மன்னாதி மன்னனுக்கு மற்றுமொரு மகுடம்
========================================
பத்மஸ்ரீ முனைவர் ஔவை நடராசன்
அவர்களின் சிறப்புரை
==================================
பகுதி-234
—————-
எம்.ஜி.ஆரை வைத்து அதிகப் படங்களைத் தயாரித்தவர் என்ற பெருமையைப் பெற்றவர் சின்னப்பா தேவர். இருவர் கூட்டணியில் ‘தாய்க்குப் பின் தாரம்’ முதல் ‘நல்ல நேரம் வரை மொத்தம் 16 படங்கள் வெளியாயின.
தேவர் பிலிம்ஸ் தயாரிப்பில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா நடித்த படம் ‘முகராசி’. பல படங்களின் படப்பிடிப்பு, அரசியல் என்று பரபரப்பாக இருந்த எம்.ஜி.ஆரை வைத்து 12 நாள்களில் எடுக்கப்பட்டு 100 நாள் ஓடிய வெற்றிப்படம் என்ற சாதனை படைத்தது ‘முகராசி’ திரைப்படம்.
ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஓர் அரசியல்வாதி இருக்கலாம், ஒரு நடிகன் இருக்கலாம், ஒரு வள்ளல் இருக்கலாம், ஓர் ஆளுமையாளன் இருக்கலாம். ஆனால் அரசியல்வாதியாக, நடிகனாக, வள்ளலாக, ஆளுமையாளனாக என அனைத்துமாகத் திகழ்ந்த ஒருவர் நல்ல மனிதனாகத் திகழ்ந்தார் என்றால் அது இதயக்கனி எம்.ஜி.ஆர். அவர்களுக்கு மட்டுமே பொருத்தமான ஒன்றாகும்.
தொண்டனுக்கும் பணி செய்த தலைவன், ஏழைகளுக்குக் கிடைத்த கலியுக வள்ளல், மும்முறை எமனை வென்ற மன்னன், மூவுலகையும் வென்ற தனிப்பிறவி அவர்.வெறும் எலும்புகளால் ஆன மனிதர்களுக்கு மத்தியில் இதயங்களால் ஆனவர் எம்.ஜி.ஆர். கடிகார மனிதர்களுக்கு மத்தியில் காலகாலமாக நம் அனைவரது மனத்திலும் வாழ்ந்துவருபவர் புரட்சித்தலைவரைச் சாதனைத் தலைவர் என்பதில் ஐயமில்லை .

Add a Comment