POST: 2018-06-14T10:31:45+05:30

மன்னாதி மன்னனுக்கு மற்றுமொரு மகுடம்
========================================
பத்மஸ்ரீ முனைவர் ஔவை நடராசன்
அவர்களின் சிறப்புரை
==================================
பகுதி-235
—————-

எம்.ஜி.ஆர்., தமிழ் மொழி வளர்ச்சியில் அதிகக் கவனம் செலுத்தினார். 1981ல் மதுரையில் ஐந்தாவது உலகத் தமிழ் மாநாட்டை வெற்றிகரமாக நடத்தினார். மேலும், இவர் முதல்வரானவுடன், அது வரை பல ஆண்டுகளாக நிரப்பப்படாதிருந்த அரசவைக் கவிஞர் பதவிக்கு கவிஞர் கண்ணதாசனை நியமித்தார். கண்ணதாசன் எம்.ஜி.ஆரை., கடுமையாக விமர்சித்தவர் என்றாலும் அவரது திறமைக்கு மதிப்பளித்து இந்தப் பொறுப்பைத் தந்தார்.

தமிழ்ப் பல்கலைக் கழகம் நிறுவுதல்
———————————————————-

1921ம் ஆண்டு தமிழ் மொழிக்கு எனத் தனியே ஒரு தமிழ்ப் பல்கலைக் கழகம் வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றிய உமாமகேசுவரனார் பிறந்த தஞ்சையில், தீர்மானம் இட்ட அறுபது ஆண்டுகள் கழித்து தமிழ்ப் பல்கலைக் கழகத்தை நிறுவினார் எம்.ஜி.ஆர்.

தமிழ்மொழி, தமிழர்களின் கலை, இசை, நாடகம், ஓவியம், சிற்பம், கட்டடக் கலை, தமிழ் இலக்கியம், தமிழ் இலக்கணம், மொழியியல், வரலாறு, புவியியல், மெய்யியல், கடலியல், சித்த மருத்துவம், கைவினைக் கலை, உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தமிழை மேம்படுத்த, தமிழர்களின் பெருமையைப் பரப்ப, 1981 ஆம் ஆண்டு முதலமைச்சராக இருந்த திரு.எம்.ஜி. இராமச்சந்திரன் அவர்கள் முன் முயற்சியில் தமிழக அரசால் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகம் உருவாக்கப்பட்டது.

முதலமைச்சர் எம்.ஜி.ஆர். தலைமையில் 13. சூன் 1981 இல் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் இப்பல்கலைக்கழகத்தில் உடனடித் தேவைக்கும் எதிர்கால விரிவாக்கத்திற்கும் 1000 ஏக்கர் நிலம் தேவை என முடிவு செய்யப்பட்டது.

1981 ஆகஸ்ட் 1 ஆம் நாள் தமிழக ஆளுநர் மூலம் தமிழ் பல்கலைக் கழக அவசரச் சட்டம் 1981 பிறப்பிக்கப்பட்டு தமிழ்ப் பல்கலைக் கழகம் நிறுவப்பட்டது.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *