POST: 2018-01-01T08:57:32+05:30

திருப்பாவை பேருரை
••••••••••••••••••••••••••••••••
பத்மஸ்ரீ முனைவர் ஔவை நடராசன்
===================================
பாடல் – 17
==========

மக்கள், தேவர், நரகர் என்று மூவகைப் பாகுபாடுகள் உண்டு. மக்களில், தந்நிலை உணர்ந்து வாழ்வாங்கு வாழுபவர் தேவராவார். தந்நிலை தவறி இழிநிலையுற்று தாழ்ந்தவர் நரகர் ஆவர். “வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும்“ – என்பர் திருவள்ளுவர். மானிடம் அழிந்து மடியாதபடி தெய்வநிலை உறுதலே மனித வாழ்வின் சீரிய குறிக்கோள். உம்பர் என்று தேவர்கட்குப் பெயர். கோமான் என்றால் தலைவன். உம்பர் கோமான் தேவாதிதேவன். “மனிதர்க்குத் தேவர் போல தேவர்க்குத் தேவா! ஓ என்று பாசுரம் முப்பத்து முக்கோடி தேவர்கள் உண்டு. அவர்களுள் முதலாவார் மூவரே. அவர்கள் பிரும்மா விஷ்ணு சிவன் எனப் பெறுவர். மூவருள்ளும் முதல்வன் திருமாலே என்பது வைணவக் கொள்கை. “முதலாவார் மூவரே அம்மூவருள்ளும் முதலாவான் முரிநீர்வண்ணன்“ என்று ஆழ்வார் பாசுரம். இதனால், தேவிற் சிறந்தவன் திருமாலே என்பது உயிர்நிலையான கருத்து. அவனையே, “உம்பர்கோமான்“ என்றாள் ஆண்டாள். தேவில் சிறந்த திருமாலே கண்ணனாக வந்து பிறந்தவன் இல்லை?

மாவலி ஒரு அசுரச் சக்கரவர்த்தி. வரையாது வழங்கும் வள்ளல். யார் வந்து எதைக் கேட்டாலும் இல்லை என்று உரையா இதயம் உள்ளவன். ஆனாலும், அவனிடம் ஒரு குறை உண்டு. “நான் – எனது என்கிற அகப்பற்று புறப்பற்று இரண்டும் உடையவன், திருமால், அவனிடம் வாமனனாகிச் சென்று மூவடிமண் வேண்டினான். அப்போது, மாவலி எப்படிச் சொல்லியிருக்க வேண்டும். “இந்த மண் யாருடையது. யாவும் இறைவன் உடைமை. என்னைத் தருமகர்த்தா ஆக்கிச் சில உடைமைகளைத் தந்திருக்கிறான். அவன் தந்ததை மறுக்கயான் யார். தருகிறேன்“ என்றல்லவா சொல்லியிருக்க வேண்டும். இந்த ஞானபாகம் அவனுக்கு இல்லை. “ஆம் “இந்தப் பூமியாவும் என்னுடையது. நீ கேட்பதோ மிகச்சிறிய மூவடிமண். இது ஒரு பெரிய காரியம் இல்லை. மிகவும் எளியது. இந்தா! பெற்றுப்போ“ என்றே கூறினான் “ஆம்! எனக்கு எளிது என்று உலகம் ஆண்டவன்“ – என்கிறது ஒரு கவி. திருமால் ஓரடியால் திருவிக்ரமனாய்நிலவுவகை அளந்தான் இரண்டாவது அடியால் வானுலகு முழுவதையும் அளந்து முடித்தான். அப்போது அத்திருவடி வானத்தை இடைவெளியாக்கி பரமபதத்து அளவும் சென்று நீண்டது. அப்போது அது கண்டு பிரமன்-“எண்ணிலா ஊழிக்காலம் தவம் செய்து பெற வேண்டியது அல்லவா“ இது என்று, தன் கமண்டல நீரால் பாதத்தைக் கழுவி நீரைத் தலையில் ஏற்றான். அவ்வாறே சிவபெருமானும் அப்பாத தீர்த்தத்தைத் தன் சடையில் ஏற்றுக் களிப்புற்றான். இதனால், பிரமனும் சிவனும் திருமாலடியார்களுள் தலைசிறந்தவர்கள் என்று விளங்குகிறது இல்லையா! இதனைக் காரணம் காட்டியே“ ஓங்கி உலகளந்த உம்பர் கோமானே‘ என்கிறார்கள்.

எழுப்ப வந்த பெண்கள் இங்க வாமனாவதார வைபவம் சொல்லக் காரணம் உண்டு. உலகளந்த காலத்தில் எவரும் திருவடி தானம் செய்யுமாறு வேண்டவில்லை. இருந்த இருப்பே அடியாகக் கொண்டு திருவடியால் அளந்து தன் உடைமையாக்கிக் கொண்டான். இறைவன் அடியை வேண்டாதது மட்டும் இல்லை. வேண்டிய அவனிடம் வரவுமில்லை. வசிஷ்டர் சண்டாளர் வேறுபாடின்றி தானே வந்து அளந்து கொண்டான். மேலும், வாமன்னாகவும் திருவிக்கிரமனாகவும் வடிவில் சிறுத்தும் பெருத்தும் தோன்றினான். இப்போது இப்பெண்கள் சொல்லுகிறார்கள். நீ எங்கள் பொருட்டு எங்களது இருப்பிடம் வரவேண்டாம். நாங்களே உன்னிடம் வந்து நிற்கிறோம். நீ எங்கள் பொருட்டு சிறுப்பது பெறுப்பது என்று நிலை மாற வேண்டாம். இருந்த இருப்பே அமையும். விரும்பாது வேண்டாதவர்கட்கு திருவடிதானம் செய்தது போல ஆக வேண்டாம். நாங்கள் உன்னையே விரும்பி வேண்டிவந்து நிற்கிறோம். தவறாது அருள்புரி“ என்று உலகு அளந்த உம்பர் கோமானே“ என்ற விளியில் இத்தனை கருத்து நயங்கள் உண்டு.

இனி “உறங்காது, எழுந்திராய்“ என்கிறார்கள். உறக்கம் நீங்கினவள் எழுந்திருக்கத்தான் செய்குவள்.எழுந்தவள், மேலும் உறங்கிக் கொண்டே இருக்க நியாயமில்லை. உறங்காதே என்றோ, அன்றி எழுந்திரு என்றோ ஒன்று சொன்னாலே போதும். இரண்டுஅடுக்கியதில் ஒரு நயமுண்டு. “உறங்காதே‘ என்றது கண்ணனது நலம்நோக்கி, எழுந்திரு என்றது தங்களது நலம் நோக்கி! எம் பெருமானது உறக்கம் நம்மதுபோல் மெய்மறந்தது இல்லை. அறிதுயில் எனப்படும். “பாற்கடலுள் பையத்துயின்ற பரமன்“ என்றாள் ஆண்டாள். அறிதுயிலே பையத்துயிலுதல் ஆகும். மனதுள் வேறு ஒரு நினைப்பைக்குண்டு அது நிறைவேறும் வரையில் துயிலுமது அது உறங்குவாள்போலே யோகு செய்த எம்பெருமான் என்று பாசுரம். “அடியார்கள் நமக்கு எங்ஙனம் கிடைப்பர். அடியார்கள் கிடைப்பதற்கும் அவர்தம் துயர் துடைப்பதற்கும் நான் என்னென்ன செய்யலாம்“ என்ற நினைப்போடே அறிதுயில் துயிலுகிறான் என்பர். இதற்காகவே தான் அவன் பரமபதம் விட்டுப் பாற்கடல் வந்ததும்அதையும் நீங்கி ஆயர்குலத்தில் கண்ணனாய் வந்து அவதரித்ததும் ஆகும். இதை நினைவூட்டியே- “அடியவரை ரக்ஷிக்க வந்தநீ உறங்கலாமா? உறங்கினால் உன் நோக்கம் நிறைவேறாதே“ என்கிறார்கள் அவர்கள்!.

பின்னர், தங்கள் நலம் கருதி “எழுந்திராய்“ என வேண்டுகிறார்கள். நாங்கள் உன்னை அடைந்து வேறுபிரயோசனம் கொள்ள வந்தவர்கள் இல்லை. வேறு எபாயம் கொண்டு உன்னை அடைந்தவர்களும் இல்லை. உன்னாலேயே உன்னைப் பெறவேணும் என்று இருப்பவர்கள், உன்னை விட்டு நீங்காத உறவும் உண்டு. உனக்கு ஆட்செய்து குற்றேவல்புரிவதே எங்கள் நோக்கம் நீ பள்ளியுணரும் காலை உன் அழகு காணவேணும். அதற்கு மகிழ்ந்து “அரங்கத்தம்மா நீ பள்ளி எழுந்தருளாயே“ – என்று பாடவேணும். இவற்றை எல்லாம் கண்டும நீ உன்னைத் தராமல் இருக்கமுடியாது. இருந்தால் மதியாது இன்றே நீ துயில் மேவி மகிழ்ந்தது என்கிறார்கள்.

இவ்விடத்து ஆண்டாள் வரலாறு சற்று நின்று அறியத் தக்கது. ஆண்டாள் பெரியாழ்வாருக்குப் பெண். ஆனால் தாய் வயிற்றில் கர்ப்பவாசம் செய்து பிறந்தவள் இல்லை. நாதவனத்தில் துழாய்ச் செடிக்கு மண்கொத்தும் போது பூமியில் இருந்து வந்தவள். பூமிதேவியின் அம்சம் அவள் என்பது கருத்து. பொறுமையும் கிருபையும் பூமியின் விசேஷ குணங்கள். அதனாலே, சம்சாரிகளாகிற நம்மை ருத்திப் பணி கொள்ளவும். எம்பெருமானை நம்மீது குறையராது பொறுக்குமாறு செய்யவும் வல்லவள். இறைவனையும் நம்மையும் இடைநின்று சேரவைக்கும் பெரும் வல்லமை அவளுக்கு உண்டு. இதுவே புருஷகாரத் தத்துவம்‘ எனப்படும். பிற ஆழ்வார்களை, ஈஸ்வரனே சம்ஸார உறக்கத்தின் நின்று எழுப்பி மறர் வற மதிநலம் அருளி ஆட் கொண்டதுண்டு. “தூர்த்தரோடு இசைந்த காலம், போதரே என்று சொல்லி, புந்தியுட் புகுந்து தன்பால் ஆதரம் காட்டி நின்ற அழகன்‘- என்று பாசுரம். ஆண்களோ தான் முந்துற எழுந்து உறங்கும் சம்ஸாரிகளையும் ஈஸ்வரனையும் எழுப்பிக் காரியம் கொண்டவள். ஒரு தலையில்,“நாயகப் பெண்பிள்ளாய் எழுந்திராய். “பாவாய் எழுந்திராய்“ ‘நற்செல்வன் தங்காய் இதென்ன பேருறக்கம்“. “இளங்கிளியே எழுந்திராய்“ – என்று எல்லாம் சொல்லி நம் போன்றவரை எழுப்புவள். மறு தலையில் “உம்பர் கோமானே எழுந்திராய்“ தோற்றமாய் நின்ற சுடரே துயில் எழாய்“ ‘மலர்மார்பா வாய்திறவாய்“ என்று எம்பெருமானையும் எழுப்புவள். “செய்யும் கிரிசைகள் கேளீரோ“ – என்று நமக்கும் அறிவுறுத்தி, போற்றும் பொருள் கேளாய்“ என்று, எம்பெருமானுக்கும் சொல்லிக் காட்டுவள். ‘நாராயணனே நமக்கே பறைதருவான்“ – என்பவள். இறைவா! நீ தராய் பறை“ அவனையும் வேண்டுவள். அருத்தித்து வந்தோம்“ – என்று, நமக்கு வழிகாட்டியவள் இறைவனை “சீரிய சிங்கானத்து இருந்து வந்த காரியம் ஆராய்ந்து அருள்“ என வேண்டியும் நிற்பள். இங்ஙனம் இருதலையிலும் தொடர்பு பூண்டு பேருபகாரியாய் திருமால் அருளை வாரி வழங்குவதோடு, நம்மை, எங்கும் திருவருள்பெற்று இன்புற்றிருக்கச் செய்யுமவளே ஆண்டாள் என்பது நன்கு விளங்கும். “எங்கும் திருவருள் பெற்று இனபுற்றிருக்கச் செய்யுமவளே ஆண்டாள் என்பது நன்கு விளங்கும்“. சூடிக் கொடுத்தாள் நற்பூமாலை பாமாலை பாடிக்கொடுத்தாளைச் சொல்லு“ – என்று, அவள் பெருமை பேசும் பாசுரம். இம்முறையில் இறைவனை எழுப்பும் முதற்பாசுரம் இது என்பது சிறப்புடையதாகும்.

வாயில் காப்பவனால் உள்ளே புகப்பெற்ற பெண்கள் சுற்று முற்றிலும் நோக்கினாகள். முதல் கட்டில் நந்தகோபர். இரண்டாம் குட்டில் அசோதைப் பிராட்டி. முன்றாம் கட்டில் கண்ணன். நாலாம் கட்டில் பலராமன் ஆகியோர் படித்துறங்கிக் கிடந்தனர். நாங்கள் கண்ணனைப் பெற அனைவரதுஉதவியும் தேவை என்பதனால் ஒவ்வொருவராக எழுப்புகிறார்கள். ஆனாலும், எவரை எழுப்பியபிறகு எவரை எழுப்பவேணும் என்கிற முறை தெரியவில்லை. அசோதையை எழுப்பி நந்தகோபரையும், பலராமனை எழுப்பி கண்ணனையும் உரியமுறையில் துயில் எழுப்பவேணும். கண்கண்டதற்கு மேற்பட கருதிப் பார்க்கும் வழி அறியாதவர்கள். “ஆயர் சிறுமியரோம். அறியாத பிள்ளைகளோம்“ என்றெல்லாம் சொல்லிக் கொள்ளுகிறார்கள் இல்லையா?கண்டவாறே முதலில் நந்தகோபரையும் எழுப்பி நின்றார்கள்.

நந்தகோபர் பசும்புல் சாவ மிதியாதவர். புல்லுக்குக் கூடத் தீமை தருமோ என்றஞ்சி அழுநத நடவாதவர். ஆனால், கண்ணன் பிறந்த பிறகு நிலைமை வேறு. கம்ச பயத்தால்! தொட்டிலுக்குக் குழே படுத்து எறும்பூரினும் கூட வேலினை இட்டுத் தாக்குவராம் அவர். அதனால், கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன்“ என்பது அவருக்குப் புகழ்மொழி ஆயிற்று. அநிருத்தனைப் பெண்கள் கவுகண்டது போல கிருஷ்ணனுக்கும் யாரால் என்ன தீங்கு நேருமோ? என்று அச்சம். அது காரணமாகவே அவர் முதல் கட்டில் படுத்திருந்தது. அவரை எம்பெருமான் நந்தகோபாலா‘ எழுந்திராய்“ எனச் சொல்லி எழுப்புகிறார்கள். இவர்கட்கு எம்பெருமான்‘ கண்ணன் ஒருவனே. ஆனாலும், அவனைப் பெற்றுத்தந்த பெருமை கருதி இவனையும் எம்பெருமான் என்றே பெருமையுறப் பேசுகின்றனர்.

‘எம்பெருமான“ என்றதோடு மட்டும் இல்லை. “அறஞ்செய்யும் நந்தகோபாலா என்று வேறு சொல்லுகிறார்கள். உடுக்க உடை, குடிக்க குடிநீர், உண்ணச் சோறு, இவை மூன்றும் மனிதனுக்கு இன்றியமையாத தேவைகளாகும். இவற்றை தாரக போஷக போக்யங்கள் என்பர் வடநூலார். வந்தோர் அனைவருக்கும் இல்லை என்னாது இவற்றை வழங்கும் வள்ளன்மை உடையவன் நந்தகோபன். தண்ணீர் தருவதில் எவருமே கஷ்டமில்லாம் மனமுவந்து தருகுவர். இப்படி வழங்கும் கொடையினை “தண்ணீர்பட்டபாடு“ என்பதுண்டு. “அம்பரமே தண்ணீர், சோறே தண்ணீர், என்று தண்ணீர் பட்ட பாடுபோலே தருவது அவன் கொடைக்குச் சிறப்பு. மேலும், “இப்படிக் கொடுக்கவோ இவன் கற்றது என்று, கண்டோரை வியக்கச் செய்யுமாம் அவன் கொடை. முன்பு, “வள்ளல் பெரும் பசுக்கள் ஆற்றப் படைத்தான்“ என்று கூறிகறவைச் செல்வத்தினைப் பாராட்டினாகள். இப்போது அவன் கொடைச் சிறப்பினைப் போற்றுகிறார்கள். “செல்வத்துப் பயனே ஈதல்“ என்பர். அப்படி, செல்வத்தாலும் கொடையாலும் மேம்பட்டவன் என்பது கருத்து.

“அறஞ்செய்யும்“ என்ற சொல் வேண்டியதில்லை. அம்பரம் நீர் சோறு இவை தருதலே தருமம் தான். அறஞ்செய்யும் என்பதில் பிறிதொரு நயம் உண்டு. தரும்ம் செய்வதிலேபிரதிபலனைக் கருதுவது தகாது. நன்றி ஒருவருக்கும் செய்தக்கால் அந்நன்றி என்று தரும் கொல் என வேண்டாம்“ என்று முதுரை. அப்படியே “கியாதி லாபம் பூஜை‘ என இவை கருதியும் செய்தல் தகாது. மறுபலனை எதிர்பார்த்துச் செய்யும் தருமங்கள் அறத்தை விலைபேசி விற்பது போல ஆகும். ஆய் என்பவள் கடையேழு வள்ளல்களுள் ஒருவன். இம்மைச் செய்தது மறுமைக்கு ஆம் எனும் அறவிலை வணிகன் ஆய் அல்லன்“- என்று பேசுகிறது புறநானூறு. அது போல நந்தகோபன் மறுபலன் கருதாதும் புகழ் புண்ணியம் வரும் என்று நினையாமலும் தருமத்தை தருமத்துக்காகவே செய்தவன் என அவன் கொடைப்புகழ் குறித்தபடி. இங்ஙனம் சொன்னது- “நாங்கள் எல்லாம் கண்ணனே என்றிருக்குமவர்கள். எங்கட்குத் தாரகம் போஷகம் போக்யம் யாவும் அவனே. பெண்கட்குத் தரும்ம் செய்வாரில்லை. அதற்கு மாறாக எங்கட்கு கண்ணனைத் தந்து நீர் மகிழவிக்க வேணும்“ என்பதைப் புலப்படுத்த.

இனி இரண்டாம் கட்டிலே படுத்திருக்கும் அசோதையிடம் வருகிறார்கள். உத்தம்மான பத்தினி. கொண்டவனையும் விட்டு விலகாள். பெற்ற பிள்ளையையும் விட்டு அகலாள். கணவனுக்கு தேவையான பணிவிடைகள் செய்யவும், பிள்ளையிடம் பாசத்தாள் வேண்டிய நலம்புரியவும் சற்றும் தயங்காள். அவளுக்கு இருவர்பாலும் அன்பும் பரிவும் இருப்பதால் படுத்துறங்குப் போதும் இருவருக்கு இடையே கிடந்துறங்குவள். இதனால் அசோதைப் பிராட்டி நந்தகோபரது படுக்கைத்தலையும் விடாமல், பிள்ளையது தொட்டிற்கால் கடையும் விடாதவளாய் இரண்டாம் கட்டிலே படுத்திருக்கிறாள். இது பிரணவத்தில் உள்ள உகாரத்தின் பொருளை, துலக்குகிறது என்பர் மேலோர். ஓம் என்பது பிரணவம். அது வரிவடிவால் ஓரெழுத்தே ஆகும். எனினும் ஒலிவடிவில் பார்க்கும்போது அகாரம். உகாரம், மகாரம் என்கிற முன்னொலியின் சேர்க்கையாகும். “அகர முதல எழுத்து எல்லாம், ஆதி பகவன் முதற்றே உலகு‘ என்பர் திருவள்ளுவர். அகரம் இறைவனைக் குறிப்பிடும். உகரம் பிராட்டியைக் குறிப்பிடும், மகரம்சீவான்மாக்களை குறிப்பிடும். பிராட்டியோ, சீவான்மாக்களையும் பகவானையும் ஒன்றுபடச் சேர்ப்பிக்கும் தத்துகாவள் அவளைக் குறிப்பிடும் உகாரம் அதற்கேற்ப அகார மகாரங்களிடையே அமைந்து நிற்பதை அசோதைப் பிராட்டியது இருப்புத் துவக்கும் என்பது அதற்கு விளக்கம்.

“கொம்பு அனார்க்கு எல்லாம் கொழுந்தே. குலவிளக்கே, எம்பெருமாட்டி, அசோதாய் எனக்கூறி இவளை எழுப்புகிறார்கள். மரத்தின் அடிவேருக்கு ஒரு நோவு ஏற்பட்டாள் அதன் குறியைத்தன்முகத்திலே காட்டுவது கொழுந்து. குலவிளக்கு மங்கள தீபம். அது, இருளை நீக்கி ஒளிகொடுத்து எவரையும் உரிய வழியில் நடக்கச் செய்யும். கண்ணனைப் பெற்ற ந்ந்தகோபனை எம்பெருமான் என்றார்கள் இல்லையா? அதே காரணம் கொண்டு இவளை எம்பெருமாட்டி என்பதில் தடையேதுமில்லை. பெண்களாகிய எங்கள் வருத்தம் அறிந்து கண்ணனோடு கூட்டிவைத்து நலம் கண்டு மகிழவேறம் நீ என்பது வந்த பெண்களின் எண்ணம். ந்ந்தகோபன், கண்ணனுக்கு எது நலந்தருமோ அது கருதிச் செய்பவள். தன் நினைப்பின்படியோ பிறர் சொற்கேட்டோ எதுவும் செய்யமாட்டாள். அதனால் எழுந்திருந்து, எங்கள் நலமும் அவள் இதமும் எதுவோ அதைச் செய்வாயாக என்ற பொருளிலே அவளை “எழுந்திராய்“ என்றார்கள். அசோதையோ கண்ணனுக்கு எது பிரியமோ அதை உணர்ந்து விரைந்து முடிக்க்க் கூடியவள். பெண் பிறந்தார் அடையும் துயரமும் அவளுக்குப் பரியும். ஆக அவளை எழுப்பும் போது ‘அசோதாய் உணர்வுறாய் என்று சொன்னார்கள். மேற்கொண்டு கண்ணனை எழுப்பியதை முன்னரே கண்டோம்.

இப்போது மூத்தவனாகிய பலராமனை எழுப்பாது. கண்ணனை மட்டும் முதலிலே எழுப்பிய முறை தவறு அவர்கட்குப் புலப்பட்டது. உடனே, கண்ணன் எழுந்து வராமைக்கு இது காரணம் எனப்பட்டு – ‘செம்பொன் கழலடிப் பலதேவா! செல்வா, உம்பியும் நீயும் உறங்கேல்“ என்று இருவரையும் சேர எழுப்பி நிற்கிறார்கள். கண்ணன் போக்கு அறிந்து அவனுக்குக் கீழ்ப்படிந்தவன் நீ. உன் நோக்கு அறிந்து உனக்குக் கீழ்ப்படிபவன் அவன். இப்படி, அவன் தமையனான முறையில் உனக்கடங்கி நிற்கவும். நீ ஆதிசேஷனாகிய முன்னைய நிலை அறிந்து அவனுக்கு அடங்கி நிற்கவும் பெற்றால் – நாங்கள் பலன் இழந்து போகவேண்டியது தவிர வேறில்லை. இருவரும் ஒரு சேர எழுந்தால் உன் போக்கு அறிந்து அவன் காரியத்தில் முற்படுவன். நீயும் அவன் நோக்கு றிந்து காரியத்தில் முற்படுவை. உங்கள் இருவர் எழுச்சியும் சேர்ந்தால் தான் பெண்களாகிய நாங்கள் பலன் பெறுவோம் – ஆகவே, “உம்பியும் நீயும் உறங்கேல்“ என வேண்டி நிற்கிறார்கள்.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *