மன்னாதி மன்னனுக்கு மற்றுமொரு மகுடம்
========================================
பத்மஸ்ரீ முனைவர் ஔவை நடராசன்
அவர்களின் சிறப்புரை
==================================
பகுதி-232
—————-
தமிழர்களை மயக்கும் மந்திரச் சொல்லாகத் திகழ்ந்தவர். அவர் நடிப்பின் மூலம் தமிழக மக்களைக் கொள்ளை கொண்டவர். இவர் குணத்தால் மக்களை நேசித்தார். இதுவரை எந்தத் தமிழக முதலமைச்சரும் செய்யாத சாதனையாக அடுத்தடுத்து ஆட்சியைக் கைப்பற்றினார்.
பணி ஒரு பிணி என்றான் வள்ளுவன். தீயினும் கொடுமையானது வறுமை என்று எல்லாக் காலங்களிலும் எல்லா இலக்கியங்களிலும் சொல்லப்பட்டு வந்திருக்கிறது.
“பசிக்கிறவனுக்கு மீனைக் கொடுக்காதே அவனுக்கு மீன் பிடிக்கக் கற்றுக்கொடு” என்றும் “சோறு போட்டுச் சோம்பேறியாக்காதே” பொன்மனச் செம்மல் சத்துணவுத் திட்டம் கொண்டு வந்த பொழுது இப்படியெல்லாம் சிலர் வியாக்கியானம் பேசினார்கள். அவர்களுக்கெல்லாம் ஒட்டு மொத்தமாக இந்தச் சத்துணவுத் திட்டம் மிகப் பெரிய பொருளாதாரத் திட்டம் என்றோ நான் ஒரு அரசியல் மேதை என்றோ உலகிற்குச் சொல்லவோ இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்தவில்லை. என்னுடைய பால்ய வயதில் பசியின் கொடுமையை அனுபவித்தவன். என் தாய் பத்துப்பாத்திரம் தேய்த்துக்கூடப் பசியாற உணவும் படிப்பும் கொடுக்க இயலவில்லை. இந்தக் கொடுமையைக் கணிசமான அளவில் குறைக்க வேண்டும் என்கிற இலட்சியத்தை நிறைவேற்றவே இந்தத் திட்டத்தைக் கொண்டு வந்தேன். இது என் ஈரமான இதயத்தின் வெளிப்பாடேயன்றி என் அரசியல் சாணக்கியத்தனம் இல்லை.
இதனால் அரசுக்கு ஒரு குறிப்பிட்ட தொகை இழப்பு என்றாலும் எனக்குக் கவலையில்லை” என்று விளக்கமளித்தார் வள்ளல்.
தமிழகத்தில் மிகப்பெரிய போராட்டம் என்றால் இந்திமொழி எதிர்ப்புப் போராட்டம் மட்டுமே. 1960-ஆம் ஆண்டு இந்தி எதிர்ப்பு அறப்போராட்டக்குழு அமைக்கப்பட்டது. இந்த அறப்போராட்டத்திற்குப் பல கட்டுப்பாடுகள் கொண்டு வந்தனர். இக்கூட்டத்தில் யார் யார் கலந்து கொள்ளவேண்டும் எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மாணவர்களுக்கும் கலைத்துறையினருக்கும் இந்த அறப்போராட்டத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டது. அப்போது பிரதமராக இருந்த நேருவிற்குக் கருப்புக்கொடி காட்டினார் எம்.ஜி.ஆர். அதனால் அவர் சிறைவாசம் அனுபவித்தார். சிறையில் தன்னைச் சேர்ந்தவர்களுக்கும் உரிமைக்குரல் எழுப்பியவர் எம்.ஜி.ஆர்.

Add a Comment