POST: 2017-12-22T05:55:27+05:30

திருப்பாவை பேருரை
••••••••••••••••••••••••••••••••
பத்மஸ்ரீ முனைவர் ஔவை நடராசன்
===================================
பாடல் – 7
எழுப்பும் பெண்கள் கண்ணனை நேரில் கண்டு இன்புறும் நோக்கினால் விரைவு மிக்கவர். அவர்கள், ‘சில பெண்களை எழுப்பி உடன்கொண்டு கண்ணன் பக்கல் போவோம்“ என்ற கருத்தில் இல்லை. “எல்லார்க்கும் நன்மை வேணும் என்ற நினைப்பில் வீடுவீடாகச் சென்று மேலும் பலரை எழுப்ப முயலுகிறார்கள். அல்லாமல் மற்றொரு கருத்தும் உண்டு. அதனால் “தொண்டீர் எல்லாரும் வாரீர்“ என்கிறபடி துணை தேடப்படுகிறது. “பகவத் விஷய ஞானம் உள்ள ஒருவருக்கு பாகவதவிஷயம் மறதியாயிருந்தால் அதைத் தெரிவித்துப் பரிவோடு அவரைத் திருத்திப் பணிகொள்ளுவது“ என்பது வைஷ்ணவ லட்சணம். இப்படித் திருத்திப் பணிகொள்ளும் பாங்கிலும் பலரை எழுப்பி ஆட்கொள்ளுதல் இன்றி அமையாதது. இதிலே, முந்துற எழுப்பப்பட்டவள் “பாகவதர்களை துணை கொள்ளுவது பகவத் விஷயத்துக்கு உள்ளடக்கம்“ என்கிற தத்துவம் உணராத பிள்ளைத்தனம் மிக்கவள். இப்போது எழுப்பப்படுகிறவள் அங்ஙனம் இல்லை. பகவத் விஷயம் பாகவத விஷயம் இரண்டையுமே ஒருசேரக் கற்றுணர்ந்தவள். எனினும், கற்ற கல்விக்குத்தக“ அடியார் குழாங்களை உடன் கூறுவது என்று கொலோ“ என்பதை மறந்து புதுமை பாவிப்பவள். காரணம், “பகவத் குணாநுபவத்திலே மூழ்கி அதிலே இன்பம் துய்த்து மகிழ்தலே ஆகும். என்ன இருந்தபோதிலும் நோற்பவர் திரளை ஒருமாலைபோலக் கருதினால், இவள் அதன் பதக்கத்திலே அழுத்திய நாயக்கல் போல, இவர்களது கோஷ்டிக்குத் தலைமை ஆனவள் எனலாம். இவளை எழுப்பினதைப் பாசுரம் இடுகிறாள் ஆண்டாள் – “நாயகப் பெண்பிள்ளாய் ! நாராயணன், மூர்த்தி கேசவனைப் பாடவும் நீ கேட்டே கிடத்தியோ, தேசமாய்வந்து திற“ என்று.

பகவான் என்ற சொல்லுக்கே ஆறுகுணங்களை உடையவன் என்று பொருள். ஞானம், சக்தி, வாத்ஸல்யம், சௌசீல்யம், சொளலப்பயம், பரத்வம் என அவைகளைப் பேசுவர். என்னை ஈர்க்கின்ற குணங்களை உடையாய்“ என்பர் நம்மாழ்வார். இக்குண ஈடுபாடு நம்பால் ஆசையைப் பெருக்கிப் பகவத் பக்திக்குச் செழிப்பூட்டும். “நினைவு அரும் குணங்கொண்டு அன்றோ இராமன் மேல் நிமிர்ந்த காதல்“ – என்று கம்பன் வாக்கு. இப்படியே, அவன் அவதரித்துச் செய்த செயல்களும் நினைப்பவர் மனதைக் கவரும். “மருது இடந்தாய் மல்லடர்த்தாய் என்றென்று உன் வாசகமே உருப்பொலிந்த நாவினேனை உனக்கு உரித்து ஆக்கினதே‘ என்று பாசுரம். வடிவழகும் அத்தகையதாய் கண்டவர்தம் மனங்கவரும். “கண்டவர் தம் மனம் கவரும் கணபுரத்து எம் கருமணியே“ என்பது விக்ரக வைஷண்யத்தில் ஈடுபட்டவர் பேச்சு . “கிடந்ததோர் கிடைக்கை கண்டும் எங்ஙனம் மறந்து வாழ்கேன் என்றார் ஆழ்வார். “மாயனார், திருநன்மார்பும், மரகத உருவும் தோளும் துவரிதழ்ப் பவளவாயும். ஆயசீர் முடியும் தேசும் அடியரோர்க்கு அகவலாமே“ என்று பாசுரம். இப்படி பகவானது குணம் செயல் அழகுகளின் ஈடுபட்டு பத்திமை பூண்டு ஒழுகுவது பகவத் விஷயம் எனப்படும். இதுபோல அடியார்களிடம் அன்பு பூண்டு அவர்தமைப் பேணுவது பாகவத விஷயம் பாகவதராகிய அடியார்கள் பகவானைக் காட்டிலும் மேம்பட்டவர்கள். அடியார்கள் துணைக்கொண்டே பகவானை அடைதல் கூடும். பகவத் அபசாரத்தைக் காட்டிலும் பாகவதபாசரம் மிகவும் கொடியது. அடியார் துயர்தீர்க்கப் பிறந்ததே. அவனது அவதார விசேஷங்கள் அடியார்களே கண்கண்ட தெய்வம். இங்ஙனம் எல்லாம் அடியவர்பெருமை உணர்ந்து போற்றுதல் வேண்டும். இப்படி பகவத் பாகவத விஷயங்கள் இரண்டிலும் கற்றுக் கை தேர்ந்தவள். இங்கு எழுப்பப்படுகிறவள்! இவளாலே தங்கள் கோஷ்டி பெருமையுறும். இவன் துணைக்கொண்டு கண்ணனையும் எளிதில் அடையலாம் என்று கருதியே நாயகப் பெண்பிள்ளாய்“ என்று அன்போடு அழைத்தார்கள்.

உறங்குபவள் என்ன செய்திருக்க வேண்டும்? பாகவத விஷயமும் தெரிந்தவன். விடிவு அடையாளம் கண்டு தானே முந்துற எழுந்துபோய் அவர்களோடு கூடியிருக்க வேண்டும். இல்லை, அவர்கள் வந்தவுடனாவது எழுந்து வரவேற்றுக் கலந்திருக்க வேணும். அப்படி எல்லாம் செய்யாது சொன்னதற்கு எல்லாம் மறுமாற்றம் சொல்லி எழுந்திருக்காமல் இருந்தாள். காரணம், கிருஷ்ணாநுபவ முதிர்ச்சியால் விளைந்த இன்பத்தை இழக்க விரும்பாமையே, பாகவதபசாரம் இழைக்கவேணும் என்று நோக்கு இல்லை. தெரிந்தது, நல்ல விஷயம். நடைமுறையில் மேற்கொள்ள முடியவில்லை. முடியாதது மட்டுமில்லை. தன்னைப் புதியவளாகப் பாவித்து அதை மறந்தும் நின்றாள். இதை எல்லாம் நினைத்து அவர்கள். உன்னை பெருமையாகக்கருதி எங்கள் கோஷ்டிக்கு நீயே தலைவி என்று பாவித்து வந்தோம். நீ இருப்பதோ சிறுபிள்ளை போல் இருக்கிறாய், உன்னை நாயகமாகக் கொண்ட எங்கள் அறியாமைக்கு நாங்களே இரங்குதல் வேண்டும்‘ என்கிறவர்கள். “நாயகப் பெண்பிள்ளாய்“ என்று கூப்பிடுகிறார்கள். இதனை இவ்வாறு, ‘நாயகப் பெண்“ என்றும், பிள்ளாய்“ என்றும் இதற்குச் சேர பிரித்துப் பொருள் உணர்தல் நலம்.

எழுப்ப வந்தவர்கள்‘ “போது விடிந்தது காண்“ எழுந்திராய் என்றார்கள். உள்ளிருப்பவள், “விடிந்து அல்லவா எழுந்திருக்க வேணும். விடிந்ததற்கு அடையாளம் என்ன“ என்று கேட்டாள். அவர்கள் சொன்னார்கள், “கீசு கீசு“ என்று ஆளைச்சாத்தன் கலந்து பேசின பேச்சரவம் கேட்டிலையோ“ இது விடிந்தமைக்கு அடையாளம் என்று ! ஆனைச்சாத்தன் என்பது கரிக்குருவி, பகல் எல்லாம் உணவுக்குத் திரிந்தலையும். இரவில் பேடையுடன் கூடிக்களிக்கும். மறுநாள் விடிவு கண்டவாறே மீண்டும் பிரிவாற்றாமைக்கு வருந்தி பேடையுடன் தழுதழுத்த குரலில் பேசும். இது சுட்டி அடையாளம் சொன்னார்கள். நீங்கள் உள்ள ஊரில் பறவைகட்கு உறக்கம் ஏது? என்ற கருத்தில் பேசாது வாளா கிடந்தாள் அவள் ! பகவதாராதன நேரத்தை நினைவூட்டும் இவர்கட்கு – முனிவர்களும் ஆனைச்சாத்தனும் ஒன்று தான். அதுபோலே, அவர்கள் கூறும் அரி என்ற சொல்லும் கரிக்குருவிகள் பேச்சரவமும் ஒன்றுதான். இவற்றில் வேறுபாடுக் காண்பதில்லை. அடியார்களுள் வேறுபாடு கருதாது, “பாகவதர்களை எல்லாம் ஒரே குலம் எனக் கருதிப் போற்றும்“ சீரிய வைணவக் கொள்கை இதன் அடியாக விளைந்தே எனலாம். “தொண்டர் குலத்தில் உள்ளீர் வந்து அடிதொழுது ஆயிரம் நாமம் சொல்லி, பண்டைக் குலத்தைத் தவிர்த்துப் பல்லாண்டு பாடுமினே“ என்ற பாசுரம் நோக்கத்தக்கது. பிள்ளை பிள்ளை ஆழ்வான் என்று ஒரு வைணவப் பெரியார் “பகவத்ஸமாஸ்ரயணத்துக்கு அநுகூலமான காலத்தை ஸ்ரிப்பிக்கிற பஷிநாதம் அல்லது இவ்வாத்மாவுக்கு உத்தேஸ்யமில்லை“ என்று கூறுவராம். இப்படி, பகவத் சம்பந்தம் உள்ளது எல்லாமுமே பெருமைபெறும் என்பது காணலாம்.

உள்ளேயுள்ளவள் நல்ல சாஸ்திர ஞானம் உள்ளவள். ஆகவே, அவளுணரும்படி வேறு ஒரு அடையாளம் சுட்டினர். சுவர்க்கம், புத்திரப்பேறு முதலிய பலன்களை தரும் யாகயக்ஞங்கள் சிலவுண்டு. அவை “காமியகர்மங்கள்“ எனப் பெறும். பலத்தில் சிரத்தையில்லாதவர்கள் அதை விட்டுவிடலாம். ஆனால், குல தர்மமாகிய வருணாஸ்ரம தர்மங்களை அப்படிவிட முடியாது. பத்தும் பத்தாக காலநேரம் தவறாதபடி செய்தே தீரவேண்டும் என்பது சாஸ்திரவிதி ஆயர்குலத்தவருக்கு, பால் கறத்தலும் தயிர் கடைதலும் குலதர்மமாகும். ஆக அதைச் சுட்டி எழுப்ப வந்தவர்கள் சொல்லுகிறார்கள் – காசும் பிறப்பும் கலகலப்பக் கைபேர்த்து வாசநலுங்குழல் ஆய்ச்சியர் மத்தினால் ஓசைபடுத்த தயிர் அரவம் கேட்டியயோ“ என்று ! கண்ணன்மீது பாடும்பாட்டு ஒலியும். ஆபரண ஒலியும், மத்தின் ஒலியும், உனது செவியில் படவில்லையா? என்று கருத்து. இவ்வூரில் பசுக்கள் வள்ளல்பெரும் பசுக்கள், வாங்கக் குடம் நிறைப்பவை. “முப்போதும் கடைந்த வெண்ணை“ எனும்படி எப்போதும் கடைவது அவரியல்பு. இது விடிவுக்கு ஒரு காரணம் ஆகுமா? என்று பேசாது கிடந்தாள். அப்போது, “ நாயகப் பெண்பிள்ளாய்“ – நீ பெண் பிறந்தார் படும் வருத்தம் கண்டு இரங்கும் பிறவி பெற்றவள் இல்லையா? பெண்ணின் வருத்தம் அறியாத ஆண்மகனைப் போலிருக்கலாமா? வந்துதிற – என்று வந்தவர்கள் சொன்னார்கள். அதுகேட்டு, “எனக்கு நாயகம் ஒன்றுமில்லை. நான் உங்கள் அடியவள் வந்து திறக்கிறேன்“ என்றாள், அவள் !.

உடனே எழுப்ப வந்தோர்க்கு ஒரு எண்ணம் தோன்றிற்று“. கண்ணன் வீர சரிதங்களுள் ஒன்று ! சொல்லுவோம். அவனுக்கு ஆபத்து நேருவது கேட்டால் வயிறு துடிப்பவள் இவள். உடனே எழுந்து வந்து கூடுவாள் என்று எண்ணம். “நாராயணன் மூர்த்தி கேசவனைப் பாடவும் நீ கேட்டே கிடத்தியோ? என்று பாடி நின்றார்கள். “சர்வேஸ்வரனாகிய நாராயணன் அடியார்க்கு எளியனாய் நம்மைக் காக்கும் பொருட்டு கண்ணனாக வந்து பிறந்தான். அங்கே கம்சன் ஏவலாலோகு திரைவடிவிலே கேசி என்ற அசுரன் வந்து நலியப்புக கண்ணன் அவனை வாய்கிழித்து கொன்றான் என்றது கருத்து. உள்ளிருந்தவனோ, “கேசியைக் கொன்றான் இல்லையா?“ என்று வெற்றி முழக்கமாகக் கொண்டு, மிகுந்த மகிழ்ச்சியோடு முகமலர்ந்து மீண்டும் பேராது கிருஷ்ணாநுபவத்தில் திளைத்திருந்தாள். “கரனை வதைத்த பிறகு சீதாபிராட்டி இராமனை வந்து தழுவியது போல, இதைக்கேட்டு நீயும் கிருஷ்ணனைத் தழுவ விரும்பி எங்களோடு எழுந்து வருவாய்“ என்றிருந்தோம். அதற்கு, மாறாக நீ பாடக் கேட்டும், மீண்டும் உறங்குதியோ?“ என்று வருந்தினார்கள். வந்தவர்கள் கேசவனைப் பாடவும் நீ கேட்டே கிடத்தியோ? என்பதற்கு எழுப்பப் பாடிய பாடலைக் கேட்டும் நீ உறங்குகிறாயா? உனக்குத் தொடை தட்டிப்பாடும் தாலாட்டு மாதிரி ஆயிற்றா? என்பது அவர்கள் உட்கருத்தாகும்.

நாராயணன் என்பது வாத்ஸவ்யப்பிரகாசமான திருநாமம். அங்கு இங்கு எனாதபடி எல்லா இடங்களிலும், அதில் இதில் என்னாதபடி எல்லாப் பொருள்களிலும், நீக்கமற அவன் நிறைந்து நிற்கிறான் என்பது பொருள். ஆனால் நமது கண்ணுக்குத் தோற்றாதபடி மறைந்து விளங்குகிறான். இப்படி அவன் இருக்கும் இருப்பினை அந்தர்யாமித்துவம் என்பர். இதற்குப் பிரயோசனம், அனைத்துயிர்களையும் மறைந்து நின்று ரக்ஷிப்பதே ஆகும். நாம் விரும்பினாலும் விரும்பாவிடினும் அவன் அங்ஙனம் கரந்து நின்று ரக்ஷிப்பது வாத்ஸல்ய குணப் பிரகாசம். இதனைப் பூர்வீக உரையாசிரியர்கள் அழகிய சிறு தொடர் ஒன்றால் விளக்குவர். “இரா மடம் ஊட்டுவாரைப் போலே என்று, பெற்றோரது பரிபாலனத்தை விட்டு விலகிய துன்மார்க்கனாகிய ஒரு பிள்ளை. வெளியேறி தர்மச்சாவடியிலே தங்கிப் பட்டினி கிடக்கிறான். அதறிந்த பெற்றோர் முகமறியாமல் இரவு வந்தபின் மற்றவர் மூலம் உணவைத் தந்து காப்பாற்றுவார்கள் அல்லவா? அப்படியே, ஈஸ்வரனும் நமக்கு முகமறியாமல் வேறு எவர் மூலமாகவாவது காப்பாற்றுவான் என்று கருத்து. இப்படி வாத்ஸல்யகுணசீலனான பகவானது திருநாமத்தை நாங்கள் பாடக்கேட்டும் நீ வாளா கிடத்தியோ என்கிறார்கள்.

இது கேட்டும் எழுந்திராமை கண்டு, பின்னிட்டு அவன் அவதார மகிமையைப் பேசுகிறார்கள்- “மூர்த்தி“ என்று ! வடிவம் கொண்டு பிறந்தலை மூர்த்தி என்பதுண்டு. இராம்மூர்த்தி, கிருஷ்ணமூர்த்தி, கேசவமூர்த்தி என்றெல்லாம் பேசுகிறோம் இல்லையா? எம் பெருமான் இராமனாகப் பிறந்தபிறகு எடுத்த அவதாரம் கிருஷ்ணாவதாரம். காரணம் தன்னை மிகவும் தாழவிட்டு எளியனாகுகைக் காட்டுதற்காக என்பர். இராமாவதாரத்தில் “அழுக்கு வேடுவர் குரங்கினம். அரக்கர் என்றவரோடு இழுக்கு இலாது உடனிபிறப்பு எனக் கலந்தனன் ‘ ஆனாலும் தான் அரசகுலத்தில் பிறந்தமையால் – தன் கழுத்தில் ஓலை கட்டித் தூது விடுவார் இல்லையே என்று வருத்தமாம். அது தீரவே, கிருஷ்ணாவதாரத்தில் எளிமைக்கு எல்லை நிலமாகிய தூது போதலை மேற்கொண்டு “பாண்டவ தூதன்‘ எனப் பெயரை மேற்கொண்டான். “பேருலகோர் காண இன்னார் தூதன் என நின்றான் – எவ்வுள் கிடந்தானே“ – என்று பாசுரம். இப்படி, தன்னைத் தாழவிட்டுக் கொண்டு ஆயர்குலத்தோடு ஒத்துப்பழகி ரக்ஷிக்கும் சோலப்பிணுய சீலத்தைச் சொல்லியும் கேளாது கிடக்கிறாயே – என்ன பேதமை என்கிறார்கள். மூர்த்தியைப் பாடவும் நீ கேட்டே கிடத்தியோ“ என்று, இதற்கும் அவள் எழுந்து வெளிவரவில்லை.

பிறகு வந்தவர்கள் கேசி நலிய வந்ததைச் சொல்லப் புகுந்தார்கள். கம்சன் ஏவலால் வந்த அசுரன் அவன். குதிரை வடிவமாய் வந்து கண்ணனை நலிய வந்தான். ‘மாவாய் பிளந்தாளை“ என்கிறபடியே, அவளை வாய்பிளந்து கொன்றான். இதனைக் கேட்டு அவள் என்ன செய்திருக்க வேணும். சீரிய பக்திமான்கள் எம்பெருமானுக்கு ஒரு ஆபத்து என்று கேட்டால் துணுக்குற்று வயிறுபிடிப்பர். பெரியாழ்வாரைப் போலே ! தான் ரக்ஷசனாக மாறி அவனுக்குப் பல்லாண்டு பாடுவர். இவளிடம், அப்படியொரு பொங்கும் பரிவு ஏற்படவில்லை. பின்னும் சொன்னார்கள். கண்ணன் கேசியைக் கொன்றது எதற்காக என்று நினைக்கிறாய்? அவன் வென்றிருந்தால் கண்ணனை அழித்திருப்பான். கண்ணனை நாம் காண முடியாது. அவன் அவதரித்தும் பயனில்லை அல்லவா? ஆக அவன் தன்னை நமக்குக் காட்டித்தரவே அங்ஙனம் செய்தான் என்று ! அரி என்ற நாம்ம் தங்கள் உள்ளம் புகுந்து குளிரச் செய்து எழுப்பியது போல இவளும் எழுவால் என்று அவர்கள் கருத்து. அதற்கும் எழாதது கண்டு – கேசவனைப் பாடவும் நீ கேட்டே கிடத்தியோ? என்கிறார்கள்.

இறைவனை அடைய வகுத்த நெறிகளிலே “பக்திமார்க்கம்“ என்பது மிக எளியது. எளியது என்பது மட்டும் இன்றி எல்லோருக்கும் உரியது. “பக்தி வலையுள் படுவோன் கண்டாய்“ என்பது தேவாரம். “பத்துடை அடியவர்க்கு எளியவன். பிறர்களுக்கு அரிய வித்தகன்“ என்று ஆழ்வார் பாசுரம். பெண்டிரும் பாலரும் மேற்கொள்ள உரியது. அதில் பல படிகள் உண்டு. எந்த ஒன்றைப் பற்றி நின்றாலும் அது மற்றையவற்றுள்ளும் ஈடுபடுத்தி நிறைவாக்கும். அதில் “சிரவணம்“ என்பது முதல்படி, அதாவது பிறர் பாடுவது கேட்டு ஈடுபடுதல் ஆகும். அது “கீர்த்தனத்தில் “ஈடுபடச் செய்யும் கடைசி “ஆத்ம நிவேதனம்“ வரை இட்டுச் சென்று “பகவத் பக்தி“ நிறைவுறும். இதனாலே அடியார்கள் எப்போதும் “இறையடியே பாடும் தொண்டர்“ எனப்படுவர். இப்படி பக்தியில் ஊறிப்பழுத்தவள் தான் உள்ளே உறங்குபவள். இதை, அறிந்து விந்தவர் இறைவனைப் பாடுவது கேட்டு உள்மகிழ்ந்து தானும் வந்து கலந்து பாடுதலைச் செய்ய வேண்டும். இல்லையா? அது செய்யாது உறங்குவது போலப் பாவித்துக் கிடப்பது கண்டு சொல்லுகிறார்கள். “நாராயணன், மூர்த்தி கேசவனைப் பாடவும் நீ கேட்டே கிடத்தியோ?“ என்று ! உயிரற்ற பொருள் போல இருக்கிறாயே நீ“ என்பது சுட்டும் வெறுப்பு மொழி, கிடத்தியோ“ என்பது “மரம் கிடக்கிறது, மட்டை கிடக்கிறது, என்று தானே உயிரற்ற பொருள்களின் இருப்பினைப் பேசுவோம்.

பாடலைக் கேட்டும் வெளிவராது இருப்பது இப்படித்தான் தோற்றும். எனினும் உள்ளிருப்பவள் நிலைமை அப்படி இல்லை. இவர்களது பாடல்கேட்டு கிருஷ்ணன்பால் அன்பு பெருகி அவளது குணாநுபவத்தில் மேலும் மூழ்கியிருந்தாள் அவள். உடல் முழுவதுமே ஒளிபரந்து நல்ல “தேசஸ்“ வெளிக்காட்டியது. புதுப்பொலிவுடன் மகிழ்ச்சி மேலோங்கிக் கிடந்த அவளை வந்திருந்தவர்கள் சாளரத்தின் வழியே எட்டிப்பார்த்தார்கள். தாங்கள் நினைத்தபடி வெறுப்புக்கு உரியவளாய் அவள் இல்லை- உடனே மகிழ்ச்சி முதூர தேசம் உடையாய் திற‘ என்று பாராட்டுகிறார்கள். “பகவத் குணாநுபவத்தால் உண்டான மகாதேஜாஸ உடையவளே. இதனைக் காட்டில் எறிந்த நிலவாக்காதே. நாங்களும் கண்டநுபவிக்கலாம்படி செய். எங்கள் அறியாமையைப் போக்க உதவு“ என்று பொருள். உன்னைக் கண்டு நாங்கள் மகிழ வேணும். எங்களைக் கண்டு நீயும் மகிழவேணும். இங்ஙனம், இருவரும் மகிழும்படி திற வந்து திறவாய் என்கிறார்கள்.

அடியார்களிடம் அன்பு காட்டுதலை முடிவாக உடையது “பகவத்பக்தி“ என்பது. அதனை ஒருவர் மறந்து பகவத் பத்தியே என்றிருத்தல் கூடாது. அப்படி எவரேனும் இருக்கக் கண்டால் – அவரை அன்புடன் திருத்திப் பணிகொள்ளுதல் வைணவதர்மம் – என்கிற உயர்ந்த சாஸ்திரார்தம் இவ்வடிகள் மூலம் புலனாகிறது“ பயன் அன்னாகிலும் பாங்கு அவர் ஆகினும் செயல் நன்றாகத் திருத்திப்பணிகொள்வாள்“ என்று ஆழ்வார் பாசுரம்.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *