மன்னாதி மன்னனுக்கு மற்றுமொரு மகுடம்
========================================
பத்மஸ்ரீ முனைவர் ஔவை நடராசன்
அவர்களின் சிறப்புரை
==================================
பகுதி-233
—————-
பொதுவுடைமைக் கொள்கைகளில் ஈடுபாடு கொண்டவர். தனது படங்களின் மூலம் மக்களுக்குப் பொதுவுடைமைக் கருத்துகளைப் பரப்பினார். தொடக்கக் காலங்களில் எம்.ஜி.ஆரின் பொதுவுடைமைக் கொள்கைகளுக்கு ஏற்ற பாடல்களுக்கு வரிவடிவம் தந்தவர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரனார்.
அ.தி.மு.க. தொடங்கிய ஏழு மாதங்களிலேயே திண்டுக்கல் நாடாளுமன்றத் தொகுதி இடைத்தேர்தல் 1973 ஆம் ஆண்டு 20 ஆம் நாள் நடந்தது. அதில் இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளும் அ.தி.மு.க.வுக்கு ஆதரவு அளித்தன. அந்தத் தேர்தலில் அ.தி.மு.க. மிகப்பெரிய வெற்றி பெற்றது.
நடிகர்களைக் கூத்தாடிகள் என்று சமூகம் கேலியாகப் பேசி வந்த காலத்தில் எம்.ஜி. ஆரால் நடிகர்களுக்கு உயர்வும் பெருமையும் கிடைத்தன. 1965 ஆம் ஆண்டு அந்தமானில் அப்போதைய பிரதமர் லால்பகதூர் சாஸ்திரியால் பணத்தோட்டம் எம்.ஜி.ஆர். ரசிகர் மன்றம் திறந்து வைக்கப்பட்டது. ஒரு நடிகரின் ரசிகர் மன்றத்தை நாட்டின் பிரதமர் திறந்து வைத்த பெருமை எம்.ஜி.ஆருக்கு மட்டுமே உண்டு.
எம்.ஜி.ஆரின் ‘நாடோடி மன்னன்’ படத்தில் ‘தூங்காதே தம்பி தூங்காதே’, அரசிளங்குமரி படத்தில் ‘சின்னப்பயலோ, சின்னப் பயலே சேதி கேளடா’ போன்ற கருத்தாழம் மிக்க பாடல்களை எழுதியவர் மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம். 1959 ஆம் ஆண்டு அக்டோபர் 8 ஆம் நாள் இளம் வயதிலேயே அவர் மறைந்துவிட்டார். அவரது குடும்பத்தினருக்குப் பண உதவி செய்து ஆறுதல் கூறிய எம்.ஜி.ஆர்., ‘நாடோடி மன்னன்’ படத்தின் தயாரிப்பாளர் என்ற முறையில் அந்தப் படத்தின் பாடல்கள் ரெக்கார்டு உரிமையை அவர்களுக்கே கொடுத்துவிட்டார்!

Add a Comment