POST: 2018-01-08T10:41:44+05:30

திருப்பாவை பேருரை
••••••••••••••••••••••••••••••••
பத்மஸ்ரீ முனைவர் ஔவை நடராசன்
==================================
பாடல் – 24
=========

‘இரண்டு சேனைகளுக்கும் நடுவே தேரை நிறுத்து’ என்று அர்ச்சுனன் ஒருவன் சொல்லக்கேட்டு – அப்படியே செய்தவன், அவனிலும் அன்புமிக்க ஆயிரக்கணக்கான கோபியர்கள் ‘இங்ஙனே போந்தருளி… அருள்’ என்றால் அவர்களின் சொல்லைத் தட்டுவானோ? திருப்பள்ளியிலிருந்து புறப்பட்டுச் சீரிய சிங்காசனத்தளவும் நடையிடத் தொடங்கினான் கண்ணன். அக்காட்சி கண்ட கோகுலத்துச் சிறுமியர்கள் அவனுக்குப் பல்லாண்டு பாடிய பெரியாழ்வாரைப் போலவே, ‘போற்றி போற்றி’ என்று கொண்டாடத் தொடங்குகிறார்கள். இப்பாடலில் வரும் ‘போற்றி’ என்பதற்குப் ‘பல்லாண்டு’ என்பதே பொருள். இங்ஙனம் பல்லாண்டு கூறுதல் வைணவ மரபில் ‘மங்களாசாசனம்’ எனப்பெறும்.

ஆயர்சிறுமியர் இப்பாசுரத்தில் தங்களுக்காகத் தன் சீல குணமும் வடிவழகும் விளங்கப் பத்தெட்டு அடிகள் நடந்து வருவதைக் கண்டவுடனேயே பொங்கும் பரிவினால் அவனுக்குப் பல்லாண்டு பாடுகிறார்கள். முன் நடந்த நிகழ்ச்சிகளை நினைந்து, ‘ஐயோ! இவனுக்கு என் வருகிறதோ?’ என்று வயிறுபிடித்து (கலங்கி), தண்ணீர் சென்ற பின்பு அணைகட்டுவது போலே அவனுக்கு மங்களமுண்டாகட்டும் என்று மனமிரங்குகிறார்கள். பெரியாழ்வார் பெற்ற பெண் பிள்ளையாகையாலே ஆண்டாளுக்கு இங்ஙனம் போற்றி! போற்றி! எனல் இயல்பாயிற்று; குடிப்பிறந்த குணமாயிற்று – என்பர் உரைகாரர் (வ்யாக்யாதா).
முந்துறமுன்னம், ‘அன்று இவ்வுலகம் அளந்தாய் அடிபோற்றி’ என்கிறார்கள். முன்னொருநாள் மாபலியிடமிருந்து பு+மியைத் தானமாகப் பெற்றுக் காடு மேடெல்லாம் அளந்த மெல்லிய திருவடிகளுக்கு இப்போது பல்லாண்டு பாடுகிறார்கள். திருவுலகு அளந்தருளின அன்று, இந்திரன் தனக்குரிய பு+மியைப் பெற்றுப் போனான்; மாபலி ஔதார்யம் (வள்ளன்மை) உடையவன் என்னும் பேர் பெற்றுப் போனான். நாங்களோ அன்றைக்கு இருந்து பல்லாண்டு பாடப்பெறாத பாவம் தீர, இன்றைக்கு உன் திருவடிகளைப் போற்றிப் பாடுகிறோம் என்கிறார்கள். கைக்குழந்தைக்குத் தாய் முலைபோன்றது அடியார்க்குத் திருவடியாதலின் அதனை முதலிற் பற்றுகிறார்கள்;; போற்றி, மங்களாசாசனம் செய்கிறார்கள். அடுத்து, அழகுக்கு இலக்கு ஆகாதாரை அம்புக்கு இலக்கு ஆக்கிய தீரத்தில் ஈடுபட்டு, ‘தென்னிலங்கை செற்றாய் திறல் போற்றி’ என்கிறார்கள். புலிகிடந்த தூற்றினை நோக்கிச் செல்லுதல் போலப் பகைவன் இருந்த தேசமான இலங்கையை நோக்கிச் செல்வதே என்று பரிவு கொள்கிறார்கள். பிராட்டியைப் பிரித்த பையல் இருந்த இடத்திற்கே சென்று குளவிக்கூட்டை அழித்ததைப் போல அவன் நாட்டை அழித்த ஆற்றல், ‘சென்று’ என்னும் ஒரு சொல்லிலே தேக்கிட்டுக்கிடக்கிறது.

‘செற்றார்’ திறல் அழியச் சென்று செருச் செய்யும்’ (பாவை 11) உத்தம வீரலட்சணத்தை அது காட்டுகிறது. இப்படி இலங்கை பாழாளாகப் படைபொருதானுக்குப் பல்லாண்டு கூறியவர்கள், அடுத்துச் சகடாசுரனை அழித்த கிருஷ்ணாவதாரத்தில் ஈடுபடுகிறார்கள். இராவணனைப் போலன்றி பகைவன் என்பதே தெரியாதபடி சகடமாய் வந்து நின்ற அசுரன் அவன். தாயும் உதவாத நிலையில் முலைவரவு தாழ்த்ததென்று மூரி நிமிர்த்த திருவடிகளால் அவனை உதைத்து அழித்தான் குழந்தைக் கண்ணன். மாரீசனைப் போலே குற்றுயிராக்கிப் பின்னர்க் கேட்டினை விளைக்க ஒண்ணாதபடி, விளையாட்டாகப் பகையை அழித்த புகழ் உடையன அத்திருவடிகள். எனவே, ‘பொன்றச் சடகம் உதைத்தாய் புகழ் போற்றி’ என்கிறார்கள். பின்னரும் ‘கன்று குணிலா எறிந்தாய் கழல் போற்றி’ எனத் தொடர்கிறது பல்லாண்டு இசை. எதிரியாக வந்த கன்றையே எறிதடியாகக் கொண்டு, விளமரமாய் நின்ற அசுரன் மேல் எறிவதற்கு வாய்ப்பாக மடக்கி நின்ற திருவடிகள் அல்லவோ அவை! எனவே பாசுரத்தின் முதலடியில், ‘அடிபோற்றி’ என்று உலகினை அளக்க நீட்டின திருவடிகளுக்குப் பல்லாண்டு பாடியவர்கள், இங்கு மடக்கின திருவடிகளுக்குப் பல்லாண்டு பாடுகிறார்கள். ஆதலின் இது கூறியது கூறலன்று. அன்றியும் அவன் காலில் வனைந்த கழலுக்குப் பல்லாண்டு கூறியதாகக் கொள்வதும் பொருந்தும். அதன்பின்னர்க்; குன்றினைக் குடையாக எடுத்த குணம் பேசப்படுகிறது. என்ன ‘குணம்’ இங்கே? அனுகூலனான இந்திரனும் பகையாகிப் பெருமழை பொழியச் செய்த போது தனக்கு அவன் செய்த துன்பத்தைத் தான் தாங்கிக் கொண்டு, கருணையினால் அவனை ஒன்றும் செய்யாமல் குன்றைக் குடையாக எடுத்தமையே இங்குக் குணமாயிற்று. இதனையே ‘வெற்பெடுத்த அம்மான் சீர்’ என்று நம்மாழ்வாரும் ‘பாயும் பனி மறைத்த பண்பு’ என்று பொய்கையாழ்வாரும் பேசக் காணலாம். ‘தமர் தற்றப்பில் அது தான் நோன்றல்’ என்று புறநானூறும் (157) இக்குணத்தினைக் கொண்டாடும்.

நிறைவாக எல்லாப் புகழையும் இவனுக்கே ஏற்றினால் அது கண்ணெச்சில் ஆகிவிடுமே என்று நினைத்து, கிருஷ்ணாவதாரத்தில் செய்த செயல்கள் யாவும் அவன் வேலே செய்தது என்னும் கருத்தில், ‘வென்று பகை கெடுக்கும் நின் கையில் வேல் போற்றி’ என்கிறார்கள். இப்படி உன் வீரச் செயலையே பாடிப்பாடி நோன்புக்கு வேண்டிய பறையைப் பெற்றுக் கொள்வதற்காக நாங்கள் வந்தோம்.

பல்லாண்டு பாடும் பணியே பணியாய்க் கொண்ட எங்களிடத்து நீ மனமிரங்காயோ – என்று இப்பாசுரத்தைத் தலைக்கட்டுகிறார்கள்.
நாலாயிரத்தில் ‘போற்றி போற்றி’ என வரும் பாசுரம் இது ஒன்றே ஆகும். முதல் ஆறு அடிகளில் வரும் ஆறு போற்றியும் நாவுக்கு அறுசுவைபோலே ஆயிற்று என்பர் பெரியோர்.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *