POST: 2017-12-31T08:54:37+05:30

திருப்பாவை பேருரை
••••••••••••••••••••••••••••••••
பத்மஸ்ரீ முனைவர் ஔவை நடராசன்
===================================
பாடல் – 16
========

விண்ணுக்கு ஒரு மருந்தாய். வேதவிழுப்பொருளாய், கண்ணுக்கு இனியனாய் காட்சி தருபவன் இறைவன். அவனே, கண்ணனாய் அவதரித்து நந்தகோபனிடம் வளருகிறான். கண்ணனது மாளிகையில் வாசல் காப்பான் ஒருவன் உண்டு. அவனுக்கு துவாரபாலகன் என்று பெயர். அவன் எந்த்த் தீங்கும் நேராதபடி கண்ணனைக் காத்துவருபவன். இங்ஙனம், கண்ணும் கருத்துமாய் காத்துவரக் காரணம் – கண்ணன்பால் கொண்டிருக்கும் அளவிறந்த நேயம். விட்டு விலகாது நெருங்கிய அன்புமே நேயம். மற்றொன்று எந்நேரத்தில் யாரால் எப்படித் தீங்கு வருமோ என்கிற அச்சம். வாசற்காப்போனுக்கு மட்டுமில்லை. இப்படி நேயம், நிலை கதவுகளுக்கும் உண்டாம்.இரு கதவுகளும் நிலையோடு நெருங்கிப் பிணைந்திருக்கும் தோற்றம் அதற்குச் சான்று போல. தானை நீக்கி உருவினால் ஒழிய எவருக்கும் போகஒட்டாது. தாமே தள்ளி நீக்கினால் கதவுகள் இரண்டும் வந்து கன்னத்தில் அறையும். ஆக கண்ணனிடம் நேயம் பூண்ட மற்றொருவர் தானே அதை திறந்துவிட முடியும். கண்ணனைக் காண வந்த பெண்கள் வாசல்காப்பானைப் பார்த்து “நேச நிலைக்கதவம் நீக்கு“ என்கிறார்கள். நேயம் மிக்க நீயே கதவு திறந்து எங்களை உள்ளே புகவிட வேண்டும் என்று கருத்து. காவலன் வந்தவரை விலக்குவது கண்ணன் மீது நேயத்தாலே என்றால், கதவுகள் தள்ளப் பேசாதிருப்பதும் நேயத்தால்தானே என்பது அவர்கள் நினைவு.

நேயம் என்பது ஒரு மனித உணர்வு. அது உயிரற்ற அசேதனப் பொருளுக்குக் கிடையாது. நிலையும் கதவும் உயிரற்றவை. அதற்குக் கண்ணன்பால் நேயம் எப்படி இருக்க இயலும்! இப்படி ஒரு கேள்வி எழும் கம்சன் இருக்கும் இடத்தில் புல்பூண்டுகள் யாவும் அசுரமயமாய் கிருஷ்ணனுக்கு விரோதியாய் அமையும். அதுபோலே ஆயர்பாடியில் சேதனாசேதன வேறுபாடு இன்றி எல்லாமுமே கண்ணனுக்கு அநுகூலமாய் இருக்கும். உயிரற்ற ஒருசகடத்தில் அசுரன் புகுந்து நலியத்தொடங்கியது போல், இங்கு அநுகூலர் ஒருவர் நிலையும் கதவுமாய் அமையலாம் அல்லவா? “படியாய்க் கிடந்து உன்பவளவாய் காண்பேனே“ என்றார். ஒரு மெய்யடியார். அதேபோல, நிலையும் கதவுமாய் அமைந்து கண்ணனைக் காக்க நினைப்பார் செயலாகவும் அவை இருக்கலாம். இதனால் “நேய நிலைக்கதவும்“ என ஆண்டாள் சுட்டியது பொருந்துவதே ஆகும். என முன்னையோர் இதற்கு அமைதி காட்டுவர்.

இந்த நுழைவாசல் “கொடி தோன்றும் தோரண வாயில்“ எனப்படுகிறது. மேலே கொடி கட்டியிருக்கிறது. கீழே தோரணங்கள் தொங்கவிடப் பட்டிருக்கின்றன. மற்றைய வீடுகளை விலக்கி கிருஷ்ணன் இருப்பிடம் இது என்று இவை அறிவுறுத்தும். வழிநடை வருத்தத்தால் தாகமுற்று வருவோர்க்கு தண்ணீர்பந்தல் அமைத்து அடையாளம் காட்ட கொடி கட்டுவார்கள். பிறவித் துயரால் நலிவுற்று அதை நீக்க வருவோருக்கு குடிநீர் போன்றவன் கண்ணன். “உண்ணும் சோறும் பருகும் நீரும் தின்னும் வெற்றிலையும் எல்லாம் கண்ணன்“ – என்று பாசுரம். “வாசத்தடம் போல் வருவானை“ – தயரதன் பெற்ற மரகத மணித்தடம்“ – என்று பிறவி நோய் நீக்கும் பெருங்குளமாகவே அவனைப் பிறரும் பேசுவர். துயருற்று வருபவர்களை ‘வாருங்கள்‘ என அழைக்கும் எம் கொடிகள். வந்தவர்களை “வரவேற்று“ உள்ளே புகர விடும் எம் தோரணங்கள். “இத்தகைய தோரண வாசலைக் காப்பவள் நீ. இதில் உன்னைக் காவலாக வைத்தது, உகந்தாரை உள்ளே வீடு கைக்கும், உகவாதாரை புகுர விடாமைக்கும் அல்லவா? ஆக அவனை ஆசைப்பட்ட எங்கட்கும் திறந்து புகுர வழிவிடு“ என்கிறார்கள். கொடித் தோன்றும் தோரணவாயில் காப்பானே“ என்று அழைத்து.

வந்த பெண்கள் இறுதியில் வாயில் காவலனைப் பார்த்து “மணிக்கதவம் தாள் திறவாய்“ – என வேண்டுகிறார்கள். கண்ணன் திருமாளிகை, மதில்கள், நிலைகள், கதவுகள் யாவுமே பொன்னால் இயன்றவை. இரத்தினங்கள் அழுத்தப் பெற்றவை“. மாமான் மகளே! மணிக்கதவம் தாள் திறவாய்“ என்றும்படி மற்றவர்க்கே மணிக்கதவம் இருக்குமானால் கண்ணனுக்குக் கேட்பானேன். அவற்றின் இனிமையில் மயங்கித் தங்களால் திறக்கமுடியாமையால் அவனையே வேண்டுகிறார்கள். இதுமட்டுமில்லை. தாங்கள் பட்ட தொல்லைகளையும் தெரிவிக்கிறார்கள். திருமாளிகையில் புறத்திலே சோலைகள், இடையிடையே தடாகங்கள். நடுவில் உள்ள மண்டபங்கள் எல்லாமுமே வந்தோரை கவர்ந்து புறம்பே போகாதபடி கால்கட்டும், முறி வாசலுக்கு வந்தாலோ மணிக்கதவும் தாளும் தன்னையே பார்த்து நிற்கும்படி செய்யும். இதுவும் தாண்டி உள்ளே சென்றால் அங்குள்ளவனோ, மாயன் மணிவண்ணன்“ தன் குணங்களாலும் அழகாலும் வருபவர்களை கவர்ந்து கண்ட கண்கள் மற்றொன்றினைக் காணவே“ என்னுமாறு பண்ணி வெளியேற ஒட்டாமல் காலைக்கட்டுவன். எங்கள் நிலை ‘உயிர்காத்து என்னை ஆட் செய்மின்‘ எனும்படி கவலைக்குள்ளாகும். கதவின் போக்யதையாலே எங்கள் கண்ணும் நெஞ்சும் பிணிப்புறாதபடி நீயே திறந்துவிடு என்கிறார்கள்.நீயே கதவு திறந்து உட்புகுரவிடுவையானால் எங்கள் கவலைகள் தீரும் என்று கருத்து.

நந்தகோபனது அரண்மனை. அதில்தான் கண்ணனது திருமாளிகையும் இருக்கிறது. அந்த வாசல் காப்பானிடம் தான் இவ்வளவு காலம் பேசினார்கள். ஆனால் நேரே அவர்களால் இங்கு வரமுடியவில்லை. நந்த கோபனுடைய கோயில் காப்பான் க்ஷத்திராதிபதி. அவனைப் புகழ்ந்து பேசிக் காலில் விழுந்து வேண்டித் தான் இங்குவர முடிந்த்து. அவனிடம் என்ன புகழ்ந்தார்கள் தெரியுமா?“ உள்ளிருக்கும் கண்ணன்கூட எங்கட்கு நாயகனாய்த் தலைமை பொருந்தியவன் இல்லை. நீயே தலைமைப் பெருமை உடையவன் என்று நாயகனாய் நின்று கோயில் காப்பானே“ என்று அவர்கள் வார்த்தை! இவர்கட்கு எல்லாம் உயிர் நாயகன் கண்ணன்தான். நோன்பு என்பதன் நோக்கமே கிருஷ்ணநுபவம் தவிர வேறில்லை. இருந்தும் காப்பானை நாயகன் என்கிறார்களே என்று தோன்றும. இது கிருஷ்ணன் தங்கட்கு ‘நாயகன் இல்லை“ என்று பொருள் தராது. அவனைக் கண்டு களித்து மகிழ அநுமதி தந்து உபகரிப்பவர் காவலர்தாமே ! அவரை உயர்த்திப் புகழ்ந்தது கருத்தே தவிரப் பிறிதில்லை. கிடைத்தற்கு அரியது இரத்தினக்கல். அதை ஒருவன் தர நாம் பெறுகிறோம். பின்னர் அதன் மதிப்பறிய அதன் மிக விலை உயர்ந்து காட்டுகிறது. அப்போது அதைத் தந்தவன்மீது பற்றும் பாசமும் மிகுந்து தோன்றுவது இயல்புதானே? அதேப் போலத்தான் கோயில் காப்பானை ‘நாயகன்‘ என்றது.

தவிர “நாயகனாய் நின்ற நந்தகோபன் என்று, கூட்டிப் பொருள் கொள்வதும் இங்கு சிறக்கும். “நாயகன் முழுவேழலகுக்கும்“ என்கிறபடி அனைத்துவகையும் காத்தளிப்பவன்இறைவன். அவனே “ஆயர் நாயகன்“ ஆக வந்து ஆயர்பாடியில் வளருகிறான். “உந்தை யாவன்“ என்றால் நந்த கோபனை சுட்டிக் காட்டுவன். தீம்புகள் செய்தால், ‘உந்தன் அடிகள் முனிவர்‘ என்பர். அப்போது நந்த கோபனை நினைத்து அஞ்சியகலவும் செய்வன். இப்படி, தன் பரத்துவத்தைத் தாழவிட்டு ந்ந்தகோபனுக்கு தோற் கீழ்க் கன்றுபோலே அடங்கிஒடுங்கி நிற்பதால் ஆண்டாள் “நந்தகோபன் குமரன் அசோதை இளஞ்சிங்கம்“ என்று பேசினாள், இதனால் “நாயகனாய் நின்றவன் நந்தகோபனே ஆவன் இல்லையா? இந்த நாயகத் தன்மை சுட்டியே கண்ணன் இருக்குமிடம் நந்தகோபன் கோயில் எனப்பட்டது. “நந்தகோபாலா எழுந்திராய் என்று அவனைச் சுட்டி எழுப்பியும் காரியம் கொள்ள வேண்டியவர்கள் இவர்கள். ஆகவே, நந்தகோபனை இவ்வாறு பெருமைப்படப் பேசியும் காரியம் முடிக்கப் பார்க்கிறார்கள்.

கம்சனோ தீயபுத்தி உடையவன். அவனைச் சுற்றியுள்ளவைகள் யாவும் அசுரப் பூண்டுகள். கண்ணனுக்கு யாரால் என்ன தீங்கு நேருமோ என அஞ்சி வயறுபடிப்பவர்கள் நாங்கள், எங்களுக்கு “காப்பாருமில்லை“ என்று கவலை நேராதபடி, கண்ணனைச் செப்பிலிட்டுக் காப்பது போல நீ காத்து வருகிறாய். இப்படி, எங்கள் காரியம் செய்யும் நீ அவனைக் காணும்படி எங்களை உள்ளே விடலாகாதா? எனக் கெஞ்சுகிறார்கள். ‘கோயில் காப்பானே‘ என்று, ‘அவனும் இரங்கி உள்ளே விட்டதனால் தான் தோரண வாயிலுக்கு வந்து துவாரபாலகரிடம் இவ்வளவும் பேசினார்கள். கண்ணனைக் காணும் ஆசையால் எல்லார் காலிலும் விழுகிறார்கள். சுருங்கச் சொன்னால், “இவர்கள் ஒவ்வொருவராக எழுப்பி வர என்ன பாடுபட்டார்களோ? அவ்வளவையும் சேர்த்து எல்லோரும் கண்ணனை எழுப்பும் இவ்விடத்தில் பட்டார்கள்“ உள்ளிருப்பவன் – “இமையோர் குழாம் தொழுவதும் சூழ்வதும் செய்தோமில்லை மால்“ அல்லவா? அவனைக் காண்பதும் எளிதில் இயலாது என்று தெரிகிறது. இறை பணியாளர்கள் தத்தம் தொழிலை இட்டழைப்பதில் உகக்குமவர் ஆகையாலே “கோயில் காப்பான்“ ‘வாசல் காப்பான்“ எனப் பெருமை சுட்டுகிறார்கள்.

இனி இவர்கள் கண்ணனை நேரில் சென்று காணலாம். அதை விடுத்து காவலர்களை எல்லாம் கால்பிடிப்பானே என்று, நமக்குத் தோன்றும். அரண்மனையில் உள்ள மன்னனைக் காண – காவலர்கள் அநுமதியும் உதவியும் தேவை. என்றால், உதவுபவர்கட்குத் தானே பெருமை மிகுதியுண்டு. அதுபோக, இங்கு காணத்தக்க வைதீக நெறிமுறையும் ஒன்றுண்டு. ‘எம்பெருமான் உகந்தருயி நிலங்களிலே உள்ளுப்புகும்போது க்ஷ்த்ராதிபதிகளையும் துவாரபாலகர் களையும் வணங்கி அநுமதி கொண்டு புகவேணும்“ – என்று, சமய நூல்கள் குறிப்பிடும். இங்ஙனமுள்ள ஞானவான்களுடைய நெறிமுறை இவர்கட்கு கோல்விழுக்காட்டிலே பலிக்கிறது. “வேதம் வல்லார் துணைக்கொண்டு விண்ணோர் பெருமான் திருப்பாதம் பணிந்து“ – என்று பாசுரம். முன்னர் உறங்கினவர்களை பத்துப்பாசுரங்களால் எழுப்பினார்கள் இல்லையா? எழுந்தவர்கள் பத்துப பேர்கள் தாம் என்றில்லை. பலர். எனினும், பத்து என்ற எண்ணிக்கைக்கு வேதம் வல்லாராகிய ஆழ்வார்கள் பதின்மரை எழுப்பியதாக உள்ளுறை. அதற்கு இயைய, சொல்லமைகளும் பிறகுறிப்புக்களும் பதின்மரையும் எழுப்புவதாக நயமுற அமைந்துள்ளன. ஆக வேதம் வல்லார் நிலையில் ஆழ்வார் பதின்மரையும் துணைக்கொண்டார்கள் இவர்கள். அடுத்து விண்ணோராவார் – சேத்திராதிபதி துவாரபாலகர் தொடங்கி, ஸ்ரீதேவி பூதேவி வரை உள்ளவர்கள் இப்பாசுரத்தால் அவர்களைத் துணைக்கொள்ளுகிறார்கள். மேல் பாசுரங்களில், நப்பிள்ளைப் பிராட்டியைப் புருஷகாரமாகக் கொண்டு இறுதியில் கண்ணனை அடைவது புலனாகும். அறியாத பிள்ளைகள் ஆயர் சிறுமியர் என்று தங்களைச் சொல்லிக் கொண்டாலும் இந்நெறிமுறைகள் தன்னடைவே அவர்கள் பால் வந்தடைந்தன என்று கொள்ளலாம். “வைணவர்கள் ஆசாரத்தை வேதவைதிகவிதிகள் தாமே பின்சென்று பற்றும் இத்தனையிறே“ – என்றது இவ்விடத்து பூர்வீகர் உரை.

கொடியும் தோரணமும் எல்லாம் அறிவற்ற அசேதனப் பொருள்கள். எங்களை அழைக்கவோ அன்றி உள்ளே புகுரவிடவோ செய்யாது. அவ்விரண்டையும் செய்வதற்காத்தானே உன்னை இங்கே நிறுத்தியிருக்கிறது. ஆக கதவு திறந்து உள்ளே புகுரவிடு“ – என்று, பெண்கள் வாசற்காப்பானிடம் சொன்னார்கள் அல்லவா? அது தொடங்கி இரு சாராருக்கும் இடையே பெரியவாக்குவாதம் உண்டாயிற்று. வாசல் காப்போன் சொன்ன்ன். “கம்சனே சத்ரு‘ எழும் புல்பூண்டுகள் யாவுமே அசுரமயம். நேரமே நடுராத்திரி. நீங்களோ, கதவு திறந்து உள்ளே விடச் சொல்லுகிறீர்கள். நான்பயப்படவேண்டிய இடமில்லையா? என்று இது கேட்ட பெண்கள். “நீ அஞ்சவேண்டியது எதுவும் இல்லை. அஞ்ச வருவதும் எதுவுமில்லை. உள்ளுள்ள கண்ணனுக்கோ பய நாமஹாரி என்று பெயர். பயம் என்ற பெயரையே தொலைத்து இல்லை செய்பவன் அவன். வந்துள்ள நாங்களும அபலைகளான பெண்கள். அஞ்சாமல் திறந்துவிடு“ என்றார்கள். பதிலாக காப்பாளன் சொன்னான் – “சூர்ப்பனகை பெண் இனம் தானே?அஞ்சுவன்வெம் சொல் நங்காய்“ என்று பிற்பாடரும்கூட அஞ்சி அல்லவோ பேசும்படி இருந்தது அவளியல்பு. அவள் நலிந்ததற்குக் காரணம் கட்டுங்காவலும் இல்லாமையால் அல்லவா? ஆகவே அச்சம் தவிர்ந்து இருக்க நியாயமில்லை“ என்று. “உண்மைதான்! அவளோ அரக்கி. நாங்களோ இடைச்சாதிப் பெண்கள். கண்ணனுக்கு என்ன தீங்கு நேருமோ என்று கவலையுடன் வயிறுபிடிப்பது இடையர் இயல்பு. இந்த வேற்றுமையை நீ அறிய வேண்டாமா? – என்று பெண்கள் கூறினார்கள். மீட்டும், காவலன் சொன்னான்“- இடைச்சியர் என்கிற போது தான் பயம் மிகுதி வருகிறது. பூதனை கண்ணனை நலியவந்தது இடைச்சியுருவில் தானே இல்லையா? – என்று. “இருக்கலாம், அவள் கொண்டது கபடவேஷம். நாங்களோ எட்டும் இரண்டும் அறியாத இளம்பிள்ளைகள். சூதுவாது என்பது யாதுமே அறியாத சிறுமியர்கள். எங்களைக் கண்டும் சந்தேகம் வரலாமா? – என்று பெண்கள் பதில் அளித்தனர்.

பாலைகள் என்று பருவம் கண்டு சொல்லமுடியாது. அசுரன் கன்றாய் வந்து அல்லவா நலியப் பார்த்தான். இருந்தாலும், வார்த்தை கொண்டு அறியலாம் – என்று காவலன், நீங்கள் வந்த காரியம் என்ன சொல்லுங்கள் என்று கேட்டு நின்றான். பெண்கள் உடனே “அறைபறை“ என்றார்கள். நோன்புக்கு பறை என்பது ஒரு அங்கம். அதனைக் கண்ணன் தர நாங்கள் பெறவேண்டும். அதன் பொருட்டு நாங்கள் வந்தோம்“ என்றது அதற்குப் பொருள். “அப்படியானால் நீங்கள் ஒரு பயன் கருதி வந்திருக்கிறீர்கள் என்று தெரிகிறது. அதுவாகில் கண்ணன் திருப்பள்ளி எழுந்தபிறகு விண்ணப்பம் செய்து ஆவனகேட்டு வருகிறோம். அதுவரை நில்லுங்கள்“- என்று காவலன் சொன்னான். பின்னர் பெண்கள் காவலனைப் பார்த்துச் சொல்லுகிறார்கள். “அறைபறை மாயன் மணிவண்ணன் நென்னலே வாய் நேர்ந்தான்“ என்று! நாங்கள் எங்கள் முயற்சியால் வரவில்லை. அவன் வரச்சொல்லியே வந்திருக்கிறோம். அவன் தருவதாகக்கூறிய பறையினைப் பெற வந்திருக்கிறோமே தவிர வேறுபலன் கருதியுமுமில்லை. நேற்று அவனே எங்களை நாடிவந்தான். கட்டுக்காவல் எதுவுமில்லை. தடை எதுவுமின்றித் திருவடி தொழுது நிற்கிறோம். அவன் தன் பெருமைகளைத் தாழவிட்டுக் கொண்டு எங்களோடு ஒக்கப் பரிமாறினான். நீலமணி போலும் திருமேனியழகைக் காட்டிக் களிக்கச் செய்தான். பறையினை வேண்டிய போது, ‘நாளை நப்பின்னை இல்லத்துக்கு வாருங்கள் தருகிறேன் என்றும் சொன்னான். சொன்னால்கூட, “நேற்றுச் சொன்னேன் இன்று இல்லை“ மறுக்கலாம். எங்கள் குழுவில் பலர் நடுவே நின்று, நாளோக்கத்தில் பட்டோலை படிப்பது போல வாய்மொழிந்தது அது. சத்திய வசனத்தை அவனாலும் இல்லை செய்யமுடியாது ஆகவே, நீ முன்னர் சென்று மறு அநுமதிபெறத் தேவையில்லை, என்பது கருத்து.

மேலும், பறைபெறுவது என்பது வெறும் காரணம் மட்டுமே. எங்கள் உள்நோக்கம் கிருஷ்ணநுபவமே. அக்குற்றேவல் பூணும் நோக்கத்தாலேயே பள்ளியறைக்கு வந்திருக்கிறோம். வேறு பலன் கருதியானால் அத்தாணி மண்டபத்து நாளோயகத்தில் பார்த்துப பெற்றிருப்போம். இங்ஙனம், தூயோமாய் வந்திருக்கும் எங்கள் நோக்கும் போக்கும் அறிந்து நீ செயல்படவேண்டும். நாங்கள் வந்துள்ளது திருப்பள்ளி எழுச்சிபாடி மகிழவே தான். “மதியாது இன்றே நீ துயில் நோக்கி மகிழ்ந்தது காண்“ அரங்கத்தம்மாள் நீ பள்ளி எழுந்தருளாயே“ என்று முன்னோர் அவனைப் பள்ளி யுணர்த்திலிருக்கிறார்கள். அந்த வாசனையாலே நாங்களும் அவனைத் திருப்பள்ளி எழுச்சி பாட வந்திருக்கிறோம். என்றெல்லாம் கூறி மறுமுறையும் அவனை வேண்டினார்கள். “தூயோமாய் வந்தோம். துயில் எழப் பாடுவான்“ என்றதன் கருத்து இது.

“உங்களிடம் சொன்னால் போதுமா? என்னை நிறுத்தியிருப்பது எதற்கு? என்னிடம் தகசியமாகவாவது அறிவித்திருக்க வேண்டாமா? நான் அவர்களிடம் சொன்னது போகட்டும். உன்னிடம் வரவிடு என்று சொல்லவில்லையே“ என்று, கேட்பானே? நான் என்ன செய்வது? என்று கூறி காவலன் மறுத்தான். அதற்கு அவர்கள் வாயால் முன்னம முன்னம் மாற்றாதே! அம்மா நீ நேய நிலைக்கதவம் திற“ எனக்கூறி முடிக்கிறார்கள். அவள் நடவாததைச் சொல்லமாட்டாள். சொன்னதைச் செய்யாது விடமாட்டான். ஆகையால் எங்களை விடக்கூடாது என்று நெஞ்சால் நினைத்தாலும் பரவாயில்லை. அவன் எண்ணம் நிறைவேறும் என்று எங்கட்கு நம்பிக்கையுண்டு. நீ வாயால் தடை கூறி மறுத்தால் நாங்கள் இங்கேயே நின்று தவிக்க நேரிடும். எங்கள் வாழ்நாள் உன் கையகத்தது. நீ தான் இப்போது எங்கள் ஸ்வாமி கதவை நீக்கி உள்ளே புகுரவிடு“ என்று, வேண்டி நிற்க, இவர்கள் இதயசுத்தி அறிந்து வந்தவர்களை உள்ளே புகுரவிட்டான் அவன்.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *