POST: 2017-12-20T10:17:31+05:30

திருப்பாவை பேருரை
••••••••••••••••••••••••••••••••
பத்மஸ்ரீ முனைவர் ஔவை நடராசன்
===================================
பாடல் – 5
========

“கன்னியர் ஆகிய நாம் நோன்பு நோற்கிறோம். நாடு செழித்து வளம் பெருகும். நாமும் கண்ணனோடு கூடி மகிழப் பெறுவோம்“. இப்படி பாவைப் பெண்கள் எண்ணி மகிழ்ந்து கொண்டிருந்தார்கள் இல்லையா? இதில் ஒருத்திக்கு ஐயப்பாடு தோன்றிற்று. “நாம் ஏதோ பகற்கனவு போல கண்டு கொண்டிருக்கிறோம். நல்ல காரியத்திற்கு நாலு தடை வரும் என்பர். நம்முடைய முன்னைய வினைகள் வந்து குறுக்கிடாதா? இராமன் முடிசூடுவது என்ன ஆயிற்று. உலகாளும் மன்னனே முடிவு பண்ணினான். வசிட்ட முனிவன் முகூர்த்த விதாநம் பண்ணினான். மூத்தவனாகப் பிறந்த பாக்கியவான் முடிசூடுகிறான். ஊரார் முழுவதுமே உத்திசைத்து மங்களாபிஷேகத்தை எதிர் நோக்கி இருக்கிறார்கள். இராமபிரானும் குல தெய்வத்தைத் தொழுது முடிசூட வந்தான். இப்படி எல்லாம் அநுகூலமாய் இருந்த போதிலும் இடையூறு வரவில்லையா?“ என்று, அவள் மற்றவரை நோக்கிச் சொல்லிமுடித்தாள்.

“நாம் அனைவரும் பகவத் விஷயத்தில் ஈடுபட்டவர்கள். முன்னைய வினைகள் நமக்கு விரோதிகள் தாம். ஆனால், அதுபற்றிய கவலை தேவையில்லை. விரோதிகளை நீக்கிக்கொண்டு தான் நாம் பகவத் விஷயத்தில் இறங்க வேண்டிய நியதி இல்லை. இன்ப மகிழ்ச்சிக்காக பாலை அருந்தினால் அதுவே பித்த நோக்கு மருந்தாகும். இராமபிரானைச் சரணம் புகுந்தான் விபீஷணன். கடல் அருகே இருந்தும் ஒரு முழுக்குப் போட்டானா அவன். “சுத்தம் வேத்தி விபிஷணம்“ – என்று இராமனை நோக்கி வருகையே அவனுக்குச் சுத்தமாகவில்லையா? ஆகவே, நமது பாவங்கள் தன்னடைவே கழியும். மேலும், “ஈஸ்வரன் தான் எண்ணியதைக் குலையவிட்டாலும். தன் அடியார்கள் எண்ணியதை நிறைவேற்றவே செய்வன். இராமபிரான் முடிதவிர்ந்தது சுக்ரீவனுக்கும் விபிஷணனுக்கும் முடிசூட்டுவதற்காக அல்லவா? எனவே, எந்தத் தடையும் குறுக்கிடாது. தாமோதரனை செப்பு – பிழைகள் எல்லாம் நீங்கும்“- என்று முன்னவளுக்கு மறுமொழி கூறினாள். வேதாந்தஞானம் உள்ள மற்றொருத்தி“ தாமோதரனை வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்க போய பிழையும் புகுதருவான் நின்றனவும் துயினில் தூசாகும்“ – என்று ஆண்டாள் இதனைப் பாசுரம் இடுகிறாள். நாம் திருநாம சங்குர்த்தனத்தில் அதிகரித்தால் போதும். இதற்கு விரோதிகளான கர்மங்கள் அடைய நசித்துப்போம் – என்று கருத்து.

செப்பு என்பது தெலுங்கு மொழி. தமிழில் திசைக்சொல்லாக வந்துள்ளது. சொல்லு அல்லது சொல்லுவாயாக என்று பொருள். செப்பு என்பதற்கு உத்திமாத்திரமே போதும் என்று கருத்து. வாயளவில் சொல்லுவது தவிர வேறு நினைவு கூடத் தேவையில்லை. தாமோதரன் என்று சொல்லளவு கூறினாள் போதும். அதன் பொருளோ அன்றி பொருளுக்கு உரியவன் பெருமையோ அறிய வேண்டியதில்லை. “நாராயண ஸப்தமாத்திரம் “ – சகவதுக்கங்களையும் போக்கடிக்கும். “நலம் தரும் சொல்லை நான் கண்டு கொண்டேன். நாராயணா என்னும் நாமம்‘ என்று பாசுரம். நாம் இதற்குமேலே தூமலர் தூவி வாயினால்பாடி, மனதினால் சிந்தித்து தொழுகிறோமே. இவ்வளவு மிகையல்லவா? நிச்சயமாய் நமது பூர்வவினைகள் யாவும் நீங்கும் என்பவள். “தாமோதரனைச் செப்பு“ என்கிறாள். இருந்த போதிலும், அச்சொற்பொருள் அமைதியினைக் காணுதல் நலம் இல்லையா?

தாமோதரன் என்பது திருமாலின் பன்னிரு திருநாமங்களுள் ஒன்று. கிருஷ்ணாவதாரம் பற்றியது. கண்ணனாக அவதரித்தது. தீயதை அழித்து நல்லதைக் காத்து தர்ம ரக்ஷ்ணம் பண்ணுவதற்காக “உலகு தன்னை வாழ நின்ற நம்பீ தாமோதரா“ என்றார் பெரியாழ்வார். கோகுலத்தில் வளரும்போது தீம்புகள், பல செய்து நின்றான் கண்ணன். அதற்கு அஞ்சிய அசோதைப் பிராட்டி அவனை உரலோடு பினைத்துத் தாம்பினால் கட்டிப் போட்டாள். கட்டிய தாம்பு அழுத்தி அவன் வயிற்றில் தழும்பு உண்டாயிற்றாம். இதனாலே தாமோதரன் என்று பெயர் வந்தது. தாமம் கயிறு அழுத்திய தழும்பு. அது பொருந்திய வயிற்றினன் தாமோதரன். இதனால் பத்துடை அடியவர்க்கு எளியனான பண்பு மேம்பாடு புலப்படுகிறது. இக்குணத்தினை “சௌலப்பியசீலம்“ என்பர் வடநூலார். இங்ஙனம் அடியார்க்காக தன்னைத் தாழவிட்டு இவ்வளவு எளிமை பூணுவனை ‘பாடு‘ என்கிறாள்.

“ஆதியம் சோதியுருவை அங்கு வைத்து இங்குப் பிறந்தான்“ என்னும்படி கண்ணனோ அவதாரபுருஷன் அன்றியும், அங்கு இங்கு என்னாதபடி எங்கும் நிறைந்த பரம்பொருள். அவனை ஓருரலிலே இணைத்துக் கட்ட முடியுமா? அசோதை நினைத்தாள்.. நாம் கட்டிவிட்டோம் என்று ! உண்மை என்ன? அவள் எண்ணம் நிறைவேறியதாக மகிழப்படி தானே கட்டுப்படுத்திக் கொண்டான். அவன், இவ்வுண்மையினை உணர்ந்த மதுரகவியாழ்வார் “கண்ணி நுண் சிறுத்தாம்பினால் கட்டுண்ணப் பண்ணிய பெருமாயன்“ என்கிறார். இதன் காரணம என்னவென்றால், “இவ்வளவு குழப்படிதலுள்ள பல் வயமான பிள்ளையைப் பெறக் கொடுத்து வைத்தவள்“ என்று நாட்டார் அசோதையைப் புகழவேண்டும் என்பதற்காக “தாயைக் குடல் விளக்கம் செய்த தாமோதரன்“ என்றதும் இதுபற்றியதே ஆகும். “பிறந்த வயிற்றுக்குப் பட்டம் கட்டினவன்“ என்று பூர்வீகருரை “மகன் தந்தைக்கு ஆற்றும் நன்றி இவன் தந்தை எந்நோற்றான் கொல் என்னும் சொல்“ என்றார் திருவள்ளுவர். இத்தகைய பெருமைக்கு இலக்காகிய தாமோதரனை வாயினால் பாடு. பாடவே நமது முன்னைய வினைகள் கழியும். எண்ணிய கருமம் துங்கின்றி முடியும் என்கிறார்.

தர்மரக்ஷ்ணத்துக்காக வந்து பிறந்த பரம்பொருளே கண்ணன் தன்னைத் தாழவிட்டு, தாயின் கட்டுதலுக்கு ஒப்பி உரலோடு கட்டுண்டு இருந்தான். அதுபோல தன்னை அக்கட்டின் நின்று விடுவித்துக் கொள்ள முடியும் இல்லையா? இல்லை அவனாலும் தன்னை அக்கட்டின் நின்று விடுவித்துக் கொள்ள முடியாது. கர்மவசத்தால் வந்த நமது பந்தங்களை நம்மாள் அறுத்துக் கொள்ள முடியுமா? அது போலவே “ஈஸ்வரனுக்கும் அநுக்ரக காரியமாக வந்த அந்த பந்தங்களையும் நீக்கிக் கொள்ள இயலாது. இதில், ஒரு விசேஷம் என்னவென்றால். “அவனை கட்டுண்டிருந்தபடியை நாம் அங்கு சந்திப்போமானால் நமது சம்சாரபந்தங்கள் அற்றுப்போம்“ என்கிறது சாஸ்திரம். அடியார்கள் சம்ஸாரபந்தம் அறுகைக்காக அவன் கட்டுண்டபடியே இருக்கிறான் போலும் ! இதனை நினைத்தே நம்மாழ்வார், “எத்திறம் உரலினோடு இணைந்து இருந்து ஏங்கிய எளிவே“ என மிகவும் ஈடுபடுகிறார். தாமோதரனது ! சௌலய்யசீலத்தை வாயினால் பாடுவோம். மனதினால் சிந்திப்போம் நமது போயபிழைகள் எல்லாம் அகலும்“ என்கிறாள்.

திருவரங்கம் பெரியகோயில் என்பது வைணவர் வழக்கு. பூலோக வைகுண்டம் என்று அதன் பொருள். அங்குள்ள இறைவன் திருவரங்கன். “அரங்கத்து அம்மான் திருவயிற்று உதரபந்தம் அன்றோ என்னை ஆட்கொண்டதே“ – என்று ஆழ்வார் திருவாக்கு. அரங்கனது. திருவயிற்றில் உள்ள தாம்பு அழுத்திய தழும்பு என்னை ஆட்கொண்டது என்று கருத்து. இங்கு நாம் சற்று நின்று சிந்திக்க வேணும். கண்ணன் திருவயிற்றில் அசோதைகட்டிய தாம்பின் தழும்பிருந்தது உண்மை. அரங்கனுக்கு எப்படி வந்தது? எனில், அந்தக் கண்ணனே அர்ச்சாவதார வடிவமாய் அரங்கத்திலும் எழுந்தருளி உள்ளான் என்பதே ஆழ்வார் கண்ட உண்மை. கோவலனாய் வெண்ணையுண்டவாயன் அண்டர்கோன் அணியரங்கன்“ – கவளமால் யானை கொன்ற கண்ணனை அரங்கமாலை“ என்று ஆழ்வார் பாசுரம். இதனால் அனைத்திடங்களிலும் கண்ணனே கோயில் கொண்டிருக்கிறான் என்றோ. அல்லது எல்லா இறைவனையுமே கண்ணனாகக் கொண்டு வணங்கவேண்டும் என்றோ ஒரு கொள்கை பரவியிருந்தது தெரியலாம். அரங்கன் திருக்கோலத்தில் வயிறை ஒட்டி இடுப்பில் ஒரு தங்கத்தாலாகிய கணையும் சாத்துவது உண்டு. அதற்குரிய காரணத்தை ஒரு வைணவப் பெரியார் ரசோக்தியாகப் பின்வருமாறு அருளிச் செய்வராய் !“ பானைகளிலே தாவினவாறே உடை நழுவ தழும்பைக்கண்டு இடைச்சியர்கள் சிரித்தார்கள். அத்தழும்பு தோன்றாமைக்கிறே நம் பெருமாளுக்குக் கணையம் மேல் சாத்துகிறது“ என்று ! கண்ணன் கட்டப்பட்டு அழுந்திய தழும்பினை நினைத்தால் சம்பந்தமான பாவங்கள் தொலையும். அதனால், தாமோதரனை ‘வாயினால் பாடு‘ பாடவே நமது முன்னை வினைகள் தடையாயிராது“ என்கிறாள். தாமோதரனைப் பாடு என்பதில் இவ்வளவு ஆழ்ந்து அகன்ற கருத்துக்கள் உண்டு.

இனி ‘பாடி‘ என்று சொன்னாலே போதும், வாய் என்பது தானே நினைவுக்கு வரும். வாயினால் பாடி என வேண்டியதில்லை. வாயினால் என்ற சொல் இங்கு வேண்டாதது. இது “வேண்டா கூறி வேண்டியது முடித்தல்“ எனும் இலக்கண வழக்கு பற்றியது. பாடி என்று மட்டும் சொன்னால் – பிரீதிக்குப் போக்கு வீடாகப் பாடி. மற்றவர் சொன்னதற்காகப் பாடி. தற்போது போக்குக்காகப் பாடி பிறர் பாடியது பார்த்துப் பாடி என்று பல காரணங்கள் புலப்படும். வாயினால் என்ற விசேஷணத்தால் “வாய் பெற்ற பயனாகப்பாடி“ என்ற தனிப்பட்ட பொருளைத் தரும். “வாய் அவனை அவ்வாறு வாழ்த்தாது“ என்கிறபடி, வாய்பெற்ற பயன் அவனை இறைவனை வாழ்த்துதலே ஆகும். மனத்தினால் சிந்திக்க என்றதும் இதைப் போன்றதே. மனம் பெற்றதன் பயனாகத் தாமோதரனை நினைத்து என்றதே பொருள். பாடுவதையும் நினைப்பதையும் உபாயமாகக் கொண்டு பிறிதொரு பயனையும் கருதுதல் தகாது. இறைவன் தந்த கரணத்தை அவனுக்கே ஆக்கி நினைத்தலும் பாடுதலும் செய்தோம் எனக்கருதி மகிழ்வேனும்“ என்றது கருத்து.

“மனோ, வாக்கு, காயம்“ என்கிறபடி உள்ளம் உரை செயல் என்ற மூன்றும் முறைப்படி செயல்படவேண்டும் இல்லையா? மனம் நினைத்ததையே வாக்குப் பேசும். நினைப்பு முதலில் நிகழாமல் எதையும் பேச முடியாது. இதன்படி சொல்லுவதானால் “மனத்தினால் சிந்தித்து, வாயினால் பாடி, தூமலர் தூவி“ என முறை தவறாது வரவேண்டும். ஆனால் அதற்கு எதிராக “தூமலர் தூவித் தொழுது, வாயினால் பாடி, மனத்தினால் சிந்திக்க“ எனப் பாட்டு அமைகிறது என்றால் முறை மாற்றத்தில் ஒரு நயம் உண்டு. இறைவனைப் பற்றிய ஈடுபாடுகட்கு எல்லாம் பக்தியே முக்கியமானது. பக்தி பரவசம் என்பது உண்டு. பக்தி முதிர்ந்த நிலையிலே கருவி கரணங்கள் யாவும் நான் முந்தி, நீ முந்தி என்று முறை தடுமாறுவது இயல்பு. இதைப் புலப்படுத்தலே “தூவுதல், பாடுதல், நினைத்தல்“ என அவற்றின் முறைமாறி வந்தது. “நிலைகுலைந்து மனசுக்கு முன்னே தொழுகையும் பாடுகையும் முற்படுகையாலே ஆற்றாமையின் மிகுதி சொல்லிற்று. தனித்தனியே கரணங்கள் முந்திக்கொண்டு மேல் விழுந்தபடி“ என்று, இவ்விடத்து வியாக்யான வாக்கியங்கள் நினைக்கத் தகும்.

தாமோதரனைப் பாடி நினைப்பதால் விளையும் பலனைச் சொல்லுகிறது. மேலே, போய பிழையாவது நாம் பல பிறவிகளில் ஈட்டிய பாவ புண்ணியங்களின் தொகுதி. அதுவே சஞ்சிதம் எனப்படும். சஞ்சித மூட்டைகளைத் துய்த்துக் கழிப்பதற்கே நாம் இப்பிறவி எடுத்திருக்கிறோம். அந்த முன்னைய வினைகள் நீங்கினால் பிறவியே வராது. எடுத்த பிறவியிலேயும் பாவமும் புண்ணியமும் செய்வோம் இல்லையா? இது ஆகாம்யம் எனப்படும். ஒவ்வொரு பிறவியின் இறுதியிலும் இசைபோய் சஞ்சித பர்மங்களோடு சேரும். இதனால் மீண்டும் மீண்டும் நாம் பிறப்பது மேலும் வருவடையும். இந்த ஆகாம்யத்தையே“ புகுதருவான் நின்றன“ என்று கூறிற்று. இந்த இருவினைகளும் அழிந்தால் மட்டுமே நமக்குப் பிறவி அறும். பிறவா நெறியையும் நாம் அடையமுடியும். இதற்கு இறைவன் இன்னருள் இருந்தால் ஒழிய முடியாது.“ செங்கன் இரண்டும் கொண்டு எங்கள் மேல் நோக்குதியேல் எங்கள் மேல் சாபம் இழியும்“ என்றாள் ஆண்டாள். இறைவன் அருள், அவனை நினையாமலும் பாடாமலும் இருந்தால் எங்ஙனம் கிட்டும்? அதனால் “பாடி, சிந்திக்க“ போய பிழையும் புகுதருவான் நினைறனவும் தீயினில் தூசாகும் என்கிறது.

“தீயினில் தூசு ஆகும்“ என்றது, நெருப்பில் இட்ட பஞ்சுப் பொதி போல உருமாயந்து போகும் என்றபடி, தூசு பஞ்சுமூட்டை, இருவகைப் பாவங்களும் தாமே கழியும் வேறு முயற்சி வேண்டாம் என்பது உள்ளுறை. “வேதம் முன் விரித்தான்“ – என்கிறபடி வேத்த்தை வெளியிட்டவன் இறைவன். அதில் விதித்தன செய்தலும் விலக்கியன ஒழித்தலும் நமது கடன். அதை மீறி நாம் நடந்தால் ‘தேவகோபம்“ ஏற்படும். அதன்படி நடந்தால் இறைவனது ‘அநுக்ரகம்‘ ஏற்படும். இதனால், ‘ஈஸ்வர நிக்ரகம்“ பாவம். ஈஸ்வராநுக்ரகம் புண்ணியம் என ஆகிறது இல்லையா? ஆகவே, நமது பாவங்களை எல்லாம் ஈஸ்வரன் ‘பொறுத்தேன்“ என்னத் தீரம் அத்தனையே !“ தன்அடியார் திறத்தகத்துத் தாமரையாள் ஆகிலும் சிதகு உரைக்குமேல் என் அடியார் அது செய்யார். செய்தாரேல் நன்று என்பர் போலும்“ என்று பாசுரம். அடியார் பிழை பொறுக்கும் அவள். ஆகையாலே எல்லாப் பிழைகளும் அவன் பொறுக்கத் தானே மாயும். இது கருதி “தீயினில் தூசாகும்‘ எனப்பட்டது. புண்ணியம் நல்வினை ஆனாலும் அதுவும் பிறவிக்குக் காரணமே பாவம் இரும்பு விலங்கு என்றால் புண்ணியம் பொன்விலங்கு போலே, இதனால், புண்ணியமும் கழிக்க வேண்டிய பிழைபோல ஆயிற்று. இதனால் எங்கள் மேல் சாபம்‘ என்றபோது பாவ புண்ணியங்களாகிய சஞ்சிதங்கள் எனப்பட்டது.

சஞ்சிதம், ஆகாம்யம் போல ‘பிராரப்தம்“ என மூவகை வினைகளுண்டு. பிராரப்தம் எழுத்த பிறவியில் அநுபவிக்க நேர்ந்த பாவ புண்ணியங்கள். அதை எவரும் அநுபவித்தே கழிக்க வேணும். அழுதழுது துய்த்துக் கழிக்க வேண்டியது அது. அதைப் போக்க இறைவனாலும் முடியாது. கர்ம விஸ்யத்தால் நம்மை ஒத்துப் பிறவாதவன் இராமபிரான். அவனும் விதிவிலக்குக் கட்டுப்பட்டவன் போலக் காட்டுவது. பிராரப்த வினை அநுபவித்தே தீரவேணும் – என்றது. தெரிவிப்பதற்காக என்பர். மேலோர், அவன் கானகம் புகுந்தபோது “இழைக்கின்ற விதிமுன் செல்ல. தருமம் பின் இரங்கி ஏக“ என்பர் கம்ப நாடர். இந்த சாஸ்த்ரார்த்த நுணுக்கம் புலப்படவே மூவகைப் பாவங்களுள் பிராரப்த்தத்தை நீக்கி – “போயபிழையும் புகுதருவான் நின்றனவும்“ என்கிறாள் ஆண்டாள். கண்ணன் கீதையுள் “அகம் துவாசர்வ பாபேப்யோ“ என்று சொன்னதும் இக்கருத்திலேயே ஆகும். அங்கு, வீட்டைய பிராரப்தகர்மம் தடையில் பயாகையால் அதை நீக்கி மற்றையிரண்டைச் சொன்னதாகவே பொருள்.

இரண்டாயிரம் ஆண்டுகட்கு முற்பட்ட திருவள்ளுவர் பேசுகிறார். “இருள் சேர் இருவினையும் சேரா, இறைவன் பொருள் சேர் புகழ் புரிந்தார் மாட்டு“ என்று இறைவனைத் தவிர மற்றையோரைப் புகழுவது எல்லாம் பொருள் சேராத புகழ். பொய்யும் புனைந்துரையுமாக அமைவது ஆகையால். புகழ் புரிதல் ஆவது இறைவனைப் பாடுதலும் நினைத்தலும் ஆகும். இருள் சேர் இருவினை பிறப்புக் காரணமான சஞ்சித ஆகாம்யங்கள். போய பிழையும் புகுதருவான் நின்றனவும் எனலாம். இவ்விரண்டும் அவனது இன்னருளால் – “சேராதொழியவே“ வீடுபேறு கிட்டி பிறவா நெறி அடையலாம் என்று அவர்தம் குறளின் கருத்து. இதை அடியொற்றியே “போய பிழையும் புகுதருவான் நின்றனவும் துயினில் தூசரகும் என்று பாசுரமிட்டாள் ஆண்டாள். முன்னோர் மொழி பொருளைப் போற்றுவது புலவர்கள் கடன்.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *