POST: 2017-12-21T10:42:57+05:30

திருப்பாவை பேருரை
••••••••••••••••••••••••••••••••
பத்மஸ்ரீ முனைவர் ஔவை நடராசன்
===================================
பாடல் – 6
========

பெருக்காற்றிலே இறங்கும் மக்கள் தனியாக இறங்கமாட்டார்கள். அவர்கட்குத் துணைதேட்டமாய் இருக்கும். பகவத்விஷயமும் அதுபோலவே தான். தனி ஒருவராய் நின்று எவரும் அநுபவிக்க முற்படார். “கால் ஆழும், நெஞ்சு அழியும், கண் சுழலும்“ என்கிற குணங்குறிகள் இருசாராருக்குமே பொது. இது கருதியே நம்மாழ்வார் “செஞ்சொற்கவிகான் என்னை உயிர்காத்து ஆட்செய்மின்“ என்றார். பரமபர நிலத்திலும் கூட அடியார்களுடன் கூடியே அநுபவிக்கலாம்படி இருக்கும். “அந்தம்இல் பேரின்பத்து அடியோடிருந்தமை“ என்று பாசுரம், தவிரவும், நோற்கும் பெண்கள் – பகவத் விஷயத்தில் ருசியுடையார் எவரும் இழக்கல் ஆகாது என்றும் நோக்குடையவர்கள். அடியார் துணைஇன்றி அநுபவித்தல் நமக்குத் தகாது என்கிற போக்கும் அவர்கட்கு உண்டு. ஒருவருக்கு ஒருவர் “போத யந்த பரஸ்பரம்“ என்கிறபடி கலந்துபேசுவதில் இனிமையும் கண்டவர்கள். ஆகையால், கிருஷ்ணாநுபவத்துக்கு சாதகமான காலம், நேரம், ஊரார் இசைவு கோகுலவாசம் எல்லாமும் கூடித் தனித்தனியே கூடி அநுபவிக்க வாய்ப்பிருந்தும்கூட அதைவிடுத்து ஒருவரை ஒருவர் துயில் எழுப்பிக்கொண்டு செல்கிறார்கள்.

“ஆசையோ பெரிது கொள்க அலைகடல் வண்ணர்பாலே“ – என்றது ஆழ்வார் திருவாக்கு. நீலநிறக் கண்ணனிடம் ஆசையதிகம் கொள்ளல் வேண்டும் என்று கருத்து. அப்படி, கண்ணனிடம் காதலைமிகக் கொண்டவர்கள் நோற்கும் பெண்கள். காதலித்தவனைக் “கண்ணாரக் கண்டாலே ஆசை தீரும். அது தீரும் அளவும் கண்ணுறக்கம் வராது“. என்பர். “கண்ணாரக் கண்டு கழிவதோர் காதல் கொண்டார்க்கு, உண்டோ கண்கள் துஞ்சுதலே“ என்று பாசுரம். ஆகவே இவர்களது கிருஷ்ணாநுப ஆசையளவில் சிறிதும் ஏற்றத்தாழ்வு கிடையாது. அதற்குத் தடையாய் வரும் முன்னைய பாவங்களும் தன் அடைவே கழியும் என்ற துணிவும் ஏற்பட்டுவிட்டது. இவ்வளவுக்கும், பின்னர் “சிலர் உறங்குவார்கள். முந்துற எழுந்தவர்கள். அவர்களை எழுப்புவார்கள்“ என்பது பொருந்துமா? – என்று ஒரு கேள்வி எழும்.

இங்கு உறங்குபவர்கள் என்றால், மதிமயங்கி தன்னை மறந்து தூங்குபவர்கள் இல்லை. எழுந்தவர்கள் முற்றிலும் மேம்பட்டுத் தெளிந்தவர்களும் இல்லை. எல்லோரும் கிருஷ்ண பிரேமையில் ஒரு நிலைப்பட்டவர்களே ஆவர். பின்னர் ஏன் இந்த வேறுபாடு? என்றால் பகவத் விஷயம் அத்தகையது. நஞ்சுண்டவர்களை, அது செயலற்று மயங்கி இருந்த இடத்திலே கிடக்குமாறும் செய்யும். வேறு சிலரை, இருக்கவொட்டாது. நிலைபெயருமாறு இடம் பெயர்ந்து திரியவும் செய்யும். இதை ஒப்ப, பகவத்விஷயத்திலும் ஈடுபட்டோர் விருத்தி நிஷ்டரும், குண நிஷ்டரும் என இருவகைப்படுவர். முனிவர்களும் யோகியரும் போல அவர்கள். உறங்குபவர்கள் கண்மூடி மெய்மறந்து தூங்குபவர்கள் ஆகார். “விழுதுயில்“ என்றுமாறு அவர்களது அறிதுயிலே ஆகும். அவர்கள் நினைவு முதிர்ச்சியின் விளைவால் கிருஷ்ணாநுபவத்திலேயே முழுகி இருப்பிடம் விட்டுப் பெயராதவர் ஆவர். மனன நீலர்களாய் தியானத்திலேயே ஆழ்ந்து இருக்கும் முனிவர்களைப் போல குணாநுபவம் புரிபவர். முந்துற எழுந்துவந்து எழுப்புபவர்கள் யோகியர்கள் போல“ கைங்கர்ய பரர்கள்“ அதாவது இருந்த இடத்தில் இருக்க ஒட்டாதவர்கள். முனிவர்களும் யோகியரும் பகவதநுபவத்தில் ஒத்த பாங்கு உடையவர்கள் ஆவது போல. இங்கும் உறங்குபவர் எழுப்புபவர் இடையே வேறுபாடு கிடையாது.

வைணவ சமயத்துள் “பகவான், பாகவதர்கள் ‘இருவருக்கும் தனிப்பெரும் சிறப்பு உண்டு. பகவானைக் காட்டிலும் பாகவதர்கட்குப் பெருமை அதிகம் கூறுவர். திருமால் அடியார்கட்குப் பாகவதர்கள் என்று பெயர். இறைவனுக்கு இருப்பிடங்கள் பலபல உண்டு. அவைகளுள் தலை சிறந்தது அடியார்கள் உள்ளமே என்பர். “பனிக்கடலுள் பள்ளிகோளைப் பழகவிட்டு ஓடிவந்து என் மனக்கடலுள் வாழவல்ல மாய மணாள நம்பீ“ என்பர் பெரியாழ்வார். திருமால் அவர் மனதுள் கோயில் கொண்டுள்ள சாரணத்தாலேயே அவருக்கு விஷ்ணுசித்தர்“ என்று பெயர் வழங்கும். மற்றொரு ஆழ்வார் ‘தொண்டர் அடிப்பொடி எனவே பேர் பெற்றார். சைவ சமயத்துக்கும் இதில் கருத்து உடன்பாடு உண்டு. ஆண்டவனிலும் அடியார் சிறந்தவர் என்று அவர்தம் கோட்பாடு. ‘தொண்டர்தம் பெருமை சொல்ல ஒண்ணாதே‘ என்று ஔவை திருவாக்கு. “மனத்து அகத்தான் தலை மேலான், வாக்கின் உள்ளாள். வாயாரத்தன் அடியேபாடும் தொண்டர் இனத்தகத்தான்“ என்றே தேவாரமும் பேசும். அடியார்களே இருப்பிடமாகக் கொண்டவன் சிவபெருமான் என்பது கருத்து, “விஷ்ணுசித்தர்‘ என்பது போல “சிவபாத இருதயர்“ என்றே சிவனடியார் ஒருவருக்குப் பெயரும் உண்டு. “அடியார்க்கு எளியன் தில்லைச் சிற்றம்பலவன்‘ என்பது சைவத்துள் பெருவழக்கு.

இறைவனை வணங்கும் போது நாம் இறைவனை மட்டுமே வணங்கினவராக ஆவோம். அடியார் வணக்கம் அப்படி இல்லை. அடியோரோடு அது இறைவனையும் சேர வணங்கியதாக முடியும். இது மட்டும் அன்றி, அடியவரைத் துணைபற்றியே இறைவனை நாம் அடைதல் தகும் என்பது சமய நெறி. நேரே இறைவனைப் பற்றினால் கூட அவன் அடியார்க்கு ஆட்பகுத்தியே ஆட்கொள்ளுவன். ‘அடியார்க்கு என்னை ஆட்படுத்திய விமலன்‘ என்று பாசுரன் “வேதம் வல்லார் துணைக்கொண்டு விண்ணோர் பெருமான் பாதம் பணிந்து“ என்கிறபடி. அடியாரைத் துணைக் கொண்டே இறைவனை அடைதல் முறை. போக, பகவதபசாரத்தைக் காட்டிலும் பாகவதபசாரம் மிகக் கொடியது என்பர். பகவானுக்குச் செய்யும் குற்றம் குறைகள் அவன் பொறுத்தேன் “என்னத் தீரும் அத்தனையோ பாகவதபசாரம் அப்படி இல்லை. இறைவனது தண்டனைக்கு உட்பட்டே தீரவேணும். வேறு எந்த வகையிலும் நம்மால் போக்கல் இயலாது. “எம் பெருமான் அவதரித்துப் பண்ணிய ஆலைத்தொழில்கள் எல்லாம் பாகவதபாசுரம் பொறாமைக்காக“ என்பது மேலையோர் முடிவு. ஆக இவற்றால், “பகவத் விஷயத்தில் முடிவு எல்லை பாகவத விஷயம் என்பது சமய சித்தாந்த சாரம். பாகவதர்களின் மேன்மையுணர்ந்தவர்களையே பகவத் விஷயத்தின் அவடறிந்தவர்கள் எனலாம். இங்கு எழுப்பப்படுகிறவன் “பகவத் விஷயத்தில் புதியவள்“ ஆவள். இதனாலேயே இவள் “பிள்ளாய் எழுந்திராய்“ எனப் பேசப்பட்டாள்.

உள்ளே உறங்குபவள் மற்றவர்களிடம், “நாளை நானே வந்து உங்களை எழுப்புவேன்‘ என்று சொல்லிவந்தவள். சொன்ன சொல்லை மறந்தாள். இன்று அவள் எழுப்பவுமில்லை. போகட்டும், விடிவடையாளம் கண்டு தானாகவாவது எழுந்திருக்கலாம் அல்லவா? அதுவும் கிடையாது. அவர்கள் வந்து இவளை எழுப்ப நிற்பது கண்டு எழுந்து சேர்ந்து கொள்ளலாம் என்றால், அது செய்யவும் மனம் உடன்படவில்லை. காரணம், கிருஷ்ணாநுபவத்தில் தனியே மூழ்கி இன்புற்றுக்கொண்டிருக்கிறாள் என்பதே ஆகும். ‘இறையன்பின் உயிர்நிலை அடியாரைப் போற்றுதலே ஆகும்“ என்ற முடிவான கொள்கையை அறியாதவள். அதாவது, பகவத் விஷயத்துக்குப் புதியவள். இத்தகையவளை ‘பிள்ளை‘ என்று சொல்லாமல் வேறு எப்படிச் சொல்லமுடியும்“ பிள்ளாய் எழுந்திராய் என்றார்கள் வந்தவர்கள்.

இப்படிச் சொல்லைக் கேட்டும் அவளிடம் மாற்றம் எதுவுமில்லை. உள்ளிருந்தவாறே “விடிய வேண்டாவோ எழுந்துவர“ என்று சொன்னாள்‘. விடிந்துவிட்டது வா‘ என்றார்கள் அவர்கள். நீங்கள் சொன்னால் போதுமா? அதற்கு அடையாளம் என்ன? என்று கேட்டாள் இவள். நாங்கள் சொன்னது போகட்டும், “இவ்வளவு பேர் எழுந்து வந்து உன் வாசலில் நிற்கிறோமே, அது விடிவிற்கு அடையாளமில்லையா? சொல்லு“ என்று அவர்கள் கேட்டதற்கு, உள்ளிருந்தவள் மறுமொழி தருகிறாள். போதோடே சென்று படுத்து உறங்கியவர்கள் விழித்தெழுந்தால் அது பொழுது புலர்ந்ததற்கு அடையாளம் ஆகும். உங்கள் நிலைமை அப்படியில்லை. கண்ணன் பால் காதல் பெரிதும் கொண்டவர்கள். காதலுற்றார்க்கோ கண்துஞ்சுதல் என்பது கிடையாது. இரவு பூராவும் விழித்தவர்கள், “விடிந்தது“ என்று சொல்வது நல்ல அடையாளம் இல்லை ஆகாது. விடிந்ததற்குப் போதுமான வேறு அடையாளம் உண்டாகில் சொல்லுங்கள்“ என்று ! இங்ஙனம் பேச்சுக்கு எதிர்பேச்சுப் பேசுவது சிறுபிள்ளைத்தனம் தானே ! இருந்தாலும், கோபமுறாமல் வந்தவர்கள் சொல்லுகிறார்கள் – “புள்ளும் சிலம்பின காண்“ என்று.

புன்னா – என்று பறவைகட்குப் பெயர். சிலும்புதல், விடிந்தவாறே இரை தேடுவதற்காகக் கூவிக்கொண்டு கிளம்புதல். போது விடிந்து பறவைகள் எல்ம் இரைதேடிப் போகாநின்றன என்று கூறி எழுப்புகிறார்கள். இது பொழுது விடிந்ததற்கு அடையாளம் தானே. என்கிறார்கள். “உத்திஷ்ட நரசார்த்தூல“ என்று விஸ்வாமித்திரன் எழுப்பினாற் போலே ! புள்ளுச் சிலம்பின என்றால் மட்டுமே போதும். புள்ளும் சிலம்பின என உம்மைக்குச் சிறந்த கருத்து நயம் உண்டு. “பறவைகட்கு மார்கழி நீராட்டம் என்று ஒன்றில்லை. அதற்காக விரைவில் எழவேண்டும் என்கிற கடமையோ அவசரமோ கிடையாது. விடிந்தபிறகு உறங்கினால் கூட அதைக் குறை சொல்லுவார் எவரும் இரார். அதிகாலையில் துயிலுணர வேண்டும் என்ற நியதியோ அன்றி நிபந்தனையோ இல்லாதவை. நமக்கோ, நீராட்டக் காரணமும் உண்டு. நாட்காலே எழுந்திருக்க நியதியுமுண்டு. பொழுது விடிந்தபின்னும் நாம் உறங்கத்தகாது. பிறர்காணும் முன்பு எழுந்து வருவாயாக‘ என்று பொருள். நாங்கள் பறவைகள் இரை தேடக் கிளம்பின என்று சொன்னால் அதற்கு நீ ஒரு தடை சொல்லுவாய். ஆகையால் நாங்கள் சொல்லுவதனை நீ நம்பவேண்டாம். நீயே எழுந்து வந்து உன் கண்ணாரப் பாரு என்பவர்கள் – “புள்ளும் சிலம்பின, காண்“ என்று மெய்ப்பித்துக் காட்டுகிறார்கள்.

உள்ளிருப்பவள் சொல்லுகிறாள். நான் வந்து கண்ணால் பார்க்க வேண்டும் என்பதில்லை என்றாலும், அது விடிவுக்குக் காரணமில்லை. நீங்கள் எப்படிப் பட்டவர்கள்? கிருஷ்ணப் பேரமையால் இரவு எல்லாம் கண்ணுறக்கமின்றி அலைபவர்கள் “ஊரும் நாடும் உலகமும் தம்மைப் போல் ஆக்க விரும்புமவர்கள் நமக்கு உறக்கமில்லையே இப்பறவைகள் உறங்கலாமா என்று அவற்றைக் கிளப்பி எழுப்பி விட்டிருப்பீர்கள். நீங்கள் கிளப்பினவாறே புறப்பட்ட அவைகள் விடிந்ததற்கு அடையாளம் ஆகாது. வேறு நல்ல அடையாளம் உண்டாகில் சொல்லுங்கோள்“ என்று ! ஆகட்டும் சொல்லுகிறோம் என்று அவர்கள் சொல்லுகிறார்கள் – “புள்ளரையன் கோயில் வெள்ளைவாரி சங்கின் பேரரவம் கேட்டிலையோ?“ என்று

அது கிடக்கட்டும், இதுவும் உன் செவியில் பட்டதில்லையா? பெருமாள் கோயிலில் திருப்பள்ளி எழுச்சிக்கு ஊதின சங்கத்துவளியும் விடிவுக்கு அடையாளம் இல்லையா? என்று எழுப்பவந்தவர்கள் சொல்லுகிறார்கள். புள்ளு என்று ‘பறவைகள்‘ பறவைகட்டு அரசன்‘, கருடன், அவனுக்குக் ‘கோ‘ திருமால். அவனுக்கு ‘இல்‘ தேவாலயம். கருடனை வாகனமாகவுடைய திருமாலது திருக்கோயில் “புள்ளரையன் கோயில்“ லட்ச இட்டு நிரூபிக்கப் படுபவன். அவன் ஆகையாலே ‘புள்ளரையன்“ எனப்பட்டான். தாங்கள் இருந்த இடத்திலே எம்பெருமானைக் கொண்டு வருபவன் கருடன் ஆகையாலே அவனை முன்னிட்டுச் சொன்னதாகவும் அமையும். முறையாக எம்பெருமானைக் கிட்டுமவர்கள். புருஷகாரத்தை முன்னிட்டல்லது அவனைப் பற்ற மாட்டார்கள் என்கிற சாஸ்திராத்தம் ஒளிப்பட புள்ளரையன் கோயில்“ எனப்பட்டது.

சங்கைச் சொல்லும் போது வெள்ளை விளிசங்கு என்று வந்தவர்கள் சொன்னாகள் அல்லவா? அதைப் பிடித்துக் கொள்ளுகிறாள் உள்ளிருப்பவள். சங்கிலே வெள்ளை கறுப்பு என்று உண்டா? எல்லாமுமே வெள்ளைதானே? ஆகவே இது தேவையற்ற அடைமொழி. வியர்த்த விசேஷணம். பேசத்தெரியாமல் பேசும் உங்களது வார்த்தை அடையாளம் ஆகாது என்று கூறி மறுத்தாள். பேசத் தெரியாமல் பேசவில்லை. நாங்கள் ! சங்கினை ஊதும்போது ஊதுவோர் வாய் முத்திரையும் சங்கின் வெண்மை நிறமும் தோற்ற, அது கண்டு களிப்பதல்லவா நமக்கு உத்தேஸ்யம். அவற்றைக் காண பாக்கியமில்லையே உனக்கு“ என்று வந்தவர்கள் கேட்டார்கள். அதற்கும் ஒரு மறுமொழி சொல்லுகிறாள் உள்ளிருப்பவள். சாமத்திற்குச் சாமம் கூப்பிடும் சாமக்கோழி உண்டல்லவா? அது கூப்பிடுவது விடிவுக்கு அடையாளம் எனவாகுமா? அதுபோல இச்சங்கநாதமும் சாமம் தோறும் தேவாலயத்துள் பணிபுரிவோரை அழைப்பதற்காக உரியது. இதுவும் விடிவதற்கு உடலன்று என்றாள் அவள். பணியாளரை அழைப்பது ஒற்றைச் சங்கொலி, அதில்லை இது. இதன் பேரரவம் கேட்டாலே தெரியுமே. பள்ளியெழுச்சிக் காலத்தில், சமயம் அறிவித்து நாற்றிசையும் பல சங்குகள் நாமமிடும் பேர்அரவம், இதையும் கேட்கும் பாக்கியமிலையோ உனக்கு என்பவர்கள் – ‘பேரரவம் கேட்டிலையோ‘ என்று வருந்துகிறார்கள்.

கடைசியில், வந்தவர்களை நோக்கி உள்ளிருந்தவள் கேட்டாள். “உங்களை எழுப்பியது யார் என்று? எவரையாவது வந்து எழுப்பினார்கள் என்று சொல்லுவார்கள் என்று அவள் எதிர்பார்ப்பு. அப்படிச் சொன்னால், நீங்களும் பிறிதொருவர் எழுப்பித்தானே வந்திருக்கிறீர்கள். ஆகையால் நீங்களும் பிள்ளைகளே தாம் என்று பதிலுக்குப் பதில் சொல்லலாம் என்று கருதினாள். அவர்களோ, முனிவர்களும் யோகியக்ளும் காலை எழுந்து நீராடும்போது சொல்லும் அரி என்ற பேரரவம் உள்ளம் புகுந்து குளிர்ந்தது. அது கேட்டு எழுந்து வந்தோம்‘ என்று பதிலுறுத்தார்கள். உடனே, “அவர்கள் கேட்டு எழுப்பவந்தவர்கள். நாமோ கூப்பிட்டும் எழும்பியபாடில்லை என்று தன்குற்றம் தெரிந்து பேசாமலிருந்தாள். வந்தவர்கள், இவள், பேச்சுக்கு எதிர்பேச்சு பேசுவதும், பகவத்பக்தி அடியாரைப் பேணுவதன் உள்ளுறையே என அறியாதிருப்பதும், ஓரளவு பிள்ளைத்தனம் தான் என்று உணர்ந்திருந்தாலும், கோபமோ வருத்தமோ பட இல்லை. மாறாக இரக்கமே தோன்றி, மற்றது எல்லாம் போக நாங்கள் சொல்லுவது கேட்டு எழுந்திருந்து வா“ என்று வந்தவர்கள் கூறினார்கள். “பிள்ளாய் எழு, பிள்ளாய் எழுந்திரு‘ என்று கட்டளையாய் இடாமல் “பிள்ளாய் எழுந்திராய்“ என்ற வேண்டுதல் வாசகத்தில் அவர்களது அன்பின் குரல் தெரியவருகிறது இல்லையா?

தமிழகத்தில், சைவம், வைணவம் இரண்டும் சித்தாந்த நெறி பற்றிய சமயங்கள் ‘மூர்த்தி பேதம்‘ தவிர கொள்கைகள் பலவும் ஒரு நிகரானவையே ஆகும். ஆழ்வார்கள் நாயன்மார்கள் காலத்தில் மூர்த்தி பேதமும் ஓரளவு நீங்கிச் சமரசவுணர்வு தலைதூக்கியது. ‘திருமாலே சிவன் வடிவில் நின்று அருள்புரியும் இடம் சிவன் கோயில்கள்‘ என்ற உள்ளம் வைணவர்கட்கு இருந்தது. அதேபோல, சிவபிரான் திருமாலாக நின்று அடியார்க்கு அருளும் தலமே விஷ்ணு ஆலயங்கள் என்ற கருத்தும் சைவர்களிடையே பரவியிருந்தது? “யாதொரு தெய்வம் கண்டீர், அத்தெய்வம் ஆகி ஆங்கே எங்கள் மாதொரு பாகனார் தாம் வருவர்“ – என்றது தேவாரம்‘ வணங்கும் துறைகள் பலபல ஆக்கி அவை அவை தோறும் நின் மூர்த்தி பரப்பி வைத்தாய்“ என்று நம்மாழ்வார் பாசுரம். ஆக ஆண்டாளுக்கும் இச்சமரச மனப்பான்மை புதியதில்லை. திருப்பாவை முழுவதிலும் கோயில் என்ற சொல் மூவிடங்களுள் வருகின்றது. திருமால் கோயில் தன்னது ஆயினும் அதனை அடைமொழி இன்றியே சாதாரணமாகச் சொல்லுவள். பிற மதத்தவராகிய சைவர்கள் கோயிலைச் சொல்ல வந்தால் திரு என்ற அடைமொழி தந்து திருக்கோயில் என்றே பேசுவள். இப்பாட்டில் வைஷ்ணவாலயத்தை “புன் அரையன் கோயில்“ என்றே பாடலமைத்தாள். இப்படியே, “நின்கோயில் நின்று இங்ஙனே போந்தருள்“ என்று கண்ணன் கோயில் அடைமொழி இன்றியே குறிப்பிட்டாள். ஆனால், இதே ஆண்டாள் சிவன் கோயிலைப் பேசும்போது ‘திருக்கோயில்“ என்று, அடையோடு பெருமைப்படுத்திப் பேசுவது குறிப்பிடத்தக்கது ஒன்றாகும். “செங்கல் பொடிக் கூறை வெண்பல் தவத்தவர். தங்கள் திருக்கோயில் சங்கிடுவான் போகின்றார்“ – என்றது பாசுரம். இது கொண்டு ஆண்டாள் கொண்டுள்ள சமரச மனப்பான்மை வழிவழி வந்தது என்பதோடு. நாம் அனைவரும் பின்பற்றுதற்கு உரியது என்பதும் நன்கு துலங்குகிறது அல்லவா? இலக்கியம் என்றது நல்ல தமிழ்ச் சொல். வாழ்வு இலக்குகளைத் துலக்குவது என்று அதன் பொருள். கோதை தமிழ் அத்தகைய சீரிய சமய இலக்கியங்களுள் ஒன்றெனத் தட்டில்லை.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *