சாய்ந்த தோளே சரிந்ததே !
=========================
தோழராய்த் துணைவராய்த் தொண்டராய்த் திகழ்ந்து வாய் குளிர நாளுக்கு நானூறு முறை நான் அழைத்த பெயர் தான் துளசிராமன். துளசி தான் நான் மொழிபெயர்ப்புத் துறைக்குச் சென்ற முதல் நாள் என்னை வரவேற்று இயக்குநர் இருக்கையில் அமரவைத்தார். மொழி பெயர்ப்புத் துறை இயக்குநர் அறிஞர் கு.இராசவேலு அவர்களுக்குத் தனி உதவியாளராகப் பணியாற்றிப் பயிற்சிபெற்றவர். அவரே எனக்கும் 25 ஆண்டுகள் தனி உதவியாளராகவும் தனிச் செயலாளராகச் சோர்வில்லாது பணியாற்றினார்.
என் வாழ்வு முழுவதிலும் அவருக்குப் பங்குண்டு. நான் எழுதியதைத் திருத்தும் வன்மையையும், நான் அவருக்கு வழங்கினேன். நான் ஓய்வு பெற்ற பிறகும் கூடக் கடந்த திங்கள்வரை என் நலந் தீங்குகளில் பங்குகொண்டவர். பண்பும் பரிவும் படியெடுத்தாற் போன்ற பெருமிதம் கொண்டவர்.
மொழி பெயர்ப்புத் துறையில் அவர் கைப்படாத தாளில்லை. பல்லாயிரக்கணக்கான தாள்களைத் தட்டச்சு செய்தவர். தட்டியதால் அவர் தமிழ்ப் புலமையும் வளர்ந்தது.
ஓய்வு பெற்ற பிறகு அவருக்குப் பல நிலைகளில் சோர்வு பெருகியது. அன்புற்றார், பண்புற்றார் என்று நான் பலரிடம் பாராட்டிய போது வன்புற்றால் வருந்துகிறேன் என்று கூறி என்னைத் திடுக்கிட வைத்துத் தேம்பச் செய்தார்.
என் இருக்கையிலேயே என் மகன் திரு.அருளையும் ஆரத்தழுவி அமரவைத்தவரும் துளசிதான்.
“உங்கள் புகழ் இவர் வரவால் தொடர்ந்து துளிர்க்கும்” என்றார்.
நாளை சிலர் வந்து துளசி எங்குற்றார்! என்று கேட்டால்
நான் என்ன விடை சொல்வேன்.
எங்குச் சென்றபோதும் என்னோடு வந்தீர்களே !
இப்போது எங்குச் சென்றீர்.
எவர் வந்து ஆறுதல் கூறுவார்.
“நெருநல் உளனொருவன் இன்றில்லையே”
என்னும் வெறுமை தான் வேதனையைப் பெருக்குகிறது.
—– பத்மஸ்ரீ ஔவை நடராசன்

Add a Comment