POST: 2018-01-12T08:06:30+05:30

திருப்பாவை பேருரை
••••••••••••••••••••••••••••••••
பத்மஸ்ரீ முனைவர் ஔவை நடராசன்
==================================
பாடல் – 28
========

சென்ற பாசுரத்தில் கோபியர் வேண்டுவனவற்றையும் விருப்பத்தையுமறிந்த கண்ணன், ‘அவற்றை நான் தட்டாமல் தருவதற்கு உங்களிடம் சில தகுதிகள் இருக்க வேண்டுமே! அத்தகுதிகளைப் பெற நீங்கள் கடைப்பிடித்த நெறிமுறைகள் (உபாயம்) என்னென்ன? நீங்கள் விரும்பும் பறையைப் பெற என்ன உபாயம் அல்லது சாதனம் செய்திருக்கிறீர்கள்? சாதனத்தை மேற்கொள்ளாமல் சாத்தியத்தைப் பெறமுடியாதே’ என்று வினவினானாம். அதற்குக் கோபியர் கூறும் பதிலே இப்பாசுரம் என்பர்.

குறைவொன்றும் இல்லாத கோவிந்தனே! நாங்கள் கறவைகள் பின்னே சென்று காட்டையடைந்து உண்டு திரிவோம்; உடம்பை வளர்ப்போம். எங்களிடம் எந்தப் புண்ணியமும் இல்லை. எனினும், சிறிதும் அறிவற்ற (இடக்கை வலக்கை அறியாத) இடைக்குலத்தில் பிறந்து, உன்னை எங்கள் பிறவியாகப் பெறும் புண்ணியமுடையவர்களாயிருக்கிறோம். எம்பிரானே! உன்னோடு எங்களுக்குள்ள இந்த உறவானது இங்கு உன்னாலும் எங்களாலும் ஒழிக்க முடியாது; என்றும் நிங்காது நிலை பெற்ற உறவு இது. உலகவழக்கு ஒன்றும் அறியாத சிறுமிகளான நாங்கள் உன்னிடத்துள்ள அன்பினால் உன்னைச் சிறுபேரினையிட்டு அழைத்தது குறித்தும் நீ கோபித்தருளாதே. சினவாமல் அருள்கொண்டு எங்கள் நோன்புக்கு வேண்டிய பறையைத் தருவாயாக – என்கின்றனர்.

யாதோருபாயமும் தங்களிடத்தே இல்லை (உபாயசூந்யதை) என்பதை இப்பாட்டாலே தெரிவிக்கிறார்கள்.

பசுக்களைக் காப்பதனால் பால் தயிர் போல்வன உண்ணக் கிடைக்குமென்று அவற்றின் பின்னே சென்று மேய்க்கிறோமே தவிர ஆநிரை காத்தல் குலதருமம் என்று நாங்கள் நினைக்கவில்லை. பசுமேய்த்தலைக் காரணமாகக் கொண்டு திருமலை முதலான திவ்ய தேசங்களிலே சென்று நாங்கள் தங்கியதுமில்லை. திவ்யதேச வாசத்தாலான புண்ணியத்தையும் நாங்கள் பெறவில்லை. உண்பதில் கூட எங்களிடத்தே ஓர் ஒழுங்கு (நியமம்) இல்லை. பசுக்களின் பின்னே செல்வதால் அவை நின்றால் நிற்பது, சென்றால் செல்வது என்பது வழக்கமாகி விட்டது. அறிவொன்றும் இல்லாதவர்களாதலால் ஞானயோகம் போன்றவற்றிற்கும் எங்கள் வாழ்க்கையில் இடமில்லை – என்கிறார்கள்.
‘அப்படியானால், உங்களைக் கைவிட வேண்டியது தானோ?’ என்று கண்ணன் கேட்கவும், ‘அறிவொன்றும் இல்லாத ஆய்க்குலத்தவராகிய எங்களின் குலத்தில் நீ பிறக்குமளவுக்கான புண்ணியம் எங்களுக்குண்டு. அதை நீ மறந்து விடாதே. மேலும் நீ குறைவொன்றும் இல்லாதவனாயிருக்க, நாங்கள் அறிவொன்றும் இல்லாதவர்களாயிருக்கிறோம்;

நம்மிருவர்க்குமிடையிலான இப்பொருத்தத்தை நீ அறிந்திலையோ?
அறிவொன்றுமில்லை ஓ குறைவொன்றுமில்லை
இப்பள்ளத்துக்கு அந்த மேடு நிரப்பப் போதாதோ? மேடுபடக் கண்டது பள்ளத்தை நிரப்பவன்றோ? நீ பரிபு+ரணனாயிருந்தும் இந்த ஆய்க்குலத்திலே பிறந்தது, ‘ஒன்றும் அறிவில்லாத’ கோபாலரை (ஆயர்களை) உய்விப்பதற்கன்றி எம்மிடம் ஏதேனும் பெறுவதற்கோ? இ;ல்லையே. அன்றியும் நமக்குள்ளே நிலவும் இந்நெருக்கமான உறவை ஒழிக்க இங்கு உன்னாலும் முடியாது; எம்மாலும் இயலாது. நீயும் நாங்களும் ஒன்று சேர்ந்து முயன்றாலும் ஒழிக்க முடியா உறவன்றோ இது!
சிறு பிள்ளைகளாகிய நாங்கள் அறியாமையால் செய்த குற்றமொன்றுண்டு. நீர்மை சம்பாதிக்கப் பிறந்த இடத்திலே உனக்குரிய கோவிந்தன் என்னும் பெயரிருக்க ‘நாராயணன்’ என்னும் சிறுபெயரால் உன்னைப் பல முறையும் (பாவை 1,7,10) அழைத்த குற்றம் தான் அது. அடியவருக்கு எளியனாயிருப்பதைத் தெரிவிக்கும் பெரும் பெயரே அவன் உகப்பது. அவனுடைய திருவுள்ளத்துக்கு மாறாகப் பரத்துவ நிலையைத் தெரிவிக்கின்ற, ‘நாராயணன், மாமாயன், வைகுந்தன்’ முதலான பெயர்கள் சிறு பெயர்களாம். உவகை மீதூர – (பிரீதி பரவசராய்) அறியாமையால் சிறுபெயர்களைச் சொல்லிய எம் மீது சினம் கொள்ளாது எமக்கு வேண்டிய பறையைக் கொடுத்தருள்வாயாக என்கின்றனர்.
நிறைவாக அவர்கள் இறைவா! என்றது வானோர் இறையை நினைத்தன்று. ஆய்க்குலமாய் வந்துதித்து கண்ணபிரானைக் கருதியே, ‘இறைவா நீ தாராய் பறை’ எனகின்றனர்.

இப்பாட்டில் ‘உபாயம் அவனே’ என்னும் அர்த்தம் உணர்த்தப்படுகிறது என்றும், துவய, சரமசுலோகங்களின் முற்பாதியை இப்பாட்டு விளக்குகிறது என்றும் கூறுவர். மேலும் இறைவனைச் சரணடைவோர்க்கு இருக்க வேண்டிய வேறு கதியின்மை (அநந்யகதித்வம்) கைம்முதலின்மை (ஆகிஞ்சன்யம்) குற்றத்தைப் பொறுத்துக் கொள்ள வேண்டுகை (அபராத மணம்), இறைவனின் காக்கும் தன்மை (சரண்யத்துவம்) முதலிய தத்துவப் பொருள்களை இப்பாசுரம் உள்ளுறையாகக் கொண்டது எனவும் விளக்கம் தருவர்.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *