POST: 2018-05-28T10:59:47+05:30

தினத்தந்தி – பதிப்புகள்
————————————-

இந்தியாவில்,

1. சென்னை, 2. மதுரை, 3. திண்டுக்கல், 4. திருச்சி, 5.
தஞ்சாவூர், 6. கோயம்புத்தூர், 7. திருப்பூர், 8. ஈரோடு, 9. சேலம், 10.திருநெல்வேலி, 11. நாகர்கோவில், 12. வேலூர், 13. கடலூர், 14. புதுச்சேரி, 15. பெங்களூரு, 16. மும்பை என்று பதினாறு பதிப்புகளில் தினத்தந்தி வெளியாகிறது.

இது தவிர, வெளிநாட்டில் துபாயிலும் ஒரு பதிப்பு கொண்டுவெளியிடப்படுகிறது. மொத்தம் 17 பதிப்புகளில் தினத்தந்தி நாளிதழ்

இந்த 17 பதிப்புகளிலும் 25.05.2018 அன்று வெளிவந்த பத்மஸ்ரீ ஔவை நடராசன், முன்னாள் துணை வேந்தர், தமிழ்ப்பல்கலைக்கழகம் அவர்கள் எழுதிய “தமிழில் படித்தவர்களுக்குத் தயக்கம் வேண்டாம்” என்ற கட்டுரை உங்கள் பார்வைக்கு……

தமிழில் படித்தவர்களுக்குத் தயக்கம் வேண்டாம்
=============================================

எழுத்தறிவு, தொடக்க நிலை, இடைநிலை, நிறை நிலை எனப் பள்ளிக் கல்வியைப் பன்னிரெண்டு ஆண்டு முடித்து மடை திறந்த வெள்ளம் போல ஏறத்தாழப் பத்து லட்சம் பேர் தேர்வெழுதி ஒன்பது லட்சத்துக்குக் குறையாமல் மாணவ மணிகள் அறிவுச் சுடர்களாக உயர்நிலை கல்வி மாடத்தின் ஏணிப்படிகளில் கால் பதிக்க முன்வந்துள்ளனர். மேல்நிலைப் பள்ளியில் தேர்ச்சி வீதத்தில் விருதுநகர் 97.05 சதவீதத் தேர்ச்சி பெற்று மாவட்டங்களில் மதிக்கத்தக்க முதலிடம் பெற்றது. கடந்த ஆண்டுப் பொதுத் தேர்விலும் விருதுநகர் மாவட்டமே 97.85 விழுக்காடு தேர்ச்சியுடன் முதலிடத்தைப் பிடித்திருந்தது. தமிழகம் இளையோர் உலகை இருகை நீட்டி வரவேற்கிறது. மாணவச் செல்வங்கள் பதினாறாம் அகவை தொடங்கித் தம்மை முழுமையாக்கவும் புதுப்பிக்கவும் வல்ல கல்வியின் தேவையும் முதன்மையும் நாளுக்கு நாள் வேளைக்கு வேளை புதுப்புது வடிவங்களில் மாற்றங்களோடு கல்விவளம் செழித்து வருகிறது.

கல்வியே வாழ்க்கை, வாழ்க்கையே கல்வி என்ற நிலையில் மனிதவள மேம்பாட்டிற்குக் கல்வி உரமாக ஊட்டம் தருகிறது; வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறது, அறிவின் வழி உயிர் நிலையாகிறது. மனிதனை வாழ்வாங்கு வாழவைக்கிறது. சூழலை நன்கறிந்து தன்னை மாற்றிக்கொள்ளக் கல்வி உதவுகிறது.

அறிவார்ந்த மரபை, பண்பாட்டு பெருமி தத்தைக் கல்வியே தொடர்ந்து நிலை நிறுத்துகிறது. கல்விதான் ஒரு தலைமுறையிலிருந்து மற்றொரு தலைமுறைக்கு முன்னேறியவர்களாக நம்மை உயர்த்தி வருகிறது. இளம் தலைமுறையினருக்குப் புதுக்கருத்துக்கள், அறிவியல் நெறிகள் புத்தாக்கங்கள் ஆகியவற்றைப் பற்றி அறிவதற்குக் கல்விதான் அடித்தளமாகிறது. தொழில் புரிந்து வாழ்க்கை நடத்தவும் பயிற்சி அளிக்கிறது. சமுதாயத்தில் பிறருடன் இணைந்து வாழத் துணை செய்கிறது. பயனுள்ள முறையில் ஓய்வு நேரத்தைச் சீராக்க உதவுகிறது. பிறர்க்கெனப் பரிவுடன் வாழும் உணர்வு முழுமை பெறுவதற்கும் கல்வி நிறைவாகத் துணை செய்கிறது. பல்வேறுபட்ட அறிவுத்திறன்களை அளிப்பதோடு குறிக்கோளை உருவாக்கிச் செல்லும் நடத்தை முறையை மலர்களாக மாற்றியமைத்து உலகியலோடு இசைந்து செல்லும் வலிமையை வழங்குகிறது. கல்வி ஓர் இலக்கினைச் சுட்டிக்காட்டிக் கூர்மையாக்குகிறது.

ஒருவன் நல்ல அறிவைப் பெற்றுவிட்டால் அது அவனது குடும்பத்தை ஒளிவீசுவதாக்கும். மனிதப் பண்பாடும் ஒழுக்கமும் தொடர்ந்து வளர வழி வகுக்கும். கல்விதான் உழைப்பை, ஊக்கத்தை ஊதியத்தைத் தன்மதிப்பைத் தலை நிமிர்வையும் பெருக்கிக் குடும்பம், நாடு, உலகம் என விரிந்த கடலில் கலந்து கொள்ள வைக்கும். கல்வித்திறன் ஆற்றலை வளர்க்கும் உணர்ச்சிகளை மதித்துப் போற்றும் புது வாழ்க்கைக்கு ஆயத்தம் ஆக்கும் அதனால், மனிதனின் சமுதாய நடத்தை மாற்றம் பெற்றுப் பண்புகளைப் படிப்படியாகவும், முழுமையாகவும் நிறைவடையச் செய்யும்.

உடல் உறுதியுள்ள இளையோர் எவ்வாறு விளையாடுகிறாரோ அதேபோல் கல்வித்திறமையிலும் கவனத்தை மேற்கொள்ள முடியும். ஆகவே உடல் உறுதியும், கல்விக்கு உதவக்கூடியது, உடல் உறுதியுள்ளவன் தன் வாழ்க்கையில் தற்சார்பிலேயே நிற்பான். உடல் உறுதி, தன்னம்பிக்கை அளிக்கக்கூடியது. வாழ்க்கைக்கு ஒளி காட்டக்கூடியது. உடல் வலிமை கொண்டவனது உள்ளம் வலிமையடைகிறது. ஒரு குடும்பத்தார் தம் பிள்ளையை ஓர் அறையில் தங்க வைத்தார்கள். ஒரு நாடிக்குழல் (ஸ்டெதாஸ் கோப்), வரைபலகை, அளவுகோல், முயல்குட்டி, தொட்டியில் வளர்கின்ற செடி, ஓவியத்தூரிகை, தொடர்ந்து ஒலிக்கும் இழையிசை என்று வைத்திருந்தார்கள். மாலையில் போய்க் கதவைத் திறந்து பார்த்தால் நாடிக்குழலைக் கழுத்தில் பொருத்திக் கொண்டு முயல்குட்டியை மடியில் வைத்துக்கொண்டு இசைக்கேற்ப அளவுகோலைத் தட்டிக்கொண்டே தொட்டியில் இருந்த செடிக்கு நீரை நிரப்பி விட்டு வரைபலகையில் ஓவியம் வரைந்து கொண்டிருந்தான். சிறுவனுக்கு ஆர்வம் எதில் இருக்கிறது என்று எப்படிச் சொல்வது, என்று பெற்றோர்கள் முறையிட்ட தாக அமெரிக்கத் துணுக்கு ஒன்றை எப்போதோ படித்தேன். இது இன்றைய நிலையில் அனைவருக்கும் பொருந்தும்.

இந்தத் தேர்வு முடிவுகள் சிற்றூர், பேரூர் என்ற வேறுபாடில்லாமல் ஏற்றத்தாழ்வில்லாமல் மதிப் பெண்கள் பெற்றிருந்தமையால் தமிழ்வழிக் கல்விக்குக் கிடைத்த தன்னிகரில்லாத வெற்றி என்று உறுதியாகச் சொல்லலாம். எள்ளளவு தயக்கமும் இல்லாமல் தாம் விரும்பும் தொழிலியல், அறிவியல், கணக்கியல், கலையியல் எனக் கல்விப் பட்டியலில் உள்ள அனைத்துப் படிப்புகளையும் ஆர்வத்தோடு இளைஞர் தெரிவு செய்து கொள்ளலாம்.

உயர்நிலை கல்லூரிகளில் தமிழால் பாடம் இல்லையாமே ஆங்கிலம் மட்டும் அனைத்திலும் வேற்று மொழியில் உரையாடும் திறமைக்குத் தனிப்பயிற்சி வேண்டுமே பழகுவதற்கே ஆங்கிலத்தின் பங்குதான் உதவும் என்றெல்லாம் அச்சுறுத்துவார்கள்.

பழகினால் ஆங்கிலம் தானாக வரும். செந்த மிழ் மட்டுமல்ல சேக்ஸ்பியரும் நாப்பழக்கம் தான், வாய்ப்பழக்கம் தானாக வரும்போது வாய்ப்புகளும் வீடுதேடி ஓடிவரும். ஒருமொழித் தேர்ச்சி அயல்மொழியை எளிதில் புரிய வைக்கும்.

அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் அனந்தகிருஷ்ணனோடு உரையாடிய போது சிற்றூரில் இருந்து வரும் மாணவர்கள் தமிழிலேயே கற்றிருப்பதனால் உயர்கல்வியில் பொறியியலில் சேரும்போது ஆங்கிலம் அவர்களை அலைக்கழிக்குமே என்று கருதினோம். அதனால் ஆங்கிலம் பேசவும், புரிந்து கொள்ளவும் ஒரு பயிற்சி வகுப்பைத் தொடங்கலாம் என்று முயன்றார்கள். ஒரு மாதம் வகுப்பு நடந்தது. புரிந்துகொள்ளும் ஆங்கிலம் கற்கவந்த மாணவர்கள் 80லிருந்து ஒன்பதாகக் குறைந்தார்கள். ஏன் என்று கேட்டோம். அதற்கு அவர் சொன்ன விடை மாணவர்கள் ஒன்றாகக் கலந்துவிட்டார்கள். ஒரு குறையுமில்லை. அலைகடலில் கலந்து விட்ட பிறகு ஆற்றின் பெயரைச் சொல்லி அடையாளம் காண முடியுமா?. பழகினால் பாறையும் பனியாக உருகும். கல்லும் கனியாகும் எனவே மாணவ மாணவியருக்கு உயர்கல்வியில் ஆங்கிலம் பற்றிய அச்சம் வேண்டாம். பழக்கமும் பயிற்சியும் தலை நிமிரச் செய்யும்.

அமெரிக்க நாட்டில் உன்னதச் சுடர்களாக விளங்குவோரில் அறிவியலாளர் பலர் சிற்றூரில் தமிழில் படித்து வந்தவர்கள் தாம். எனவே தமிழ் படித்தோம் என்ற தயக்கம் வேண்டாம். தமிழில் படித்துத் தரணியை வெல்லலாம்.

————————————————————————————————–

இக்கட்டுரை குறித்து,
ஆங்கிலப் பேராசிரியர் சங்கரநாராயணன் 25.05.2018 அன்று எழுதிய கடிதம்.

Excellent Proclamation inculcating confidence in the learners. Avvai is poliglottal by instinct; நான் ஆங்கிலமும் நாப்பழக்கம் என்பேன். “சேக்ஸ்பியரும் நாப்பழக்கம் என நவின்றதில் ஆவன் நதி கரை புரளுகிறது!”

———————————————————————————————————-

—————————————————————————————————–

இக்கட்டுரை குறித்து,
தினத்தந்தி 27.05.2018 நாளிதழில் “எதிரொலி” பகுதியில் இடம்பெற்ற கடிதம்.

அருமை
========
தமிழில் படித்தவர்களுக்குத் தயக்கம் வேண்டாம் என்ற அவ்வை நடராஜனின் தட்டி எழுப்பும் கட்டுரை அருமை. வெல்கதமிழ் என தினத்தந்தி கூறுவது வெற்று வார்த்தைகளல்ல. வெற்றிக்கான வழி. குடியரசு தலைவராக இருந்த ஏவுகணை நாயகன் அப்துல் கலாம், சிம்பொனி இசைத்த இளையராஜா, ஆஸ்கர் வென்ற ஏ.ஆர்.ரகுமான் ஆகியோர் நினைவுக்கு வந்தனர்.

——- ஏ.பி.மதிவாணன், பல்லாவரம்.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *