திருப்பாவை பேருரை
••••••••••••••••••••••••••••••••
பத்மஸ்ரீ முனைவர் ஔவை நடராசன்
==================================
பாடல் – 21
=========
வந்த ஆய்ச்சியர்கள் முன்னர் நப்பின்னைப் பிராட்டியை எழுப்பினார்கள் இல்லையா? அவள் உணர்ந்துவந்து எழுந்திருந்து.- “நானும் உங்களில் ஒருத்திதான். தத்துவமன்று, தகவன்று என்று உங்களது ஆற்றாமையால் வேறுபடுத்திப் பேசினீர்கள். என்னைப் பற்றினார்க்கு ஒரு குறையும் உண்டாகாது. நானும் உங்களுடன் கூடி காரியத்தை அழகியதாகச் செய்து தருகிறேன். வாருங்கள் யாவரும் போகலாம்“ என்று இதமுறப் பேசினாள். பேசி, அனைவருமே கண்ணனிடம் சென்று வேண்டுவோம் என்று, எல்லோரும் கண்ணபிரானை அணுகிக் கூறுவது இல்.
“போற்றியாம் வந்தோம் புகழ்ந்து“ – இதனை, யாம் போற்றி வந்தோம். புகழ்ந்தும் வந்தோம் என்று கூட்டிப்பொருள் கொள்ளல் தகும். போற்றுதல் வேறு, புகழுதல் வேறு. ஒருவன் பிறந்து படைத்த செல்வங்களைப் பாராட்டுதல் போற்றுவது பிறந்தபின் செய்த செயல்திறங்களைப் பேசுவது புகழுவதாகும். கண்ணன் பிறந்து படைத்த செல்வம் நந்தகோபனது ஆனிரைச் செல்வம். பிறந்தபிறகு செய்த செயலால் பெற்றது அடியவர்கட்கு பிழைபாராது அருள் செய்யும் திறம். “வள்ளல் பெரும்பசுக்கள் ஆற்றப் படைத்தான் மகனே“ என்றது போற்றுதல். “உலகினில் நோற்றமாய் நின்ற சுடரே“ என்றது அவனுக்குரிய புகழ் முன்னர் வந்த செய்யுளடிகள் கண்ணன் பெற்று புகழ்பற்றிய பாராட்டு.
உன்னைப் போற்றியும் புகழ்ந்தும் உன்னிடம் தோற்ற பகைவர்கள் வேறுபோக்கிடம் அற்று உன்னிடமே வந்து அடிபணியுமாறு போலே நாங்கள் வந்து உன் அடிகளிலே விழுந்து வணங்குகிறோம். உலகில் அடியார்கள் திறத்தல் ஒரு தலைபக்ஷமாய் அருள்புரிகிற நீ அதற்கு ஏற்ப எங்கட்கும் அருள்புரிந்து ஆதரிக்க வேண்டும். உன் துயிலில் நின்று நீங்கி எங்கட்கு இப்பொழுது அருள் புரிவாயாக“ – என்று இவ்வடிகளுக்குக் கருத்து.
நல்லோரைக் காக்கவும் அறத்தை நிலைநிறுத்தவும். நான் உலகிடை யுகம் தோறும் வந்து பிறக்கிறேன்“ – என்பது கீதா வாக்கியம். அதை வெறும் ஓலைப்புறத்தில் கேட்டது போல ஆக்காமல் இறைவன் இராமனாகவும் கண்ணனாகவும் பிறந்து மெய்ப்பித்தான். இறைவன் கீதையுள் சொன்னபடி வந்தவதரித்ததை உலகினர் அனைவருமே கண்ணாரக் கண்டு மகிழும்படிக்கு இருந்தது அது. அது கருதி உரகினில் தோற்றமாய் நின்ற சுடர்“ எனப்பட்டான் அவன். தோற்றமாய் என்றதற்கு கண்கண்ட காட்சியாக“ என்று பொருள்.
“ஆதியம் சோதி உருவை அங்கு வைத்து இங்குப் பிறந்த“ என்று பாசுரம். பகவான் தனது தெய்வீக இயல்புகளை எல்லாம் பரம பதத்து இருப்பிலே வைத்து சாதாரண மனிதனைப் போலே தோற்றும்படி உலகிலே வந்து பிறந்தான் – என்று அவதார ரகசியம் சொல்லுவது இது. இராமலக்ஷ்மேனரை மானுடர் இருவர்“ என்று இராவணன் பேசினான் இல்லையா? ‘வேறுளகுழுவை எல்லாம் மானிடம் வென்றது அன்றே“ – என்றான் சுக்ரீவன். நம்மொத்த மனிதன் என்றே கலகினர் கருதிப்பேசும்படியும் தன் பெருமைகளை எல்லாம் மறைந்தும், எளிமை கருதி எல்லாரும் கூடிக்கலந்து மகிழும் வண்ணமும் தன்னைத் தாழவிட்டுப் பிறந்த எளியவரும் இயல்பு கருதி “உலகினில் தோற்றமாய் நின்ற சுடரே“ என்று, பாராட்டியபடியும் ஆகும். தோற்றமாய் என்றதற்கு அடியாருக்கு ஒருதலைப்பற்றுக் காட்டும்படி தோன்றியவர் என்று கருத்து.
இதில் மற்றொரு நயமான கருத்தும் உண்டு. இறைவன் உலகிடைப் பிறந்தான் என்றால் – நம்மைப் போல இல்லை. நம்முடையது கருமம் அடியாக வந்தது. “வினையின் வந்தது. வினைக்கு வினைவாவது“ என்னும் மணிமேகலை நூல். இறைவனுக்கு பிறப்பால் வரும் நலந்திங்குகள் எவையும் கிடையா. “தேவகி மைந்தன்“ – என்று சொல்லும்படி வந்து பிறந்தாலும் அதனால் வந்த “குடல் தொடக்குகள் அவனுக்கு இல்லை. சூரியன் கிழக்கே உதித்தாலும் – கிழக்குத்திக்குக்கும் அவனுக்கும் எப்படி ஒட்டுறவு எதுவுமில்லையோ அப்படிப் போல்! இறைவன் பிறப்பு“ நமக்கு ஒரு தோற்றமே“ ஆகும். தேவகீ பூர்வ சந்தியாயாம் ஆவீர்ப் பூதம் மகாத்மாந“ – என்று பாகவதம் பேசும். “தேவகியின் வயிறாகிய கிழக்குத் திக்கில் கிருஷ்ணனாகிய சூரியன் தோன்றினான்“ என்றது கருத்து. இக்கருத்தை உள்ளடக்கியே, “உலகிடைப்பிறந்த“ என்று சொல்லாமல் உலகினில் தோற்றமாய் நின்ற சுடரே“ என்றது கவி.
“மனத்தகத்தான், தலைமேல்ன், வாக்கின் உள்ளான்“ – என்று தேவாரம் இறைவன் வேறுபாடில்லாம் எல்லார் மனத்துள்ளும் இருப்பவன். அப்படியானால், அனைவரும் அவனுக்கு சமம். பந்துக்கள் விரோதிகள் என்று கிடையாது. இருந்த போதிலும் அவன் பிறந்து காட்டிய பேருண்மை வேறு. அடியார்கட்கு விரோதிகளையே தனக்கு வேண்டாதவர்கள் ஆக்கிக் கொண்டான். “பாண்டவர்கள் எனக்கு உயிரானவர்கள். நீயோ அவர்கட்கு விரோதி, ஆக எனக்கும் விரோதியே நீ. உன்னகத்தில் தங்குவதும் உண்பதும் தவறு“ என்றான் இல்லையா கண்ணன்? பாண்டவ சகாயன் என்றே பேரும் பெற்றான். தனது அடியவர் திறத்தில் எவர் குறை கூறினாலும்“ என் அடியார் அது செய்யார், செய்தாரேல் நன்று“ என்பனாம் அவன். இப்படி, அடியவர் பக்கல் ஒருதலைப் பக்ஷமாக நடப்பது அவன் இயல்பு. இதனை ஊருலகம் நன்கறியும்படி துரியோதனன் சிசுபாலன் முதலானவர்கள் கூறி ஏசினார்கள் அல்லவா? இக்குறையினை நிறைவாகக் கொண்டு அவதாரம் செய்து காட்டினபடியால் ‘உலகினில் தோற்றமாய் நின்ற சுடர்‘ எனப்பட்டான். அடியார் பக்கல் தனித்த பக்ஷபாதம் உடையவன் என்பதை தோற்றிக் காட்டும்படி வந்த பிறந்தவன் என்று கருத்து. “ஐவர்க்கு அருள் செய்து நின்று, பார் மல்க நின்றசேனை அவித்தபரஞ்சுடரே“ – என்று ஆழ்வார் பாசுரம்.
“நின்ற சுடரே“ என்பதற்கு நிலை நின்ற ஒளிவடிவாய் அமைந்தவனே“- என்று பொருள். நமக்குப் பிறப்பு கருமவாசம், அதனால் நாம் பிறக்கப் பிறக்கக் கறையேறும். இறைவன் பிறக்கக் காரணம் கிருபை வசம். அவன் பிறக்கப் பிறக்க சாணையிலிட்ட மாணிக்கம் போலே ஒளிமிகும். நிலை வரம்பு இல் பலபிறப்பாய் ஒளிவரும் முழுநலம்“ என்று பாசுரம். இங்ஙனம் பல பிறப்புப் பிறந்து ஒளிமயமாய் அமைந்ததே இறைவன் திருவுரு. “சோதியே! சுடரே! சூழ்ஒளிவிளக்கே ! – “சுடர் ஒளியாய் என் நெஞ்சினுள்ளே தோன்றும் என் சோதி நம்பீ என்பன, அநுபவ ஞானிகளது திருவாக்கு இப்படி பிறந்து படைத்த புகழ் எல்லாம் மழுங்காதபடி விரைந்து எழுந்து அருள்புரி என்கிறவர்கள் – “உலகினில் தோற்றமாய் நின்ற சுடரே துயில் எழாய்“ என அவனை வேண்டி நிற்கின்றனர்.
கண்ணன் புகழைப் பேசினார்கள் இல்லையா? வந்தவர்கள். இதற்கு முன்னரே வந்தவுடன் அவன் பிறந்து படைத்த பெருஞ் செல்வத்தினைப் பெருமைப்பட போற்றினார்கள். “ஏற்ற கலங்கள் எதிர்பொங்கி மீதளிப்ப மாற்றாதே பால்சொரியும் வள்ளல் பெரும் பசுக்கள். ஆற்றப் படைத்தான் மகனே! அறிவுறாய்“ என்று. நந்தகோபனது படைவலியையும் கொடைத் திறத்தினையும் முன்பு சொல்லிப் புகழ்ந்தது போல அவனது ஆனிரைச் செல்வத்தினைப் புகழுவது இது. கறக்க வைத்த பாத்திரங்களை நிறைப்பது மட்டுமில்லை. மேலும் பொங்கி வழியும்படி கறந்து நிரப்புமாம் ! அப்படி வள்ளல் தன்மை வாய்ந்த பெரும் பசுக்கள். அவற்றை மிகுதியாக உடையவன் நந்தகோபன். அத்தகைய செல்வந்தனுக்கு மகனாகப் பிறந்தவனே! என்பது இதன் பொருள்.
நந்தகோபனைச் சுட்டிக் கண்ணனை எழுப்புவதில் ஒரு அரிய கருத்து உண்டு. நாராயணன் பரம்பொருளான தேவாதி தேவன். அவனே, கண்ணனாக வந்து பிறந்தான். “அறிவு ஒன்றும் இல்லாத ஆய்க்குலம்“ என்கிறபடி இடைக்கை வலக்கை அறியாது ஆயர்ழுடி அறியாது ஆயர்குடி. அதில் வந்து தன் இச்சையாக இறைவன் பிறப்பானேன்? என்றால், ஒரே காரணம்தான். பயனும் பாங்கும் சுற்றவர்கள் ஆயினும் அவரைத் திருத்திப் பணிகொள்ளுவதே அவனது நோக்கம். தாழ்ந்தோரை உயர்த்துவதே அவனுக்குத் தலையாய கடமை. “எம் பெருமானே! உன்னை அடைந்து உய்வதற்கு வேறு நெறிமுறைகள் அறியாதவர்கள், எங்களிடம் வேறு கைம்முதல் எதுவுமில்லை. ஆனாலும், ஒரு புண்ணியம் மட்டும் உண்டு. நீ எங்கள் குடியில் வந்து பிறந்த்‘தே அது“- என்று, அவர்களே சொல்லுகிறார்கள். “உன் தன்னைப் பிறவிப் பெருந்துணைப் புண்ணியம் யாமுடையோம்“ என்பது அவர் கூற்று. இங்ஙனம், எங்களைக் காத்தளிக்க இடைக்குலத்தில் வந்து பிறந்த நீ, உன்னை வந்தடைந்த எங்களைக் காக்காமல் போகாது என்று குறிப்பிடுவதே இதற்கு உள்ளுறை.
மகனே! எழுந்திராய் என்னாமல் அறிவுறாய் என்கிறார்களே என்று தோன்றும். எழுந்து இருந்து தங்கள் காரியம் செய்யவேண்டும் என்று கருத்தில் நோக்கமில்லை அவர்கட்கு. தான் வந்து பிறந்த செயலை அறிவுற்றால் போதும் பின்னர்த் தானே வேண்டியது செய்வான் இல்லையா? வந்து பிறந்ததே இடைக்குலத்தாரைக் காத்து அளிக்க – என்றால், அதை விரைந்து செய்யாமல் தவறவிடுவானேன் என்று கருத்து. வந்து பிறந்த நோக்கம் தவறாமல் காத்தளிப்பது இறைவன் செயலே அல்லவா? அவன் அவதார தத்துவத்தை நினைப்பூட்டி அறிவுறுத்தியபடி இதுவாகும். (தாம் பிறந்து படைத்த செல்வத்தையும், அடைந்த புகழையுமே பேசுகிறார்கள் இவர்கள். இதற்கு முன்னர் உள்ள நமது நிலை யுணரார்கள் போலும்- என்ற கருத்திலே கண்ணன் வாளா கிடக்க அதனையும் அறிந்தபடி சொல்லுகிறார்கள் ஊற்றமுடையாய் பெரியாய்“ என்று, ஊற்றம் என்பது வலிமை, வேதங்களினால் சொல்லி உறுதிப்படுத்தப்பட்ட வலிமை. பெரியாய் அறுதியிட்டுச சொல்லிய வேதங்களாலும் முழுதும் அறியப் படாத தன்மை.
வேதம் என்பது ஒருவராலும் செய்யப்படாதது. தான் தோன்றியான இயல்பினது. அன்றும் இன்றும் என்றும் நிலைபெற்று நிற்பது. பொய்மை இல்லாத வாய்மையே உடையது. இப்படிப் பல பெருமைகள் வேதங்கட்கு உண்டு. இதினால் ‘வேதவாக்கு‘ என்று போற்றுவது மக்களியல்பு. “வேதம் தப்பினபோதும், அன்னான் தநுஉமிழ் சரங்கள் தப்பா“- என்று இராவணன் பேசியது. “மெய் அல்லது உரையா நாவேதம் நவில் பயிற்சியால்“ என்றது நைடத நூல். எனவே வேதம் சொல்லுவது உறுதிப்பாட்டிற்கு அறிகுறி இறைவன் “வேதமுதல்வன்“ எனப் போற்றப் பெறுவன்“ மறையாய நாவ்வேதத்தள் நின்ற பரஞ்சுடர் “என்றார் ஆழ்வார். “நான் மறைகள் தேடி ஓடும் செல்வன் நம்முடை நாயகனே“ என்று பாசுரம். வேதத்தால் சொல்லப்படுகை இறையுண்மைக்குச் சிறந்த உறுதிப்பாடு. எனவே “ஊற்றமுடையாய்“ என்று கூறினார்கள். இப்படி வேதம் சொல்னாலும் முழுதும் அறியப்படாதவன் இறைவன். வேதத்தாலும் முழுதும் அறியப்படாத பெருமை நோக்கி அவன் “பெரியாய்“ எனப் பட்டான். “அல்லையிது அல்லையிது என்று அருமறைகளும் அன்மைச் சொல்லினால் சுட்டும் இச்சுந்தரன்“ என்றார் இறைவனைப் பரஞ்சோதியார்.
‘
இறுதியிலே, ஆயர்சிறுமியர் சொல்லுகிறார்கள். தாங்கள் வந்த வித்த்தைப் பற்றி – மாற்றார் எனக்கு வலிதொலைந்து உன் வசவ்கண் ஆற்றாது வந்து உன் அடிபணியுமா போலே வந்தோம்“ என்று! உகவதாராயுள்ள உனது எதிரிகள்உன் வீரத்துக்த் தோற்றுப்போய் வேறு போக்கடி இல்லாமையாலே மீண்டும் உன் காலடியிலே வந்து விழுந்து உயிர்ப்பிச்சை கேட்டு நிற்பது போலே நாங்களும் வந்து நின்றோம் – என்று இதன் பொருள்.
தங்கட்கு நிகர் எவருமில்லை என்று கருத்தாழம் உடையோர் உனது எதிரிகள். படைவலி துணைவலி முதலியன கொண்டு செருக்கும் மிக்கவர்கள். அவர்கள். தன் முனைப்பான இவ்வெண்ணத்தால் உன்னுடன் போரிட்டு நின்றவர்கள். ஆனால் உனக்குத் தோற்றவுடனே வேறு புகலிடமும் இன்றி. தன்முனைப்பான கருத்தும் அழிந்து உன் வாசலிலே புகுந்து நின்று அடிபணிவர்கள்- இல்லையா? அதுபோலே நாங்களும் எங்களும் ஸ்திரித்துவ அபிமானத்தைவிட்டு உன் குணங்களால் கவரப்பட்டு வேறு போக்கடி இல்லாமையாலே உன் திருவடிகளிலே வந்து சரண்புகுந்து நின்றோம் என்றது இவ்வுலமைக்கு விளக்கம்.
இதுகேட்ட கண்ணனுக்கு “நம்பால் அன்புடன் தேடி வந்தவர்கள் இவர்கள். தங்களை எதிரிகட்கு ஒப்பிட்டுப் பேசுகிறார்களே, நாம் முந்துறச் சென்றல்லவா இவர்களது துயரைப் போக்கியிருக்கும் வேண்டும்“ என்ற எண்ணம் உண்டாகி, அது அவன் முகக்குறிப்பில் தோற்றிற்று. அதுகண்டு அவர்கள் – ‘ஐயனே‘ எதிரிகட்கு ஒப்பிட்டுச் சொன்னோம். போக்கடியற்று உன்பால் வந்து அடிபணிந்து நிற்பதற்கு மட்டுமே அது ஒப்பாகும். ஆயினும் எங்கள் நிலைவேறு. எதிரிகளாவது, உன் அம்புக்கு ஆள் ஆகி இறப்பர். அவர்கள் துயரம் தொல்லைகள் யாவும்சாவோடு கழியும். நாங்களோ உன் குணங்கட்குத் தோற்று வந்தவர்கள். “வல்வினையேனை ஈர்க்கின்ற குணங்களை உடையாய்“ என்பர் அநுபவ ஞானிகள். உன் குணங்கள் எங்களைச் சாகவும் ஒட்டாமல் உயிர்க் கொலையாக வருத்தாநிற்கும். அவர்களாவது தோற்று ஓடிப்போய்ப் பிழைக்கலாம். நாங்கள் அவ்வாறு இல்லை. உன் கையையே எதிர்பார்த்து உன் அருளையே வேண்டியிருப்பவர்கள் நாங்கள். எங்கள் ஸ்வரூபத்தை நினைத்தால் நாங்கள் இருந்த இடம்விட்டுப பெயர வழியில்லை. அதேசமயம் உனது பிரிவாற்றாமையை நினைத்தால் உன்னை நாடி வராதிருக்கவும் வழியில்லை. உன்த்தன் குணநலங்கள் எங்கள் பிடரியைப் பிடித்துத் தள்ளப் புகலற்று வந்தோம். “நின் தன்னால் நலிவே படுவோம்“ என்கிறபடி உன்னால் துயரப்பட்டு அது தீரவே வந்தோம்“ என்று சொல்லி முடித்தார்கள்.
இறைவனை அடைவதற்கு உரிய எளியவழி ஒன்று. ‘சரணாகதி‘ என்பது. நம்மினினும் சிறந்த பெரியோர்கள் கண்டுணர்த்திய பெரும் நெறியும் அதுவே.“மற்று யாரும் பற்றிலேன். என்று அவனைத் தாள் நயந்த குலசேகரன்“ என குலசேகர ஆழ்வாருக்குப் பெருமை. “என்னை ஆள்வானே! புகல் ஒன்றில்லா அடியேன் உன் அடிக்கீழ் அமர்ந்து புகுந்தேனே“ என்று நம்மாழ்வாரது பாசுரம். இவ் வடைக்கல நெறிக்கு முதலாவதாக வேண்டந்தகும் பண்பு மேம்பாடு “அபிமான பங்கம்“. அதாவது தன் முனைப்பு அழிவு“ நம்மை நாமே காப்பாற்றிக் கள்ளமுடியும். நம்மின் மிக்காரில்லை“ என்ற எண்ணம் அறவே கூடாது. “வித்துவக் கோட்டு அம்மான்! நீ கொண்டாளாய் ஆகினும் உன் குரைகழலே கூறுவனே“- என்கிறபடி அவனடியல்லால் நமக்கு அடைக்கலம் இல்லை என்கிற மன உறுதி மிக மிக வேண்டியது. இவ்வரிய தத்துவத்தின் உட்பொருளை இப்பாசுர அடிகள் தெரிவிக்கின்றன“. உன் வாசல் கண் ஆற்றாது நின்று அடி பணியுமா? போலே“ – என்கிற உவமை இப்பாசுரத்துக்கு உயிர்நிலை இதுவே ஆகும்.

Add a Comment