POST: 2018-01-06T07:32:15+05:30

திருப்பாவை பேருரை
••••••••••••••••••••••••••••••••
பத்மஸ்ரீ முனைவர் ஔவை நடராசன்
==================================
பாடல் – 22
===========

“தேகமே ஆத்மா, போகமே புருஷார்த்தம், தேகத்தின் நீங்கிய ஆன்மா ஒருறு இருந்தாலும் அது தனிச் சுதந்திரம் உடையது“. இப்படி எண்ணங்கள் பல நம்மிடையே பலருக்கும் உண்டு. இதன் அடியாக, “யானே என் தனதே என்றிருந்தேன்“ என்கிறபடி அகப்பற்று புறப்பற்றுக்கள் உண்டாகும். இந்த அகம்பாவம் – “நாமே நமக்கு ரக்ஷ்கர்கள். நம்மைக் காப்பாற்றிக் கொள்ள நமக்குமேல் ஒருவன் வேண்டியதில்லை“ என்கிற தன் முனைப்புக்கு ஊட்டம்தந்து இறையுணர்வினை மறக்கவும் செய்யும். இப்படியான தன் முனைப்புணர்வின் அழிவுதான் “அபிமான பங்கம்“ எனப்படுவது. இறைவனைச் சரணகதி என அடைபவருக்கு இவ்வபிமான பங்கமே முதல் முதலாக வேண்டத் தருவது இதையே. வந்தவர்கள் சென்ற பாசுரத்தால் “மாற்றார் உனக்கு வலி தொலைந்து ஆற்றாது வந்து அடி பணியுமா போலே“ வந்தோம்என்று தெரிவித்து நின்றார்கள். இது கேட்டும், கண்ணன் “மேலும் இவர்கள் உன் மானம் முழுதும் அறிவோம்“ என்று பேசாதே கிடந்தாள். அப்போது மீண்டும் வந்த ஆயர்சிறுமியர் சொல்லுகிறார்கள். “அபிமான பங்கமாய் புகலற்று வந்தது மட்டுமில்லை. உன்னைத்தவிர வேறு போக்கு அற்றும் வந்தோம்“ என்று.

ஒருவனுக்கு நாம் அடிமைப்பட்டிருக்கும்நிலைமைக்கு, சேஷத்துவம்“ என்று பெயர். சீவான்மாக்கள் எல்லோருமே கட்டுப்பாடாக பகவானுக்கே அடிமைபூண்டவர்கள். “பரிபூரணனுக்கு அடிமை செய்வோம்“ என்றான் பாரதி. இப்படி பகவானுக்கு அடிமைப்பட்டிருப்பதற்கு “பகவத் தேஷத்துவம்“ எனப் பெயர். ஆனால், நாம் இதனை மறந்து “நமக்கும் பிறருக்கும் “அடிமைபட்டிருக்கிறோம் இல்லையா? இது “அன்னிய சேஷத்துவம்“ எனப்படும். அன்னிய சேஷத்துவத்தை அறவே நீக்கி, பகவான் ஒருவனுக்கே நாம் அடிமைப்பட்டவர்கள் என்ற உணர்வோடு ஒழுகுவது “அநந்யார் ஹசேஷத்துவம்“ ஆகும். இந்த “பகவத்தேஷத்துவம்“ என்றே ஆன்மிக முன்னேற்றத்திற்கு இரண்டாவது படிக்கட்டு. அரணாகதனுக்கு “அபிமானபங்கம்“ போலே அடுத்து இரண்டாவதாக வேண்டத்தக்கது. “அந்ந்யார் ஹசேஷத்துவம்‘ ஆகிய இது. இதனைத்தான் வந்தவர்கள் வெளியிடுகிறார்கள். “அங்கன் மாஞாலத்து அரசர் அபிமான பங்கமாய் “நின்பள்ளிக்கட்டில் கீழே சங்கம் இருப்பார் போல் வந்து தலைப் பெய்தோம்“ என்று!

தோற்றவர்கள் ஆற்றாது தோற்றுவந்து அடிபணிந்து நின்றார்கள். இல்லையா? அவர்களை நோக்கிக் கண்ணன் சொன்னான் – “நீங்கள் அடிபணிந்ததே போதும். அது வென்றமைக்கு அடையாளம். ஆனாலும், எனக்கு நாடாச்சியில் கருத்தில்லை. வென்று பெற்ற நாட்டினை மீட்டும் தந்துவிடுகிறேன். கொண்டுபோய் பழையபடி ஆளுங்கள்“ என்று! இருந்தாலும் தோற்றவர்கட்கு இவ்வருட்கொடை மிகவும் கேவலமாகப்பட்டது “கண்ணனிடம் தோற்ற நாட்டை இரந்து பெற்று வந்திருக்கிறார்கள் என்று தானே, நாட்டார் எளிவரவு சொல்லுவார்கள். இதை விட “தோற்றவர்கள் வென்றவருக்கு அடிமைபூண்டு ஏவல் செய்வதே மேலானது “என்று பட்டு உடன்பட்டனர். அதனால், பள்ளிக்கட்டில் கீழே சங்கம் இருப்பார் போல் “ழுகுமியிருந்தனர். “இக்கண் வந்துற்ற காலையில் உலகில் சுற்றத்தார் எவரும் துணையாகார். இறைவனது அடிபணிந்து உய்தலே உற்ற துணையாகும்“ என்கிற சாஸ்திரார்த்தம்இதனால் புலப்படுகிறது இல்லையா? இதை நினைத்துத்தான் வந்தவர்கள், ‘அங்கண் மாநிலத்தரசர்களை“ உதாரணமாக்கி தங்கள் நிலையை வெளியிட்டார்கள். “புகல் ஒன்று இல்லா அடியேன் உன் அடிக்கீழ் அமர்ந்து புகுந்தேன்“ என்றது அவர்கட்கு உட்கருத்து.

விபிஷணன் புறம்புள்ள சுந்நங்களை விட்டு, இன்ப நலங்களையும் துறந்து, இராமபிரானே புகல் அறிந்து அடைக்கலம் புகுந்து நின்றான். ஆகாயத்தில் நின்று கொண்டிருந்த அவனை அப்படியே நிறுத்தி, சுக்ரீவன் முதலானவர்களோடு இவனைச் சேர்த்துக் கொள்ளலாமா கூடாதா என்று ஆலோசனை செய்து கொண்டிருந்த சமயம். பிறகு அடைக்கலம் ஏற்றபோது விபீஷணன் சொன்னான். இராவணன் தொடர்பானசம்பந்தங்களை எல்லாம் அறவே விட்டு வந்துள்ளேன். தாங்கள் என்னை ஏற்றுக் கொள்ளாமல் போனாலும் கூட விட்டுப் போந்த இடத்துக்கும் ஆகாதவன் ஆனேன். ஆகவே அங்கு திரும்பிப் போகேன்“ என்று இதனால் வீடணன் நிலை என்ன! “நீ கொண்டு ஆளாய் ஆகிலும் உன் குரைகழலே கூறுவனே“ என்கிறபடி நின்றான் அவன். நேற்றுவந்த மன்னர்களும் வீடணனைப் போலத் தமக்குப் புகல் கண்ணன் திருவடிகளே என்று துணிந்து பள்ளிக் குட்டில் கீழே சங்கம் இருந்தனர் எனலாம். இல்லையேல் இழந்த நாட்டைமீட்டும் தந்து போங்கள் என்றாலும் போகாதிருப்பர்களா? இவர்களைப் போல நாங்களும் பிறந்த இடத்திற்கும் ஆகாதபடி வந்துளோம். கடைக்கணித்து அருளவேண்டும் என்கிறார்கள் ஆயர்சிறுமியர்கள்.

போரில் தோற்றவர்கள் கண்ணனுக்கு எதிரிகள் தாமே கண்ணனும் அவர்கட்கு மாற்றான் இல்லையா? அப்படியிருக்கும் போது, “மாற்றான் கட்டில் குழே“ என்றல்லவா ஆய்ச்சியர்கள் சொல்ல வேண்டும். அதை நீக்கி நின் பள்ளிக்கட்டில் கீழே“ என்னலாமா? கண்ணன் வந்தவர்கட்கு ஆயர் புத்திரனாகப் படவில்லை. அருந்தெய்வம் எனவே கண்டு நின்றனர். அப்போது அவன் “சர்வலோக சரண்யன்“ இல்லையா? அனைத்துலகும் வந்து அடிதொழும் சீர்மையன் அவன். அவனை மறந்து உலகியல் பற்றோடு மற்றவற்றிற்கு அடிபணிந்து நினறதே நமக்கு இழப்பு. இப்போது அது நீங்கி வகுத்ததான உரியவள் காலிலே வந்து விழுந்து சங்கம் இருக்கிறார்கள் எதிரிகள். இதனால் தங்களோடு ஒத்த பான்மையராகக் கருதி “நின்பள்ளிக்கட்டில் கீழ்“ என்றார்கள். எம்பெருமான் அடியார்கட்கு எதிரிகளை தம் விரோதிகளாக்குவது போல, அடியார்களும் பக்வத்விரோதிகளையே தன் எதிரிகள் என்று கருதுவர். “பகவத் விரோதிகள் அது நீக்கி இறைவன் அடி பணியத் தொடங்கிவிட்டால் தொண்டர் குலத்தவராகி பாகவதர்கட்கு மிக வேண்டியவராக அவரால் அபிமாணிக்கப் பெறுவார்கள் என்கிற சாஸ்திரார்தம் இதனால் நன்கு அறியக்கிடக்கிறது.

தோற்றவர்கள் வென்றவரடிபணிந்து ஏவல் கேட்பது என்பது உலகியல். அதற்காக பள்ளிக்கட்டில் கீழ் அந்தரங்க ஏவல் செய்ய வேணுமா? என்று தோன்றும். எங்கும் ஏவல்கேட்டுச் செய்யலாம். புறம்பே செய்கிறபோது இவர்கள் ஒரு காலம் உலகாணட மன்னர்கள் எனக் காணப்பட்டு, இழிதகவுக்கு உள்ளாக நேரிடும் என்ற அவர்கள் கருத்தால் பள்ளியறை ஏவல் செய்ய மனமுவந்து இசைந்து நிற்கிறார்கள் என்றபடி. ஒருவர் இருவர் என்றில்லாதபடி தோல்வியுற்ற பலரும் ஒருவருக்கு ஒருவர் தெரியாமல் அடிபணியும் நோக்கத்தோடே திரண்டுநிற்பதால் “சங்கம் இருபார்போல“ எனப்பட்டனர். சங்கம் ஒத்த கருத்துடையார் பலரும் கூடியிருக்கும் இடம் “மன்னர் அபிமான பங்கமாய், வந்து உன் பள்ளிக்கட்டில் கீழே சங்கம் இருப்பார் போல்“ என்கிற உவமைக்கு வ்வளவு பொருத்தமுண்டு.

தோற்றவர்கள் போல, என்றால் வந்தமைக்கும் அடிபணிந்ததற்கும் மட்டுமே அவர்கள் பொருத்தம் ஆவர். எனினும் வேற்றுமைகள் பல உண்டு. எதிரிகள் கண்ணனது வில்லாண்மைக்கும் வீரத்திற்கும் தோற்றவர்கள். இவர்களோ அவனது அழகிற்கும் குணநலங்கட்கும் தோற்றவர்கள். அவர்கள் காப்பான போக்கும் புகழுமற்று மீண்டவர்கள். இவர்களது நிலை அப்படியில்லை. போக்கும் புகலும் இயல்பாக அமைந்திருந்தும் அவற்றை வேண்டாம் என்று வெலுத்து வந்தவர்கள். மேலும் எதிரிகள் வந்தடைந்தது உயிர்ப்பிச்சை பெறும் பொருட்டு, இவர்கள் விரும்பி வந்தது அவனைக் கொண்டு பிறிதொன்று பெறுவதற்காக இல்லை. அவனையே அடைந்து என்றும் பிறந்து பிரியாத பெருவாழ்வு பெற்றுயர்வதற்காக, இப்படி எல்லாம் ஆயர் சிறுமியர்கள் வந்த்தில் ஒற்றுமையும் வேற்றுமையும் சுட்டி, முடிவுகட்டிப் பேசினர்.

சங்கம் இருப்பார்போல் வந்துதலைப் பெய்தோம். இதில், வந்து தலைப்பெய்தோம் என்றதனை, வந்தோம் தலைப்பெய்தோம் எனப் பிரித்துப் பொருள் கொள்ளுதல் தகும். கண்ணனை ‘அருந்தெய்வமாய் மாயன் என்றும், அவனே தங்களை முன்னேற்றுவதன் பொருட்டு, இங்கு வந்து ஆயர் குடியில் வளர்ந்து வருகிறான் என்றும்., கண்டறிந்தவர்கள் ஆயர் சிறுமியர்கள். அவனை அடைதற்கு பிரமன் இந்திரன் முதலான தேவர்கள் எல்லாம் பல ஊழிகள் தவம் செய்தும் காணமுடியவில்லை என்றும் கேட்டறிந்தவர்களும் ஆவர். அப்படிப்பட்டவனை எடுத்த இப்பிறப்பிலேயே கண்டு கூடப் பெற்றவர்கள். தாங்கள், என்கிற பெருமை நோக்கி “வந்தோம்“ என்கிறார்கள். பின்னிட்டு “பிறவிப் பெறும்தனைப் புண்ணியம் யாமுடையோம்“ – என்று பாராட்டுவதும் இம்மகிழ்ச்சிப் பெருக்கத்தால் தானே அல்லவா? தலைப்பெய்தல் வந்து கூடுதல். இறைவனை அடைய விரும்பிய அடியார்கள் பலர். பலபிறவிகளும் அது கிட்டாமையால் “எஞ்ஞான்று தலைப்பெய்வனே“ என ஏங்குவர். இவ்வாயர் சிறுமியர்கட்கோ அது தானும் இன்றி எளிதில் இப்பிறவியிலேயே கிட்டுகிற மகிழ்ச்சி பொங்க- “வந்து தலைப் பெய்தோம்“ என்கிறார்கள். அது போக, வீடு வீடாகப் பல மகளிரை சென்று எழுப்பிய வருத்தமும், துர்ந்து, நேரில் கண்ட்டைந்த மகிழ்ச்சியின் வெளியீடுமாம்.

இங்ஙனம் ஆயர் சிறுமியரது நடை உடை பாவனைகளை எல்லாம் கண்டு வியந்தான். பேசிய பேச்சுக்களையும் கேட்டு மகிழ்ந்தான். உடனே அவர்களைப் பார்த்துப் “பெண்காள்! உங்களிடம் நிறைந்தஞானம். முதீர்ந்த பக்தி. சிறந்த வைராக்கியம் யாவும் இருக்கக் கண்டேன். இதனால், நீங்கள் வேண்டியதெல்லாம் அடைந்து விட்டீர்களே? இன்னும் வேறு குறை என்ன இருக்கிறது சொல்லுங்கள் கேட்போம்“ என்று கேட்டு நின்றான். இவைகள் யாவும் உன்னை அடைய வேண்டுவார்க்கு இருக்க வேண்டிய பண்பு நலங்களே தவிர, இவைகளே ஒருவர் அடைய வேண்டியவை என முடிந்த முடிவாகக் கூற இயலுமா? அடைய வேண்டியதை அடைவரு அல்லவா “பிராப்திபலன்“ எனத்தகும். எங்கட்கு அடையத்தக்க முடிவு எல்லாம் உன்னை உன்னால் அடைதலே ஒழியப் பிறதில்லை. உன்னைக் கொண்டு மற்றை பொருள்களை விரும்புமவர்களும் இல்லை நாங்கள். உன்னை வேறு ஒரு உபாயத்தால் பெறக்கூடியவர்களுமில்லை நாங்கள். இங்ஙனம் பிரபத்தி நெறி பற்றியுள்ள எங்கட்கு நீயே கதி. நீயே அடைதற்கு உரியவன்“ என்று பதில் இறுத்தார்கள். அது கேட்ட அவன் அப்படியானால் நான் செய்ய வேண்டியது என்ன? சொல்லுங்கள் எனக் கேட்டு நின்ற அவனிடம், அவர்கள் மேலும் சொல்லுகிறார்கள்.

“எம்பெருமானே! உயர்வு அற உயர்நலம் உடையவன் நீ“ உயர்நலமாவது எண்ணில் பல் குணங்கள். அவற்றுள் வடிவழகு குணவழகு இரண்டும் உனக்கு உண்டு. குணங்களுக்குள் ஒன்று சௌலப்பம். அதாவது தன்னை மிகவும் தாழவிட்டு அடியார்க்கு எளியனாய்ப் பரிமாறி நிற்கும் பெருங்குணம். எங்கள், ஆய்க்குலத்தோன்றி எளியனாய் காட்சிதரும் ஒன்றே அதனை மெய்ப்பிக்கும். இந்தக் குணம் ஒன்றிலேயே நாங்கள் ஆழங்கால் பட்டோம். தோற்று நின்றோம். உனக்கும் அடிமையானோம். அம்புக்குத் தோற்றோர் போரில் அழிந்தாவது பிழைக்கலாம். குணமோ எங்களை அப்படி விடுவதில்லை. உயிர்க்கொலையாய் இருக்கவைத்துக் கொல்லுகிறது. “நினைவரும் குணங்கொண்டு அன்றோ இராமன் மேல் நிமிர்ந்த காதல்“ – என்பர். அதுபோல அக்குண ஈடுபாடு எங்களை உன் காதலிலே ஆழப்பதிய வைத்துள்ளது. எங்கள் ஸ்வரூபத்தை நினைத்தால் பெண் இயல்பு இருந்த இடம்விட்டு நகர ஒட்டாது. உன்னை பிரிந்த ஆற்றாமைஅயா ஓரிடத்தில் இருக்க ஒட்டவில்லை. இப்படி இரண்டும் கேட்ட நிலையில் தடுமாறுகிறோம். “காதல் கடல்புரைய விளைவித்த காரமர்மேனி வண்ணன்“ என்கிறபடி இக்காதல் நோய் நீ தர வந்தது. ஆக நீயே நீக்கினால் அன்றிப் போகாது. உன்னை அடையத் தடையாயுள்ளன எங்கள் மேலுள்ள பாபங்களும் சாபங்களும் அவ்விரண்டும் உன் கடைக்கண் பார்வையாலேயே போகும். தாமரைப் பூப்போன்ற உனது கண்களால் சிறிது சிறிதாக விழித்துப்பார். எங்கள் பாவம்எல்லாம்கழியும். இது ஒன்றே நீ செய்ய வேண்டுவதுநீ தந்த துயரம் உன்னால் தானே தீரும்“ – என்று?

“கிண் கிணி வாய்ச் செய்த தாமரைப் பூப்போலே செங்கண், சிறுச்சிறிதே எம் மேல்விழியாயோ“ – இப்படிச் சொல்லி ஆயர் சிறுமியர்கள் கண்ணனை வேண்டுகிறார்கள். கிண்கிணி என்பது குழந்தைகள் காலில் அணியும் சதங்கை. அது உள்ளே உருண்டை மணியும். அது தெரியும்படி வாய்திறந்த அரைக்கண்ணுமாய் இருக்கும். இதுபோலே உள்ளதாம் கண்ணனது திருக்கண்கள். நமக்கு எல்லாம்தமோகுண மேலிட்டால் வரும் மெய்ம்மறந்த உறக்கும். எம் பெருமானுக்கோ அப்படியிராது. உறங்கும் காலத்து, ‘அடியார்கள் துயரை நினைத்து எப்பொழுது அழைப்பார்களோ? அப்போது சென்று உதவ வேண்டும் என்ற கருத்திலே அரைவிழி விழித்துக் கொண்டே உறங்குவனாம்“. உறங்குவான் போலே யோகு செய்த பெருமான்“ என்று பாசுரம்“, அடியார்க்கு என் செய்வம் என்ற இருத்தி“ என்கிறபடி அவனது அறிதுயில் எனப்படும். இது கருதியே “கிண்கிணி வாய்போலேயுள்ள கண்“ எனப்பட்டது. கண் இமைகள் முழுதும் முடியிராமல் அரை விழி விழித்து, உள்ளுள்ள கருமணி காட்சி தரும்படியான அழகிய திருக்கண்கள் என்றது கருத்து. அவனது கண்ணழகில் கருத்தோடு ஈடுபட்டபடி இது.

இனி அடுத்த உவமைக்கு வருவோம். தாமரைப்பூப்போலே கண். தாமரைப் பூ சூரீயனைக் கண்டால் அலரும் இல்லையா? அதுபோலே இவனது கண்களும் அடியார்களது முகம் கண்டு மலருமாம். தாமரைப் பூ உவமானம். கண் உபமேயம், செம்மை நிறம் இரண்டுக்கும் இடையே உள்ள பொதுத் தன்மை. பொதுவாக ஒன்ற உவமை கூட்டிப் பேசும் காலத்தில் உவமானமே மேம்பட்டுச் சிறந்த தாயிருக்கும். உவமேயத்தினை அதனோடு ஒப்பிடுவதாலேயே அதற்குச் சிறப்புவரும். ஆனால், கண்ணபிரானது திருக்கண்கள் உபமானம் சொல்லும் தாமரையிலும் மேம்பட்டனவாம். “அப்பொழுது அலர்ந்த செந்தாமரையினை வென்றது, அம்மா“ என்றானே கம்பன். அது போல! ஆக உபமானம் நேர்நிற்கவில்லை. காரணம் தாமரைக்குச் செம்மைநிறம் இறைவன் தந்து அதனால் இயல்பாகவே செந்தாமரை எனப்படும். ஆனால் கண்ணன் திருக்கண்களின் செம்மையோ, அப்படியின்றி அடியார்களது வரவும் முகமும் நோக்கி பேர்ருள் மிகுதியாலே“ வாத்ஸல்யத்தால்“ குதறிச் சிவந்ததாம். இப்படி உவமானம் தன்னளவில் நேர் நில்லாதபடியாலே “தாமரை போல கண்“- என்றுபட்டும் சொல்லாமல் “தாமரைப்பூப் போலே செங்கண்“ என உபமேயத்தைக் கூட்டி கூறினார்கள். “சுட்டுரைத்த செம்பொன் நின் திருமேனி ஒளி ஒவ்வாது“ என்ற பாசுரம் இவ்விடத்துக் கருதுதற்கு உரியது. தாமரைக்கண் என்பது கண்ணனது கண்கட்கு அழுக்கும் இழுக்குமாகும். “தாமரைப்பூப்போல செங்கண்“ என்றே சொல்ல வேண்டும் என்பது கருத்து. ஆண்டாளது உவமைநயம் நனிமிகச் சிறந்ததில்லையா?,

மாட்டின் குளம்படி பதிந்த இடத்திற்கு குளப்பட என்று பெயர். அதிலே கடல்நீரை முழுதும் பெய்துவிட ஆடியுமா? அது போல் ஆயர் சிறுமியருக்கு கண்ணன் முழு நோக்கு முதல் நிலையிலே பொறுக்க முடியாது. அதனால், நாங்கள் பொறுக்கும்படி சிறுகச் சிறுகக் கடைக் கண்ணால் பார். போதும் என்கிறார்கள்- “சிறுச்சிறுதே எம்மேல் விழியாவோ“ என்று“ கோடையால் வாடிய பயிருக்கு பாட்டம் பாட்டமாய் மழை பெய்தால் தானே நல்லது. கடைக்கண் நோக்குப் பழகி வலுவூட்டிய பின்னர் “அங்கண் இரண்டும் கொண்டு நோக்கு“ என வேண்டுவர் அவர்கள். மற்றும் ஒரு நயமும் உண்டு, இங்ஙனம் கேட்டதில் ! கண்ணன் கண்ணழகு மிக்கவன். இவர்களுமே “கிண்கிணிவாய் போலே திறந்த கண்“ – தாமரைப்பூப்போலே சிவந்த கண்“ என்று அதிலே ஈடுபட்டுப் பேசியவர்கள். ஆகையால் – “கண்ணின் கறுமை, புடைபரந்து அகன்ற தன்மை, மாதளவோடிய நீளம், மனம் மயக்கும் ஒளியுடைமை. பெரிய பரப்பளவு. செவ்வரியோடிய பான்மை“ – என்று, எல்லா நலங்களையுமே தொடக்க முதலே கண்டு அநுபவிக்க ஆஐசப்படுகிறவர்கள், ஆன படியாலே சிறுச் சிறுதே விழிக்க “வேண்டுகிறார்கள் – என்றுமாம். “எம்மேல் விழியாவோ என்கிறார்களே தங்கட்கு எனத் தனிப்பெருமை என்ன? என்றால், இவர்கள் வேறு உபாயங்களைப் பற்றிக் கண்ணனை அடையாதவர்கள். அன்றியும், கண்ணனைப் பற்றி வேறு உலகியல் பொருள்களை விரும்பாதவர்கள். இல்லையா? அவனை அவனாயே பற்றிப் பெறவேண்டும் என்ற கோட்பாடு உடைமை அவர்கட்குத் தனி ஒரு பெருமை“ நோக்காவோ“ நோக்கும். நோக்க வேணும் என்று கருத்து.

கேட்ட கண்ணன் சொல்லுகிறான் – “நீங்களோ என்னையே அடைய விரும்புகிறீர்கள். நல்லது, ஆனால் “பகவத்ப்ராப்தி“ என்பது எளிதில் கிட்டுவதில்லை. நான் இசைந்தாலும் உங்களது முன் பிறவிப் பாவங்கள் இடைநின்று தடுத்தால் யாது செய்யமுடியும்?“ என்று. அதற்கு மறுமொழியாக வந்தவர்கள் சொல்லுகிறார்கள். நீ உனது இரு கண்களாலும் நோக்குவையானால், எங்களது பாவமும், எங்கட்கு பிறரிட்ட சாபமும் எல்லாம்கூடக் கழிந்து நலம் தரும். உன் நோக்கு அத்தகையது“ என்று, “திங்களும் ஆதித்தியலும் சேர்ந்தால் போல், அங்கண் இரண்டும் கொண்டு எங்கள் மேல் நோக்குதியேல், எங்கள் மேல் சாபம் இழியும்“- என்றது ஆயர் சிறுமியரது வார்த்தை. திங்கள் சந்திரன் ஆதித்யன் சூரியன், சந்திர சூரீயர்களை ஒத்த திருக்கண்கள் என்றபடி, சூரியனைப் போல ஒளியும் வெப்பம் உடையது ஒன்று. சந்திரனைப் போலக் குளிர்ச்சியும் தருவது பிறிதொன்று. விரோதிகட்கு வெப்பம் தந்து அவர்கட்கு நெருப்பு என்ன நிற்பதால் ஒன்று சூரியனுக்குப் பொருந்தும். “கஞ்சன் வயிற்றில் நெருப்பு என்ன நின்ற நெடுமால்“ – செற்றார்க்கு வெப்பம் கொடுக்கும் விமலா“ – என்றெல்லாம் அவன் பெருமை பேசப்பட்டது அல்லவா? அடியார்கட்கு குளிர்ச்சியும் இன்பமும் தருவது ஆகையால் மற்றும் ஒன்று சந்திரனை ஒப்பது ஆயிற்று. “கதிர் மதியம் போல் முகத்தான்“ என்று, தொடக்கத்தில் சொல்லி ஆசைப்பட்டதைக் காணமகிழுகிறார்கள்.

கண்ணபிரானது திருக்கண்களுக்கு இருவகைக்குணங்கள் ஒன்று சீற்றமும் அழிவும் கொண்டது. பிறிது ஒன்று அன்பும் அருளும் கொண்டது. இரண்டு கண்பார்வைக்கும்நாங்கள் உரியவர்கள் என்கிறார்கள்“ இரண்டும் கொண்டு எங்கள் மேல் நோக்குதி என்று! கண்ணனோடு கூட வொட்டாது இடையூறாக நிற்கும் நாடாரைத் தடுப்பதற்குச் சீற்றமிக்க கண். தங்கள்பால் அன்பும் அருளும் பொழிவதற்கு கருணைவிழி. சீற்றம் உள்ள இடத்தில் கருணை இராது. கருணையுள்ள இடத்தில் சீற்றமும் இராது. இறைவனிடம் சேராதது சேர்ந்திருக்கும் வியப்புண்டு. “சீற்றத்தோடு அருள் செய்தவன்“ என்று பாசுரம். நரசிங்கனான போது இரணியன் பக்கல் சீற்றமும் பிரகலாதன் பக்கல் அருளும் செய்தானில்லையா அவன். இடப்பால் முப்பத்திரண்டறம் இயற்ற – இடப்பால் இரத்தல் மாநிலத்து இன்றே“ என்று, சிவபிரானை நோக்கிக் குமரகுருபர அடிகள் கூறியது இக்கருத்தினதே. ஆண்டாளோ சொல்லுகிறாள் பிறிது ஓரிடத்தில் “சிறுபேர் அழைத்தனவும் சீறியருளாதே“ என்று! “அறியாத பிள்ளைகளோம்! ஆயர் சிறுமியரோம். சிறுபேர் அழைத்தோம் தெரியாதபடி, அதற்காக ஒரு கண்ணில் சீற்றமும், மற்றொரு கண்ணில் அருளுமாக இராதே. இரு கண்ணாலும் குளிர நோக்கு“ – ஸிம்ம்ம் “ஆணையோடே பொரா நின்றாலும் தன் குட்டிக்கு முலைக் கொடுக்குமா போலே“ என்று, பட்டர் என்கிற வைணவப் பெரியார் அமைதி சுட்டுவாராம். !

இறைவனை பார்த்து நோக்கு, என்று கட்டளையிடுவது தகுதியற்றது. ஆகையால் “நோக்குதியேல்“ என்கிறாகள். அவன் தலையாலே பெற வேண்டியிருப்பது அது. ஆகையாலே சாபம் துய்த்துக் கழிக்க வேண்டுவது தவிர போக்குதற்கு அரியது. அதுபோல, பிரிவாற்றாத துயரும் அநுபவித்தே தீரவேண்டியது ஆகையால் அதனைச் “சாபம்“ என்றே கருதுகிறார்கள். எங்கள் மேல் சாபம் என்கிறார்களே அது தனியா, என்னால், பிறரிட்ட சாபங்கள் இறைவன் கடைக்கண் நோக்கினால் தீரும். எங்கள் சாபமோ நீ அநுபவித்துப் போக்கினால் அல்லது தீராது“ என்கிறபடி உள்ள கடுமை நோக்கி, “பிரும்மசாபம் மார்பின் வேர்ப்பாலே போக்கலாம். கவுதம சாபம் காலில் பொடியாலே போக்கலாம். தக்ஷசாபம் ஒரு தடாகத்திலே முழுக்கிட்டுப் போக்கலாம். எங்கள்மேல் சாபம் போக்க இத்தனையும் வேண்டும். நீ வேர்த்து நின்று விளையாடக் காண வேணும். எங்கள் மேல் நோக்க வேணும். பொடி தான் கொணர்ந்து பூசவேணும். இப்போதே எம்மை உன்னோடு நிராட்டவேணும்“ என்றது இவ்விடத்து பூர்வீகரது வியாக்யான வாக்கியம்.

இறைவனிடம் “சரணாகதி“ செய்கிறவன், தன் பக்கல் ஒன்றும் இல்லாமையை நினைக்கவும், தொடக்க முதல் இறைவனே கதி என்று போக்குப்புகலு அற்ற தன்மையைக் கருதவும் வேண்டும். இறைவனும் எல்லாவற்றையும் தன் தலைப்பாதமாக ஏற்றுக்கொண்டு, இவன் காத்திருக்க வேண்டாதபடி, அனைத்தினையும் தலைக்கட்டிக் கொடுப்பவன் என்கிற பேருண்மையை இப்பாசுரப்பகுதி நமக்கு உறுதிப் படுத்துகின்றன எனலாம்.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *