திருப்பாவை பேருரை
••••••••••••••••••••••••••••••••
பத்மஸ்ரீ முனைவர் ஔவை நடராசன்
==================================
பாடல் – 27
========
தன்னிடம் வேண்டியன பெற்று மகிழ்ந்த ஆய்ப்பாடிப் பெண்களை நோக்கி, ‘இந்நோன்புக்குப் பிறகு நீவிர் பெறும் பேறு யாது? என்று வினவினான் கண்ணன். அதற்கு அவர்கள் கூறும் விடையாக அமைவதே இப்பாசுரம்.
உன்னொடு கூடாத பகைவரை வெல்லும் குணத்தையுடைய கோவிந்தனே! நீயும் நாங்களும் கூடியிருந்து மனம் குளிர்ந்து இருக்கையில் நாட்டார் கொண்டாடும் தன்மையாகக் கைகளில் அணியும் சூடகம், தோள்வளை, தோடு. செவிப்புர காலில் அணிவதான பாடகம் என்று சொல்லப்படும் அவை போன்ற பல ஆபரணங்களை (நீயும் நப்பின்னையும் அணிவிக்க) நாங்கள் இனிதாக அணிந்து கொள்வோம். அவ்வாறே உங்களால் அணிவிக்கப்பட்ட பட்டாடைகளையும் உடுத்துக் கொள்வோம். அதன் பிறகு நீரிலே ஆக்காதே பாலிலே ஆக்கிய சோறு மூடும் படியாக நெய்யை நிறைய விட்டு – முழங்கை வழியே ஒழுகுமாறு உண்போம்; உபேயமான (அடையத்தக்கவனான) உன்னைப் பாடுவதே பயனாக வாயாரப்பாடி நோன்பினுக்கு வேண்டிய பறையைப் பெற்றுக் கொண்டு இந்நோன்பினைத் தலைக்கட்டுவோம். நாங்கள் அடைய விரும்பிய சம்மானங்கள் இவையேயாகும் – என்றனர்.
இப்பாசுரத்தில் பரிசு; பரிசினால் – தன்மை; தன்மையாக என்னும் பொருளிலும் சம்மானம் – பகுமானம் – பரிசு எனும் பொருளிலும் ஆளப்பட்டமை காண்கஸ தொடக்கத்தில் உள்ள ‘கூடாரை வெல்லும்சீர்’ என்னும் தொடர், கூடினவர்க்குத் தோற்று நிற்பவனே! என்ற கருத்தைக் குறிப்பிக்கும். ‘கூடோம்’ என்று இருப்பவர்களையன்றோ நீ வெல்லுவது? ‘கூடுவோம்’ என்று இருப்பவர்களிடம் தோற்பதன்றோ உன் தொழில்!
எனவே நீ எங்களிடம் தோற்று உன் உடைமைகள் அனைத்தையும் எங்களுக்குக் கொடுத்ததில் வியப்பொன்றும் இல்லை. ‘இவன் நமக்கு அனுகூலனாகானோ?’ என்று எதிர்பார்த்து – இராவணனிடம் அங்கதன் முதலானாரைத் தூது விட்டும் ‘இன்று போய் நாளை வா’ என்று கூறியும், இப்படிப் பல செய்தும் வந்து கூடாமையாலன்றோ இராவணனை வென்றான். அவ்வாறே, ‘இவன் காலுக்கருகில் அமரவும் கூடாது’ என்று அகந்தை கொண்ட துரியோதனனைத் தொலைத்தான். ‘நீ சொன்னதைச் செய்வோம்’ என்றிருந்த பாண்டவர்களுக்குத் தன்னையே எழுதிக் கொடுத்து – அவர்களுக்காகத் தூது நடந்தும் தேரோட்டியும் பணிபுரிந்தான்; அவர்களை எல்லிபகலென்னாது எப்போதும் காத்தான். இப்படிக் கூடாரை வெல்வதும் கூடியவர்க்குத் தோற்று நிற்பதும் அவனது சீர்மிகு குணங்கள் அல்லவோ? இவ்வாறு உரைகாரர்கள் உவந்து உவந்து விளக்கம் எழுதும் அழகிய தொடர் இது. மேலும், ‘கோவிந்தா’ என்னும் விளியாலும் இப்பொருளே தோன்றும். ‘கூடமாட்டோம்’ என்ற எண்ணம் இல்லாமலிருந்தாற் போதும். ‘கூடியிருப்போம்’ என்ற எண்ணம் வேண்டுமென்ற கட்டாயம் இல்லை. ‘கூடுவோம்’ என்று சொல்லவும் அறியாதனவாய்ச் செய்ந்நன்றி (உபகாரஸ்ம்ருதி) நினைவுமில்லாதனவாய் இவன் கைபார்த்திருக்கும் பசுக்களிடத்தும் இவனது அன்பு கரை புரண்டிருக்கும் அன்றோ!
நோன்பு நோற்குமுன்பு, ‘நெய்யுண்ணோம் பாலுண்னோம், மலரிட்டு நாம் முடியோம்’ என்னும் விரதங்களை மேற்கொண்டிருந்தவர்கள் அந்நோன்பினைத் தலைக்கட்டியதும் அணிகலன் புரட்டலும் ஆடையுடுத்தலும், நெய்யினால் நிறைத்து மூடப்பெற்ற பாற்சோற்றை உண்ணலுமாகிய இவற்றையே நாடறியத் தாம் பெறும் சம்மானங்களாகக் குறிப்பிடுகின்றனர்.
எனினும் முழங்கை வழியே நெய்யானது வழியும்படியாக – என்று மட்டுமே சொல்லப்பட்டுள்ளது. ‘உண்கை’ என்னும் வினையைச் சொல்லாது விட்டது ஏன்? நம்பி திருவழுதிவளநாடுதாசர் என்பார், ‘இவர்கள் வாயிலே நெய்படாதோ?’ என்று பட்டரைக் கேட்க, ‘கண்ணனிடத்தில் கண்ணையும் நெஞ்சையும் பறிகொடுத்திருக்கும் இவர்களுக்குச் சோறு வாயில் பட்டாலன்றோ நெய் வாயில்படப்போகிறது’ என்று பதிலுரைத்தாராம். கூடியிருந்து பசிதீர்த்தல் அவர்கள் நோக்கமன்று. எல்லாரும் கூடியிருக்கையே நோக்கம்; அதுவே பலனுமாம்.
அவர்கள் கூடிக் குளிர்ந்து என்றது – வாய் அவனைப் பாட வேண்டும்; அதனால் நெஞ்சு குளிர வேண்டும். இந்த நீர்வண்ணாகிற வாசத்தடத்திலே ‘குள்ளக் குளிரக் குடைந்து நீராட வேண்டும்’ என்பதையே இங்கு உணர்த்துகிறார்கள்.
இவ்வாறே ‘சூடகம் முதலாயின அணிவோம்; ஆடையுடுப்போம்’ என்பதற்கு மூலவுரைகள் நயம்பட உரை விரிப்பதை அங்குப் படித்து மகிழ்க.
ஆயர்பாடிச் சிறுமியர் புரட்டிக் கொள்ளும் கலன்களுக்குக் கூறப்படும் உள்ளுறை பொருள் (ஸ்வாபதேசம்) வருமாறு:
தோள்வளை – திருவிலச்சினை; தோடு – திருமந்திரம்; செவிப்புர – துவயம் (இரு தொடர்களால் ஆகிய மந்திரம்) பாடகம் – கீதையில் வரும் சரமஸ்லோகம்.

Add a Comment