POST: 2018-01-03T10:04:19+05:30

திருப்பாவை பேருரை
••••••••••••••••••••••••••••••••
பத்மஸ்ரீ முனைவர் ஔவை நடராசன்
==================================
பாடல் – 19
==========

மங்கள தீபம் ஆகக் குத்துவிளக்கு எரிகிறது. அதன் அருகே தந்தத்தலான கட்டில். அதில் ஒன்றின்மேல் ஒன்றாக அடுக்கிய பஞ்ச சயனம், நப்பின்னைப் பிராட்டி அதன்மீது பள்ளிகொண்டு இருக்கிறாள். அக்கட்டிலின் மேலே ஏறி, அவளது மார்பு அழுங்கக் கட்டித்தழுவி அவளோடு கூடிப் படுத்திருக்கிறான். மாலை அணிந்த மார்பன் கண்ணபிரான்.. அவனைப் பார்த்துச் சொல்லுகிறார்கள். வந்த பெண்கள் – “மலர் மார்பா! வாய் திறவாய்“ என்று! இப்படி ஒரு சாட்சிக்குக் காரணம் என்ன தெரியுமா? நிச்சயமாய் உய்த்து உணர வேண்டிய செய்தி அது. நாம், ஏதோ சிருங்கார ரசத்துக்கு இடமாக இன்பச் சுவையூட்டும் பகுதி என்று கருதுவோம். உண்மை அப்படியில்லை.

சீரார் வளை ஒலிப்ப வந்து திறவாய்“ – என்று நப்பின்னையைப் பார்த்து வந்தவர்கள் சொன்னார்கள். இல்லையா? அவள் உடனே எழுந்திருந்து கதவைத் திறக்கப் புகுந்தாள், கண்ணன் நினைக்கிறான் – ‘இவர்கள், நம்மை அடைய வேண்டித்தானே இவளைத் துணைப்பற்றினார்கள். ஆக, அவர்கள் நம் அடியார்களே ஆவர். நம்மடியார்களுக்குத் திறந்துவிட இவள் முற்பட்டாள் ஆக்க் கூடாது. நாமே திறக்க வேணும் என்று! நப்பின்னையைத் திறக்க ஒட்டாதே பின்னிட்டு வந்து மல்கட்டாகக் கட்டிக்கொண்டு போய், படுக்கையிலே சாய்த்து முறி எழமுடியாத படி அவள் மீது படுத்துக் கிடந்தான் கண்ணன். ஆனால் அவளோ இவனைப் போகவிடாது இறுகப் பிடித்துக் கிடந்தாள். இதுகண்டு தான், வந்தவர்கள் சொல்லுகிறார் “எங்கட்குத் திறக்க நீ முற்படுவது அறிந்தோம். ஆனால் நீ அதை மறந்து அவனது கட்டுக்குட்பட்டு மறந்து கிடக்கிறது நியாயமா? நீ திறவாமல் போனாலும் வாய் திருந்து ‘கவலைப்படாதீர்கள் வருகிறேன்‘ என்று மறுமாற்றமாவது சொல்லுவாயா என்று! இதனால், அடியார்கள் விஷயத்தில் எம் பெருமானுக்கு இருக்கும் பரிவுள்ளம் மிக உயர்ந்தது என அறிகிறோம் அல்லவா? எம் பெருமாலுக்கு மட்டும் இல்லை இப்பரிவுணர்வு! பிராட்டிக்கு இதற்கு மேலும் அதிகம் உண்டு. என்ன இருந்தாலும் நம்மைப் பற்றினர்வகள் நம்மடியார்கள். அவர்கட்கு நாமே முற்படச் சென்று திறக்க வேணும் என்று, முந்தினவன் இல்லையா,

மகன், திருமணத்துக்குப் பிறகு கணவனோடு தனிக்குடித்தனம் பண்ணுகிறாள். பெற்றோருக்கு அவர்கள் அறியாதபடி சென்று பார்த்துவர ஆசை. முன் அறிவிப்பு இன்றி திடீர் என ஒருநாள் புறப்பட்டுச் சென்றார்கள். சென்று, சாத்தியிருந்த கதவைத் தட்டவே, உள்ளிருந்தோர் இன்னார்தாம் என இனம்கண்டு கொண்டார்கள். மகளுக்கோ தான் முன் சென்று திறந்துவரவேற்க வேணுமென்ற ஆசை. அவள் தட்டிய ஓசை கேட்டு முற்படச் சென்றான். மறுமகனுக்குத் தானே விரைந்து சென்று முன்னதாகத் திறக்க நினைவு. ஆக, அவன் மனைவியைத் தடுத்து நிறுத்த – மனைவி, அவனைத் தடுத்து நிறுத்த சிறிது நேரம் கழிந்தது. பின்னர் ஒருவாறு சமாதானம் செய்து இருவருமே சேர்ந்து சென்று திறந்து வரவேற்றார்கள். இப்படி உலகியலில் நடக்கக்கூடியது தானே! இறை தொடர்பான அருளியல் வாழ்விலும் இது போலவே தான். வைணவ சமயம் கூறும் கருத்து இது.

திருவோடு கூடியவனே திருமால். திரு இன்றி மால் இல்லை. மால் இன்றித் திருவுமில்லை. இதனால் இவர்களை திவ்ய தம்பதிகள் என்பது வைணவர் மரபு. இருவரும் கணவன் மனைவி உறவினர். எனினும் நமக்குத் தாயும் தகப்பனும் போல, எம்பெருமானிடம் திருமகளே நம்மேல் குறை கூறுவதாக வைத்துக்கொள்ளுவோம். அப்போது பெருமான் என்ன சொல்லுவார் தெரியுமா? என் அடியவர்கள் ஒரு நாளும் தீமை செய்யமாட்டார்கள். செய்தாலுமே, அதை நான் நல்லதாகவே கொள்ளுவேன் என்பராம். அதாவது, குற்றத்தையே நற்றமாகக் கொண்டு பரிவுகாட்டும் இயல்பினர் அவர் என்பது கருத்து. இதே போலப் பிராட்டியிடம் பெருமான் அடியாரைப் பற்றிக் குறை கூறினால், “யார் தான் உலகில் குறையில்லாதவர்? குறையையும் பொறுக்க வேண்டியது நமது கடமை இல்லையா? என்று கூறி, பொறுத்தருளுவனாம். இதனால், அடியார் திறத்தில் மாறி மாறிப் பரிகைக்கும், நான் முந்தி, நீ முந்தி என்று உதவிக் காப்பதற்கும் இவ்விருவருமுண்டு. இவர்களது சேர்த்தியையே நாம் தஞ்சமெனப் பற்றுதல் தகும் என்ற பேருண்மை விளங்குகிறது. கண்ணன் நப்பின்னையின் செய்தி இதற்கு நல்ல உதாரணம்.

சைவமும் இதில் ஒத்த கருத்தது. சிவபெருமானும் பார்வதி தேவியும் சிவசக்திகள். சிவம் இன்றி சக்தியில்லை. சக்தி இன்றிச் சிவவுமில்லை. சிவசக்தகளைச் சேர்த்தே வழிபடுவது சைவர் மரபு. “சக்தியாய்ச் சிவமாகித் தனிப் பரமுத்தியான முதல்- என்று கூறும் திருவிளையாடல் புராணம். உமையம்மை சிவனார் திருவுருவில் பாயிகவே விளங்குகிறாள். அர்த்தநாரீசுவரர் அல்லது உமையொருபங்கள்‘ என்றே அவருக்குத் திருநாமம். அவ்விருவரும் உலகினத்துக்குத் தாய் தகப்பன் போலே! அடியார் பிழையறியாதவர் சிவபிரான். பால் நினைந்துஊட்டும் தாயினும் சாலப் பரிவுடையவர் அவர்.

பார்வதியோ “அகிலாண்ட கோடியன்ற அம்மை. இருவருமே அடியார்களது துயர்களைவதிலும். தடுத்தாட்கொள்ளுவதிலும் பரிந்து விரைந்து முற்படும் இயல்பினர். மாணிக்க வாசகர் சொல்லுகிறார். நானே புறப்புறம் திரிந்து ஆண்டவனை மறந்தேன். என் நெஞ்சமோ மிக மிகத் தாழ்ந்தது. நான் ஆர். என் நெஞ்சம் எப்படிப் பட்டது. நாயகன் யார் என்று எல்லாம் ஒரு காலும் நினைத்து அறியாதவன் இருந்த போதிலும், தானும் தன் தையலுமாய் வந்து என்மீது பரிந்து விரும்பி ஆட்கொண்டாள். அதனால் நானும் சிறந்தேன். என் உள்ளமும் உயர்ந்தது. இல்லை எனில் நான் எந்நாயகனுக்கு எவ்வளவு தூரத்தில் இருப்பேன்‘ என்று! ‘யான் யார்? என் நெஞ்சம் யார்? ‘நாலும் என் நெஞ்சமும் நாயகனுக்கு எவ்விடத்தோம். தானும் தன் தையலும் தாழ்சடையோன் ஆண்டிலனேல்?“ – என்று அவர்தம் திருவாசகம். இங்ஙனம் இரு சமயங்களும், உலகியலை ஒட்டி அருளியலைச் சுட்டிக் காட்டிவதால் மக்கட்கு சமயப் பற்றும் கொள்கைப் பற்றும் மிக்கு வாழ்வை வளம் பெறும்படி செய்தன எனலாம். இனி இம்முன்னுரையோடு பாடல் பகுதியைப் பார்ப்போம்.

வந்த பெண்கள் இப்போது தங்களை நினைத்துப் பார்த்துக் கொள்ளுகிறார்கள். இவர்கட்கும் கண்ணனைக் கூடி மகிழவேணும் என்கிற ஆசைதான்! ஆனால், அதற்கு எவ்வளவு தடைகள். முதலில், “காணில் ஒட்டார்“ என்னும்படி உள்ள ஊரார் இசைவு வேண்டிற்று. “கீழ்வானம் வெள்ளென்று என்கிறபடி பயமும் நடந்தது. நள்ளிருட்கண் என்னை உய்த்திடுமின்“ என்னுமாறு இருளும் தேட்டமாயிருந்தது. ‘நந்தகோபன் கடைத்தலைக்கே கொண்டு செல்மின்? என்று, வேற்றிடமும் தேடிப்போக வேண்டி வந்தது. இப்படி, எல்லாம் தொல்லைகள் பல. இருந்தும், கண்ணன் முகத்திலே விழிக்கப் பெறும் பேறு கிட்டிற்கு என்றால் அது தானுமில்லை. நப்பின்னைக்கோ, ஊரார் இசைவும் வேண்டாமல், விடிகிறது என்கிற பலமும் இல்லாமல் இருளும் தேடவேண்டாதபடிக்கு, விளக்கொளியிலே கண்ணனது முகம் பார்த்துக் கொண்டு, படுத்த படுக்கையிலே இன்பம் துய்க்க நேர்ந்திருக்கிறதே என்று சொல்லி மகிழும் வாய்ப்புக் கிட்டியிருக்கிறது. இதை நினைத்து மனமாரப் பாராட்டுகிறார்கள். வந்தவர்கள், கிருஷ்ணனைப் பற்றியவர்கள் அவனோடு ஒத்து சமமான பெருமை பெறுவர் என்பர். குத்துவிளக்கு எரியும்உனது இல்லத்துச் சமமாக எங்களது இல்லமும் “தூமணி மடத்துச் சுற்றும் ளிக்கு எரிய என்று ஒத்த சமத்துவம் உடையதாயிருக்கிறது. ஆனால், இவ்வில்லத்தில் நீ கண்ணனைக் கூடி மகிழுவது போல நாங்களும் அவனோடுகூடி மகிழவேண்டாமா? அப்படியில்லையே? நாங்களும் நீ மூடி மகிழுவது போல எங்கள் இல்லத்தில் கூடி மகிழ்ந்தால் அல்லவா உனது மகிழ்ச்சிக்குப் பயன்? என்கிறார்கள்.

உள்ளே குத்துவிளக்கு எரிகிறது. நல்ல மங்கள தீபம் போலே, அது நல்லது தான். ஆனால், உள்ளும் புறமும் மங்கலமாக இருக்கவேண்டும் இல்லையா? வெளியே கொடிவிளக்குப் போன்ற நாங்கள் தீய்ந்து மாய்ந்து கருகி நிற்கிறோமே. அது தீர எங்களையும் உள்ளே விட்டு சுடர்விட்டு எரியும்படி செய்வாயாக என்று ஒரு கருத்து. மேலும் குத்துவிளக்கு நிலையாய் ஒரே இடத்தில் இருப்பதில்லை. வேண்டும் இடம் தோறும் பெயர்த்து எடுத்து வைக்க்க் கூடியது. அது போலவே, நாங்களும் நீயும் அவனும் சேர இருக்கும் இடங்களில் எல்லாம் வந்து அடிமை செய்யும் பெரு விருப்பு உடையோம். அதிலே எங்கட்கு மகிழ்ச்சியு மதிகம். எங்களையும அப்பணிபுரிந்து மகிழுமாறு செய்வது உனக்கு அழகு இல்லையா? கதவுதிறந்து உள்ளே அழைப்பாயாக என மற்றொரு கருத்து. குத்துவிளக்கோ அறிவற்ற அசேதனப் பொருள். இருந்தாலும், புறம்பே சூழ்ந்துள்ள இருளைப் போக்கும் இயல்பினது. எங்களுக்கு கண்ணனைப் பிரிந்திருக்கும் துயரமே பேரிருள். அறிவு பெற்று சிறந்துள்ள நீயோ ஆயர்பாடிக்கு ஒரு அணி விளக்காய் உள்ளவள். எங்கள் துயர இருளைப் போக்கி ஒளிகாட்ட வேண்டியதுண்டு. அது செய்யாது இரக்கமற்று இருத்தல் தகுமா? ஒளிவிளக்கு தன்னையும் காட்டித்தரும். இருளால் மறைந்து கிடக்கும் பிற பொருள்களையும் காட்டித்தரும். அணி விளக்குப் போன்ற நீயோ? அதற்கு மாறுபட்டு நிற்கிறாய். உன்னையும் காட்டி நிற்பதில்லை. உன்னைக் கொண்டு காணவல்ல கண்ணனையும் காட்டாமல் மறைக்கிறாயே? இந்த விபரீத நிலை உனக்கு ஏற்றதில்லை. கதவு திறந்து உங்களிருவரையும் காட்டி மகிழ வை“ – என்று, வேறு ஒரு கருத்து. இப்படிப் பல கருத்து நயங்களையும் உட்பொருளாக உடைய தொடர் “குத்துவிளக்கு எரிய“ என்கிற தொடர்.

கோட்டுக் கால்கட்டில் முழுதும் தந்தத்தாலே செய்த கட்டில் நப்பின்னையைக் கண்ணன் மணந்தது. “ஏழு எருதுகளை அடக்கிய பெருவீரன்“ என்று காட்டி! முறையளவிலே வந்த சாதாரணத் திருமணம் இல்லை. “ஆன் ஏறு ஏழ் வென்றான்“ என்று அவன் திருநாமத்துக்குப் பாசுரம். ஆக, நப்பின்னைப் பரிட்டி சாமாளியமான கட்டிலிலே கண் உறங்காள். கண்ணன் கொன்ற குவலயா பிடத்தின் தந்தத்தினால் செய்த கட்டில் என்றபடி, வீர பத்தினி மார்கட்கு உள்ள இயல்பு அது. ஆண்டாள் பாவனை முதிர்ச்சியால் தன்னை ஆயர்குல மகளிர்களுள் ஒத்தியாக நினைத்துப் பாடியது திருப்பாவை. அதனாலே, அவளுக்கு இடை நடையும் முடை நாற்றமும் கூடக் குடிபுகுந்த்து பொன்னால் செய்து இரத்தினம் பதித்திருந்தாலும் அதனைக், கட்டில் எனப் பேசுவதே இடையர் பேச்சு வழக்கு. அதனால், அதனைக் கட்டில் என்றே பேசுகிறாள் என்பர்.

மெத்தென்ற பஞ்ச சயனம் இது கட்டிலின்மீது விரித்துள்ள படுக்கையின் சிறப்பு. மெத்தென்ற பஞ்சால் செய்த படுக்கை. ஒன்றின்மேல் முன்றாய் அடுக்கிய நிறவேறுபடமைந்த ஐந்து படுக்கைகள். அழகு, குளிர்ச்சி, மிருதுத் தன்மை, வாசனை ஒளி, என ஐந்து இயல்புகளோடு கூடிய படுக்கையாகவுமாம். இதன் மேலேறி படுத்திருக்கிறவன் பூங்குழல் நப்பின்னை. பூவால் வாசனை பெறுகிற குழல் என்றில்லை. பூவிக்கே வாசனை ஓட்டும் கூந்தல் என அவள் குழலுக்குச் சிறப்பு. “வாசம் செய் பூங்குழல்‘ – என்று பாசுரம். மலராத மொட்டுக்களை கொத்துக் கொத்தாக எடுத்து அவள் கூந்தலில் வைத்தால் அவை தன்னிலத்தில் போலே மலர்ந்து மணம் வீசுமாம்! ‘நாங்கள் புறம்பே நிற்க உனக்கு இப்பள்ளி வெம்பள்ளி ஆக வேண்டாவோ? குழந்தைகள் ஏறி மிதியாத படுக்கைப் பெற்றோருக்கு இனிமை தருமா? எங்களையும் மிதித்தேற விட்டல்லவா நீ மிதித்தேற வேண்டும்‘ – என்று!சொல்லுகிறார்கள். இதனால்!மலரிட்டு நாம் முடியோம்‘ என்கிற நிலமாறி எங்கள் தலையில் பூப்பொறுத்தால் அவ்வா நீழ முடிப்பது என்று கருத்து.

திறக்கப் புக்கவனை தடுத்து நிறுத்த மேல் விழுநது கிடக்கிறான் அவன். இவள் அவனைத்தடுக்க இருகையாலும் இறுகப் பிடித்துக் கிடக்கிறாள். இந்நிலையில் உருளுவது புறளுவது மாக நேரிடும் இல்லையா? அப்போது, நப்பின்னைப் பிராட்டியின் தளங்கள் ஒரு சமயம் அவன் மார்பின் மேலும், மறு சமயம் மார்பின் கீழும் கிடக்கும். இதனால், நப்பின்னையின் கொங்கையைத் தன் மேலே வைத்துக் கிடந்த, சொங்கை மேலே தன்னை வைத்துக்கிடந்த என்று இருவகையிலும் பொருள்படும். கொங்கைமேல் வைத்துக் கிடந்த மலர் மார்பன் என்ற தொடர். மார்பிலே அனைத்துக கிடந்து அவள் முயக்காலும் மயக்காலும் அழுந்தி, வந்த காரியத்தையும் நினையாமல் மெய்மறந்து நின்ற நிலையினை “கிடந்த மார்பன்“ என்றது காட்டுகிறது. மலர்மாலை அணிந்த மார்பன் மலர்மார்பன் எனப்பட்டான். ‘வாய்திறவாய்“ – என்பது, வாய் திறந்து பேசு, அல்லது வாய் திறந்து பேசமாட்டேன் என்கிறாயே? என்று இருவகைப் பொருளும் தரும். கிடந்த இடத்தே கிடந்தாலும் உன் கம்பிரமான மிடற்றோசை கேட்குமாறு ஒரு வார்த்தை சொல்லாய் என்று கருத்து. மார்பை அவளுக்குக் கொடுத்தால் பேச்சையாவது எங்களுக்குத் தரலாகாதா? என்கிறார்கள். “மார்பது முலையானால் வாயது முத்தோ?“ – என்று இவ்விடத்துக்குப் பூர்வீகரது வியாக்யானம்.

கண்ணன் முற்படத்திறக்க வந்தது இவர்கட்குத் தெரிந்தது தானே? அப்படி இருக்க “மலர்மார்பா நீ வராய், வந்து திறவாய்“ என்று அழைக்க வேண்டும் இல்லையா? அதை விடுத்து மலர் மார்பா! வாய் திறவாய் என்கிறார்களே ? தகுமா? என்று ஒரு கேள்வி எழும். இங்கு ஒரு அரிய செய்தி உண்டு. ஈருடலும் ஓருயிரும் ஆக உள்ள கணவன் மனைவியர். அவர்கள் பிரிந்திருந்தால் சேர்த்து வைப்பது ஒரு புண்ணியமான செயல். சேர்ந்துள்ள தம்பதியர்களைப் பிரிப்பது மிகப் பெரிய பாவம். பாவம் என்று மட்டுமில்லை. வஞ்சகமான பாதகச் செயலும் கூட. பஞ்சு எனச் சிவக்கும் மென்கால் தேவியைப் பிரித்த பாவி வஞ்சன்“ – என்று கம்பராமாயணம். சீதைப் பிரித்த தமையன் இராவணனைப் பற்றியது, வீழுஷணன் கூற்று. எனவே, கண்ணனைப் பிரித்துக் கூப்பிடுவது ஒரு அரக்கச் செயல். அதனாலே, ‘வாய்திறவாய்“ என்று பேசினர்.

வாய் திறவாய் என்றதற்கு “வாயினைத்திறந்து பேசு ஒரு வார்த்தையாவது சொல்லு“ என்றும் அளவும் பொருள் உண்டு. கதவு திறக்கக் கணிசித்து வந்தவன் அவன். அவனால் கட்டுண்ணப் பெற்றதன் பிறகு, நஞ்சுண்டாரைப் போல தன் வசமிழந்து மயங்கிக் கிடந்தான். அவனை நோக்கி என்ன வார்த்தை பேசவேண்டும் என விரும்புகிறார்கள் – இவர்கள் அப்படியே அவன் பேசினாலும் இவர்கள் வந்த காரியத்துக்கு என்ன பலனைத் தரும் என்றெல்லாம் நமக்கு தோற்றும் வந்த பெண்கள் – அருச்சுன்ன் நிலைகலங்கி, இவன் சொன்ன உபாயங்களால் பற்றமுடியாதபடி இவனை இழந்தே போவோமோ என்று வருந்திய நேரத்தில் கண்ணன் சொன்ன ‘மாசுச“ என்ற வார்த்தையை நினைக்கிறார்கள். கவலையை ஒழியுங்கள். நானிருக்கிறேன். என்று கூறினால், உங்கள் தடைகளை நீக்கி விருப்பத்தை நிறைவேற்றுகிறேன் ஒன்று தாங்கள் தேறித் தெம்பு பெறலாம் அல்லவா? திறக்கிறவளையும் திறக்க ஒட்டாதே, நீயும் அவனால் கட்டுண்டு கிடந்தால். கிடந்த இடத்தே கிடந்து “மாசுச“ என்று கூறவும் முடியாதா? வாய்திறந்து ஒரு வார்த்தை சொல்லுவாயாக‘ என்று வேண்டுகிறார்கள். ஆண்டாள் மற்றவர்களைப் போல சம்சாரத்தில் மூழ்கி உறங்கிக் கிடந்தவளும் இல்லை. இறைவன் எழுப்பி எழுந்தவளும் இல்லை தானே முந்துற எழுந்தவள். ஒரு தலையில் தன் போன்ற தோழியர்களையும் மறுதலையில் உறங்குகின்ற ஈஸ்வரனையும் எழுப்பி, இருவருக்கும் வேண்டுவன சொல்லி, இறைவனோடு கூட்டி வைக்கிறவன் என்பதனை முன்னரே கண்டோம். அந்த முறையில் இறைவனை எழுப்பி அறிவிக்கும் பாசுரப் பகுதி இது. இது போலவே நப்பின்னையை நோக்கி “தத்துவம் அன்று தகவன்று“ என அறிவிக்கும் பகுதியும் பின்னர் வரும்.

“என் நெஞ்சால் நோக்கி என்னைக் காணீர்“என்று பாசுரம். ஆக்கியோர் கருத்து அறிந்து அதற்கேற்ப உரை கூறுதலே தகுதி. நம் கருத்தினை ஏற்றிஉரை சொல்லுவது தகாது. திருப்பாவை தெய்வீகத் தமிழ் நூல். வெளிப்படைப் பொருளைக் காட்டிலும் தத்துவப் பொருள்களே கண்டறியத்தக்கது. அது காணாதபோது புறத்தோற்றத்தின் மாறுபாடே புலப்படும். முப்பதும் “தப்பாமே இங்கு இப்பரிசு உரைப்பார்“ என்றாள் ஆண்டாள். தத்துவக்கருத்தறிந்து போற்றுதலே“ இங்கு இப்பரிசு உரைத்தல்“ ஆகும். புறத் தோற்றத்தில் இன்பச் சுவையின் வெளிப்பாடு எனத் தோன்றும் இப்பகுதி அகத்துள் ஆழ்ந்த தத்துவங்களை உள்ளடக்கியது என்பதற்கு நல்ல எடுத்துக்காட்டு

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *