POST: 2018-01-09T05:54:41+05:30

திருப்பாவை பேருரை
••••••••••••••••••••••••••••••••
பத்மஸ்ரீ முனைவர் ஔவை நடராசன்
==================================
பாடல் – 25

பெண்களே! எம் வெற்றிக்குப் பல்லாண்டு பாடிய நீங்கள், முடிவில் பறைகொள்வதற்காக இன்று வந்தோம் என்றீர்களே! இது சேராச் சேர்த்தியாயிருக்கிறதே! உங்கள் நெஞ்சிலோடுவது வெறும் பறையோ? வேறேதேனுமுண்டோ? என்று வினவ, ‘பறை என்பது ஒரு காரணமே; உண்மையில் உன்னிடத்து உன்னையே ஆசைப்பட்டு யாசித்து வந்தோம்’ என்று கோபியர்கள் கூறவும், ‘உங்கள் விருப்பத்தை நிறை வேற்றுவதில் சில தடைகள் இருக்கக் கூடுமே’ என்றான் கண்ணன். ‘பெரிய தடைகளையும் எளிதிற் போக்கவல்லவனாகிய உனக்குச் சிறு தடைகளை அகற்றுவது கடினமன்றே. ஆகவே அவற்றையும் நீயே போக்கி எங்களை அருளுடன் நோக்க வேண்டும்’ என்கிறார்கள்.
“ஓர் இரவில் தேவகி என்னும் ஒருத்திக்கு மகனாகப்பிறந்து, மற்றொருத்தியாகிய யசோதைக்கு மகனாய் ஒளித்து வளர்ந்தவன், நீ, அவ்வாறு வளர்வதையும் பொறுக்க மாட்டாதவனாய், ‘உன்னைக் கொல்ல வேண்டும்’ என்னும் தீய நினைப்புடையவனானான் கஞ்சன். அவனது எண்ணத்தைப் பழுதாக்கி அவன் வயிற்றில் நெருப்பு என்னும் படி நின்ற நெடுமாலே! அடியவரிடத்துப் பெருங் கருணைகொண்ட பெருமானே! உன்னிடத்தில் எங்களுக்கு வேண்டியவற்றை இரந்து கொண்டு வந்தோம். எங்களது விருப்பத்தை நிறைவேற்றுவாயாகில் – பிராட்டியும் ஆசைப்படத்தக்க உன் செல்வத்தையும் பெருவீரத்தையும் நாங்கள் பாடி, உன்னைப் பிரிந்து படும் துக்கமும் நீங்கி மகிழ்ந்திருப்போம் – என்கிறார்கள்.
தேவகி என்பாள் முன்னைய வரத்தால் உன்னையே மணிவயிறு வாய்க்கப் பெற்றாள்; மாயோனே! அங்ஙனம் நீ மகனாகப் பிறந்தமையால் அவளுக்கு அவதார ரசத்தைக் கொடுத்தாய். என்னே அந்த ‘ஒருத்தி’யின் பேறு!
தெய்வ நங்கை யசோதையோ, நீ பிறந்தது முதல் ஏழுபருவமளவும் உன்னைச் சீராட்டி வளர்க்கும் பெருவாய்ப்பினைப் பெற்றாள். அதனால் பன்னிருதிங்கள் சுமந்து பெற்றவளும் பெறாப் பேற்றினை, ‘லீலாரச’த்தை நீ அவளுக்குக் கொடுத்தாய். சேய்வளர் காட்சியின் சீர்மையையும் உன் குழந்தைப் பருவத்து விளையாட்டு இனிமையையும் கண்டு கண்டு ‘ஏரார்ந்த கண்ணி யசோதை’ ஆனவள் அவளே அல்லவா? என்னே அந்த ‘ஒருத்தி’யின் பேறு!
முந்தைய இரவுப் பொழுதுகளைப் போலன்றி நீ அவதரித்தற்குரியதாய் அமைந்த அந்த இரவும் ஓர் இரவே! ஒப்பற்ற இரவன்றோ அது!
இங்ஙனம் ஒருத்தி மகனாய்ப்பிறந்ததையும் மற்றொருத்தி மகனாய் மறைந்து வளர்ந்ததையும் அவன் அவதரித்த ஒப்பற்ற பொழுதாக அந்த இரவு இருந்ததையும் எண்ணி, எண்ணி ‘ஒருத்தி மகனாய்ப்பிறந்து ஓரிரவில் ஒருத்தி மகனாய் ஒளித்து வளர’ என்று கொண்டாடுகிறார்களாம்.
இனி, ‘இன்னாள்’ என்று பெயர் சொன்னால் பகைவர்களால் தீங்குண்டாகுமோ? என்று நினைத்து, ‘ஒருத்தி’ என்று மறைத்தும், பிறந்த இடத்தில் தங்கவொட்டாது அலைத்த இரவு ஆதலால், ‘ஓரிரவு’ என்று வெறுத்தும் கூறியதாகக் கொள்வதும் உண்டு.
‘மாதுலனாகியும் ஏதிலனாகிய’ கம்சன், மறைந்து வளர்;வதையும் பொறுக்கமாட்டாதவனாய்க் கண்ணனைக் கொல்ல நினைத்தான். அடுத்தடுத்து அசுரர்களை அனுப்பி வைத்தான். ஆய்ப்பாடி முழுக்க அசுரப்பு+ண்டுகளே. அந்தக் கொலைச் செயலை நாவினால் கூறவும் நடுங்கி, ‘தீங்கு நினைந்த’ கஞ்சன் என்கிறார்கள். அந்தக் கஞ்சனின் நினைப்பெல்லாம் அவனோடே நீங்கும்படி (அவன் நினைப்புத் தப்பும் படி) அவன் வயிற்றில் நெருப்பைப்போல் நின்றானாம் நெடுமால். அன்புடையவருக்குச் சாலக் குளிர்ந்த நீரினைச் சொரியும் காளமேகம் இவனுக்கு மட்டும் சுடுநெருப்பினைச் சொரிந்தது எப்படி? அந்த நெருப்பு எங்கிருந்து பிறந்தது? இவனிடத்தில் அன்புடையார் அடுக்கடுக்காய் இவனுக்கு வரும் தீங்குகளைக் கண்டு கொதிக்க – அவர் வயிற்றிற் பிறந்த நெருப்பையெல்லாம் கஞ்சன் வயிற்றில் புகும்படி செய்தானாம். அவ்வாறு அவன் செய்தது அடியவரிடத்துக் கொண்ட பெருமோகத்தினால் என்பதை, ‘நெடுமாலே’ என்பதால் உணர்த்துகின்றனர். இப்படிப் பிச்சேறின உன்னைப் பின்னும் பிச்சுக் கொள்ளுமாறு செய்து உன்னிடத்தில் உன்னையே யாசித்து வந்தோம். நெடுமாலே, எங்களுடைய விருப்பத்தை நீ நிறைவேற்றுவாயாகில் (பறைதருதியாகில்) திருவும் விரும்பத்தக்க உன் செல்வத்தையும் எதிரிகளும் மேலெழுத்திட்டுப் போற்றுகிற உன் பெருவீரத்தையும் புகழ்ந்து பாடுவோம்; அதனால் உன்னைப் பிரிந்த துக்கம் தீர்ந்து நாங்கள் மகிழ்ந்திருப்போம் – என்கிறார்கள்.
வருத்தம் தீருகைக்குச் சேவகம் பாடினார்கள்; மகிழ்ச்சி பிறக்கைக்குச் செல்வம் பாடினார்கள் – என்று விளக்கம் தரும் ஆறாயிரப்படி.
யாம்பாடி – உன்னைப் பிரிந்துபட்ட விசனமெல்லாம் தீர்ந்து, பொங்கும் மகிழ்ச்சிக்குப் போக்கு வீடாகப்பாடி மகிழ்வோம் என்றவாறு.
‘ஒங்;கி உலகளந்த உத்தமன் பேர்பாடி’ (3) ‘வாயினால் பாடி’ (5) ‘பாடிப்பறை கொண்டு’ (8) ‘முகில்வண்ணன் பேர் பாட’ (11) ‘மனத்துக்கினியானைப் பாடவும்’(12) ‘கீர்த்திமை பாடிப் போய்’ (13) ‘பங்கயக் கண்ணானைப் பாட’ (14) ‘மாயனைப் பாட’ (15) ‘துயிலெழப்பாடுவான்’ (16) எனப் பலவிடத்தும் அவர்களுக்குப் பாட்டே ‘தாரகம்’ (வாழ்முதல்) ஆதல் காண்க. பாட்டினால் – அவன், அவர்களின் நெஞ்சத்து இருந்தமை காட்ட (1746) அவனைக் கண்டு மகிழ்ந்தவர்கள் அல்லவோ அவர்கள்!

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *