திருப்பாவை பேருரை
••••••••••••••••••••••••••••••••
பத்மஸ்ரீ முனைவர் ஔவை நடராசன்
==================================
பாடல் – 30
===========
திருப்பாவை என்னும் இப்பிரபந்தத்தைக் கற்றார்க்குக் கிட்டும் பலன் பற்றிக் கூறுவது இப்பாட்டு. பலனைத் தெரிவித்தலால் இதற்குப் ‘பல ச்ருதி’ என்று பெயர். இன்னார் செய்தது இந்நூல் – என்று கூறுதலாலும் ‘திருநாமப்பாட்டு’ எனவும் பெயர்பெறும். இது தன்னைப் பிறன்போல வைத்துக் கூறும் ‘கவிமரபு’ ஆதலால் தற்புகழ்ச்சி யாகாது.
இது வரை (முந்தைய 29 பாசுரங்களில்) ‘இடை நடையும் இடை முடியும் இடைப்பேச்சுமாய்’ ஆய்ப்பாடிக் கன்னியருள் ஒருத்தியாகவே திகழ்ந்த ஆண்டாள் – தாமான தன்மை பெற்றுப் பெரியாழ்வார்; மகளாய்ப் பேசம் பாசுரம் இது.
பாசுரத்தின் பொருள் வருமாறு:
திங்களைப் போன்ற அழகிய முகத்தையுடையவரும் செவ்விய அணிகலன்களைப் புரண்டவருமான இடைச்சிறுமியர் – கப்பல்களையுடைய திருப்பாற்கடலைக் கடைந்த திருமகள் கேள்வனை, கேசவனாகிய கண்ணபிரானைச் சென்றடைந்து அவனுக்குப்; பல்லாண்டுபாடி (மங்களாசாசனம் செய்து) அவன் முன்னிலையில் (சந்நிதியில்) கைங்கர்யமாகிய பேற்றினை (புருஷார்த்தத்தை)ப் பெற்றனர். புகழ்மிக்க அந்தச் செய்தியை – அழகிய திருவில்லிபுத்தூரில் அவதரித்த ஆண்டாள் முப்பது பாசுரங்களிற் பாடியருளினாள். பசுமை பொருந்திய தாமரை மலர்களினாலான குளிர்ந்த மாலையையுடைய பெரியாழ்வாரின் திருமகள் அவள். கோதை என்னும் பெயரினள். அவள் அருளிச்செய்த திரள் திரளாகக்கூடி அனுபவிக்க வேண்டிய தமிழ்ப்பாமாலையாகிய இந்த முப்பது பாசுரங்களையும் ஒன்று கூடத் தப்பாமல் (குறையாமல்) இந்நிலத்தில் அவள் உரைத்த வண்ணமே ஓதுதல் வேண்டும். அவ்வாறே பாடுமவர்கள் நான்கு பெரிய மலைகள் போன்ற திருத்தோள்களையும் சிவந்த திருமுகத்தையும் ‘உபயபுரதி’ச் செல்வத்தையுமுடைய திருமாலின் அருளைப் பெற்று இம்மை மறுமையாகிய எவ்விடத்தும் இன்புற்று இருப்பார்கள் – என்கிறாள்.
திருவாய்ப்பாடியில் இந்நோன்பினைக் கடைப்பிடித்த ஆயர்சிறுமியரைப் (அநுஷ்டித்தார்) போலவும் அதனை அப்படியே பாவித்துப் பாடிய எங்களைப் (அநுகரித்தார்) போலவும் இந்நூலினைக் கற்பாரும் ஆனந்தமடைவர் என்பது கருத்து. இப்படி அவள் பலன் கூறிய போதிலும் இவ்விடத்து ஒரு வினா எழுகின்றது. கடைப்பிடித்தார்க்கும் அவர்களைப் போலச் செய்தார்க்கும் (அனுஷ்டித்தார்க்கும் அநுகரித்தார்க்கும்) கிட்டும் பலன் – ஆண்டாளைப் போல உள்ளன்பின்றி மேலெழச் சொன்ன மாத்திரத்திலே சொன்னவர்க்கும்; வாய்க்குமோ? இப்படியொரு வினாவெழுந்த போது, ‘கன்றையிழந்த பசு தோற்கன்றுக்கும் இரங்குமா போல, இப்பாசுரங்கொண்டு புக நமக்கும் பலிக்கும்’ என்று பதிலளித்தாராம் பட்டர்.
இதன் விளக்கம் வருமாறு
கன்றை இழந்த தாய்ப்பசுவிற்கு முன்னால் ஒரு தோல் கன்றை வைத்தாலும், அதையே தன் கன்றாக நினைத்துக் கொண்டு தாய்ப்பசு பரிவுடன் பால் சுரக்கின்றது. வெளியில் தெரியும் தன் கன்றின் தோலை அது பார்க்கிறதே தவிர, அத்தோலின் உள்ளே உயிர் இருக்கிறதா, வைக்கோல் இருக்கிறதா என்று பார்ப்பதில்லை. அது போல உண்மையில் அன்பில்லாத நாமும் திருப்பாவையைச் சொல்ல நம்மிடம் உள்ளன்பு உண்டா இல்லையா என்று ஆராயாமல் நமக்கும் அருள்சுரந்து விடுவான் எம்பெருமான். எனவே நோன்பைச் செய்த ஆய்ப்பாடிச் சிறுமியர் போலவும் அதை அநுகரித்த ஆண்டாளைப் போலவும் திருப்பாவையைக் கற்பாரும் உரைப்பாரும் இன்பம் எய்துவர் என்பதே பட்டரின் விளக்கமாகும். ஆண்டாள் இப்பிரபந்தத்தை, ‘தாமரைமாலையணிந்த (தண்தெரியல்) பட்டர்பிரான் கோதை சொன்ன மாலை’ என்று குறிப்பிடுகின்றாள். கோதை என்னும் தமிழ்ச் சொல்லுக்கு, ‘மாலை’ எனவும் ஒரு பொருளுண்டு. எனவே, ‘மாலையணிந்தவர் மகளான மாலை-மாலுக்குக் கட்டின மாலை’ என்றும் நயம்படவுரைப்பார் அழகிய மணவாளப் பெருமாள் நாயனார். திருப்பாவைக்கு ஆறாயிரப்படி என்னும் உரை செய்தவர் இவர்.
இனி, ‘சங்கத்தமிழ் மாலை’ என்பதற்குச் சங்குகளின் கூட்டம் போல் அடியார்கள் திரள் திரளாகக் கூடி அனுபவிக்கும் மாலை என்றே முன்னை உரைகாரர்கள் பொருள் கண்டனர். சங்கத்தமிழின் கருத்தும் ஆட்சியும் நூல்முழுக்க நிறைந்திருப்பதால் ஆண்டாள் இப்பிரபந்தத்தை, ‘சங்கத் தமிழ் மாலை முப்பது’ என்று குறித்ததாகவும் கொள்ளலாம். இவ்வகையில் பாவைத்தமிழுக்கும் சங்கத் தமிழுக்கும் தொடர்புகாட்டி அறுபது ஆண்டுகளுக்கு முன்னர் (1957) ரெ.திருமலை அய்யங்கார் என்னும் பெரியார் ‘திருப்பாவை மாலை’ என்னும் பெயரில் எழுதிய விரிவான நூல் ஒன்றும் (திருவல்லிக் கேணித் தமிழ்ச்சங்க வெளியீடு 100) இங்குக் குறிக்கத்தக்கது.

Add a Comment