மன்னாதி மன்னனுக்கு மற்றுமொரு மகுடம்
========================================
பத்மஸ்ரீ முனைவர் ஔவை நடராசன்
அவர்களின் சிறப்புரை
==================================
பகுதி-245
—————
12-11-77க்கும் 20-11-77க்கும் இடைப்பட்ட நாட்களில் தமிழகம், ஆந்திரம், கருநாடகம், கேரளம் ஆகிய தென் மாநிலங் களைப் பேரல்லல்களுக்கு உட்படுத்திய புயல், வெள்ளக் கொடுமைகள் பற்றிப் புலவர் பெருமக்கள் பலர் பாடிய செய்யுட்கள் உங்கள் பார்வைக்கு…. (பாடல்-6)
ஊழி இதுதானோ !
===================
(கவிஞர், சி. து. கன்னிசாமி)
—————————————————
தஞ்சைத் தரணிமுதல் தண்டமிழ்நா டும் தெலுங்கர்
தஞ்செழுநா டும்புயல் தான் தாக்கியதே-பஞ்சுபடும்
பாட்டினிலே மாந்தரினம் பாழ்பாழ்! அவர்துயரம்
நாட்டுதற்கார் வல்லார் நவில்.
உலகில்வாழ் பேயனைத்தும் ஒன்றாகக் கூடிக்
கலகமிடும் கூத்திதுவோ ! காண்பார்-நிலைகுலைய
நெஞ்சம் இருண்டார் நினைவிழந்தார் மாமழை தான் !
அஞ்சிடவே விண்ணதிரும் ஆங்கு.
ஏரி குளம்உடைய எண்ணற்ற ஆறுகள் தாம்
வாரியென ஊர்புகுத வைய மெலாம்-சீரிழப்ப
நிற்குமிடம் காணார் நிலைகுலைந்தார் மாந்தரெலாம்
உற்றதுயர் சொல்லுதற்கார் உண்டு.
மக்கள் இழந்தார் மனையிழந்தார் கால்நடைகள்
தொக்கபொருள் அத்தனை யும் தோற்றொழிந்தார் . இக்கணத்தில்
சென்றொதுங்கும் வாய்ப்பின்றிச் சிரிழந்தார் ஈதேகாண்
நின் றொழிந்தார் தங்கள் நிலை.
நாளை அறுவடைஆம் என்றிருந்த நல்வயல்கள்
மூளுற்ற வெள்ளத்தில் மூழ்கினவே -மாளுற்றார்
பல்பிணங்கள் ஏந்திப் பரந்தபுனல் பேரிரைச்சல்
எல்லை கடந்தொலிக்கும் ஈண்டு.
கடுகிப் புயல்வெள்ளம் கால்ஈர்ப்பச் சாய்ந்து
படுபிணங்கள் கொள்ளையினைப் பார்ப்பின்-அடுகளத்தில்
செங்கணான் ஆற்றியபோர்ச் செய்கை நினைப்பிக்கும்
இங்கிதற்கு வே(று) உவமை ஏது ?

Add a Comment