POST: 2018-01-27T14:13:25+05:30

மன்னாதி மன்னனுக்கு மற்றுமொரு மகுடம்
========================================
பத்மஸ்ரீ முனைவர் ஔவை நடராசன்
அவர்களின் சிறப்புரை
==================================
பகுதி-160
—————-

புரட்சித்தலைவரை முதன்முதலாக பார்த்த போது.
==============================================

1960ல் நான் தஞ்சை சரபோஜி மன்னர் கல்லூரியில் விரிவுரையாளராகச் சேர்ந்திருந்தேன். அப்போது தஞ்சையில் ஒரு நாடகம் நடத்த புரட்சித்தலைவர் வருகிறார் என்று கேட்டவுடனே, கல்லூரி மாணவர்கள் எல்லோரும் எப்படியாவது புரட்சித் தலைவரை கல்லூரிக்கு அழைத்து வர வேண்டுமென்று துடியாய்த் துடித்தார்கள். எனக்குப் புரட்சித்தலைவரைத் தெரியும் என்பது அவர்களின் ஆர்வத்திற்கு நெய்யை ஊற்றியது. அன்று மதியம் மூன்று மணிக்குத் தான் புதுக்கோட்டையிலிருந்து அவர் வந்ததாக நினைவு.

ஏறத்தாழ நாடகக் குழுவினர் அனைவரும் எனக்குப் பழக்கமானவர்கள். கவிஞர் சுரதாவோடு நான் சென்று பலமுறை பழகியிருக்கிறேன். மாலையில் நான் பார்க்கப் போனேன். திரு. முத்துக் கூத்தன் உங்கள் நிகழ்ச்சிக்கு ஒத்துக் கொள்வார் என்று தைரியமூட்டினார். புரட்சித் தலைவர் என்னைப் பார்த்து, “நீ இங்கே கல்லூரியில் இருக்கிறாய் என்று எனக்குத் தெரியுமே! கலைஞர் சொன்னாரே, ஏன் மதுரையை விட்டுவிட்டுத் தஞ்சைக்கு வந்தாய்? சென்னைக்கு வந்துவிடுகிறாயா?” என்று மிகவும் பாசத்தோடு கேட்டார்.

அந்தப் பாசம் எல்லா மாணவர்களிடத்திலும் அவருக்கு எப்போதுமே உண்டு, “எங்கள் கல்லூரிக்கு அன்று மாலை பேச வரவேண்டும். எங்கள் கல்லூரி முதல்வர் கேப்டன் முருகையன் சார்பில் நான் அழைக்கிறேன்!” என்று சொன்னேன். “உனக்கு வராமலா’ என்றார். ஒரு மணிமகுடமே என் தலையில் சூட்டியதைப் போலாயிற்று. “நாலரை மணிக்கு வருகிறேன்!” என்று சொன்னார். தஞ்சையில் அப்படி ஒரு கூட்டத்தை அந்தக் கல்லூரி சந்தித்தது இல்லை. சரியாக நாலரை மணிக்கு வந்தார். “நான் அரை மணிநேரம் தான் பேசப் போகிறேன். எனக்குக் கொஞ்சம் சோர்வாக இருக்கிறது. நாடகம் வேறு இருக்கிறது” என்று சொல்லித் தன் பேச்சைத் தொடங்கினார்.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *