POST: 2018-03-22T12:51:01+05:30

விடுத்த அம்பு வீணாயிற்று!
==========================

நண்பர் ம.நடராசன், மருத்துவமனையில் மீளவும் சேர்க்கப்பட்டார் என்றபோதே, அவர் மறைவு நிழல் உறுதியாயிற்று.

நான் பணியாற்றிய சரபோஜி மன்னர் கல்லூரியில், அவர் இளங்கலை பயின்றார். சிவந்த மேனியும், சீர்திருத்த மனமும், செந்தமிழ் பற்றும் வாய்ந்த மாணவர் திலகமாக மிளிர்ந்து இந்தி எதிர்ப்புப் போரில் மாணவ மறவராகத் தலை நிமிர்ந்து மாணவர் அணியைச் சேர்த்து, போராடிய வரலாறு அவர் வாழ்வின் புறநானூறாகும்.

நான், தமிழக அரசு செய்தித்துறையில் பணியில் சேர்ந்தபோது நண்பர் நடராசனும் மக்கள் தொடர்பு அலுவலராகப் பணியாற்றினார்.

தமிழகத்தின் அரசியல் நிலைகளையும் திராவிட இயக்கத்தின் அலைகளையும் தேர்ந்து தெளிந்தவர் நண்பர் நடராசன் அவர்கள்.

நண்பர் நடராசன் அவர்களின் திருமணத்திற்கு நான் சென்று வந்ததாக நினைவிருக்கிறது. என்னோடு அப்போது மக்கள் நல்வாழ்வுத்துறையில் பணியாற்றிய நண்பர் அமிர்தலிங்கமும் வந்தார்.

நடராசன் கண்ட கனவுகள் பல, அவை கலைந்த ஓவியங்களாகவே மறைந்தன. அவரின் தமிழ்க்காதல் தனித்தன்மையோடு தலைக்கேறிய தளபதியாகவே வாழ்ந்தார்.

“இவன் போட்ட கணக்கொன்று அவள் போட்ட கணக்கொன்று
இரண்டுமே தவறானது
யார் போட்ட புதிருக்கோ இருவரும் விடையாகி
நின்றதே முடிவானது”

என்று பூம்புகார் படத்தில் கவிஞர் மாயவநாதனின் பாடல் வரிகளை அவர் வாழ்வுக்குப் பொருத்திப் பலமுறை நான் நினைத்திருக்கிறேன். நானும் நலிந்த நிலையில் கம்ப ராமாயண நூல் வெளியீட்டு விழாவில் வந்திருந்தபோதுதான் அவரைக் கடைசியாகக் கண்டு பேசினேன்.

நீங்களும் என் மருத்துவரைப் பாருங்கள் என்று எனக்கு அறிவுரை கூறினார். என் மகன் அருள், வணிகத்துறையில் தலைப்பட்டுப் பலமுயற்சிகளில் நண்பர்களோடு பங்கு கொண்டிருந்தார். அவரை நான் அமெரிக்காவுக்கு அனுப்பிவிடுகிறேன் என்று தன்னை வந்து பார்க்கச் சொன்னார். இருவரும் இனிய நண்பர்களானார்கள். அமெரிக்கா செல்லவில்லை. வணிக முயற்சிகள் தோற்றன. பின்னர் ஒருமுறை உத்திரபிரதேசத்தில் ஒரு கல்லூரி தொடங்கலாம் என்று அருளிடத்தில்தான் ஒரு வரைவு கேட்டிருக்கிறேன் என்று கூறினார். அருள் வரைவும் தரவில்லை, ஆனால் கல்லூரி வந்ததாக நினைவு.

வாழ்க்கை என்பது, பின்னல் சிக்கல்களால் பிணைக்கப்படுவதாகும். இந்த மெல்லிய இடியாப்ப இழைகளை நகர்த்திக் கொண்டு போவது ஒரு பெருங்கலைதான்.

இறுதிநாள் வரை, பிறர் வளர்ச்சிக்கும் மகிழ்ச்சிக்கும் நிழலாக இருந்து, நிலைகுலைந்து போனதை நினைத்தால் என் விழிகளில் நீர் மல்குகின்றன.

…….. பத்மஸ்ரீ ஔவை நடராசன்

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *