பொங்கிய பா தங்கப்பா !
=========================
பிறந்து மொழி பயின்ற நாள் முதல் கல்விப் பெருமிதத்தின் கலை வடிவாகவும்,
செயலும் சிந்தனையும் தம் இரு விழிகளாகவும் கொண்டு வாழ்ந்த மாமனிதர், மறக்க முடியாமல் என் நெஞ்சில் நின்று நிலைக்கும் பேராசிரியர் தங்கப்பா அவர்களின் மறைவு தமிழினத்திற்கு எந்நாளும் தாங்கொணாப் பேரிழப்பாகும்.
அறுபது ஆண்டுகளுக்கு முன்னர்ப் பழகத் தொடங்கியவர்கள் நாங்கள்.
அண்ணல் கோவேந்தனும் யானும் சைதை ஆசிரியர் பயிற்சிக்கு வந்திருந்த நண்பர் தங்கப்பாவும் உறவாடி மகிழாத நாளில்லை .அன்று தொடங்கிய நட்பு பிறைநிலாப் போல வளர்ந்தபடியே ஒளி வீசியது.
தமிழியக்கம் போல உணர்வியக்கம் பாடிய திறம் ஆந்தைப் பாட்டு எழுதிய பெறலரும் திறமை,
வாழ்வியல் உண்மைகளைக் கருத்தோவியங்களாகத் தீட்டிய கட்டுரைகளில் மிளிர்ந்த கலைப்பெருமை , ஆன்றவிந்தடங்கிய கொள்கைச் சான்றாண்மை வேறு எவரிடமும் காண முடியாதன .
பல்லாண்டுகளுக்கு முன்னர் ஆனந்த விகடனில்
“படித்து மகிழ்ந்த நூல்” என்ற பகுதியில்
நான் எழுதி நெகிழ்ந்ததை “நீங்கள் எழுதுவதற்கு உரிமையாளர்” என்று ஒரு தொடர் கூறிப்
புன்னகை காட்டியதைப் போற்றி வருவேன் .
ஆய்வுச்சுடர் அறிஞர் வேங்கடாசலபதி தங்கள் கவிதைத் திரட்டை வெளியிட்டு வழங்கியது,
தமிழுக்குத் தந்த தங்கப் பேழையாகும்.
தங்கள் உயர்ந்த புகழே பொன்றாது நிற்பது .
—– பத்மஸ்ரீ ஔவை நடராசன்

Add a Comment