ஆனந்த விகடன் 01.12.1996ம் நாள் இதழில் ரேஷன் கார்டு பகுதியில் பத்மஸ்ரீ முனைவர் ஔவை நடராசன் அவர்களிடம் இடம்பெற்ற நேர்காணல்
தொடர்ச்சி….
===============================================
உங்கள் தந்தை துரைசாமியின் பெயருக்கு முன் அவ்வை வந்து ஒட்டியது எப்படி?
“சிம்பிள்! எங்க சொந்த ஊரு, திண்டிவனம் பக்கத்தில் இருக்கும் அவ்வையார்குப்பம்… ஊர் பெயர்தான் அப்பாவின் பெயரோடு சேர்ந்து கொண்டது! அதுவே எனக்கும்….”
தமிழும் விருந்தும்….
———————————-
வீட்டுக்கு வரும் விருந்தாளிகளை ‘வராதே… அப்படியே ஓடிப்போய்விடு’ என்று மிரட்டுவதுபோல, ‘நாய்கள் ஜாக்கிரதை!’ என்று பல பங்களாக்களின் இரும்புக் கதவில் எழுதித் தொங்கவிட்டிருப்பார்கள்! நடராசன் வீட்டிலும் நாய் இருக்கிறது! ஆனால், பயமுறுத்தும் ‘உஷார்’ போர்டு இல்லை! அதற்குப் பதில், தமிழையும் மரியாதையும் கலந்து ‘விழிப்போடு வருக’ என்று எழுதி வைத்திருக்கிறார். விழிப்போடு உள்ளே போய்விட்டால், அன்பான வரவேற்பு கிடைக்கும். போகிறவர் தமிழ்மீது ஆர்வம் கொண்ட இளைஞராக இருந்தால், அவருக்கு நம்பிக்கை ஊட்டும் வார்த்தைகள், ஒரு திருக்குறள் புத்தகம், ஒரு டம்ளர் பழரசம் கட்டாயம் கிடைக்கும்!
சிதம்பரமும் மதுரையும்…
——————————————-
வாசலில் நின்று பார்த்தாலே போதும், ‘வீட்டில் நடப்பது சிதம்பர ஆட்சியா… மதுரை ஆட்சியா…?’ என்பதை எளிதில் கண்டுபிடித்துவிடலாம்!
ஆம்! வீட்டின் முனைப்பில் ‘டாக்டர் தாரா நடராசன்’ என்ற மனைவியின் பெயர்தான் மேலே எழுதப்பட்டிருக்கிறது. கீழேதான் இவரின் பெயர். இதைப்பற்றிக் கேட்காமலே வாக்குமூலம் தருகிறார்… “ஆம்… என்னைவிட என் மனைவி கெட்டிக்காரி!” என்று.
பழமையும் புதுமையும்
————————————–
காதல் கல்யாணம்! ‘ஆனால், இன்னமும் நாளுக்கு நாள் அந்தக் காதல் வளர்ந்துகொண்டே வருகிறது’ என்று மனைவியைப் பற்றி நடராசன் பேசும்போதெல்லாம் அவர் முகத்தில் குதூகலம் கலர் கலராகப் பாய்கிறது!
“நான் கடைக்குப் போனால், இருப்பதிலேயே பழைய புத்தகமாக இருப்பதைத்தான் தேடிப்பிடித்து வாங்குவேன். ஆனால் என் மனைவிக்கோ, ‘எதிலுமே லேட்டஸ்ட்டானதுதான் பிடிக்கும்!
குழந்தை வைத்தியத்தில் பட்டம் வாங்கியிருக்கும் எனது மனைவி, மதுரை மெடிக்கல் காலேஜில் டீனாக இருந்து ஓய்வு பெற்றவர். 64 வயதாகிறது என்றாலும், பதினெட்டு வயது மாணவியைப்போலக் காலையில் எழுந்து, ஏழு மணிக்கெல்லாம் கம்ப்யூட்டர் கிளாஸ் போகிறார். எனக்குக் கார் ஓட்டத் தெரியாது, ‘ஆனால் தாரா கார் ஓட்டுவதில் எக்ஸ்பர்ட்….’ – இப்படி ஆரம்பித்து நிறைய நிறைய…. சொல்கிறார், மனைவியின் மகிமைகளை!
சைவமும் அசைவமும்…
—————————————-
ஹார்ட் அட்டாக் வந்துவிட்டது. சர்க்கரை நோயும் இருக்கிறது. ஆனால், ஸ்வீட்டைப் பார்த்தால் இவர் சின்னக் குழந்தை ஆகிவிடுகிறார். அடுத்தபடியாகப் பிடித்தது புளிசாதம், கறி, மீன், முட்டை எல்லாம் கண்ணெடுத்துப் பார்ப்பதில்லை! “நீங்கள் என்ன பிறவி சைவமா?” – இது நமது கேள்வி.
“இல்லை, சைவப் பிறவி….” என்பது பதில்! சாப்பாட்டில்தான் இந்தச் சீரியஸ் பாகுபாடு. கடவுள் நம்பிக்கையில் சைவம், வைணவம் கிடையாது! “சரியாகச் சொல்லட்டுமா…? நான் கடவுளை நம்புகிற கட்சியும் இல்லை! கடவுளை எதிர்க்கிற கட்சியும் இல்லை!”

Add a Comment