POST: 2018-04-04T15:18:42+05:30

நிறை வாழ்வு வாழ்ந்த பெருந்தகை!
==================================

நண்பர் மாதவன், மறைந்த செய்தி துயரம் தருவதாகும்.

அண்ணாவின் அமைச்சரவை தொடங்கி, பல்வேறு நிலைகளில் அமைச்சராகப் பல்லாண்டுகள் பணியாற்றியவர். அரசியல் அலைகளால் அங்குமிங்கும் அலைந்ததுண்டு.

நானும், அவரும் தியாகராசர் கல்லூரியில் இடை நிலை வகுப்பில் முதலாண்டு பயின்றோம்.
அறிவியல் பாடத்தில் அவருக்குப் பெரிய ஆர்வமுண்டு. வகுப்பு முடிந்த மதிய வேளையில் அறிவியல் பாடத்திற்குரிய படங்களை அழகு குறையாமல் வரைந்திருப்பார். அறிவியலில் அவருக்கு அவ்வளவு தோய்வு.

நாங்கள் அரசியல் பேசினாலும்கூட, அந்த வெப்பமோ தண்மையோ என் மேல் படாமல் பார்த்துக் கொண்டவர்.

அடக்கத்துக்கு உதாரணமாக இருந்தார். காரைக்குடியில் பி.காம்., கல்வியைத் தொடர்ந்ததாக நினைவு.

அண்ணாவின் உள்ளத்தைப் பெரிதும் கவர்ந்தவர். அமைச்சரான பிறகு, சில நிலைகளில் அவர் வெகுண்டார் என்று கூறுவார்கள். அடக்கமானவர்கள், அரசியல் இறுக்கத்தால் சினம் கொள்வார்கள் போலத் தெரிகிறது.

பண்பின் பெட்டகமான வாழ்ந்த மாதவன் பொது வாழ்வுக்கே தன்னை ஆட்படுத்திக் கொண்டவர். அவருடைய மக்கள் செல்வங்கள், அமெரிக்க நாட்டில் தமிழ் வளர்க்கும் கலைப் பணியை அருமையாக ஆற்றுகிறார்கள்.

நண்பர் மாதவன் மறைவு, கல்லூரி மாணவ வாழ்க்கையை என் நினைவில் அதிர்வை ஏற்படுத்தியது.

நிறை வாழ்வு வாழ்ந்த பெருந்தகை!

—– பத்மஸ்ரீ ஔவை நடராசன்

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *