அறிவொளி அணைந்ததே !
=========================
ஆழ்ந்த கல்வியும், தோய்ந்த புலமையும் சொற்றிறம் வாய்ந்த வன்மையும் கொண்ட அருமை நண்பர் அறிவொளி மறைந்தார் என்ற செய்தி, அறிவொளி மறைந்ததே என்று அரற்றச் செய்கிறது .
நண்பர் அறிவொளி அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் சேர விழைந்தபோது அண்ணல் புலவர் கா .கோவிந்தன் பால் அழைத்துச் சென்றது நினைவில் நிரம்புகிறது .
சொல்லும் சொற்களில் ஒவ்வொரு சொல்லுக்குள்ளும் ஒரு சொல்லை வைத்துப் பேசியதால், பல்கலைக்கழகத்தில் மறியலுக்கு ஆளானார் .
அன்று முதல் வேண்டா ஆசிரியப்பணி என்று கல்விப் பணியை வீசியெறிந்தார். மேடை மின்னலாக மிளிர்ந்தார்.
சங்க இலக்கியப் புலமையோடு இன்றைய இலக்கியம்வரை கற்றுத் தெளிந்த நல்லறிவு படைத்தவர்.
மந்திரம், தந்திரம், சோதிடம், யோகம், மருத்துவம், பூசனை எனப் பல நிலைகளிலும் பங்கு பெற்றார்.
அறிஞர் அறிவொளியைப் போலவே புலவர் அறிவு ஒளியும் எனக்கு நண்பர்.
திருக்கழுக்குன்றத்தில் புலவர் திலகமாகத் திகழ்ந்த அறிவு ஒளியின் தந்தையார் மறைவுக்கு நான் ஓர் இரங்கலுரை அனுப்பியிருந்தேன்.
தெளிவில்லாமல் அக்கடிதம் திருச்சிக்குச் சென்றது. மறுநாள் ஒரு மடல் வந்தது.
இனியவரே, என் தந்தையார் நோயுற்றிருப்பது உண்மை.
அவர் மறைவுக்காகத் தாங்கள் எனக்கு அனுப்பிய மடலை ஒரு நாள் அவர் மறைவுக்காக துயர்க் குளத்தில் மூழ்கி நான் துடிக்கும்போது இந்த மடலை நான் பயன்படுத்திக்கொள்வேன் என்று மடலெழுதினார் . பொல பொலவென்று என் கண்கள் கலங்கின. முகவரி மாறிய கடிதத்தை எவ்வளவு கனிவாகச் சுட்டிக்காட்டினார் என்பதைப் பல மேடைகளில் நான் கூறியிருக்கிறேன்.
நானும் அவரும் ஏறத்தாழ ஒரே காலத்தில்தான் பிணியின் பிடிப்புக்கு ஆளானோம்.
பிடித்த நிலையில் நான் இருக்கும்போது, அவர் எப்படித் தம் கட்டுக்களை அவிழ்த்துக் கொண்டார் என்பது தீராத கலக்கத்தைத் தருகிறது.
இலங்கையில் நடந்த கம்பர் விழாவில் எங்களோடு உடன் வந்திருந்தார் , என் மகனைக் கண்டு இவன் பெயர் அருள் ஒளி என்று வையுங்கள் என்று ஆரத் தழுவி மகிழ்ந்தார்.
உலகெங்கும் உள்ள கம்பன் கழகங்கள் தம் கலைத் திலகத்தைக் கலைத்துக் கொண்டு கலங்குகின்றன .
தோளை இழந்த சோதரர் சத்தியசீலனுக்கு ஆறுதல் யார் வழங்குவது ?
பின்னல் பின்னலாகப் பேசிய மின்னல் மறைந்ததே !
காவியை நம்பாமலேயே , காவி உடுத்தியவர்.
பக்தி நூல்களைப் புரட்டியது போலவே, பகுத்தறிவு நூல்களை ஆராய்ந்தவர்.
கை கழகத்திற்கு கண்கள் கடவுள் நெறிக்கு என்ற இரட்டை நிலை கூட ஆற்றாத இடர் தருமோ ? என நான் எண்ணியதுண்டு . இருளில் கலங்கவைத்து விட்டார் எப்போது விடியுமோ !
—– பத்மஸ்ரீ ஔவை நடராசன்

Add a Comment