POST: 2018-03-21T09:51:01+05:30

பத்மஸ்ரீ ஔவை நடராசன் சார்பாக நா.மகாலிங்கம் விருதை பெற்றுக்கொண்ட பின்னர் ஔவை அருளின் ஏற்புரை
===============================================

அருட்செல்வர் விருது விழா – 20.03.2018
======================================

இடம் : குமரகுரு பொறியியல் கல்லூரி,
கோவை.

நேரம் : காலை 10.00 மணி

மேதகு ஆளுநர் அவர்களே,

பெருந்தகை ஜி.டி.கோபால் அவர்களே,

இந்த அருமையான நிகழ்ச்சிக்குப் பெருமிதத்தோடு தலைமை தாங்கும் பண்பாட்டின் களஞ்சியமாகத் திகழும் மன்னர் வானவராயர் அவர்களே,

பெருமதிப்பிற்குரிய துணைத் தலைவராகத் திகழும் கலைச்செம்மல் டாக்டர்.மாணிக்கம் அவர்களே,

கோவைக்குச் சிகரம்போல விளங்கும் குமரகுரு பொறியியல் தொழில் நுணுக்கக் கல்லூரியின் செயலாளராகத் திகழும் பெருந்தகை பாலசுப்பிரமணியம் அவர்களே,
இணைச் செயலாளராகத் திகழும் இளவரசர் சங்கர வானவராயர் அவர்களே

அருட்செல்வரின் நிழலாக எங்களை இன்னும் அரவணைத்து வரும் திரு.இரவி அவர்களே,

பேராசிரியர் பெருமக்களே, மாணவ மாணவிகளே, பெரியோர்களே, நண்பர்களே!

என் வாழ்வில் மறக்க முடியாத சிலிர்ப்பூட்டும் நிகழ்ச்சியாக நான் இதனைக் கருதுகிறேன். நான் குழந்தையாக நினைவு தெரிந்த நாள் முதல் என் வீட்டில் எந்த நிகழ்ச்சி நடந்தாலும் எப்போதும் ஒரு பரிசுப் பொருளோ, இனிப்பு பண்டமோ கிடைக்குமானால் அது அருட்செல்வர் ஐயா அவர்கள் வழங்கியது என்பதை எண்ணி எண்ணி மகிழ்கிறேன்.

அருட்செல்வர்தான் என் தந்தைக்கு வாழ்வு தந்த வள்ளல், வழிகாட்டிய ஞானி, சிந்தனைக்கு உரமூட்டிய செம்மல் என்று உருகிச் உருகி சொல்வார்கள்.

எற்றைக்கும், ஏழ் ஏழ் பிறவிக்கும் என்பதுபோல என்னுடைய பாட்டனார் உரைவேந்தர் ஔவை துரைசாமி அவர்கள் அருட்செல்வரின் அரவணைப்பில்தான் திருவருட்பாவுக்கு உரை எழுதினார்கள்.
அருட்செல்வர் அவர்களின் மறைவுச் செய்தி கேட்ட நாள் முதலே என் தந்தையாரின் உடல் நலம் குறைந்துவிட்டது என்றுதான் சொல்வேன்.
என் தந்தையார், தியாகராசர் கல்லூரியில் இருந்து அருட்செல்வர் அரவணைப்பினால் சென்னை மாநகருக்கு வந்தார்.

அவர், சென்னை மாநகருக்கு வந்தபோது, தமிழ்நாட்டின் தலைவர்கள் எல்லோரையும் அறிந்துகொண்டு பழகுகிற வாய்ப்பை வழங்கிய பெருந்தகை அருட்செல்வர் அவர்கள்தான்.

மிகப்பெரிய தொழிலதிபர்கள், அரசியல் தலைவர்கள், அருங்கலைப் பேராசிரியர்கள், கலையுலகச் சுடர்கள், பேருரையாளர்கள் என எல்லா நிலையினரையும் அருட்செல்வரோடு கண்டு பேசியும், அருட்செல்வர் அவரைக் காண வந்தபோது உடனிருந்து பேசியும் வாழ்வின் உச்சிக்கு அவரை அழைத்துச் சென்ற பெருமை அருட்செல்வரைத்தான் சாரும்.

சென்னை இராமலிங்கர் பணிமன்றத்தின் வாசற்படியில் தவழ்ந்தவர்கள் எல்லாம் இன்றைக்கு அரசியல் தலைவர்களாகவும், அமைச்சர்களாகவும், கவிப்பேரரசர்களாகவும், மேடை மன்னர்களாகவும் விளங்குகின்றார்கள் என்றால், அது அருட்செல்வர் காட்டிய வழிதான்.

என்னுடைய தந்தையார், பி.எச்.டி. பட்டம் பெற்றது, தமிழக அரசில் மொழிபெயர்ப்புத்துறை இயக்குநராகத் திகழ்ந்தது, எவரும் எதிர்பாராத நிலையில் மூன்று முதலமைச்சர்களுக்கும் முகம் கோணாதவராக அரசு செயலாளராகத் திகழ்ந்தது என்ற பெருமிதத்தைப் பெற்றுக் கொடுத்தது, துணை வேந்தராகத் தமிழ்ப் பல்கலைக்கழகத்திற்கு அமர்த்தப்பெற்றது, மைய அரசில் பத்மஸ்ரீ விருது பெற்றது என வாழ்வின் ஒவ்வொரு அங்குலமும் அவருடைய வளர்ச்சிக்கு அருட்செல்வர் காட்டிய வழியும், பெருமிதமும் தான் காரணமாகும்.

அருட்செல்வருக்காகவே, திங்கள்தோறும் ஒரு நாள் நோன்பிருப்பதைத் தன் வாழ்நாளாகக் கடைபிடித்து வருகிறார்.

அவர் நீர் மல்க என்னை அனுப்பியபோது, அருட்செல்வர் குடும்பத்திற்குத் தான் கடன்பட்டதையும் பணியாற்ற உடன்பட்டதையும் நெஞ்சுருகச் சொன்னார்கள்.

அந்தப் பெருமிதத்தில் என் தந்தையாருக்கு வழங்கும் இந்த வாழ்நாள் விருதினைப் பணிந்து நான் பெற்றுக் கொள்கிறேன்.

அருட்செல்வரின் புகழ் வெல்க!

ஆல்போல் தழைத்துள்ள அருட்செல்வரின் இளைய தலைமுறையினர் ஈடற்ற பெருமையோடு தொடர்ந்து வாழ்க!

எங்கள் குடும்பம் என்றைக்கும் அவரை எண்ணி உருகுகிறது என்று சொல்லி விடைபெறுகிறேன்.

வணக்கம்.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *