POST: 2018-06-19T15:29:18+05:30

மன்னாதி மன்னனுக்கு மற்றுமொரு மகுடம்
========================================
பத்மஸ்ரீ முனைவர் ஔவை நடராசன்
அவர்களின் சிறப்புரை
==================================
பகுதி-240
—————

12-11-77க்கும் 20-11-77க்கும் இடைப்பட்ட நாட்களில் தமிழகம், ஆந்திரம், கருநாடகம், கேரளம் ஆகிய தென் மாநிலங் களைப் பேரல்லல்களுக்கு உட்படுத்திய புயல், வெள்ளக் கொடுமைகள் பற்றிப் புலவர் பெருமக்கள் பலர் பாடிய செய்யுட்கள் உங்கள் பார்வைக்கு….

வெள்ளச் சேத விளரி
———————————–
[ஞா. தேவநேயப் பாவாணர் ] ———————————————–

எத்தனை வெள்ள மோநாம் இதுவரை கதையிற் கேட்டோம்
இத்தனை கொடுமை யாக எவருமே கண்ட தில்லை
அத்தனார் கோயி லுள்ளும் அனைவரும் நசுங்கிச் சாகப்
பித்தமா வெறியின் வேகம் பிடித்தது காற்றுப் பூதம்.

வெள்ளமென் றறிவிப் பின்றி வீட்டினுள் உறங்கும் வேளை
கொள்ளையர் வருதல் போலக் கூடிய இரண்டு பூதம்
பொள்ளெனக் கேடு செய்யப் பொடித்தன பணிச்சா லைகள்
நள்ளிர வன்றே நாகை நத்தப்பா ழாயிற் றந்தோ !

கண்ணினுக் கெட்டு மட்டும் கண்டது வெள்ளக் காடு
மண்ணியல் ஊர்தி யொன்றும் மற்றவூர் சென்ற தில்லை
உண்ணவோர் உணவு மில்லை உரைக்கவோர் வழியு மில்லை
விண்ணவர் உதவி போலூண் வீழ்ந்தது மூன்றாம் நாளே.

தமிழ் நிலந் தலையாஞ் சென்னை தாவியே தெலுங்க நாட்டில்
இமிழ்கடல் எரியுந் தோன்ற எழுமலை யலைக ளாலே
அமிழ்கரை யூர்கள் மாய்ந் தார் ஆயிரம் பத்தோடைந்தும்
குமிழ் நுரை வெள்ளம் வந்து குடிகொண்ட தூர்க ளெல்லாம்.

ஆருயிர னைய என்றன் அன்பனை யிழந்தேன் என்பார்
கார்பணி கற்பின் செல்வக் கண்ணகி யிழந்தேன் என்பார்
சீரிய அறிவு வாய்ந்த சேயரை இழந்தேன் என்பார்
ஊரினில் உள்ள எல்லா உறவையும் இழந்தேன் என் பார்.

இரவிலே தந்தை தாயை இழந்தபிள் ளைகள் காலை
அருவிபோற் கண்ணீர் சிந்தி அம்மையப் பனையே கூவி
வெருவியே யழுது தேம்பி வெந் தழல் மெழுகு போல
உருகியுள் வெந்த கோலம் உள்ளுவார் குலையும் வேகும்.

அருந்த லாய் விற்ற காலை அரும்பெரும் பாடு பட்டு ‘
வருந்தியே தேடிப் பெற்ற வளம்படு பொருளும் வீடும்
பருந்தடி குஞ்சு போலப் பசக்கென மறைந்து போக
இருந்துபின் அழுது நைந்தார் எத்தனை பேர்க ளம்மா !

அரசனே கொடுமை செய்யின் ஆரிடம் சொல்வ தென்பர்
பரசுறு கடவுள் காப்பும் பறந்திடின் நாமென் செய்வாம்
துருசினில் மாயும் மக்களின் தொல்லைகள் தீரும் வண்ணம்
கரிசொடு செருக்கொ ழிந்து காவல்பூண் அமைச்சர் ஆள்க.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *