=======================
கலைக்கதிர்
சனவரி 1989 இதழ்
(பொங்கல் சிறப்பிதழ்)
=======================
சேம அச்சு
***************
டாக்டர் ஒளவை து நடராசன்
———————————————–
வாழ்க்கையில் துன்பமற்று இன்பமாகத் தானும் வாழ்ந்து பிறரையும் வாழச் செய்ய வேண்டுமாயின் விழிப்புணர்வு வேண்டும் என்பதனைப் பழம்பெரும் அறிஞர்கள் எவ்வாறு உணர்த்தியுள்ளனர் எனக் காட்டுவது இக்கட்டுரை.
நாம் அறிவியல் ஊழியில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நம்மைச் சூழ எத்தனையோ புதுமை சான்ற கருவிகள்! வியப்பினை விளைக்கும் படைப்புகள்! இந்த விளைவுகள் அனைத்தும் ஒரு நாளில் ஏற்பட்ட விளைவுகளா? ஓரறிவு உயிர்கள் கண்ணீரில் பாசிகளாக மிதந்தன; தரையினில் மரங்களாய் நின்றன. அறிவும் முயற்சியும் வளர வளர தவழ்ந்து சென்றன. தத்திப் பாய்ந்தன. காலையூன்றி நடந்தன. நான்கு கால்களைப் பயன்படுத்தும் நிலையிலிருந்தும் நிமிர்ந்து நின்றன.
அறிவுத் திறம் வாய்ந்த மனிதனோ தன்னுடைய கால்களால் நடப்பதையும் குறைத்துக்கொண்டு எருதின் முதுகில் இடம் பிடித்தான். ஊர்திகளின் வரலாறு அப்போதே உருக்கொள்வதாயிற்று. ‘ஊர்தி வால்வெள் ஏறே’ என்று பாடுகின்ற சூழல் அமைந்தது.
முதன் முதலில் மனிதன் வண்டியைக் கண்டுபிடித்தான். பெருஞ்சுமைகளையேற்றிச் சென்றான். உழைப்பின் உருவமாகிய எருது பாரம் மிகுதி என்று பாராமலும் பாதை சிக்கல் நிறைந்தது என்று நிற்காமலும் வண்டியை முயன்று இழுத்துச் சென்றது. வண்டிக்காரனுக்கோ ஆசை அதிகம். வண்டியில் மிகுதியாகப் பொருள்களை ஏற்றுகின்றான். அச்சு முறிந்துவிடும் என்று அடுத்தவன் அறிவுறுத்துகின்றான். இவனோ மென்மையான பொருள்தானே என்று எண்ணுகிறான். ஆனால், பாதி வழியில் அச்சு முறிந்து விடுகிறது. அச்சின் பெருமை தெரிகிறது. இந்தக் காட்சிகளை யெல்லாம் திருவள்ளுவர் உற்று நோக்குகின்றார். உரிய இடங்களில் இவற்றை உவமைகளாக அமைக்கின்றார்.
”மடுத்த வாய் எல்லாம் பகடு அன்னான்”
”பீலிபெய் சாகாடும் அச்சிறும்” என்ற உவமைகள் அந்தக் காட்சிகளைக் காட்டுகின்றன.
இந்தக் காட்சிகள் பலவும் ஒரு புறநானூற்றுப் பாடலாக-பாடமாக அமைகின்றன.
ஏற்றமும் இறக்கமும் பொருத்திய பாதையில் ஒரு வண்டி சென்று கொண்டிருக்கிறது. வண்டியில் பாரமும் மிகுதியாக உள்ளது. எருது இளமை சான்றது. பாரத்தைப் பொருட்படுத்தாத ஊக்கமிகுதி உடையது. அது ஓர் உப்பு வண்டி. வண்டியை ஓட்டிச் செல்பவன் நெடுந்தூரம் சென்று வர நினைத்துச் செல்கிறான். அந்த நெடும் பயணத்தில் வண்டியில் அச்சு முறிந்து விடுமானால் வண்டி ஓடாது. எனவே, வண்டியின் கீழ் மரத்தில் இன்னொரு அச்சினையும் கட்டி வைத்திருக்கின்றான்.
எருதே இளைய! நுகம் உணராவே!
சகடம் பண்டம் பெரிது பெய் தன்றே!
அவல் இழியினும் மிசை ஏறினும்
அவனது அறிவுநர் யார் என உமணர்
கீழ் மரத்து யாத்த சேம அச்சு – என்று
பாடுகின்றார் ஒளவையார்.
இக்காலத்தில் உந்தூர்திகளில் செல்வோர் தற்காப்புக்காக ஓர் உருளையை (Stepney) வைத்திருப்பதனைக் காண்கின்றோம். இப்படி வருமுன் காக்கும் உணர்வு இரண்டாயிரம் ஆண்டுகட்கு முற்பட்ட ஓட்டுநர்களிடம் கூடக் காணப்படுகிறது .
ஒளவையாரோ அரசறிய வாழ்ந்த பெரும் புலவர். அரசியலறிவு சான்றவர். அதியமான் நெடுமான் அஞ்சியின் அரசியல் துணைவர். அதியனுடைய மகன் பொருட்டு எழினியை நோக்கியே இவ்வாறு பாடுகின்றார்.
அதியனது காவற்சாகாட்டுக்குப் பொகுட்டெழினி சேம அச்சுப் போன்றவன் என்று புகழ்கின்றார். ஆட்சிப் பொறுப்பினை அரசபாரம் என்பார்கள். அதியனுடைய ஆட்சிப் பொறுப்போ பெரியது. நாள் ஒன்றுக்கு எட்டுத் தேர் செய்யவல்ல தச்சர் ஒரு திங்கள் முயன்று செய்த தேர்க்காலைப் போன்ற வலிமையுடையவன். அவனுடைய தாள் தோயும் தடக்கைகள் எழுமரம் போன்ற வலிமை கொண்டவை. அவன் எப்போதும் பகைப் புலத்தவனாகவே உள்ளான். நீலமணி மிடற்று ஒருவன் போல அவன் நிலை பெற்று வாழ வேண்டி யவன். ஆயினும் போர் முகத்தில் ஏதேனும் பேரிழப்பு நேர்ந்து விடுமானால் …….. ஆட்சிக்கு அடுத்த வரில்லாமல் நாட்டில் துன்பம் இருள் சூழும். அல்லாதவர் பொல்லாதன செய்வர்; நல்லவர் உள்ளம் வருந்துவர்–என்ற நிலை அதியனது ஆட்சியில் இல்லை. நாள் நிறை மதியம் போலப் பொகுட்டெழினி ஆளுதற்குரிய தகுதிகளால் நிரம்பியுள்ளான். ஞாயிறு போன்று அதியன் விளங்குகின்றான். நாள் நிறைந்த மதியம்போல் பொகுட்டெழினி பொலிகின்றான். ஞாயிறும் திங்களும் வெவ்வேறு காலத்தில் விளங்குவன. ஆனால், அதியனது ஆட்சிக்காலத்திலோ ஞாயிறும் திங்களும் ஒருசேர விளங்குகின்றன! எங்கள் வாழ்வில் எங்ஙனம் துன்ப இருள் சூழும் என்று வினவுகின்றார்.
“—— சேம அச்சு அன்ன
இசைவிளங்கு கவிகை நெடியோய்! திங்கள்
நாள் நிறை மதியத்து அனையை இருள்
யாவணதோ நின்நிழல் வாழ்வோர்க்கே”.
என்று பெருமிதம் ஒளிரப் பாடுகின்றார்.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட பாடல்தான் இது. யாரோ யாரையோ பாடியது என்றாலும் இன்றைக்கும் புதுமை குன்றாமல் பொலிகின்றது. வாழ்வாங்கு வாழ வழி காட்ட வல்ல ஒருவர், சமுதாயத்தை வழிநடத்திச் செல்ல வல்லான் ஒருவனைப் பாடியது என்பதனால், இன்றும் நாளையும் என்றுமே வையகத்துக்கு வழிகாட்ட வல்லதாக இப்பாடல் விளங்குகின்றது.
எருதே இளைய! நுகர் உணராவே;
சகடம் பண்டம் பெரிது பெய் தன்றே!
அவல் இழியினும் மிசை ஏறினும் ‘
அவனது அறியு நர் யார்? என உமணர்
கீழ் மரத்து யாத்த சேம அச்சு அன்ன
இசைவிளங்கு கவிதை நெடியோய் திங்கள்
நாள் நிறை மதியத்து அனையை; இருள்
யாவன தோநின் நிழல் வாழ் வோர்க்கே!
(புறம்-102)

Add a Comment