மன்னாதி மன்னனுக்கு மற்றுமொரு மகுடம்
========================================
பத்மஸ்ரீ முனைவர் ஔவை நடராசன்
அவர்களின் சிறப்புரை
==================================
பகுதி-242
—————
12-11-77க்கும் 20-11-77க்கும் இடைப்பட்ட நாட்களில் தமிழகம், ஆந்திரம், கருநாடகம், கேரளம் ஆகிய தென் மாநிலங் களைப் பேரல்லல்களுக்கு உட்படுத்திய புயல், வெள்ளக் கொடுமைகள் பற்றிப் புலவர் பெருமக்கள் பலர் பாடிய செய்யுட்கள் உங்கள் பார்வைக்கு…. (பாடல்-3)
கோரப் புயலே!
==============
(கவிஞர் புத்தனேரி ரா.சுப்பிரமணியம்)
====================================
கோரப் புயலே! – கொலை
காரப் பயலே!
கோடிக் கணக்கில் சேதம்விளைத்த
கொடுமையும் ஏனோ? – நீ
கூற்றுவன் தானோ?
நாகப்பட்டினம் கரையைத் தாக்கி
நாட்டில் புகுந்தாயே!
நன்செய் புன்செய் தோப்பும் துரவும்
நாசம் செய்தாயே!
வேகத் தாலே கடலும் குமுறி
விண்ணும் கொட்டியதே!
வெள்ளம் புரண்டு பிரளயம் போலே
வேதனை முட்டியதே!
உன்வெறி யாட்டம் எத்தனை எத்தனை
உயிரைக் குடித்ததுவே!
வன்முறை யாலே மக்களை வதைக்கும்
வஞ்சகம் ஏன் கொண்டாய்?
அந்தக் காலம் லெமூரி யாவை
ஆழியும் விழுங்கியதே! – அந்த
அவலத் தாலே செந் தமிழ் நாட்டின்
அளவும் சுருங்கியதே!

Add a Comment