POST: 2018-02-07T11:22:35+05:30

================================================
ஈரோடு மக்கள் சிந்தனைப் பேரவையின்
புத்தகத் திருவிழாக்கள் குறித்து
பத்மஸ்ரீ ஔவை நடராசன் அவர்களின் பாராட்டுரை
(ஆகஸ்டு 2016)
================================================

எத்தனையோ திருவிழாக்களை நாம் கண்டு மகிழ்ந்திருக்கிறோம். கண்டு மகிழ்வதற்கும் உண்டு மகிழ்வதற்கும் நாம் விழாக்களை நடத்தியது போதும். பார்த்து மகிழ்ந்து படித்து நெகிழ்வதற்குரிய விழாவை புத்தகத் திருவிழா என்று தொடங்கியிருக்கும் மக்கள் சிந்தனைப் பேரவையை மகிழ்ச்சியோடு பாராட்டுகிறேன்.

அருமை நண்பர் ஸ்டாலின் குணசேகரன் அறிஞர், வழக்கறிஞர், ஊர் நலம் நாடி தன்னுடைய பணிகளை ஆற்றுகிறார்.

இருநூற்றுக்கும் மேற்பட்ட பதிப்பகத்தாரரை தங்க வைத்து நூல்களை வனப்புற அடுக்கி அந்த வட்டாரத்திலுள்ள மாணவர்களும் மக்களும் நிரம்பி வழிகிற வகையில் இந்தத் திருவிழாவை நடத்துகிறார்.

பல்வேறு அரங்குகளை நான் கண்டு மகிழ்ந்திருக்கிறேன். புத்தகப்பூங்கா என்றுகூட நான் பார்த்தேன். புத்தகத் திருவிழாவை மெத்தச் சிறப்போடு நடத்தி வருகிற நண்பர்களை நான் பாராட்டுகிறேன். தனிப்புகழ்ச்சிக்காக இதனைச் சொல்லவில்லை.

மக்கள் சிந்தனைப் பேரவை இந்தப் பணியை தன்னுடைய தோள் மேல் எடுத்து வைத்துக்கொண்டு இந்தப் புத்தகத் திருவிழாக்காக இளைஞர்களை ஒழுங்குபடுத்துவதும் மாணவர்களிடத்தில் இந்தக் கருத்தைப் பரப்புவதும் புத்தகத்திருவிழா எப்படி அமைய வேண்டும் என்பதற்கொரு இலக்கு வரையறை செய்வது போலவும் அமைந்திருப்பதை நான் போற்றுகிறேன்.

இந்த ஈரோட்டில் தொடங்கிய மகிழ்ச்சி தமிழ் நாட்டு வரலாற்றுப் பேரேட்டுக்கு ஒரு அழகிய அணிகலனாக அமையும் என்பதில் ஐயமில்லை.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *