திருப்பாவை பேருரை
••••••••••••••••••••••••••••••••
பத்மஸ்ரீ முனைவர் ஔவை நடராசன்
===================================
பாடல் – 15
==========
“நாமே முந்துற எழுந்துபோய் எழாதவர்களை எழுப்பிக்காண்பதில் ஒரு மகிழ்ச்சி உண்டு. இருந்தாலும், எல்லோரும் எழுந்துவந்து நம்மைக் காணவரும்போது- அந்த வைஷ்ணவ கோஷ்டியை காண்பதில் ஏற்படும் மகிழ்ச்சியோ அதைவிட மிகுதியாகும். ஆக, அப்படி எல்லோரும் திரண்டுவர அக்கூட்டம் கண்டு நாம் மகிழவேண்டும்“ – என்று இருப்பாள் ஒருத்தியை வந்தவர்கள் எழுப்புவதாக உள்ளது இந்தப் பாசுரம். இவனோ, அயல்வீட்டில் “அங்கொடு சக்கரம் ஏந்திய தடக்கையள் பங்கயக் கண்ணனை“ என்று வந்தவர்கள் சொல்லுவதைக் கேட்டாள். கேட்டதும் உணர்வு தெளிந்து, அந்த அடிகளையே திருப்பித் திருப்பி தன் குரலில் பாடி கிருஷ்ணாநுபவத்தில் மூழ்கியிருந்தாள். அதைக்கேட்டு, வந்தவர்கள் “இளங்கிளியே“ என்று கூறி எழுப்புகிறார்கள்.
சொன்னதைச் சொல்லும் கிளிப்பிள்ளை என்று பழமொழி. நாம் சொன்னதையே அது திருப்பிச் சொன்னாயம் நமக்குக் கேட்க மகிழ்ச்சியாய் இருக்கும். இறைவன் திருநாமங்களையே சொல்லி கிளியைப் பழக்கினாள் ஒருத்தி. அது அடிக்கடி அதையே திருப்பிச் சொல்லிற்று. கேட்டு மகிழ்ச்சி தாங்காமல், “உன்னை வளர்த்ததனால் பெரும்பயன் பெற்றேன்‘ என்று கைகூப்பி வணங்கினாளாம் அவள். வளத்ததனால் பெற்றபயன் பெற்றேன் என்று மடக்கிளியைக் கைகூப்பி வளங்கினாளே“ என்று பாசுரம். இதுபோல வந்தவர்கட்கு இவள்மீது பற்றுதல் அதிகமாகி “இளங்கிளியே“ என அன்பு ததும்பக் கூப்பிடுகிறார்கள். இவளது பசுமைக்கும் பேச்சினிமைக்கும் கிளி ஒப்பாகும் அல்லது பருவத்துக்கு ஒப்பாகா என்று கருத்து.
வந்தவர்கள் மகிழ்ந்து புகழ்ச்சியோடு தான் சொன்னார்கள் இளங்கிளியே“ என்று ஆனால், உள்ளிருந்தவளுக்கு அது விபரீதமாகத் தோன்றிற்று. முன் வீட்டில் இருந்தவளை “நானாதாய், நாவுடையாய்“ என்று கடிந்து பேசினவர்கள் இவர்கள். அவளுக்கும் பிற்பட்டு உறங்குபவளாகத் தோற்றுகிற நம்மை சிலாகித்துப் புகழமாட்டார்கள். ஆக இளங்கிளி என்றது இகழ்ச்சியை உள்ளடக்கியதுதான். அறியாத விவரம் தெரியாது சிறுபிள்ளைகளை நாம் “இளம்பிள்ளை“ என்பது போல. இளங்கிளி என அழைக்கிறார்கள். இவ்வளவே தவிர வேறில்லை. தவிரவும், “மாசுடை உடம்பொடு தலையுலறி வாய்ப்புறம் வெளுத்து“ என்றுமாறு, விரகத்து வேதனையால் உடம்புவாடி வாயும் வெளுத்திருப்பவர்கள் இவர்கள். நாமோ கிருஷ்ணனோடு பா வனா முதிர்ச்சியாலே கூடி, உடம்பு செழித்து வாயும் சிவந்து குறியழியாதே களித்திருக்கிறோம். இதனால் நம்மை நிந்திக்கும் கருத்தோடு பேசியிருக்கிறார்கள். இதற்குள் நாம் வாய்திறந்தால் அவர்கட்கு மேலும் வெறுப்பாகும் என்று பேசாதே கிடந்தாள். அது கண்டு வந்தவர்கள் “இன்னம் உறங்குதியோ“ – என்று குறை சொல்லி எழுப்புகிறார்கள்.
நாங்கள் வருவதற்கு முன்பு உறங்கினது பொறுத்தோம். ஆகிலும் நாங்கள் வந்தபின்பும் நீ மறந்து உறங்குவது தகுமா? கிருஷ்ண விரகத்தாலும் உனது பார்வை படாமையாலும் நாங்கள் துவண்டு நிற்கிறோம். எங்கள் வருத்தக்குரல் கேட்டும்கூட உனக்கு உறக்கம் நீடிக்கக் காரணம் என்ன? நேரடியாகக் கிருஷ்ணனோடு கூடிமகிழ உரிய வாய்ப்பும் வசதியும் நேர்ந்திருக்கிற போது, நீ அதை மறந்தும் இழந்து உறங்குவது சிறிதும் தகாது. நமக்கு உத்தேசமான ஒன்று கைபுகுந்திருக்கிறதை விட்டுவிட்டு நீ உறங்கலாமா? – என்றெல்லாம் “இன்னும் உறங்குதியோ“ என்றதற்குக் கருத்து, ஆனாலும், இவள் தான் மூழ்கியிருக்கும் கிருஷ்ணாநு சந்தானத்துக்கு அவர்கள் வருகையும் பேச்சும் ஒரு தடைபோலப் படுதலால் – வெறுப்புடன், “நீங்கள் சில் என்று அழையேன்மின்“ என்றாள். “செள்“ என்று, வெறுப்புக் கலந்து கோபத்தோடு பேசும் பேச்சினை “சில் என்று அழைத்தல்“ என்பர். திருவாய்மொழி பாடுதல் பகவத் தரிசனமும் முகோல்லாசமும் பெறுவதற்காக ஆயினும், பாடும்போது பெருமானே பிரகாரத்திலே எழுந்தருளினால் கூட பாடுவோர் மனம் சுளிப்பார்களாம். அதுபோல, தன் கிருஷ்ணாநுபவத்துக் கிடையே இவர் வருகையும் பேச்சும் உள்ளிருப்பவளுக்குப் பெரிதும் விரசமாயிற்று என்னலாம் ! அவர்களது அன்பு அழைப்பு இவளுக்குத் துன்பம் தருமாயிற்று. “திருவாய்மொழி பாடா நின்றால் செல்வர் எழுந்தருளுகையும் அனுஷ்யமா போலே“ என்று இவ்விடத்து வியாக்யான வாக்கியம்.
“சில் என்று அழையேன்மின்“ என்ற வார்த்தை கேட்ட பிறகு வந்தவர்கள் சொல்லுகிறார்கள். நீ வந்தால் அல்லது இந்தக்குழு நிறைவுபெறாது என்ற விருப்பொடு உன் வாசலில் வந்து நாங்கள் நின்றோம். பாடிய பாட்டிடொலி கேட்டு “இளங்கிளியே“ என அன்பு த்தும்ப எழுப்பினோம். இன்னும் உறங்குதியோ என்று உன் தவறைத் திருத்தினோம். எல்லாம், கண்டும் கேட்டும், செள் என்று பேசுவதாக எங்கள் மீது கோபித்து விழுகிறாயே. எங்கள் காட்சியும் பேச்சும் உனக்கு வெறுப்பாய் விளைகிறது. குணமூர்த்தி உள்ள நங்கைக்கு அழகா ! இது“ என்று இதற்குப் பதிலாக “நீங்கள் பாடிய பாட்டடியாகத் தான் கிருஷ்ணாநுபவம் செய்து மூழ்கியிருந்தேன். என் இயல்பு அறியாமல் “இளங்கிளியே“ என்று கேலி சொல்லிப் பாதித்துப் பேசிய நீங்கள் மட்டும் குணநிறைவு கொண்ட நங்கையர்களா? கிடையாது. இனி, உங்களால் வாய்பேசாது அடக்கிக் கொண்டிருக்க முடியுமானால் நான் வருகிறேன்“ என்று கூறுமவள் “நங்கைமிர் போதருகின்றேன்“ என்றாள். தோழியர் போலவும் சோதரிகள் போலவும் நெருங்கிப் பழகியவர்களை “நங்கைமீர்“ என மூன்றாமவர் போலக் குறிப்பிட்டது உறவு அறுத்துப் பேசும் பேச்சாகும். இது வந்தவர்கட்கு நயமுடையதாகப் படவில்லை.
வந்தவர்கள் சொன்னார்கள். நீ “நங்கையீர்“ என்று முன்பின் பாராதவர்களைப்போல உறவை வெடிப் பேசுகிறாய். இது மிகவும் பொல்லாதது. ஆனாலும் இப்படி வெட்டிப்பேசுவது இன்றுதான் முதல்முறையாக அறிகிறோம் என்றில்லை. இப்படி இட்டுக்கட்டிப் பேசுவாய் என்பதை பழங்கால முதலே யாம் அறிவோம். நீ தகாததை எல்லாம் சொல்லி விட்டு. கடைசியிலே அவை எங்கள் தலையிலே ஆம்படி பேசவல்லவள். என்கிற உன் நாவிலும் எங்கட்குப் புதியதில்லை. பண்டே கண்டறிந்தது தான். குண தோஷங்களை உன் வார்த்தையில் நாங்கள் பார்ப்பதில்லை. நீ சொல்லுவது எல்லாம் பெருவார்த்தை என்றே கேட்டு மகிழும் போக்குடையோம்“ என்று, இவ்வளவு கருத்துக்களையும் உள்ளடக்கிப் பேசுமவர்கள். “வல்லை உன் கட்டுரைகள். பண்டே உன் வாய் அறிவம்“ என்றார்கள். உள்ளிருந்தவள் உடனடியாக இன்னம் உறங்குதியோ?“ வல்லையுன் கட்டுரைகள்“ என்று நீங்கள் கூறியது வெட்டிப் பேசியது இல்லையா? என்று சொல்ல,உன் வாசலிலே வந்து நின்று எழுப்ப வந்தவர்களை “சில் என்று அழையேன்மின்‘ என்று, வெட்டிப் பேசியதும் அப்படித்தானே என்று வந்தவர்கள் சொல்ல வாக்குவாதம் வளர்ந்து நின்றது.
“சில் என்று அழையேன்மின்“ நான் வெட்டிப்பேசியது குற்றம் என்று வந்த உங்கட்குத் தோன்றலாம். அது என் குற்றம் அன்று, அதுவும் உங்களுடைய குற்றமே. நம் வார்த்தை கேட்டு உவக்குமவள் என்று என்னைத் தனதாகக் கருதியிருக்கவேணும். அப்படி கருதியிருந்தால், நம் வார்த்தையும் புறக்கணிக்கும் அளவு கிருஷ்ணாநுபத்தில் ஆழ்ந்திருப்பவள் இவள் என்று என்மீது உங்கட்கு உவப்பு ஏற்படும். அதில்லாமையாலே தோஷத்தை ஏறிட்டு இட்டுக்கட்டுப் பேசியது யாவும் உங்கள் குற்றமே – என்று உள்ளிருப்பவள் முடிவு கட்டினாள். அதனால் “வல்வீர்கள், நீங்களே என வந்தவர்மீது பழியிட்டது தேற்றம். மேலும் சொன்னாள், உங்கள் வீட்டு வாசலிலே வந்து நின்று பலமுறை நான் பட்ட அவதிகள் போதாதா? எத்தனைகாயம் துவண்டு சோர்ந்திருக்கிறேன். இவற்றை நினைத்தால் “பண்டே உன் வாய் அறிதும்“ என்று நாலும் சொல்லலாமில்லையா? என்று கேட்க, வந்தவர்கள் சொன்னார்கள் வீண்பேச்சு எதற்கு? நீ சொல்வது என்றோ எங்கோ நடந்தது. அதை, அநுமானத்தாலே கண்டறியக் கூடும். தற்போது நாங்கள் உன் வாசலிலே படுவது பிரத்யக்ஷம் அல்லவா? பிரத்யக்ஷ்ம் கிடக்க அநுமானத்தைக் கொள்ளுவாருண்டோ? என்று. இவ்வளவுக்கும் பிறகு உள்ளுள்ளவள், “பாகவத சேக்ஷ்த்தும் நமக்கு ஸ்வரூபம். இல்லாத குற்றத்தையும் சிலர் உண்டு செய்தால் இல்லை என்னுதே ஏற்கை வைஷ்ணவலக்ஷ்ணம். பிறர் செய்த குற்றத்தையும் நம்மதாக ஏற்று அமைவதே நமது கடன்“ என்றெல்லாம் தோன்றி “நானே தான் ஆயிடுக“ என்று குற்றம் எல்லாம் தன்தலை மீதே என்று ஒப்புக்கொண்டாள். வந்தவர்களும் மகிழ்ந்து “ஒல்லை நீ போதாய்“ என்ன, உள்ளுள்ளவளும் அவர்களோடு சேர்ந்து கொண்டாள்.
இப்பாசுரத்துள் “நானே தான் ஆயிடுக“ என்பது உயிர்நிலையான பகுதி வந்தவர்கள் பால் பல குற்றங்களை அடுக்கடுக்காக சுமத்தியவள் இறுதியில் எல்லாக் குற்றங்களும் என்னுடையதே எனக்கூறிப் பொறுமை வேண்டினாள் இல்லையா? இது மிக மிக மேலான உயர்ந்த குணம். வைணவ சமயத்தின் உயிர்நிலை கொள்கையும் இதுவே ஆகும். பாகவத சேஷத்துவம் என்பது “அடியார்க்கு அடியேன்“ என்று இருக்குமது “தில்லைவாழ் அந்தணர் தம் அடியார்க்கும் அடியேன்“ எனச் சைவமும் இதனைப் போற்றும். இக்கோட்பாடு நமக்கு உடைமையானால் அடியார்கள் கூறும் இல்லாத குற்றத்தையும் ஏற்பது இயல்புதானே ! ஆண்டவனைக் காட்டிலும் அடியார்க்கு முறிய பெருமை உண்டு. அடியார்களை அன்புடன் உபசரிப்பது ஆண்டவனுக்குச் செய்வது போல. ஆண்டவனுக்கு நேரே தீங்கிழைத்தாலும் அவன் பொறுக்க அது தீரும். அடியாருக்கு இழைக்கும் துமை அப்படியில்லை. “ஆண்டவன் அவதரித்துச் செய்த ஆனைத் தொழில்கள் எல்லாம் பாகவதபசாரம் பொறாமைக்காக“ என்று மேலையோர் முடிவு. ஆண்டவனும் அடியவர் மூலமாகவே ஒருவனை ஏற்று ஆட்கொள்ளுகிறான் என்பர். “அடியார்க்கு என்னை ஆட்படுத்திய விமலன்“ என்று பாசுரம். இப்படி உள்ள பாகவதற் விஷயத்தில் ஒவ்வொருவரும் நடந்து கொள்ள வேண்டியபடி இது. இச்சிறந்த உண்மையினைச் சுட்டி அடியார் பெருமையினைத் துலக்குவதாலேயே –“திருப்பாவை ஆகிறது இப்பாட்டு“ என்று முன்னையோர் கோட்பாடு.
இராமன் நாடு நீங்கி காடுபுகுந்தது தெரியும். அதற்குக் காரணங்கள் பல. முதலில் மந்தரையது சூழ்ச்சி. சிறுவனாயிருக்கும்போது கூனி முதுகில் மண் உருண்டையைக் கொண்டு விளையாட்டியாக வில்லால் அடித்தான். இராமன். சிறியவராயிருந்தாலும் சமயம் நேரும்போது வஞ்சினம் தீர்த்துக் கொள்ளுவரில்லையா? அவள் கைகேயி மனத்தை மாற்றிக் கேடு சூழ்ந்தான். “பண்டை நாள் இராகவன் பாணி வில்லுமிழ் உண்டை உண்டதனைத் தன் உள்ளத்து உன்னினாள்“- என்று கேட்டிற்குக் காரணம் சுட்டுவர் கம்பர். அடுத்த காரணம் கைகேயி வரம். தயரதன் “மண்ணே கொள் நீ. மற்றது ஒன்றும் மற“ என்று பலமுறை மன்றாடினான். அவளோ இராமனை தன் மகன் போலவே கருதி வந்தவள். “புவிக்கு எலாம் வேதமே என இராமனைப் பயந்த எற்கு இருண்டோ?“ – என்று, மந்தரையிடமே கேட்டவள். இராமனைப் பெற்ற எனக்கு என்று தன்னைக் குறிப்பிட்டாள் அவள். இறுதியில் விடாப்பிடியாக நின்று, “நாயகன் உரையான் வாயால் நான் இதுபகர்வேன் என்று காட்டிற்கு அனுப்பினாள். அடுத்த காரணம் தயரதனே ஆவன். என்றோ கொடுத்த வரம். அன்று கேட்க மறுத்தாள். மேலும் இந்த இரு வரங்களை அன்றுகேட்டுத் தருவேன் என்று அவன் ஒப்பியதுமில்லை. இப்படி எல்லாம் சொல்லி வரந்தர மறுத்திருக்கலாம். சொன்னது தவறக்கூடாது என்ற ஆபாச திருமத்தை உறுதியாகக் கொண்டான். அறத்தின் மூர்த்தியாய் வந்தவதரித்த மகனைக் காட்டிற்கு அனுப்பினான் அவன். இவ்வளவும் போக இராமபிரானிடமே ஒரு குறையுண்டு. தந்தை நேரடியாக வனம்புகுமாறு தன்னைச் சொல்லவில்லை. “மன்னவன் பணியன்று. ஆகில் நும் பணி மறுப்பனோ“ என்று ஒப்பினான். நேற்று முடிசூடப் பணித்தவன். இன்று வனம்புகச் சொல்லுவனா என ஐயுற்று மறுக்கவுமில்லை. “மின் ஒளிர் கானம் இன்றே போகின்றேன். விடையும் கொண்டேன்‘ என்று உடனே புறப்பட்டும் விட்டான். இப்படி எல்லாம் பலர் பலவழிகளில் காரணமாய் இருந்தும் கேட்ட பரதன் – அவர்கள், குறைகளை எல்லாம் தன் தலையிலே போட்டுக் கொண்டான். நான் முற்பிறவிகள் செய்த, பாவமே வனம் புகக் காரணம் என்று வாய்விட்டுக் கூறிவருந்தினான். “மப்பமே வாத்ர நிமித்தமாஸீத்“- என்று பரதனது வார்த்தை, வனம்புகக் காரணம் மந்திரை கைகேசி கூநி இராமன் முதலியவர்களது தோஷம் காரணமில்லை. நான் ஒருவன் செய்த பாவமே காரணம் என்று கருத்து இவ்வருங்குணம் மற்றவர்கட்கு வந்து நிற்குமா? அப்படி “ஒத்து நின்றால் பரதன் பெரிது உத்தமன் ஆவதுண்டோ?“ என்று வினா விடுக்கிறார் கம்பர். இங்ஙனம் பாகவத கோஷ்டிக்குத் தலைமை தாங்குபவன் பரதன்.
இப்பாசுரத்துள் பலவகையாலும் பாகவதர்கள் பெருமை பேசப்படும். பகவத் விஷயத்தில் ருசியுடையார் பேச்சினிமையும் அடியவர்கட்கு உத்தேஸ்யம் என்பது ‘எல்லே“! இளங்கிளியே‘ என்பதால் புலப்படுகிறது. “இன்னும் உறங்குதியோ? “என்பதனால், பாகவதர்கள் கூட்டுறவு கிடைத்தபிறகு வேறு செய்திகளில் கவனம் செலுத்துவது தவறு என்கிறது. பகவத் விஷயருதி உடையார்க்கு பிறர் என் சொன்னாலும் பொறுக்க வேணும் என்றும் இடம் “சில் என்று அழையேன்மின்“ என்றதுவும் கூட்டுகிறது. நங்கைமீர் போதருகின்றேன் என்றதால், தன் இச்சையாலே சில வெறுக்க நேர்ந்தாலும் அதை நீக்கி, பாகவதரிடம் கௌரவம் தோற்றச் சொல்லவேண்டும் என்பது தெரியவரும். “வல்வீர்கள் நீங்களே நானே தான் ஆயிடுக“ என்றதன் அடியாக பிறர் சொல்லும் குற்றத்தையும் தன் குற்றமாக ஏற்கவேணும் என்பதும். பெருமைமிக்க அடியார்களை எந்தவகையிலும் நிர்ப்பந்தம் செய்யத்தகாது என்பதும் அறியவரும். மேலையார் செய்வன தவிர்ந்து தானாக ஒன்று செய்கை தகாது என்பதை உனக்கு என்ன வேறுடையை“ என்ற சொற்றொடர் குறிப்பிடும் எல்லாரும் போந்தாரோ? என்பதனால் வைஷ்ணவர்கள் எல்லாரும் நமக்குத் தேஸ்யர் என்று தோற்றும் வரவேண்டியவருள் ஒருவர் குறைந்தாலும் பகவதநுபவத்துக்குக் குறயே என்பது “போந்து எண்ணிக்கொள்“ என்ற குறிப்பால் புலனாகும். வல்லானை கொள்றானை என்கிற அடிகள் தொடக்கம். பகவதநுபவமே பாகவதர்கட்கு உஜ்ஜீவனஹேது என்கிறது. பாகவத விஷய சாரமான செய்திகளை எல்லாம் பேசிற்று என்பது மட்டும் பெருமையில்லை. “செஞ்சொற்கவி இன்பம்“ என்றும் “மொழி பட்டோடும் கவியமுதம்“ என்றும் சொல்லுகிறபடி, மொழிக்கு மொழி பொருளாழம் மிகுந்த சிறந்த கவிதை என்கிறதிற்கு இது ஒரு நல்ல எடுத்துக் காட்டாகும்.
வைணவ சமயத்துள் ஆட்கொண்ட வில்லி ஜீயர் என்று ஒரு பெரியார் இருந்தனர். அவரை நஞ்சீயர் என்றும் மற்றொரு பெரியார் அவர் எழுந்தருளிய போது இடைவழியில் தெண்டனிட்டு நின்றார். அப்போது நஞ்சீயர், அவரைப் பார்த்துச் சொன்னார். “பகவத் விஷயத்தில் ருசி நமக்கு மெய்யாகவே பிறந்ததில்லை காணும்“ என்று கேட்ட அவருக்குப் பெரிய வியப்பு உண்டாயிற்று. “உம்மைப்போல பெரிய ஆச்சாரியவான் உண்டோ, நீர் இப்படிச் சொல்லலாமா, உலகேத்தும் புகழதன்றோ உம்முடையது. இங்ஙனம் கூறக் காரணம் யாது“ என்று கேட்டார். அதற்கு நஞ்சீயர் கூறிய பதில் இது.“ பகவத் விஷயத்திலே மெய்யே ருசி உண்டு என்று இருக்கையாவது, பரமன் அடியார்கள் ஆகிய பாகவதர்களைக் கண்டால் உகக்குமாறு காணும்“ என்பது “பகவத் தேஷத்வம் பாகவத சேஷத்வ பரியந்தம் சென்றாலே சிறந்து நிற்கும் என்கிற வைஷ்ணவ சிந்தாந்தக் கொள்கையை விளக்கி நிற்கும் ஐதீகம் இது. இவ்வளவு விசேஷம் பாகவத விஷயத்துக்கு உண்டு ஆகுமானால் –இதன் பல்வேறு படிகளையும் விளக்கி நிற்கும் இப்பாசுரத்தை திருப்பாவை என்பது இப்பாட்டு‘ என்று பூர்வீகர்களை அறுதியிட்டது சாலவும் பொருந்தும் இல்லையா? இது கருதியே, “அடியார்கள் வாழ! அரங்க நகர் வாழ‘ என் நாறும் ஆராதனத்தின் இறுதியர் வைணவர்கள் வாழ்த்திக்கூறும் முடிக்கும் மரபும் மேன்மை மிக்கது.

Add a Comment