அடங்காத இரும்புக் குதிரை இடறி விழுந்ததே !.
============================================
எழுத்துத் திலகமாகப் பல்லாண்டுகள் மிளிர்ந்த நண்பர் பாலகுமாரனின் மறைவு, அவலத்துக்குரியது.
பாலகுமாரனை நான் நாற்பதாண்டுகளுக்கு முன்னரே அறிவேன். காணும்போதெல்லாம், கனிவுடன் பேசி உங்கள் வாழ்த்துதான் எனக்கு வழிகாட்ட வேண்டும் என்று அவருக்கே உரிய புனைந்த நடையில் புகழ்ந்து உரையாடுவார் .
பாலகுமாரன், தாய் வழியாகத் தமிழ் கற்றவர். பாலகுமாரனின் படைப்புக்கள் இளைய மனங்களைப் பெரிதும் ஈர்த்ததை நான் பட்டறிந்தவன்.
வழக்கறிஞர் சுமதியும்,செய்தியாளர் சுபா வும் போட்டியிட்டுக்கொண்டு பாலகுமாரன் கதைகளைப் படித்துப் படித்துப் பெரிதும் நெகிழ்ந்தார்கள்.இளம் பெண்களின் மன அலைவுகளை கண்களில் மிதக்கும் கனவுகளைப் பாலகுமாரன் படம்பிடித்துக் காட்டுவதில் ஆர்வம் ததும்ப இருந்தார்.
திரு.வி.க. விருதைத் தமிழக அரசு அண்மையில் அவருக்கு வழங்கியபோது என் மகன் அருளைக் கண்டு தழுவி, நான் ஔவையின் மாணவன் என்று அகம் கனிந்து பலரிடம் கூறினாராம்.அப்பா அப்படிச் சொல்ல வில்லையே என்று மறித்தானாம் .
வாழ்வில்,புலன்களின் திறம் வற்றும்போது, அருளியலைத் தேடும் உணர்வு கற்பனையாளர்களுக்கு வாய்க்கும் போலும்!.
விசிறி ஞானிக்கு ஒரு பெரிய விசிறியாக விளங்கினார் . வாழ்வின் வளர்ச்சி முனைகளை விட்டு விட்டுத் தொட்டவர். பட உலகத்திலும் பங்கு பெற்று அவற்றால் பட்டதையும் சுட்டதையும் எடுத்துச் சொல்வார்.
எழுபது வயது என்பது ஆண்டெண்ணிக்கையில் இளைய வயதுதான். நீண்ட தாடியுடன் நிலை குலைந்த நடையுடன் அவர் வந்ததைக் கண்டு நான் ஒருமுறை மனம் குலைந்ததுண்டு.
மதுரையில் இருந்து அவர் குடும்பத்தோடு ஒருமுறை சென்னை வந்தபோது, நானும் என் துணைவியாரும் உடன் பயணம் செய்தோம் , அவர் காட்டிய பரிவை எண்ணிப் பார்க்கிறேன்.
இரும்புக்குதிரை நூலை நான் வெளியிட்டதாக நினைவு. கலைஞானி கமலஹாசன் அந்த நிகழ்ச்சியில் பங்கு கொண்டார். குதிரை ஏன் இளைக்கிறது ? வலி மிகவில்லையே ? என்று நான் கேட்டு இரும்புக் குதிரை என்று இருக்க வேண்டாமா ? என்று பேசினேன். க்-ம், ச்-ம், இக்கும் இச்சும் கண்டுபிடிப்பதே தமிழாசிரியர்களின் வேலை என்றார் கமலஹாசன்.
இக்கைக் கண்டுபிடிப்பதுதான் என் வேலை. இச்சைக் கண்டுபிடிப்பது கமலின் வேலை என்றேன். கூட்டம் ஆர்ப்பரித்தது .
கடைசி வரை, இரும்புக்குதிரை வலி மிகாமலேயே ஓடியது. பார்க்கும்போதெல்லாம் என்னிடத்தில், ஒற்று மிகுவதில் நான் பற்று வைத்துப் பார்க்கிறேன் என்பார். அவருடைய குடும்பத்தாருக்கும், மக்கட் செல்வங்களுக்கும் அவர் தொடர்ந்து இருந்திருந்தால், பெரும் தூணாக அமைந்திருப்பார் என்று கருதிக் கலங்குவதற்கு ஆறுதலை கூறுகிறேன் .
—– பத்மஸ்ரீ ஔவை நடராசன்

Add a Comment