திருப்பாவை பேருரை
••••••••••••••••••••••••••••••••
பத்மஸ்ரீ முனைவர் ஔவை நடராசன்
===================================
பாடல் – 10
========
அனைவரும் சேர்ந்து வேறொரு வீட்டிற்கு வந்தார்கள். அந்த வீடோ கிருஷ்ணன் திருமாளிகைக்கு அடுத்தது. இரண்டிற்கு நுழைவாயில் ஒன்று. இடைச்சுவர் வழியும் வந்து போக வழிவசதி உண்டு. ஆக அந்த வீட்டில் உள்ளவளுக்கு கண்ணனைத் தேடிப்போய் அலைய வேண்டாம். அவளுக்கும் அப்படியே தான். அவளைத் தேடிப்பிடிக்க வேண்டாம். நினைத்த போதெல்லாம் இருவரும் கூடிக் களித்து மகிழுவார்கள். இப்படி ஒரு போகியாய் கண்ணனோடு கூடியநுபவிக்கும் வாய்ப்பு வசதிகள் இருப்பது அவளுக்கு ஒரு தனிப்பட்ட பெருமை. இந்த, நினைப்புடன் வந்தவர்கள் அவனைப் பார்த்து “அருங்கலமே‘‘ என்று அழைக்கிறார்கள். “கிடைத்தற்கு அரிய ஆபரணம் போன்றவளே“– என்று அதன் கருத்து. இப்படி அருமையும் பெருமையும் உடையள் அவள் !
எவ்வளவு இயற்கை அழகு இருப்பினும், அணியும் ஆபரணங்கள் அழகுக்கு மேல் அழகு தரும் இல்லையா? தங்கத்தால் சிறந்த மாலை ஒன்று செய்து அதன் நடுவே ஒரு ரத்தினக்கல்லை அழுத்தினால் மிகவும் சிறப்பாயிருக்காதா? அதே போலத் தான் நோற்க இருக்கும் மற்றப் பெண்களோடு இவளுக்கு இருப்பு. இவள் அவர்களோடு கலந்தால் – அது. அழகுக்கு அழகு. மற்றும் ஒரு தனிப்பட்ட பெருமை. இவர்கள் சற்றுக் காலம் தாழ்த்துச் சென்றாலும் கூட “இவள் இதிலிருப்பது கண்டு“ கண்ணன் பொறுபன் என்பது மட்டும். இல்லை. அரிய சிரோபூஷணம் போலே இவர்களைக் கொண்டாடவும் செய்வன். இத்தகைய அருமையுடையாள் ஒருத்தி நோற்கும் பெண்டிர் திரளுக்கு கிடைப்பது அருமையிலும் அருமை. ஆகையோலே ‘அருங்கலமே“ என அழைத்தது பொருத்தம் உடையதே.
இவற்றைக் காட்டிலும் இவளது வீறு உடைமைக்கு மேலான கருத்துப் பிறி தொன்றுண்டு. கிருஷ்ணனது குணம், செயல், அழகு முதலானவை கண்டவர் தம் மனம் கவரும் தன்மையன. அதிலே, ஈடுபட்டார்கள் மற்றைய ஆயர் சிறுமியர்கள். அது காரணமாக அவர்கட்கு, ஊன் உறக்கம் இல்லை. நிலையாக ஓரிடத்தில் இருப்பில்லை. மையிட்டு எழுதுவதில்லை. மலரிட்டு முடிப்பதில்லை. நீராட்டமும் நோன்பும் எனப்பல வழிகளை நாடினர். ஊரவர் பழியும் பேச்சும் மேற்கொண்டனர். கட்டுக் காவலுக்கு எல்லாம் உட்பட்டனர்.
இவைகளை எல்லாம் வேண்டும் என்றா மேற்கொண்டார்கள். இல்லை, கண்ணன் படுத்திய ‘பாடுகள்‘ இவை. இப்படி, பிறரைப் படுத்திய பாட்டை எல்லாம் ஒன்று சேர்த்து கண்ணன் இவள் திறத்திலே படுவனாம். எல்லாப் பெண்களையும் கிருஷ்ணன் படுத்தும் பாட்டை. கிருஷ்ணனுக்குத் தந்து படுத்தும் வீறு உடையாள் ஒருத்தி இவள். கும்பகருணன் போர்க்களத்தில் நின்றபோது, இராமனுக்கு அவளை அறிமுகப்படுத்துகிறான் வீடணன். “அவன் உணர்ந்து எழுந்த காலை அசுர்ர்கள் படுவ எல்லாம். இவன் உணர்ந்து எழுந்த காலை இமையவர் படுவர் எந்தாய் ! – என்று, பாற்கடலுள் துயின்ற பரமன், தேவர்கள் அபயக்குரல் கேட்டுக் கண்விழித்த போது. அசுரர்கள் என்னபாடு படுவார்கள். அவ்வளவையும் சேர்த்து இவன் கண்விழித்த போது தேவர்கள் படுவார்களாம். இப்படி, கம்பன் அழகு ஒழுகச் சொல்லுவது நமக்கு இங்கு நினைவுக்கு வரும். இப்படி, அருமையும் பெருமையும் வாய்த்த ஒருத்தியை “அருங்கலமே“ என்னாமல் வேறு எப்படிச் சொல்ல இயலும்? இவளது, ஞானபூர்த்தியும் மிகச் சிறந்து தரத்தால் உயர்ந்தது.
இறைவனை அடைதலே வாழ்விறுதியில் நம் பெறும் பேறு ஆகும். ஆனால், அதுவும் அவனருள் இன்றி இயலாது- “அவன் அருளாலே அவன்தாள் வணங்கி‘ என்று கூறுவர். உணர்வில் உம்பர் ஒருவனை உள்ளத்து இருத்தினேன். அதுவும் அவனது இன் அருளே‘ என்பது பாசுரம். சேஷத்துவம் ஒன்றே ஜீவாத்மஸ்வரூபம். கருமஞான பக்திகளாகிய உபாயங்கள் அகங்காரகர்ப்பம் ஆகி அதற்குச் சேராது. “என்னையும் என் உடைமையையும் உன் சக்கரப்பொறி ஒற்றிக்கொண்டு, நின் அருளே பார்த்திருப்பன் இனி என் உன் திருக்குறிப்பே“ என்பது பாசுரம். பேற்றுக்கும் அவன் கையையே எதிர்பார்த்திருக்க வேண்டும். உபாய உபயமும் எல்லாம் அவனே என்றாகுமானால், நாம் பதறுவானேன். நன்றாக விடிந்தபிறகு எழுந்து குறிப்போம்‘ என்று கிடந்தாள் அவள் நமக்கு மனதிற்கு உகந்ததொரு பொருளை நினைப்பதால் ஒருவிருப்பமான சுகம் வரும். அந்நினைவே முதிர்ந்துபாவனை ஆகும்போது அந்த சுகம் முறுகிவளர்ந்து பெரிதாக இடையின்றி உண்டாகும். இப்படிப் பெறும் பேரின்பம் பரமபதத்திலே பிறகு நாம் பெறும் நிருதிஷ்யப் பேரின்பத்திற்குப் பிரத்ய க்ஷ்யஸாப்யம் “ என்றெல்லாம் சாஸ்திரங்கள் பேசும். உள்ளுள்ளவன், இப்படி ஒரு கிருஷ்ணாநுபவத்திலே முழுகித் தன்னை மறந்து இன்புற்றிருந்தாள். “கள்ளூனும் மலர்த்துழாய் மாலையானைக் களவிடத்தே யான் காண்பாள். கண்டகாலை புள்ளுரும் கன்வா நீ போகேல் என்பள். என்றாலும், அது நமக்கோர் புலவிதானே“ என்கிற பாசுரம் இப்பேருண்மையினை வற்புறுத்துதல் காணலாகும். இவ்வுண்மைகள்எழுப்ப வந்தவர்கட்கும் தெரியும் தான். “அவனே உபாயம் தன் செயலற்றிருப் போர்க்கும்கூடி செய்யவேண்டிய கிரிசைகள் சிலவுண்டு. சேதனவாசியாலே அது செய்துதான் தீரவேண்டும்“ – என்கிற கருத்தூற்றம் உடையவர்கள் வந்தவர்கள். ஆகையால், உறக்கம் நீக்கி எழுப்புகிறார்கள். உறக்கத்திலே சில நினைவுகள் மறந்து போகும். அதுபோல சித்தோபாய சீலர்கட்கும் செய்யும் கிருசைகள் சிலவுண்டு என்பதை எழுப்பி மறவாது உணர்த்துகிறார்கள் – என்பது இதற்கு உள்ளுறையாகும்.
“நான் முன்னுற எழுந்து வந்து உங்களை எழுப்புவேன். உங்களோடு ஒக்கக் நோற்பேன் என்று சொன்னவள் இவள். விடிந்தது கண்டும். தங்க்ள் பேச்சொலி கேட்டும் உறங்குவது கண்டார்கள். எங்களோடு கூடி நோற்பதாகச் சொன்னவள் நீ. மறந்து உறங்குவதைப் பார்த்தால், நீ தனியாக நோற்று கிருஷ்ண்ணாநுபவம் பண்ணிக் கரைச்சலற்று கிடக்கிறாயோ? என்று தோன்றுகிறது. உன்னை நம்பி உன் தலைமையை நம்பி நாமும் நோற்போம் என்று காத்திருந்தோமே, அதுமிக அழகிது தாயே! நாங்கள் எல்லாரும் நோற்றுப் பெறவேண்டிய கிருஷ்ணாநுபவம் உனக்கு நோற்காதேயே கிடைத்துவிட்டது போலும் ! இப்படி எல்லாம் கருதி வந்தவர்கள் “நோற்று சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்“ என்று அவளை எழுப்பி நின்றார்கள். அம்மனாய் என்றது இகழ்ச்சிக்குறிப்பு. சுவர்க்கம் என்பது கிருஷ்ணாநுபவ சுகத்தினை “இவர்களோ! கிருஷ்ணன் நம்பால் உள்ளதாகச் சொல்லிப் பழியிடுகிறார்கள். அடியவளாய் உள்ள நம்மை ‘அம்மனாய்‘ என நோவுபட வேறு சொல்லுகிறார்கள். இப்போது, கண்ணன் இங்கு வரவில்லை என்று மறுத்தால் எதிர்த்துப் பேசுகிறாய் என்பர். பேசாதிருந்தாலும் குற்றச்சாட்டை ஒப்பியதாக முடியும்“ என்று வாய் பேசாமலிருந்தாள். உள்ளுள்ளவள் இன்னது செய்வது எனப்புரியாமல் !
இவள் பேசாதது கண்டு வந்தவர்கள் சும்மா விடவில்லை. ‘மாற்றமும் தாராரோ, வாசல் திறவாதார்“ – என்று, தாங்களே மேலும் பேசினார்கள். எங்கள் வருகை கண்டு வாசலைத் திறந்து வந்து கூடவாவது வேண்டும். அதற்கு அருகுள்ள கிருஷ்ணன் திறவாமல் தடுத்தாலும் – நீ ஒரு வார்த்தைகூடப் பேசாதிருக்க வேண்டுமா? தட்டின கதவு திறக்கும் என்பார்களே அதுவும் பொய்யா? திறக்க முடியாது என்று எதிர்மறையில் பேசினால் கூடப் போதும். அது எங்கட்கு இனிக்குமே? அது செய்தால் ஆகாதா? கதவு தான் இரண்டும் செம்மி வழியடைத்துக் கிடக்கிறது என்றாலும் உன் வாயும் அப்படியாகி விட்டது போலும்? உன்னை அழைத்து உடன் கூட்டிப் போக வந்த எங்கட்கு கண்ணும் செவியும் பட்டினி கிடக்க வேண்டுமா? உன்னுடைய கிருஷ்ணனை நீ தரவேண்டாம். போகட்டும், எங்களுடைய உன்னையாவது தரலாம் அல்லவா? இவ்வளவு கருத்துக்களையும் உள்ளடக்கிக் கேட்ட கேள்வி “மாற்றமும் தாராரோ? வாசல் திறவாதார்“ என்பது. இப்பழிகட்கு எல்லாம் ஏதாவது பதில் சொல்லித்தானே தீரவேண்டும். உள்ளுள்ளவன் சொன்னான் – “நீங்கள் பழியிட்டுச் சொல்கிறபடி கிருஷ்ணன் இங்கே இல்லை“ என்று !
கிருஷ்ணன் வரவினை நீ மறைத்து இல்லை சொல்லுகிறாய். அவனும் உன் களவுக்குப் பெருநிலை நின்று உடந்தையாய் இருந்தாலும் சரி. உண்மையை எவராலும் மறைக்கப் போகாது. திருத்துழாய் வாசனையே அவன் வரவைப் புலனாக்குகிறது. அவன் இப்போது இல்லாமல் போனாலும் – அவன் ஒருக்கால் வந்து அனைந்துவிட்டால் பின்னர் ஐந்தாறு குளிக்குப் பரிமளம் நிற்கும் இல்லையா? என்று சொன்னார்கள். இவள் பதில் கூறினாள் – கட்டுங்காவலுமாய் இருக்கிறது வாசல். அவளால் எளிதில் புகுரப் போகுமோ? என்று “எங்களுக்குத் தான் நீ கதவு திறந்து விட வேணும். அவனோ எங்கும் இருப்பவன். எதிலும் இருப்பவன். அதற்குப் பயன் நினைத்த இடத்தில் நினைத்தபடி தோன்றுவது தானே? நாராயணனான அவன் புகமுடியாதபடி என் வந்தது இவை யாவும் உள்ளதை மழைக்கும் பொய் மொழிகள் – என்றார்கள் அவர்கள். மேலும் அவன் சர்வேஸ்வரனாக இருந்தும் தன்னைத் தாழவிட்டு நமது குலத்தில் வந்து பிறந்தவன். குணம் செயல்களால் நம்மை தனக்கென எழுதிக் கொண்டவன். நம்மிடம் உள்ள வெறுமையே பச்சையாகக் கொண்டு புருஷார்த்த லாபத்தைத் தருபவன். இப்படி நமக்காகப் பிறந்தவனை எங்களோடு சேர்த்து வைத்து அதுகண்டு மகிழ வேண்டியவள் நீ. அதைவிட்டு நீ எங்களை எல்லாம் பிரித்து வைக்கலாமா? சிறிதும் தகாது. கும்பகருணன் செய்தி தெரிந்தது தான். சொல்லுகிறோம் கேள்‘ என்று மேலும் தொடங்கினார்கள்.
கும்பகருணன் ‘சாகாவரம்“ கேட்டுத் தவம் செய்தான். கேட்டபோது “நித்திரைத்துவம்“ என்று மாறிக்கேட்டு மீளா உறக்கம் பெற்றான். இது பழையகதை நாங்கள் கண்டதில்லை. இப்போது உன்னைக் காணகிறோம். அவனும் உன்னோடு போட்டியிட்டுத் தோற்றுத் தனதையும் உனக்குக் கொடுத்துப போயிருப்பான் போலும்!ஏனென்றால் அவனது வெறும் துயில் ஆறுமாத காலம் உறங்கிப் பிறகு சிறிது உண்டுவாளும். உன்னதோ பெருந்துயிர் நீ உணர்வு வராமலே உறங்குகிறாய். “ஆற்ற அந்ந்தல் உடையாய்“ எழுந்து வா! என்கிறார்கள். தோற்றவர்கள் – வென்றவருக்குத் தனது படையுடைமைகள் யாவற்றையும்தந்து செல்வது போர் முறை. இனி கும்பகருணனை “கூற்றத்தின் வாய் வீழ்ந்தவன்“ என்கிறார்கள். இராவனுக்காகப் போருக்குச் சென்று இராமபிரானால் உயிர் துறக்கப் பெற்றவன் இல்லையா? இவர்கள் சொல்லுகிறார்கள். இராமனைப் ‘புண்ணியன்“ என்று. சீதையைப் பிரிந்தபாவி வஞ்சகன் இராவணன் சுக்கிரவனிடம் “இராவணாயிருந்தாலும் அழைத்து வா. சந்தேகம் வேண்டாம். “அடைக்கலம் தருவோம்“ என்றுகூறி அவளிடமும் அன்பு காட்டியவன் அவன் புண்ணியன் தானே? முதல் நாள் போரிலேயே இராவணன் நிலைகுலைந்து நின்றான். அது கண்டு இராமபிரான் சொன்னது என்ன தெரியுமா? கவியரசர் கம்பர் சொல்லுகிறார். “ஆனையாய்! உனக்கு அமைந்தன யாவும் இன்று காற்றுறு பூனையாயின், இன்றுபோய்ப் போருக்கு நாளைவா என்றன. கோசலை நாடு உடைவள்ளல் “ என்று மீண்டும் போரிட விரும்பினால் நாளை வா! இல்லை அடைக்கலம் அடைய விரும்பினால் இன்றே செய். இப்பொழுதே செய் என்று கருத்து. இப்படிப் பட்டவன், “சொல்ல விரும்பி இருக்க மாட்டான். கும்பகருணன் தானே தன்னைக் கொல்ல வைத்துக் கொண்டான் – என்ற உண்மையை, “புண்ணியனாய் கூற்றத்தின் வாய் வீழ்ந்த கும்பகருணன்“ என்று வெளியிடுகிறார்கள். கண்ணனை எங்கட்கு இல்லாமல் நீயே பிரித்து அநுபவிக்க விரும்பாதே. அது தவறு. அது கேடு தந்தால் நீயே கேட்டினை வரவழைத்துக் கொண்டாகவே பொருள்“ என்று நினைவூட்டுகிறபடி இது. !
பஞ்சு எனச் சிவக்கும் மேன்கால் சீதையைப் பிரித்த பாவி வஞ்சகன். அவனுக்கு இனைய என்னை வருக என்று அருள் செய்தானோ?“ – என்று இராமன் அடைக்கலம் தர இசைந்தபோது வீடணன் சொன்னது இது. தான் ஒரு தவறும் செய்யாவிட்டாலும். வஞ்சகனாக இராவணனுக்கு இளையவனாகப் பிறந்து, அவன் வாசம் செய்த வயிற்றுள் பின்னிட்டு பத்துமாதம் இருந்தேனே. அதுவே நான் அபராதி என்பதற்குப் போதும் என்று அவள் கருத்து. இந்த வாதம் கும்பகருணனுக்கும் பொருத்தம் தானே? இதுமட்டுமில்லை. அண்ணன் செயல் அவனுக்குப் பிடித்தமும் இல்லை. சீதையை இராமனிடம் சேர்ப்பதுதான் நல்லது என்று நேரே பேசவும் செய்தான். தன்னை எழுப்பிப் போருக்குப் போ என்றபோது கேட்ட கேள்வி இதுதான். “திட்டியின் விடம் அன்ன கற்பின் செல்வியை விட்டிலையோ? இது விதியின் வண்ணமே என்றது அவன் பேச்சு. இத்தகையவன், வீடணன் மாதிரி இராமனைச் சேர நினையாவிட்டாலும் சரி. இராவணனோடு கூடி அவன் சொல்கேட்டு போர்க்களம் போகாமல் தனியாக நிற்கலாம் அல்லவா? வீபிஷணன் வந்து சொல்லியும் எனக்கு அது புகழ். எனக்கு இது தக்கது‘ என்று கூறி அத்மோஜ்ஜிவனத்தைக் கைவிட்டான். “நீர்க்கோல வாழ்வை நச்சி நெடிது நாள் வளர்த்துப் பிள்ளைப் போர்க்கோலம் செய்து விட்டான். உயிர் கொடாது அங்குப் போகேன்“ – என்று நன்றிக் கடன் என்றும் சாமானிய உலகியல் தரு மத்தையே மேலானதாகக் கொண்டு போர்க்களம் புகுந்தான். கும்பகர்ணன், இவனைப் போரில் அழித்தான் இராமன் என்றால், அழித்தவன் அவனில்லை. தனக்குத் தானே போய் யமன் வாயில் விழுந்தான் என்பது தானே பொருள்? குடிநீர் வசதிக்காக வெட்டினகுளம், அதில் ஒருவன் தற்கொலை நோக்கோடு மூழ்கிமடிகிறான் என்றால் குற்றம் குளத்தின் மேலா? இல்லையல்லவா? அப்படியே, இருள்நீங்கி பொருள்களை உள்ளது உள்ள இடத்தில் அறிந்து கொள்ள விளக்கினை ஏற்றி வைக்கிறோம். அதில் விட்டில்பூச்சி தன்னடையே வந்து விழுந்து மடிகிறது. விளக்கின் மேல் குறைசொல்ல்ல் ஆகுமா? ஆகாது அல்லவா? எங்கேயோ போன இராமனைக் கைதட்டி அழைத்தான். வேறு இடம் போகாமல் சிறைப்படுத்தி வைத்து, நான் உன் வாயில் விழப்போகிறேன். என்னை உண்டு பசிதீர்த்துப் போ“- என்று, சொல்லித்தானே தன் மரணத்து உள்ளானான் கும்பகருணன் என்பது, ஆண்டாளின் உட்கிடையாகும். இதனையே “கூற்றத்தின் வாய்விழ்ந்த கும்பகருணன்“ என்று வெளிப்படக்கூறியுள்ளான்.
வந்தவள் இதை எல்லாம் சொல்லிக் காட்டியவுடன் உள்ளுள்ளவள் எழுந்து வந்து சேர்ந்து கொண்டாள். “உபாயமும் உபேயமும் ஈஸ்வரன் தான் என்பதில் தவறில்லை. இருந்தபோதிலும் அப்படியுள்ளவர்கட்கும் கர்மஞானபக்திகள் உண்டு. அவற்றை உபாயபுத்தியோடு செய்வதைத் தவிர்த்து – கைங்கரிய ரூபமாகத் தவறாது செய்யத் தான் வேண்டும். அவர்கள் செய்யும் கர்மங்கள் கைங்கரியத்திலே புகும். ஞானமோ ஸ்வரூபத்தோடு சேரும். பக்தி பிராப்யருசியிலே அடங்கும். உபாயத்தை மேற்கொள்ளுவது வரும் பலனைக் கருதித்தேனே ! பிராப்யருசு தலை எடுத்தால் வாள இருக்க வொட்டாது. ஆகவே நாம் எல்லோரும் ஸ்ரவணம் கீர்த்தனம் ஸ்மரணம் ஆகிய தந்ன முயற்சியை மேற்கொள்ளவே வேண்டும். இல்லையேல் உயிரற்ற சடப்பொருளுக்கு நமக்கும் வேற்றுமையிராது என்றெல்லாம் வந்தவர்கள் எடுத்துச் சொல்ல இவளும் மன அமைதி பெற்றாள்.
உள்ளுள்ளவள் விரைந்து எழுந்து வருவது கண்டு – “தேற்றமாய் வந்து திற“ என்கிறார்கள். ஊர் எல்லாம். உன் உறக்கம் கண்டு திரண்டு நிற்கிறது. இத்திரளிலே உன்னை நியமிக்க வல்லவர்களும் இருக்கக் கூடும். அரைகுலைய நிலைகுலைய வாராதே தெளிவடைந்து மெல்ல நல்லபடியாகவா – என்று கருத்து. இதனால் எவ்வளவு உயர்ந்தவர்களாயிருந்து அவசர நிலையில் வந்தாலும், உலகியல் ஆசாரங்களையும் கருத்தில் உன்றி நடக்கவேணும் என்பது வைஷ்ணவ வடிணம் என்பது புரிகிறதில்லையா?

Add a Comment