் என்பதற்கு உள்ளுறை இதுவாகும்.

“நீங்கள் சொல்லுவது மிக அழகாய் இருக்கிறது. சொன்னாலும் சொல்லாவிடினும் நான் மழை பெய்தாக வேண்டும். ஈஸ்வராக்ஞையாலே எனக்கு முன்னரே வகுத்த காரியமிது. உங்களுக்காக ஏதேனும் செய்து பெருமை பெற வந்தேனே ஒழிய வேறு இல்லை. ஏதேனும் உண்டானால் சொல்லுங்கள்“ இங்ஙனம் கேட்ட மழைக்கடவுட்கு நோன்பிருப்பவர்கள் சொல்லுகிறார்கள். “நாங்களும் மார்கழி நீராட“ என்று! நாங்கள் பாவைநோன்பு நோற்றோம். அதனாலே நாட்டில் மும்மாரி பெய்தது. நாட்டு வளமும் வீட்டு நலமும் பெருகிற்று என்று ஊரார் மகிழ அதுகண்டு களித்து நீராட வேணும். அன்றியும், நோன்பும் நீராடுதலும் ஒரு சாக்கே தவர கிருஷ்ணாநுபவனே எங்கட்கு நீராட்டம். நாங்களும் கண்ணனும் கலந்து கூடி நீராடுவோம். அதற்கும் நீ எங்கட்கு உதவினபடி ஆயிற்று. மேலும், கண்ணன் தன்னைத் தாழவிட்டுக் கொண்டு எங்களோடு கலந்து பரிமாறுவதைக் காணுவதும் அவனது சொலப்பிய சீலத்தை நோக்கி மகிழ்வதும் உனது விருப்பமில்லையா? நாங்களும் நீராடுவது தவிர உனது விருப்பமும் நிறைவேறும். இதனால், “நாங்கள் நீராடப் பெய்திடு“ என்கிறார்கள்.

அது கேட்ட அவள் மீண்டும் கூறினாள். “இந்த நோன்பும் நீராட்டமும் உங்கட்கு முன்னரே நிச்சயிக்கப் பெற்றது தானே? சோபவிருத்தர்கள் அனைவரும் கூடி“ பாவையர் நோன்பு நோற்கட்டும். அதனால் நாட்டுக்கும் நமக்கும் நலம் உண்டாகும். கிருஷ்ணனும் இதற்குத் தலைமையாய் இருந்து துணைபுரிவான்“ என்று முடிவு பண்ணி நடக்கிற காரியமில்லையா? இதில் தனியாக உட்கட்கு என வருவதென்ன? என்று ! அப்போது தான் நோற்பவர்கள் – “தாங்கள் பெற இருக்கும் தனி நலத்தினை, “நீராடுவதும் நோற்பதும் ஊராருக்கு என முன்திட்டமிட்டாத இருக்கட்டும். எங்கட்கு இதனால் விளையும் மகிழ்ச்சியும் சந்தோஷமும் இருக்கிறதே அது தனிப்பட இப்போது உன்னால் உண்டாகப் போவது, கேளாய் ! என்று சொல்லி அமைகிறார்கள். “நாங்களும் மகிழ்ந்து நீராட“ என்று சொல்லி மகிழ்ச்சிக்கு அதற்குரிய விளக்கத்தை கேட்டும் ஆவலோடு நிற்கிறானவன். நிற்கும் அவனைப்பார்த்து கன்னியர்கள் மேலும் சொல்லுகிறார்கள்.

நாங்கள் கிருஷ்ணனிடம் மிகுந்த பிரேமையும் பக்தியும் “பூண்டவர்கள். உண்ணும் சோறு, பருகும் நீர், தின்னும் வெற்றிலை என்று, எல்லாமுமே எங்கட்கு கண்ணன்தான். புருஷோத்தமனாகிய அவனையே கூடிக் கலந்து மகிழ நாங்கள் நோன்பு இருக்கிறோம். அவன்மீது ஆசையும் பெரிது. அளவிறந்தது. எங்கட்கு காணும் பொருள்கள். எல்லாம் அவனாகவே தோன்றுகிறது“ நிற்கின்றது எல்லாம் நெடுமால். எனவே காண்பது எங்கள் காட்சி. எங்களுள் ஒருத்தி, நிற்கின்ற குன்றத்தினை நோக்கி நெடுமாலே வா‘ என் அழைப்பிள். பெய்யும் மழையைக் கண்டால் உலகாழந்தான் என்று துள்ளுவள். இப்படி, எங்கெங்கே நோக்கினாலும் அங்கங்கே வந்து அவனே தோன்றுவன். இயற்கையும் அதனுள் பொதிந்துள்ள அழகும் அவனாகவே தோன்றும் காட்சியை நாங்கள் காணுகிறோம் என்றாலும். தம் மனதில் உள்ளதையே பிறர் வெளிப்படையாகக் காட்டக் காணும்போது கொள்ளும் மகிழ்ச்சி மிகுதியாகும் இல்லையா? அந்தப் பேருதவியினை, நீ செய், அது எங்கட்கு தனிப்படச் செய்த பேருதவியாகும். இது கேட்ட வருண பகவான், “ஆகட்டும் சொல்லுங்கள்“ அப்படியே செய்கிறேன் என்றான்.

நீ கடலின் நடுவிடத்தே புக வேணும். கரைவாயிலே முகக்க ஒண்ணாது. மணலே தெரியும்படி நீர் முழுவதையும் முகக்க வேணும். ஊழி முதல்வன் உவகைப் படைக்கும் போது கருவடைந்த பயிர்போலக் கருத்திருப்பனே – அப்படி கருத்திருக்க வேணும். அவனது அகவாயில் நீர்மை உங்களால் கொள்ள இயலாது. சிறிது மழைபெய்த உடனே உடல் வெளுத்து விடும். இப்படியின்றி மெய்கறுத்திருக்க வேணும். அவன் கைத்தலத்திலே கொண்ட ஆழிபோல் மின்னுதல் வேண்டும். பாரதயுத்தத்திலே ஊதிய அவன் கைப் பாஞ்சசன்னியம் போலே சங்கொலி கேட்க வேணும். சார்ங்கம் உதைத்த சரமழைபோல் பெற்ற வேணும் – என்றெல்லாம் நியமித்தார்கள். இப்படிச் செய்தால் – எங்கட்கு “அவள் உருவம் காட்டும். அவன் வரவு சொல்லும். பெய்த நீர் நிலைகளில் எல்லாம் அவனிருப்பும் தோற்றும். இது மட்டும் அன்றி, பின்னிட்டு நிகழப்போகும் “பகவதநுபவத்திற்கு“ முன்னோடியாக அமைந்து நோன்பின் பலனையும் அதன் உறுதிப்பாட்டினையும் நினைப்பூட்டி நிலைநிறுத்தும் ஊராருக்கு ‘நீராட வேண்டும்‘ என்கிறது. தவிர பிரிதிபூர்வமான மகிழ்ச்சியில் நிர்பந்தமில்லை அல்லவா? ஆக “நாங்களும் மகிழ்ந்து நீராட நீயே காரணமாவது உன் செயல் எங்கட்குப் பேருதவி ஆகும் என்று கூறி முடித்தார்கள்.

நம்மைப் படைத்த இறைவன் உடனடியாக நிலம், நீர், தீ, காற்று, விண் முதலிய பஞ்ச பூதங்களையும் படைத்து, அவற்றின் ஊடே உயிர்க்குயிராயிருந்து நம்மைக் காக்கவும் செய்கிறான் என்பதே பழம் தமிழ் சமயங்களின் அடிப்படைக் கொள்கை. இயற்கையே கடவுள்“ – என்ற கோட்பாடு எச் சமயங்களுக்கும் உண்டு. இயற்கை இறைவனுக்கு உடல் என்றால் அவற்றூடே பொதிந்த அழகு அவனுக்கு உயிர் எனலாம். திருமாலை ‘அழகன்‘ என்பதும். சிவனைச் ‘சொக்கன்‘ என்பதும் குமரனை முருகன்‘ என்பதும் காணுதற்கு உரியது. நக்கீரர் என்கிற சங்கப்புலவர் இறைவனை “கை புகுந்து இயற்றாக் கவின்பெறும் வனப்பு“ என்றார் தாயுமானவர். “இயற்கையே தெய்வம்“ என்று வழிவழி வந்த உயர்ந்த கருத்தினையும், அதனை விளக்கும் முறையழகினையும் இப்பாவைப் பகுதி நமக்கு நன்கு துவக்கும் வானாகி மண்ணாகி, வளியாகி ஒளியாகி ஊன் ஆகி, உயிர் ஆகி நின்றாயை என சொல்லி வாழ்த்துபவனே“ என்றார் மணிவாசகர் “உடலில் உயிர்போலப் பரந்து எங்கும் கரந்துள‘ வடிவினை “அந்தர்யாமித்துவம்“ என இறை நிலையுள் ஒன்றெனப் பேசுவர். இப்படி உயர்ந்த சாஸ்திரக் கருத்தினை எளிய இனிய தமிழில் புரியும்படி விளக்கியுள்ள ஆண்டாளின் அருளுள்ளம் மிகவும் போற்றுதற்கு உரியதே ஆகும்.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *