03.01.1993ம் நாள் கல்கி இதழில்
பத்மஸ்ரீ முனைவர் ஔவை நடராசன் அவர்களுடன் நேர்காணல்
===============================================
பேனாவைப் பிரியாத அப்புசாமி
—————————————————-
தமிழுக்காக உயிர் கொடுப்பேன்’ என்று பலர் மார் தட்டிக் கொள்ளும் இக்காலத்தில் “தமிழுக்காகவே வாழ்வேன்’ என்று சொன்ன பெரியவர் பெ.நா. அப்புசாமி. 95 வயது வரை பேனாவைப் பிரியாத அப்பு சாமியாகவே வாழ்ந்தார். வழக்கறிஞர், அறிவியல் நிபுணர், இலக்கியவாதி, மொழி பெயர்ப்பாளர், பகுத்தறிவாளர் என்று பல துறைகளில் முத்திரை பதித்தவர். டிசம்பர் 31 – ம் தேதி அவரது நூறாவது பிறந்ததின விழா. சங்ககால இலக்கியங்களைப் பெ.நா.அப்புசாமியுடன் இணைந்து படிக்கும் வாய்ப்பு பெற்ற அவ்வை நடராஜன் அந்த இனிய அனுபவங்களைக் கூறுகிறார் :
சங்ககால இலக்கியங்களைப் படிக்க வேண்டும் என்று எனக்குள் ஓர் வேகம் பிறந்தபோது, மர்ரே ராஜம் அவர்கள், அப்புசாமி அவர்களிடம் என்னை அனுப்பினார். அப்புசாமியின் இல்லத்துக்குச் சென்று கதவைத் தட்டினேன். பெரியவர் கதவைத் திறந்தார். நெடிய உருவம். நீண்ட கைகள்… அவரது கம்பீரத் தோற்றத்தில் ஒரு சோகம் அப்பிக் கிடந்தது. என்னுடைய ஆர்வத்தை விளக்கினேன். ‘என்னால் எந்த இலக்கியத்தையும் எவருடனும் படிக்க இயலாது… என்னுயிராய் இணைந்திருந்த மனைவி மறைந்த துக்கத்தில் ஆழ்ந்து போய் இருக்கிறேன்… எல்லாமே இருண்டு விட்டது போன்றுள்ளது’ என்றார். உடனே நான்,
யாங்குப்பெரி தாயினு நோயள வெனைத்தே
உயிர்செகுக் கல்லா மதுகைத் தன்மையிற்
கள்ளி போகிய களரியம் பறந்தலை
வெள்ளிடைப் பொத்திய விளைவிற கீமத்
தொள்ளழற் பள்ளிப் பாயல் தேர்த்தி
ஞாங்கர் மாய்ந்தனள் மடந்தை
இன்னும் வாழ்வ லென்னிதன் பண்பே.
என்று புறநானூற்றில், சேரமான் கோட்டம்பலத்துத் துஞ்சிய மாக்கோதை பாடிய இந்த 245ம் பாடலைக் கூறி, “அண்ணா, மனைவியை இழந்த புற நானூற்று வேந்தன், ‘இனி எதற்கு வாழ்வு” என்று பாடியதைப் போன்று கூறுகின்றீர்களே என்றேன்.
உடனே என்னை அவர் கட்டி அணைத்துக் கொண்டு, ‘இது மாதிரி யாரும் இலக்கிய மேற்கோள் காட்டியது இல்லை. உன்னுடன் நான் அவசியம் சங்ககால இலக்கியங்களைப் படிக்கிறேன்’ என்று கூறி, நூறு நாட்கள் என்னுடன் சங்ககால இலக்கியங்களைப் படித்து அவற்றிலுள்ள ஆழ்ந்த சுவைகளை எனக்குப் புரிய வைத்தார்.
அக்காலக் கட்டத்தில் எனது ஆங்கிலப் புலமையையும் விருத்தியடைய வழி வகுத்தார் பெரியவர். “ஒரு தாயைப் போன்று எனக்குப் பல விஷயங்களையும் சொல்லித்தரும் மொழியும் எனக்குத் தாய் மொழிதான்” என்பார்.
மொழிபெயர்ப்பு இலக்கியத்தில் அவருக்குக் காதல் என்றே கூறலாம். மொழிபெயர்ப்புகள் மூலம் அறிவியல் துறைக்கு அவரைப் போல் தொண்டு செய்தவர்கள் வேறு எவரையும் கூற முடி யாது.
மற்றவர்கள் கூறுகிறார்கள் என்பதற்காக எந்த ஒரு விஷயத்தையும் ஏற்றுக் கொண்டுவிட மாட்டார். அறிவியல் பூர்வமாக ஆராய்ந்து உண்மையாக இருந்தால் தான் ஒப்பு கொள்வார்.
இடது பக்கம் மான் அடிபட்டு விழுந்தால் புலி அதைத் தின்னா என்று இலக்கியத்தில் சொல்லப்பட்ட கூற்றை ஏற்காமல், மிருகக்காட்சி சாலை நிர்வாகத்துக்குக் கடிதம் எழுதி அந்த நம்பிக்கை பொய்யானது என்று நிரூபித்தார். அதே போல் பாம்பு பால் குடிக்கும் என்கிற கூற்றைக் கேட்டு வெகுண்டு, பாம்பு பாலும் குடிக்காது, தண்ணீரும் குடிக்காது என்று நிரூபித்தவர். என்னுடைய பல மூட நம்பிக்கைகளைப் பொய்யானவை என்று உணர வைத்து என்னை உயர்த்தியவர்.
அவர் எந்த அயல் நாட்டுக்கும் போனதேயில்லை. ஆனாலும் அமெரிக்கா, இங்கிலாந்தின் தெருக்கள் சந்துகள் பற்றி அங்கு வசிப்பவர்களுக்குக் கூடத் தெரிந்திராத அளவுக்கு நுட்பமாகக் கூறுவார். அப்படி ஒரு ஆழ்ந்த படிப்பு.
அவர் எனக்குச் சொல்லிக் கொடுத்தவை எத்தனையோ. ஆரோக்கியம் கருதி நெய்க்குப்பதிலாக நல்லெண்ணெய் ஊற்றிக் கொண்டு சாப்பிடச் சொல்லிக் கொடுத்தார். நானும் என் மனைவியும் வெளியூர் செல்ல வேண்டிய ஒரு சமயம் என் வீட்டுக்கு வந்து மூன்று தினங்கள் தங்கிக் குழந்தைகளைக் கவனித்துக் கொண்டார். என் மகனுடன் கிரிக்கெட் விளையாடுவார்!
தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் பதவிக்கு நான் நியமிக்கப்பட்டிருக்கும் இத்தருணம் அந்தப் பண்பாளர் உயிருடன் இருந்திருந்தால் என் தந்தையைக் காட்டிலும் அதிகம் மகிழ்ந்திருப்பார். .
சந்திப்பு : நாயகன்

Add a Comment