POST: 2018-06-25T09:56:06+05:30

மன்னாதி மன்னனுக்கு மற்றுமொரு மகுடம்
========================================
பத்மஸ்ரீ முனைவர் ஔவை நடராசன்
அவர்களின் சிறப்புரை
==================================
பகுதி-246
—————

12-11-77க்கும் 20-11-77க்கும் இடைப்பட்ட நாட்களில் தமிழகம், ஆந்திரம், கருநாடகம், கேரளம் ஆகிய தென் மாநிலங் களைப் பேரல்லல்களுக்கு உட்படுத்திய புயல், வெள்ளக் கொடுமைகள் பற்றிப் புலவர் பெருமக்கள் பலர் பாடிய செய்யுட்கள் உங்கள் பார்வைக்கு…. (பாடல்-7)

மடப்புயல்
==========
(கவிஞர் அரு. சோமசுந்தரன்] ———————————————–

பல்லாண்டாய் மழையின் றிப் பரிதவித்த
பாரதத்தின் தென்பகுதி மக்க ளுக்குச்
சொல்லாமல் இருமாதம் பெய்து கெட்டுச்
சொத்தெல்லாம் அரித்ததுடன் சூறை யாடிக்
கொல்லாமல் கொன்றதெலாம் நவம்பர் மாதம்
கொட்டாத மழையெல்லாம் கொட்டித் தீர்த் தாய் !
வில்லாக இரும்பெல்லாம் வளைத்து விட்டாய்
வீடெல்லாம் மேடாக விளைத்து விட்டாய்.

கடல் நாகை எனஎண்ணிப் புகழ்ந்த மண்ணைக்
கண்மூடித் திறவாமுன் மிதக்க வைத்துத்
திடமான வீடெல்லாம் நொறுக்கி விட்டுத்
தெருவெல்லாம் பிணக்காடாய் மாற்றி மண்ணை
முடமாக்கும் மடப்புயலே! வங்க மென்னும்
முத்தான கடலுக்குள் தோன்றி இங்கே
இடம்பிடிக்க வந்தாயோ ? மழையைக் கொட்டி
இடி இடிக்க வந்தாயோ ? எதற்கு வந்தாய் ?

பாலாற்றில் பேருந்து வீழ்ந்த தாலே
பலபேரின் உயிர் கொண்டாய் ; வேடசெந்தூர்
நாலாறு திசைவீழக் குடக னாற்றின்
நாற்கோடி அணைபேர்த்துப் பலரைக் கொன்றாய்
சேலாறு காவிரியும் சீரங் கத்தில்
சேராத கொள்ளிடமும் சேர்த்து வைத்தாய்
கோளாறு புயலாகி வருவ துண்டு
கூற்றாகி மண்ணெல்லாம் குடிப்ப துண்டோ !

சாலை யெலாம் உடைத்ததனால் போக்கு மில்லை
சலசலக்கும் வெள்ளத்தால் வரத்து மில்லை
ஆளை யெலாம் கொன்றதனால் மூச்சு மில்லை
அடைமழையாய் நின்றதனால் பேச்சு மில்லை
காளை முதல் கோழிவரை மிதக்க விட்டாய்
கட்டடங்கள் குடிசையெலாம் பறக்க விட்டாய்
பாளைவிடும் தோப்பெல்லாம் பலியா டாக்கிப்
பயிர் விளையும் நிலமெல்லாம் மண்மே டாக்கி.

எளியோரின் உயிர்குடித்தாய் தமிழர் நாட்டில்
இருநூறு கோடிக்குச் செலவு வைத்தாய்
வளியாக வந்தெம்மை வதைத்த தோடு
வங்கத்தில் மறுபுயலாய் வடிவெ டுத்துச்
சுழியாகிச் சூறையென ஆந்தி ரத்தில்
சுற்றுலா மேற்கொண்டு குண்டூர், கிருஷ்ணா
வழியான மாவட்டம் விரைய மாக
வெறியாட்டம் போட்டதெல்லாம் வெற்றி தானா?

கண்ணான தென்னாட்டைச் சாடு தற்கே
கடலோடும் முகிலோடும் கைகள் கோத்துப்
பண்ணான இடிபேச மின்னல் கூசப்
படையெடுத்து வந்தகடும் புயலே ! எங்கள்
புண்ணான நெஞ்சத்தால் பாடு கின்றோம்
புயலே நீ வாராதே ! பொறுமை பூண்டு
மண்ணான தனுக்கோடி பூம்பு காரை
மறவாமல் எண்ணிக்கொள் மறைந்தே போ போ !

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *